இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்?

(ஜெரா)

போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும் உடலியல் தாக்கங்களும், இன்னமும் 80 ஆண்டுகளுக்கு நீடிக்குமன, சமூகவியல் ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தொடர்பு அறாத துயரம் பற்றிப் பதிவுசெய்வதும் அவசியமாகிறது.

அதிலும், சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று (10) அனுஷ்டிக்கப்பட்ட பின்னணியில், இவர்களின் துயரங்களைப் பதிவுசெய்வது முக்கியமானது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனால், போர் நடந்த பிரதேசங்களில், குறைந்தபட்ச மனித உரிமைகளாவது மதிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குரியது. அதிலும், இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் துயரங்கள், சொல்லி மாளாதவை.

“இண்டைக்குத்தான் அவர் செத்தார்… “;

“இந்த இடத்தில தான் நான் காயப்பட்டனான்…”;

“இந்தப் பாலத்தடியிலதான் ஆமியிட்டச் சரணடைஞ்சனாங்கள்…”;

“இவடத்திலதான் அவரப் புதைச்சனாங்கள்…” என நீளும் துயர நினைவுப் பேச்சுக்களில், மாத்தளன் – புதுமாத்தளன், வலைஞன்மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இடங்களும் கட்டாயமாக இருக்கும்.

ஆனால், இந்நினைவுகள் நிலைத்து நிற்கக்கூடியவை அல்ல. காலவோட்டத்தில், நினைவு மங்கும்; காட்சிகள் மாறும். ஆட்சிகள் மாற மாற, இந்தப் பேரவல நினைவுகள், தூரமாய்த் தெரியும். வரலாறு முழுதும் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் எப்படி நினைவில் தங்காமல் நீங்கினவோ, அதுபோலவே, இறுதிப்போர் குறித்த அவலங்களுக்கும் நடக்கலாம். ஏனெனில், தமிழர்கள், மறதியால் கட்டுண்டவர்களாவர்.

ஆனால், எதையும் மறக்க முடியாமல், தம் உடலோடு போரின் குரூர விளைவுகளைச் சுமக்கும் குழந்தைகளிடம், அந்த வலி நிரந்தரமாகவே தங்கிவிட்டது. இறுதிப் போரின் போது காயமடைந்து, உடல் அவயவங்களை இழந்தக் குழந்தைகளின் இன்றைய வாழ்க்கை எப்பிடியிருக்கிறது, அவர்களின் எதிர்காலம் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் போன்றவற்றைக் கண்டறிவது அவசியம்.

வன்னியில் இருக்கின்ற ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கிராமத்துக்குள்ளும் 3 கிலோமீற்றர் சுற்றெல்லைக்குள், ஒரு பாடசாலையை மய்யப்படுத்தியே, இப்பதிவுக்கான சிறார்களை, இக்கட்டுரையாளர் சந்தித்தார். இப்பதிவுக்காக வரையறுத்துக்கொண்ட பகுதிக்குள், போரால் பாதிக்கப்பட்ட 5 சிறார்கள் இருக்கின்றனர். அவர்களில் இருவர், இக்கட்டுரைக்குள் வருகின்றனர்.

பரபரப்பான சாலையோரத்தில் இருக்கிறது அதிகாவின் (13 வயதுச் சிறுமி; பெயர்மாற்றப்பட்டுள்ளது) வீடு. படலையைத் திறந்து உள்ளே கால் வைத்ததும், வலுக்கக்கூடிய சாய்வுதளம். வீட்டின் வாசலிலும் அதே போன்றதொரு சாய்வுதளம். அச்சாய்வுதளங்களே, அதிகா எவ்வாறான காயத்துக்குள்ளாகியிருக்கிறாள் என்பதை நமக்கு உணர்த்திவிடுகின்றன. அவள் ஒரு மாற்றத்திறனாளி. போர், அவளை எழுந்து நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியாக்கிவிட்டது.

