இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 8)

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற சுலோகங்களை – அவை ஊருக்கடி பெண்ணே! உனக்கல்லடி கண்ணே! என்ற கணக்கில் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களிற் கணிசமானோர் ஒரு மகா தமிழ் உணர்ச்சி உசுப்பேத்தல் மூலம் மக்களை கொதிநிலையில் வைத்துக் கொண்டு தாங்கள் குளிர்காய்கின்ற அரசியலை நடத்திவருவதை நாம் நாளும் பொழுதும் காண்கின்றோம்.

அவ்வாறிருந்தாலும், தமிழர்கள் மத்தியில் பெரும் மதிப்புக்கு உரியவரும் யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருந்தொகையான விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான கௌரவ முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் அவரது ஆழ் மனதுக்குள் உணர்ச்சிமயமான ஓர் அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்வது சிரமமல்ல.

இலங்கையின் நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த முப்பது ஆண்டு காலத்தில் தமிழர்; தேசம், தமிழ்த் தேசியம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பவை தொடர்பாக அவர் எந்தக் கட்டத்திலும் உணர்ச்சிவசப்பட்டது கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அப்படிப்பட்டவருக்கு எழுபத்தைந்து வயதில் அவற்றுக்காக உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறார் என்றால் அது நம்பக் கூடிய ஓன்றல்ல.
அழகன் முருகப் பெருமானென விக்கினேஸ்வரன்;
தமிழர் மனம் கவர்ந்த மகாநடிகன்

எட்டுக் கிரகங்களும் கூடி வந்தாலும் சனியின் கண்பட்டால் நாசம் என்பார்கள். இங்கே அதற்கு மாறாக, ஓய்வுபெற்ற நீதியரசராக கம்பராமாயணம் கந்தபுராணம் என்று இருந்த திரு விக்கினேஸ்வரனுக்கு சம்பந்தரின் கண்பட்டதால் அவரின்; ஜாதகம் சுக்கிரதிசையில் ஏறியது. திரு சேனாதிராஜாவுக்கு அதுவே ஏழரைச் சனியனாகியது. எவ்வாறாயினும் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் அரசியலிற் புகுந்த அடுத்த கணத்திலேயே அவர் இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகினார். வயதால் அனுபவசாலி, சட்டத்தில் மேதாவி, நிர்வாகத்தில் நிபுணன், அரசைப்பற்றி அத்துபடியாக அறிந்தவர், கடவுள் நம்பிக்கைகளால் பண்பானவர், கறையற்றவர், குறையற்றவர் என்ற பல்வேறு சான்றிதழ்களால் தமிழ்ப் பிரமுகர்கள் சமூகத்தில் எடுத்த எடுப்பிலேயே அவர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். பிரபாகரனுக்குப் பிறகு இவர்தான் தமிழ்த் தேசியத்தை சர்வதேச உச்சத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார் என தமிழ் தேசிய அரசியல் ஆய்வாளர்;களின் ஜோதிடம் மற்றொரு பக்கம்.
திரு விக்கினேஸ்வரன் பற்றிய நிஜங்களை அறிந்தவர்கள் தமது உள்ளத்தளவில் என்னதான் கருத்துக் கொண்டிருந்த போதிலும், இலங்கை (யாழ்ப்பாண)த் தமிழர்கள் அவருக்கு 50 சதவீதத்;துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை அளித்து அவரை எந்தவித சந்தேகத்துக்கும் இடமற்ற ஒரு சட்டபூர்வமான நியாயாதிக்கம் உடைய தலைவராக அங்கீகரித்தார்கள்.

தமிழர்கள் தமது பூரணமான நம்பிக்கையையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர் தமிழர்களின் உடனடியான பொதுத் தேவைகள் மற்றும் தமிழர்களின் நீண்டகால அபிலாஷைகளை நடைமுறை யதார்த்தமாக்குவதற்கு வேண்டிய சரியான முடிவுகளை எடுத்துச் செயற்படுவார் – யாருக்கும் அஞ்சாது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும் என்பதே பரந்துபட்ட தமிழர்களின் எதிர்பார்க்கை. அதற்காக தமிழ் மக்கள் தமது ஆணையையும் வாக்குகளால் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள்.

