ஆம் ஆத்மியின் அபார வெற்றி சொல்லும் செய்தி என்ன?

மீண்டும் கேஜ்ரிவாலின் வெற்றிக்கொடி பிரம்மாண்டமாகப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) செய்த சாதனைகளை வைத்தே மக்கள் அந்தக் கட்சிக்குப் பெருவாரியான ஆதரவைத் தருவார்கள் என்று கணித்தது பொய்க்கவில்லை. பாஜக காட்டிய முனைப்புக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. ஷீலா தீட்சித் தலைமையில் (1998-2013) தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது என்றாலும், அதன் பிறகு தேசிய அளவில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியும், கட்சியின் அமைப்பு சீர்குலைந்ததும் காங்கிரஸுக்குத் தொடர் தோல்விகளையே அளித்துவருகிறது. இந்த முறை டெல்லியில் காங்கிரஸுக்கும் சில தொகுதிகளாவது கிடைக்க வேண்டும் என்று கட்சித் தலைமை முயன்றது; ஆனால், காங்கிரஸால் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியவில்லை.