அதிகாவின் அம்மா, “…அவா குளிக்கிறா. தானே குளிப்பா, தன்னைக் கவனிச்சிக்கொள்ளுவா..” என்று சொல்ல, “யார் பிள்ள வந்தது…?” என்றபடி, அதிகாவின் அம்மம்மா உரையாடலுக்குள் வந்துவிடுகிறார். அறிமுகத்தை வாங்கிக்கொண்டு, நம் மீதான நம்பிக்கையைப் பெற்றபின் கதைக்கத் தொடங்கினார். அதிகாவின் அம்மம்மாவுக்கும் கட்டுரையாளருக்கும் இடையிலான உரையாடல் நடந்துகொண்டிருக்கையில், அதிகாவின் அம்மா, அழத் தொடங்கியிருந்தார்.

அதிகாவின் அப்பப்பா, தடியொன்றின் துணையுடன் எமக்கு முன் வந்தமர்ந்தார்.

அதிகாவின் தம்பிமார், யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி, அம்மம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“..இப்ப ஏன் அழுறாய்? முடிஞ்சத நினைச்சு அழுது என்ன பிரயோசனம்? அழாத. அவள் என்ன செய்யிறாள் எண்டு பார்..”, தன் மகளின் கண்ணீர் நீளமாவதை, கட்டுரையாளரோடு பேசிக்கொண்டிருந்த அம்மாவும், அதிகாவின் அம்மம்மாவும் கொஞ்சமும் விரும்பவில்லை. பேச்சில் கண்டிப்புத் தெரிந்தது. அதிகாவின் அம்மா உள்ளே செல்ல, அம்மம்மா தொடர்ந்தார்.

“2009…..05ஆம் மாசம் 04 ஆம் திகதிதான் அது நடந்தது.

“மாத்தளன்…இல்ல இல்ல அம்பவன்பொக்கண…

“காயப்படேக்க 6 வயசு. நேசரி (முன்பள்ளி) படிச்சிக்கொண்டிருந்தவள். இங்கிலீஸ் மீடியம்.

“புதுக்குடியிருப்பில ஒரே ஷெல்லடி. இருக்க முடியேல்ல. நடந்துதான் பொக்கணைக்குப் போனம். அதிகாவின்ர சித்தி வீடு இருந்தது. வீடெண்டா, டென்ட். பகல் பதிணொண்டர இருக்கும். வீட்டுக்குப் போனதும், ரீ (tea) தந்திச்சினம். அதிகாவின்ர அப்பா, கதிரையில இருந்து ரீ குடிச்சுக்கொண்டிருந்தார். அதிகாவும் தம்பியும், அப்பாவின்ர முழங்காலில கையை ஊண்டிக் (ஊன்றி) கொண்டு, ரெண்டுபக்கமும் இருந்தவ.

“திடீரெண்டு வேப்பமரத்தில விழுந்து, ஷெல் வெடிச்சது. அப்பாவின்ர மடியில இருந்த பெடியனின்ர முகமெல்லாம் இரத்தம். பதறியடிச்சிக்கொண்டு அவனத் தூக்கினா, நெத்தில காயம். பிறகு எங்க அதிகாவக் காணேல்ல எண்டு பாத்தா, கீழ விழுந்து கிடக்கிறாள். அவளுக்கு முதுகில காயம்பட்டிட்டு. ரெண்டு பேரும் அழ, எல்லாரும் பிள்ளயள வச்சுக்கொண்டு, அழுறம்.

“அதிகாவின்ர அப்பாவக் கவனிக்கேல்ல. அவர் அப்பிடியே கதிரயில இருக்கிறார். பிறகு கொஞ்சத்தால, தல சரிஞ்சது. வடிவா கிட்டப்போய் பாத்தன். அவருக்கு, பீஸ் முன்னுக்குப் பட்டு, முதுகால போயிற்று. கதிரயில இருந்தபடியே இறந்திட்டார்.

“உடன பக்கத்தில நிண்ட ஆக்கள், பிள்ளயள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிற்றினம். ஆஸ்பத்திரியெண்டாத் தெரியும்தானே? அங்கயும் பயம்தான். ஒரே ஷெல்லடி தானே. நாங்கள், மருமகனின்ர பொடியோட (சடலம்) நிண்டிட்டம்.