திரு விக்கினேஸ்வரன் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் கூடக்கூடாத கூட்டத்தாரோடு கூடியதால் ஏற்படும் சில விளைவுகள் போல சில பிறழ்வான செயல்களையும் பேச்சுக்களையும் ஆற்றியிருந்தாலும், அதேநேரத்தில் அவரின் இயல்பான குணாம்சங்களையும் பல சந்தர்ப்பங்களில் துணிச்சலாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்; என்பதையும் நாம் அவதானிக்கத் தவறக் கூடாது.

இவ்வளவு அறிவும் ஆற்றலும் அங்கீகாரமும் உடைய திரு விக்கினேஸ்வரன் அவர்கள் தான் தலைமையேற்ற வடக்கு மாகாண சபையை இதுவரை உரிய வகையில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வுக்கும் நாட்டின் ஜனநாயக மற்றும் முற்போக்கான அம்சங்களின் எழுச்சிக்கும் உரிய நிறுவனமாக செயற்படுவதற்கு வேண்டிய எதனையும் ஆற்றவில்லை. மாறாக தமிழ்த் தேசிய நாடக அரசியல் வாதிகள் தமது சுயதிருப்திக்கான, சுயவெறுப்புக்கான மற்றும் சுயவிளம்பரம்பத்திற்கான அரசியற் சுலோகங்களை எழுப்பும் தளமாக மட்டுமே பயன்படுத்த இடமளித்திருக்கிறார். இவற்றிலிருந்துதான்; அவர் தொடர்பான கேள்விகளை – சிக்கல்களை நோக்க வேண்டியுள்ளது.

ஊரை மேயிற அண்ணைமாருக்கு ஓட்டம் காட்டத்தான்
ஐயா கொழும்பில இருந்து அப்புவை கூட்டி வந்தவரோ!

இந்த மாகாண சபையானது, திரு விக்கினேஸ்வரன் அவர்கள் கற்பனை பண்ணியிருந்த அளவுக்கு அதிகாரங்களும் வளங்களும் கொண்டதாக இல்லாவிடினும், முடிந்த அளவுக்கு இன்று கையில் கிடைத்திருக்கும் இந்த மாகாண சபையைத் தளமாகக் கொண்டு தமிழர்களுக்கு இன்றைய நிலையில் அவசியமானவற்றை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தோடு அவர் செயற்படாமல் இருப்பதுதான் இங்கு கவனத்திற்;குரியது.
வடக்கு மாகாணசபை வெறுமனே தமிழ்த் தேசிய கூச்சல்களுக்கான சுயநிர்ணயக் களமாக இருக்க வேண்டுமென்றால், திரு விக்கினேஸ்வரன் போன்ற ஒருவரை தமிழர்கள் முதலமைச்சராக ஆக்கியிருக்கி வேண்டிய அவசியமில்லையே!

இவரை விட அதனை கௌரவ திரு மாவை சேனாதிராஜாவையோ அல்லது கௌரவ அடைக்கலநாதன் செல்வத்தையோ அல்லது கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரனையோ முதலமைச்சர் ஆக்கியிருந்தால் மிகத் திறமையாக ஆக்ரோஷம் கொப்பளிக்கும் களமாக மாகாண சபையை எப்போதும் சுடச்சுட வைத்துக் கொண்டிருப்பார்களே! எல்லோரையும் விட, சிவாஜிலிங்கத்தையோ அல்லது அனந்தியையோ முதலமைச்ராக ஆக்;கியிருந்தால் அவர்கள் மாகாண சபையை முள்ளிவாய்க்காலில் நடத்தி எப்போதும் அதனை ஒரு சுடுகாட்டுக் கொதிநிலையில் வைத்திருந்திருப்பார்களே!

