இன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’….

கேரளத்தின் ‘க்ருஹலக்ஷ்மி’ மாத இதழ் தாய்ப்பாலூட்டும் பெண்ணின் படத்தை முகப்பில் வெளியிட்டபோது – ‘100 சதவீத கல்வியறிவு’ பெற்றதாகச் சொல்லப்படும் ‘தெய்வத்தின் சொந்த நாடு’ கேரளாவே விவாதித்து மாய்ந்தது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நடிகை கஸ்தூரி தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வுக்காக குழந்தைக்குப் பாலூட்டும் புகைப்படங்களில் தோன்றினார்.

இன்றைய தேதிக்கு கூகுளில் துழாவிப் பார்த்தால்…
‘டைம்ஸ் ஆப் இண்டியா’ வலைப்பக்கம் உள்பட…
பல இடங்களிலும் அவரது ‘பாலூட்டும் மார்பகங்கள்’ மறைக்கப்பட்ட படங்களே காணப்பட்டன. உண்மைப்படம் மிகச் சில தளங்களிலேயே இருக்கிறது.

‘ராம் தேரி கங்கா மெய்லி’யில் மந்தாகினியின் பாலூட்டும் மார்பகக் காட்சிகள் ‘வியாபாரத் தந்திரம் ‘ ஆக்கப்பட்ட நாள்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

பிரபல இசைக்கலைஞர் ரவிசங்கரின் மகளும், சிதார் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான அனுஷ்கா ஷங்கர் தந்து இரண்டாவது குழந்தைக்குப் பாலூட்டும் செல்பியை கொஞ்சநாள் முன்பு வெளியிட்டு தாய்ப்பால் ஊட்டுவதில் வெளிப்படும் தாய்மையின் பூரிப்பை வெளிப்படுத்தினார்.

பெண்ணின் உடல் – அது பாலூட்டும் உறுப்பாக இருப்பினும் –
‘இச்சைக்குரியது, இச்சையைத் தூண்டுவது’ என்கிற கற்பிதம் இந்திய சமூகத்தில் ஆழமான வடு.

பெண்ணுரிமை பேணப்படுவதாகச் சொல்லப்படும் மேற்கத்திய நாடுகளில்
என்ன வாழ்கிறதாம்?

ஆண்டுகள் முன்பு…பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அமைச்சர் மனுவேலா டி’அவிலா நாடாளுமன்ற விவாதத்தின்போது தான் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானபோது….

பாராட்டுகள் ஒருபுறம் குவிந்தாலும்….

பொது இடத்தில் தாய்ப்பாலூட்டுவது சரியா தவறா என்று பட்டிமண்டபங்கள் நடந்தன.

அதேபோல, அர்ஜென்டைனாவின் பெண் எம்பி விட்ட்டோரியா டோண்டா பெரஸ், ஆஸ்திரேலியன் செனட்டர் லரிஸா வாட்டர்ஸ் ஆகியோரும் அவர்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் தங்கள் குழந்தைகளுக்கு முலைப்பாலூட்டும் காட்சிகள் வெளியாகி விவாதப்பொருளாயின.

இன்று காலை….

பேருந்தில் கேகே நகர் பெருந்துப்பணிமனையில் “தாய்ப்பாலூட்டும் அரை’ பெரிய திண்டுக்கல் பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது என் கண்ணில் பட்டது தற்செயலான விஷயம்தான்.

(Rathan Chandrasekar)