“பிறகு, ஆஸ்பத்திரிக்குப் போனாம். மகனுக்குப் பிரச்சின இல்ல, மகளுக்கு இடுப்புக்குக் கீழ சரிவராது எண்டுச்சினம். என்ர குழந்தையின்ர முகத்த, என்னால பாக்கவே முடியேல்ல. அவளின்ர ஆசைகள், கனவுகள் எல்லாமே, நான் வச்சிருந்த ஆசைகள் எல்லாமே…..” வைராக்கியமிக்க அம்மம்மாவின் குரலும் தளர்ந்தது. குரூரமான அந்த நினைவை மீட்ட குற்றவுணர்ச்சி எமக்கு ஏற்பட்டது.

“பத்தாம் திகதி, கப்பல்ல திருகோணமலைக்கு ஏத்திச்சினம். கப்பல்லயும் படாதபாடு பட்டுத்தான் ஏறினம். அங்கயும் கப்பல்ல, கொண்டு போன பாக் (bag) எல்லாத்தையும் துலைச்சிட்டு, நாங்கள் பட்ட கஷ்ரங்களச் சொன்னால், இப்ப கதறவேணும்.

“திருகோணமலயில ஒன்றரை வருசம் இருந்தம். பிறகு, வவுனியாவுக்கு மாத்திச்சினம். அங்கயிருந்து பம்பமடுவில வச்சுப் பராமரிச்சது. அங்கயிருந்து மருந்தெடுக்க, கொழும்புக்கு அனுப்புவாங்கள். அது அம்புலன்ஸ்ல பெட்ல பிள்ளையின்ர உடம்பு தேய்பட்டு தேய்பட்டு, படுக்க புண் வந்திட்டு. உணர்வில்லதா இடம்தானே. யூரின், டொய்லெட் எல்லாம் போய்போய் அதுவும் பெருத்திட்டு. பிள்ள அதனால பட்ட கஸ்ரம் கொஞ்சநஞ்சமில்ல. கொழும்பு பெரிய ஆஸ்பத்திரிலயே மறிச்சிட்டினம். அங்க, சரியா கவனிப்பும் இல்ல. எனக்குச் சிங்களமும் தெரியாது. பிள்ள, தாயிட்டப் போகப்போகுதெண்டு அழுது. நான், விடாப்பிடியா நிண்டு, வவுனியாக்குக் கொண்டு வந்திட்டன்.

“இப்பிடியே 3 வருசம் ஆஸ்பத்திரி வாழ்க்கதான்” என, அதிகா பற்றி அம்மம்மா சொல்லிக்கொண்டிருக்கையில், அவளின் படிப்புக் குறித்து அறியவும் விரும்புவீர்கள்.
“படிப்பெல்லாம்…

“3ஆம் ஆண்டில இருந்துதான் பள்ளிக்கூடம் போகத் தொடங்கினவ. சுகமாகின பிறகு, வவுனியா சிங்கள மகா வித்தியாலத்துக்குத்தான், இடம்பெயர்ந்த பிள்ளயள அனுப்பிச்சினம். அதிகாவையும் கூட்டிக்கொண்டு போனன். அதிபர் சொன்னார், ‘பிள்ளைய இப்ப 1ஆம் ஆண்டில சேர்த்தா ஷ்கொலர்ஷிப் எடுக்க ஏலாது. வயசுப்படி 3ஆம் ஆண்டிலயே சேர்ப்பம். பிள்ள படிக்கச் சிரமப்பட்டால், பிறகு யோசிப்பம்’ எண்டார். நாங்களும் சம்மதிச்சம்.

“அவ்வள பிள்ளையளுக்குள்ளயும், அதிகா 3ஆம் பிள்ளையா வந்திட்டாள். ஆச்சரியமா இருந்தது. முதலாம், ரெண்டாம் ஆண்டெல்லாம், ஆஸ்பத்திரியிலதான் அதிகா படிச்சவள். கொஞ்சம் சுகமா இருக்கேக்க, ஒண்டு, ரெண்டு. ஏ.பி.சி.டி, தமிழ் எழுத்துகள், தேவாரம் எல்லாம் சொல்லிக்குடுப்பன். அப்பிடியே மனப்பாடமாச் சொல்லுவாள். அது பிள்ளைக்கு பெரிய உதவியா இருந்திருக்கு.