விடிஞ்சது பொழுதுபட்டது தெரியாம ஒளிச்சிருந்தவையின்ற
புதிய கண்டுபிடிப்பு – இருக்கிற மாகாண சபை சரியில்ல!

தேர்தலில் போட்டிக்கு நின்று, வாக்குறுதிகளை வானளாவ அள்ளி வீசி போட்டிக்கு நின்ற ஏனையவர்கள் மீது வாய்க்கு வந்தபடியெல்லாம் வசைபாடி விட்டு – இலட்சக் கணக்கில் மக்களிடம் வாக்குகளையும் பெற்று தமிழரசு வந்து விட்டதென வெற்றிப் பவனிகளையும் முடிசூடல்களையும் நடத்;திவிட்டு – அமைச்சர்களையும் நியமித்து விட்டு – ஆறு மாதங்களுக்கு மேலாக சம்பளம் மற்றும் அதனோடு சேர்ந்து பல தலைப்புகளில் வருமானங்களையும் மாகாண சபையிலிருந்து எடுத்துக் கொண்டு – மேலும் என்ன வசதிகள் சலுகைகள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் பெறுவதற்கு கொஞ்சமும் வெட்கப்படாமல் உணர்ச்சிவசப்படாமல் மான ரோசம் பார்க்காமல் முன்கதவுகளாலும் பின்படலைகளாலும் யாசிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டு – மாமன் மச்சான் அண்ணன் தம்பி என மாகாண சபையின் பல்வேறு பதவிகளில் சொந்தக்காரர்களையும் இருத்தி விட்டு இப்போது மீண்டும் அவர்களது பழைய பாட்டான “13வது திருத்த அரசியல் யாப்பை ஏற்கவில்லை”, “அதில் அதிகாரம் எதுவுமில்லை”, “எல்லா அதிகாரங்களும் ஆளுநருக்கே கொடுக்கப்பட்டுள்ளன” என பாடுகிறார்கள்.

13வது திருத்த அரசியல் யாப்பு இலங்கையின் இன முரண்பாடுகளுக்கு – தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு முழுமையான நிரந்தரத் தீர்வாக முடியாது என்பது ததேகூக்காரர்கள் புதிதாகக் கண்டு பிடித்த ஒன்றல்ல. கௌரவ விக்கினேஸ்வரனுக்கும் அவரது அமைச்சர்களுக்கும் கௌரவ சுமந்திரனுக்கும் இது புதிதாக இருக்கலாம். ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இது பற்றி முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபையின் அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் நிறையவே சொல்லியிருக்கின்றன.

தமிழர்கள் மட்டுமல்ல, நியாயமான முற்போக்கான எண்ணம் கொண்ட சிங்களத் தலைவர்களும் புத்திஜீவிகளும் இதனை கடந்த இருபந்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகின்றனர். இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

13வது திருத்த அரசியல் யாப்பு திருப்தி அற்றது என்பதாற்தான், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் கௌரவ மங்கள முனசிங்கா அவர்களின் தலைமையிலான நாடாளுமன்றக் கமிட்டி இந்திய அரசியல் யாப்புக்குச் சமனான அதிகாரப் பகிர்வை சிபார்சு செய்தது – பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் மாகாணங்களுக்கு ஒரு பிரதேச சுயாட்சிக்கு அண்மித்த அதிகாரங்கள் கொண்ட ஓர் புதிய அரசியல் யாப்பு பிரேரணையை 1995ம் ஆண்டு தொடக்கம் சொல்லி வந்து அதனை 2000ம் ஆண்டு நாடாளுமன்றத்திலும் முன்வைத்தார் – ஆனபடியாற்தான் 2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கா உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு சமஷ்டி (மாநில சுயாட்சி) அமைப்பை வழங்குவதற்கு ஒப்புக் கொண்டார் – ஆனபடியாற்தான் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா அவர்களினால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய குழு மாகாண சபைகளுக்கு ஒரு மிக விரிவான அதிகாரங்கள் கொண்ட ஒரு பிரேரணையை சிபார்சு செய்தது.

13வது திருத்த அரசியல் யாப்பை இங்கு யாரும் திருப்தியானது என்றோ அல்லது அதுவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வாக அமையும் என்றோ கூறவில்லை. இப்போது புதிதாக கண்டுபிடித்தவர்கள் போல இங்கு புதிய ததேகூக்காரர்கள் பெரிய விளக்க உரைகள் தர முற்படுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

வேண்டுவதைக் கோரி உண்மையாகப் போராடு
இல்லை – கிடைப்பதை ஏற்று திறனோடு முன்னேறு

13வது திருத்த அரசியல் யாப்பின் பிரகாரமான மாகாண சபை முறையை ஏற்கவில்லை என்றால் வேறு எப்படிப்பட்ட ஓர் அரசியல் யாப்புத் திட்டத்தை ததேகூக்காரர்கள்; தமக்குள் ஒரு முகமாக திட்டவட்டமாக கோருகின்றனர் என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. அவர்கள் புதிரான நொடிகள் போடுவார்களாம் மக்கள் அதனை கண்டு பிடிக்கட்டுமாம்.

ஓன்று தவறானது – தப்பானது – ஏற்க முடியாதது என்பது மட்டும் போதியதாகாது. ஒரு நியாயமான நீதியான கோரிக்கை உடையவர்கள் தங்களுக்கு எது தேவையானது – எது சரியானது – எது தமக்கு ஏற்புடையது என திட்டவட்டமாக அறுதியாகவும் உறுதியாகவும் தெரிவிக்க வேண்டுமல்லவா!.

ததேககூக்காரர்கள் கற்பனையில் வாழ்கிறார்கள் என்றோ அல்லது யதார்த்தம் புரியாதவர்கள் என்றோ அர்;த்தம் கொள்ள வேண்டாம். தங்களுக்கு ஒன்று தேவையென்றால் அதற்காக யாரைப் பிடிப்பது, யாரை இழுத்து விழுத்துவது, எப்படி வேண்டுவது, எப்படி நெழிந்து வளைந்து சுழிச்சு காரியம் சாதிப்பது என்பதில் மிக யதார்த்தபூர்வமாகத் தானே செயற்படுகிறார்கள்! பிரபாகரனுக்கும் அல்வாக் கொடுத்து அதே சமயத்தில் சந்திரிக்காவுக்கும் பூக்கொடுத்த நிபுணர்கள்தானே இவர்கள்.

இன்றைய சர்வதேச மற்றும் இந்து சமுத்திர பிராந்திய அரசியல் நிலையில் தமிழர்களுக்கு வேண்டியதென எப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென்பதை திரு சம்பந்தரும், திரு விக்கினேஸ்வரனும், திரு சேனாதிராஜாவும், திரு சுரேசும், திரு சுமந்திரனும் நன்கு அறிவார்கள் என்பதை என்னைப் போன்ற பலரும் அறிவோம்;. அதன் அவசியத்தையும் அவர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனாலும் அதனை அவ்வாறு அவர்கள் செய்யாமல் இருக்கும் அவர்களின் அரசியற் சூத்திரம் தான் கேள்விக்குரியது.

இவர்கள் தமிழர்களை நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பு மிக்க தலைவர்களாகச் செயற்படுவார்களா அல்லது யாழ்ப்பாணத்து ஓய்வு பெற்ற பிரமுகர்களையும் உள்நாட்டிலும் மேலைத் தேச நாடுகளிலும் அரசியல் வியாபாரம் பண்ணும் புலிவாதிகளையும் புளகாங்கிதப்படுத்தும் அரசியலையே தொடர்ந்தும் நடத்தப் போகின்றார்களா என்பதே இங்குள்ள பிரதானமான கேள்வியாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்த போது, அந்தக் கட்சிகாரர்களைத் திருப்திப்படுத்தவோ என்னவோ, திரு. சம்பந்தர் அவர்கள் இந்தியாவிலுள்ளது போன்ற ஓர் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை இலங்கை அரசு தர முன்வந்தால் தாங்கள் அதைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதனையேதான் திரு ஆனந்தசங்கரி அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றார். அவரைத் தமிழ்த் துரோகி என்று சொல்லிவிட்டு இப்போது சம்பந்தரும் அதையேதான் கூறுகிறார். அவர் உளப்பூர்வமாக அவ்வாறு கூறியதாகக் கருத முடியாதுள்ளது. அவரது அந்தக் கூற்றின் மீது பல ததேகூக்காரர்களுக்கு உடன்பாடில்லை என்பது ஒரு புறம் – மறுபுறமாக அவர் இலங்கை வந்ததும் தமிழர் இறைமை, சுயநிர்ணயம், சமஷ்டி என்பவற்றைத் தானே கூறுகிறார். ஏன் இடத்திற்கிடம் இந்த மாறு வேடம்?