“பிறகு ஸ்கொலர்ஷிப்லயும் பாஸ் பண்ணிட்டாள். 184 மார்க்ஸ்…! இப்ப எட்டாம் ஆண்டு படிக்கிறாள். இப்ப ஓட்டோவிலதான் பள்ளிக்கூடம் கொண்டு போறது. அம்மா, காலம கூட்டிக்கொண்டு போய் விடுவா.

“பள்ளிக்கூடத்தில, இவைய நல்லாக் கவனிப்பினம். இவா, லேட்டாத்தான் எழும்புவா. அதனால இவா, 8 மணிக்குப் பிறகும் பள்ளிக்கூடம் போகலாம்.

“இவாவின்ர ஓட்டோவக் கண்டதும், வகுப்புப் பிள்ளயள் எல்லாரும் ஓடிவருவினம். ரீச்சராக்களும் நல்லாக் கவனிப்பினம். பெரிய கஷ்ரமில்ல. ஆனா எங்களுக்குத்தான், பிள்ளைய பாக்க…பாக்க, அவவின்ர எதிர்காலத்த நினைக்க நினைக்க…..!” அதிகாவின் அம்மம்மா மிகுதியாகச் சொல்ல வந்ததைச் சொல்வதற்கு, அவரிடம் வார்த்தையில்லை, துன்பம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அம்மம்மா அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க, சக்கரக் கதிரையில் அமர்ந்திருக்கும் அதிகா என்னும் அழகிய சிறுமியை, அவளின் தம்பி தள்ளிவருகின்றான்.

தொடுவது, பார்ப்பது, பேசுவது என, புலன்களால் உணரக்கூடிய அனைத்துக்கும் வர்ணமிடித்துப் பார்க்கும் கண்களோடு, அச்சிறுமி அங்கிருந்தவர்களை நோக்கினாள். எல்லோரும் அவளைப் பார்க்க, அவள் வெட்கப்பட்டாள். யாரையும் பார்க்கமுடியாது திணறினாள். அவ்விடத்தில் அதிகா வெளிப்படுத்திய கூச்சவுணர்வு சொன்ன செய்திகள் ஏராளம். அந்தக் கூச்சவுணர்வுக்கும் மகிழ்ச்சி பூச, அவள் சிரிக்க முயன்றாள்; இயலவில்லை. தோற்றாள்; தோல்வியை மறைக்கவும் இயலவில்லை.

“…உள்ள போ(க)ப் போறன்… உள்ள போ(க)ப் போறன்…” என்றாள். சக்கரக் கதிரையைத் திருப்பிக்கொண்டாள். எங்கள் முகம் பார்க்கவும் விரும்பவில்லை; எங்களை விட்டு நகரவும், அதிகா விரும்பவில்லை. திரும்பி வாசலில் நின்றுகொண்டாள்.

அப்படி நின்றபடியே, தன் பெயர் சொன்னாள். தனக்குப் பிடித்த ஆசிரியர்களைச் சொன்னாள். நண்பிகளைச் சொன்னாள். தனக்குப் பிடித்த கதை சொன்னாள். பாடல் பாடினாள். தன் ஆசைகள் அதிகம் சொன்னாள் அதிகா.

“நான் படிச்சு, டொக்டரா வரவேணும்” என்றாள். அதிகாவின் தம்பி, சக்கரக் கதிரையைத் தள்ளிக்கொண்டு, வீட்டின் உள்ளே போனான். அந்த வீட்டின் உட்புறம், இருளாய் இருந்தது. இருள் மங்கியிருந்த வீட்டின் சுவர்களில், வர்ணச் சுண்ணக்கட்டிகளால் கீறப்பட்ட பல்வேறு உருவங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அவை, அதிகாவால் தீட்டப்பட்ட வர்ணங்களாக இருக்கக்கூடும். எங்கள் பிஞ்சுகளை, போர் இப்படித்தான் தின்று கொண்டிருக்கின்றது என்பதற்கு, அதிகாவும் ஒரு சாட்சி.

இரண்டாவது கதை

இந்தச் சிறுமி, நலன்புரி நிலையத்தில் வைத்துத்தான் சுடப்பட்டாள்.

அதிகாவுடனான உரையாடல் முடிந்ததும், அவளின் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த, ஆயிசாவின் வீட்டுக்குப் பயணமானோம்.