அழுதாலும் அவள்தானே பெற வேண்டும் பிள்ளையை!
அரசியல் யாப்பின் 13வது திருத்த ஏற்பாடுகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றே ஜெனீவாத் தீர்மானத்தினூடாக உலகநாடுகள் கூறுகின்றன. இந்த விடயம் ஜெனீவாத் தீPர்மானத்தில் உள்ளடக்கப்படுவதற்குக் காரணமே இந்தியாதான். அதேவேளை 13வது திருத்த அரசியல் யாப்புக்கும் மேலாக சென்று அரசியற் தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென்று இந்தியாவும் பல முக்கியமான சர்வதேச நாடுகளும் மஹிந்த அரசை வலியுறுத்துவதாக த.தே.கூ. காரர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவும் மற்ற நாடுகளும் அவ்வாறு கூறுகின்றன என்றே வைத்துக் கொள்வோம். அப்படியாயினும், அரசியல் யாப்பின் விதிகள் மற்றும் ஏற்பாடுகள் எவ்வெவ்வாறெல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தோடு அந்த நாடுகளா முழு விடயத்தையும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப் போகின்றன? நிச்சயமாக இல்லை.

இந்தியாவும் மற்ற நாடுகளும் 13வது திருத்த அரசியல் யாப்புக்கும் மேலான ஓர் அதிகாரப் பகிர்வு நிலை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசைக் கொண்டு வந்தாலும், ஒவ்வொரு விடயங்களையும் விபரங்களையும் பேச வேண்டியவர்கள் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தானே. இந்தியாவும் சரி எந்த நாடும் சரி தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரித்தல் என்ற விடயத்தை ஏற்கப்போவதுமில்லை, அது தொடர்பாக இலங்கை அரசை அவை வலியுறுத்தப்போவதுமில்லை என்பது மிக உறுதியானதொரு விடயமாகும்.

என்னதான் நடந்தாலும் இப்போதிருக்கும் மாகாண சபைக்கு கொடுக்கப்பட வேண்டிய அதிகாரங்களை சற்று அதிகரிப்பதை இந்தியாவும் உலகநாடுகளும் அங்கீகரிக்கலாம். அத்துடன் கொடுக்கப்படும் அதிகாரங்களை தெளிவாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் இந்த நாடுகள் ஆதரிக்கலாம். ஆனால் இலங்கை அரசாங்கத்தை ஓர் அளவுக்கு மீறி எந்த நாடும் வலியுறுத்தமாட்டா என்பதே திண்ணமாகும். எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிய கடமை தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகளுக்கே உரியதாகும்.

இப்போதைக்கு தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக த.தே.கூ. காரர்களே உள்ளனர்.
ததேகூக்காரர்கள் நினைப்பது போல அரசியற் பேச்சுவார்த்தைகள் ஒரு ரகசிய – அந்தரங்க விடயமாக அமைய முடியாது. வேண்டுமென்றால் ஆரம்பக் கட்டம் அவ்வாறு அமையலாம். ஆனால் விரிவான பேச்சுவார்த்தைகள் மக்கள் மத்தியில் ஒரு பொது அங்கீகாரத்தைப் பெறாமல் வெற்றிகரமாக நடைமுறையாக முடியாது. பகிரங்கமாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த வரலாறுகள் இருக்கலாம். அதைவிட, ரகசியமான பேச்சுவார்த்தைகள் சபைக்கு வராமலே போன வரலாறுகளே மிக அதிகம்.

தீர்மானகரமாக முடிவெடுக்க வேண்டிய விடயங்களில் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார் அல்லது ஆஸ்பத்திரியிற் போய் நெஞ்சுவலி என்று படுத்துக் கொள்கிறார் என்பது இப்போது பலருக்கும் குசுகுசு கதையாகிவிட்டது. சம்பந்தரோ மாகாண சபை விடயமெல்லாம் விக்கினேஸ்வரனிடம் விடப்பட்டு விட்டது அவரே முடிவெடுப்பார் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டு விட்டார்.
சேனாதிராஜாவோ தனக்கும் மாகாண சபைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது போலவே நடந்து கொள்கிறார். மாகாண அமைச்சர்களோ தமக்கும் மக்கள் தொடர்பான அரசியல் முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பது போல் தங்கள் சொந்த அலுவல்களில் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.

காலமும் சூழலும் மாறுவது மாறாமல் தொடரும்
அதற்குத் தக இலக்கும் முயற்சியும் அமைக!

திம்புப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திலிருந்து காலம் முப்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டது. உலக அரசியலிலும் இந்திய அரசியலிலும் இலங்கை அரசியலிலும் தமிழர்களின் போராட்ட வாழ்விலும் எத்தனையோ பல மாற்றங்கள் நடந்து முடிந்து விட்டன.

ஆனாலும் தமிழர்களின் பொது அரசியல் நலன்கள் தொடர்பான விடயத்தில் இன்னமும் ததேகூக்காரர்கள் அந்தத் திம்பு கால அரசியற் பராயத்திலிருந்து விடுபட்டு வளர்ந்துள்ளதாக அல்லது புதிய யதார்த்தங்களைக் புரிந்த கொண்டுள்ளதாக காண முடியவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினையின் அரசியற் தீர்வாக தமிழ்த் தேசியத்தையும், தமிழர்; தாயகத்தையும், சுயநிர்ணயத்தையும் அங்கீகரி என்ற மூன்று அரை வசனங்களுக்கு அப்பால் வேறேதனையும் ததேகூக்காரர்கள் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் முன்னால் முன்வைக்கமாட்டார்கள் என்பது வெளிப்படை.

இது தமிழர்களை மேலும் முப்பது வருடங்களுக்குப் பின்தள்ளி விடும். அன்றிருந்த ஆயுதப் போராட்ட இயக்க பின்பலம் தமிழர்களுக்கு இன்று இல்லை. இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி ஆகியோர் காட்டிய அக்கறையைக் காட்டுகின்ற தலைமையைக் கொண்டதோர் இந்தியா இனி இல்லை. தமிழர்களின் கோரிக்கையில் அன்று இணைந்து நின்ற கிழக்கு, மலையகம், முஸ்லிம்கள் ஆகிய மூன்று காரணிகளும் இப்போது கணிசமாக விலகியோ அல்லது எதிரணியிலோ உள்ளன.

1985ம் ஆண்டு பூட்டானில் அந்தக் கோரிக்கைகளைத் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்த போது அன்றிருந்த சூழ்நிலைகள் வேறு அத்துடன் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்ததற்கான அடிப்படைக் காரணங்களும் வேறு. அந்தச் சூழ்நிலைகளோ அல்லது அந்தக் காரணங்களோ இன்றில்லை. எனவே அந்தச் சுலோகங்கள் இன்றைக்கு எவ்வகையிலும் பொருத்தமற்றவை.

இன்று கையிலிருக்கும் மாகாண சபை இலங்கையின் அரசியற் சாசனத்தின்படி செயற்படுவதற்கு என்னென்ன – எப்படியாக செய்யப்பட வேண்டும் என்ற திசையிலிருந்தே விடயங்களை நோக்க வேண்டியுள்ளது.
அடுத்த கடிதம் தொடரும்,

இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்