குன்று குழிகளாலும் கால் புதையும் மணலாலும், அவளின் வீட்டுக்கான ஒழுங்கை நிரம்பியிருந்தது. அவ்வொழுங்கை முடிவதற்கு நான்கைந்து வீடுகள் முன்னதாக , கழித்துவிடப்பட்ட தகரத்தால் ஆன படலையொன்றின் முன்னால், சக்கரக் கதிரையில் ஆயிசா அமர்த்தப்பட்டிருக்கிறாள். அருகில், அவளுக்குத் துணையாக, தம்பியொருவர் நிற்கிறார்.

இருவரும் புதினப் பார்வையுடன் எம்மை நோக்கினர்.

“என்ன செய்யிறீங்கள் றோட்டில?” என்று கேட்க, “அம்மாக்கு அக்சிடென்ட். அப்பா, ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போயிற்றார். பார்த்துக்கொண்டு நிக்கிறம்” என, ஆயிசா சட்டெனப் பதிலளித்தாள். அவளின் பார்வையில் குறும்புத்தனங்களும், அந்தக் குறும்புத்தனங்களைக் கைவிட்ட குழந்தையொன்றின் ஏராளமான ஏக்கங்களும் வழிந்தன.

“வேற யார் நிக்கினம்?” எனக் கேட்க, “ஒருத்தரும் இல்ல. இவர் சித்தியின்ர மகன். என்னைப் பார்த்துக்கொள்றதுக்காக, கூப்பிட்டு விட்டிட்டுப் போனவ. இப்ப வந்துடுவினம். நில்லுங்கோ” என்றாள்.

“படிக்கிறீங்களா?”

“ஓம். 8ஆம் வகுப்புப் படிக்கிறன்..”

“அப்பா என்ன செய்யிறார்?”

“கூலிக்குத்தான் போறவர்”

“அப்பா உழைக்கிற காசு காணுமா?”

“அம்மாக்குத்தான் தெரியும்”

“என்னத்தில பள்ளிக்கூடம் போவீங்கள்?”

“அம்மா, இந்தச் சக்கரக் கதிரையில வச்சுத் தள்ளிக்கொண்டு போய் விடுறவா. பள்ளிக்கூடம் முடிய வந்து கூட்டிவருவா”

“இந்த மணலுக்குள்ளால, இவ்வளதூரம் கஷ்ரமில்லயா?

“கஷ்ரம் எண்டு அம்மா சொல்லேல்ல…”

“எத்தின மணிக்குப் பள்ளிக்கூடம் போவீங்கள்?”

“ஏழு மணிக்கு”

“ஏன் அவ்வள நேரத்தோட?”

“காலம நேரத்தோட போனா, முதல்நாள் எனக்கு விளங்காத பாடங்கள, ரீச்சராக்கள் விளங்கப்படுத்திவிடுவினம். வகுப்பு நடந்தா, அதில போய் இருப்பன்”

“பள்ளிக்கூடத்தில எல்லாரும் எப்பிடி?”

“எல்லாரும் நல்லவயள். ரீச்சராக்கள் நல்லாக் கவனிப்பினம். எல்லாப் பிள்ளையளும் உதவிசெய்வினம். பள்ளிக்கூடம் சந்தோசமா இருக்கும். ஆனா, இன்ரவெல் நேரம்தான் கவலையா இருக்கும். எல்லாப் பிள்ளையளும் விளையாடுவினம். கன்ரீன் போவினம். நான் வகுப்பில இருப்பன். இல்லாட்டி, வகுப்புப் பிள்ளையளிட்ட லைப்றரிக்கு கூட்டிப்போகக் கேட்டா, கூட்டிக்கொண்டு போய் விடுவினம்”

“ஏன் நீங்க உங்களோட படிக்கிற பிள்ளையளிட்டக் காசு குடுத்துவிட்டு, கன்ரீன்ல ஏதும் வாங்கி சாப்பிடலாம்தானே?”

“எல்லா நாளும் அப்பாட்டக் காசிருக்காது”

“உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் எத்தின பேர்?”

“ஒராள்..”

“யார்?”

“அதிகா. அவரும் என்னப்போலத்தான். நிறைய நேரம் கதைப்பம். அவா, ஓட்டோவில வருவா..”

“உங்களுக்கு எப்பிடிக் காயப்பட்டதெண்டு அம்மா சொல்லியிருக்கிறவா?”

“ஓம். எனக்குத் தெரியும். முள்ளிவாய்க்காலில இருந்து போய், அருணாச்சலம் காம்ப்பில இருந்தனாங்கள். பின்னேரம்போல, டென்ட் ஓரம் விளையாடிக்கொண்டிருந்தம். அந்த நேரம், பக்கத்து காம்ப்பில விறகு எடுக்கக் காட்டுக்கு போன ஆக்களுக்கும் ஆமிக்கும் சண்ட வந்திட்டு. ஆமி, மேல் வெடி வச்சவன். அதில தான் ஒரு ரவுண்ஸ் வந்து, எனக்கு பட்டிற்று.

“காயப்பட்ட உடன, வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனவ. பிறகு கொழும்புக்குக் கொண்டு போனவ. அதுக்குப் பிறகு, விசாரண நடந்தது. பிறகு விட்டிட்டினம்”

“என்ன விசாரணை?”

“பொலிஸ், ஆமியெல்லாம் வந்து, யார் சுட்டது எண்டு விசாரிச்சவ. பிறகு போயிற்றினம். ஒண்டும் சொல்லேல்ல..”

“காயப்பட்டதுக்கு நட்டஈடு ஏதும் தந்தவையா?”

“இல்ல”

“நட்டஈடு எண்டா என்ன எண்டு தெரியுமா?”

“ஓம். பாதிக்கப்பட்ட ஆக்களுக்குக் குடுக்கிறது. எனக்கு அப்பிடி ஒண்டும் தரேல்ல”

“பிறகு எப்பிடிப் படிச்சீங்கள்?”

“காயப்படேக்க நான் நேசரிதான் படிச்சுக்கொண்டிருந்தன். பிறகு 2ஆம் ஆண்டிலதான் சேர்த்தது. 2 வருசம், ஆஸ்பத்திரில இருந்தனான். அங்க நேர்ஸ் ஆக்கள், பாடம் சொல்லித்தந்தவ”

“இரவில எத்தின மணி வரைக்கும் படிப்பீங்கள்?”

“10 மணி மட்டும். பிறகு நித்திரை வரும். அம்மா, தூக்கிக் கிடத்திவிடுவா”

“வீட்டில என்ன வேலை செய்வீங்கள்?”

“சயிக்கிள்ள இருந்தபடியே வீடு கூட்டுவன். மரக்கறி வெட்டிக் குடுப்பன். இவ்வளந்தான்”

“உங்கட இலட்சியம் என்ன எண்டு ரீச்சராக்கள் கேட்டா, என்ன சொல்லுவீங்கள்?”

“டொக்டரா வரவேணும் எண்டு”

அவளுக்கும் எமக்குமான 2 மணிநேர உரையாடல், இப்பிடித்தான் நிறைவுற்றது. அந்தச் சிறுமியின் கண்களில் படரும் வலி, வார்த்தைகளில் இல்லை. அவளின் கண்களில் கண்ணீர் இல்லை. அவள் பேசிய சொற்களில், ஆங்காங்கே இரத்தம் கசிவதை, இதைப் படிக்கும்போது நீங்களறிவீர்கள். போர்தான் கொடுமையெனில், போருக்குப் பின்னரும் கொடுமை நிகழ்ந்தமைக்கு, ஆயிசாவும் ஒரு சாட்சி. இறுதிப்போரின் அவலம் முள்ளிவாய்க்கால் நிலத்தோடு மட்டும் நிறைவடையவில்லை. அதன் பின்னரும் அப்பேரவலம் நீடிக்கிறது என்பதற்கும், அவளொரு சாட்சி.

அதிகாவினதும் ஆயிசாவினதும் கதைகள், இந்த நிலத்தின் விதிவிலக்குகள் இல்லை, இந்த நிலத்தின் விதிகளாகவே அவை இருக்கின்றன என்பது தான் வருத்தமானது. இவர்களைப் போன்றவர்களின் மனித உரிமைகள் பற்றிய கவனம், விசேட தினங்களில் மாத்திரமல்லாது, தினமும் ஏற்படுமா? இவர்களுக்கான விடிவு கிடைக்குமா?