இலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில், அரசமைப்புத் திருத்தங்கள் புதிதல்ல. அரசாங்கம் என்பது, எப்போதும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசமைப்புகள், அந்த அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் ஒழுங்கு -படுத்துவதற்குமானவை; அரசமைப்புத் திருத்தங்களும் அவ்வாறானவையே. அவை, மக்களின் நன்மைகருதி, பெரும்பாலும் திருத்தப்படுவதில்லை. சுதந்திரத்துக்குப் பின்னரான, இலங்கையின் வரலாற்றை நோக்கினால், மிகத் தெளிவாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

இதன் பின்னணியிலேயே, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான, அரசாங்கத்தின் முயற்சிகளை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில், அரசமைப்பைத் திருத்துவது என்பது, எப்போதும் தேர்தல் வெற்றியின் வினைப்பயனாகவே இருந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் வழங்கிய ஆணையை, அரசமைப்பைத் திருத்துவதற்கான ஆணையாகவே, அரசியல்வாதிகள் வியாக்கியானம் செய்கிறார்கள்.

அதற்கும் மேலாக, ஒன்றுக்கொன்று முரணான, அரசமைப்பின் 18ஆம், 19ஆம் திருத்தங்களுக்கு ஆதரவாக, ஒரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அரசமைப்புத் திருத்தங்கள், கொள்கை சார்ந்ததோ, மக்கள் நலன்சார்ந்ததோ இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.

தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பு, மிகப்பெரிய நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன், 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்ற வெற்றியின் விளைவிலானது. 1978ஆம் ஆண்டு, அரசமைப்பை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்தன “ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லா அதிகாரங்களும் உள்ள ஜனாதிபதி நான்” எனப் பெருமை பேசினார். 1978ஆம் ஆண்டின் அரசமைப்பு, அதற்கேற்பவே வடிவமைக்கப்பட்டது.

எனவே, அந்த அரசமைப்பு, இலங்கையின் சாதாரண மக்களின் நலன்பேணும் ஒன்றல்ல. அதில் உள்ளடங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பகுதியைச் சிலாகிப்போர் இருக்கிறார்கள். ஆனால், கடந்த 40 வருடங்களில், நடைமுறையில் நிகழ்ந்தவை, இந்தச் சிலாகிப்புக்கு எதிரான நிகழ்வுகளாகவே உள்ளன.

அதிகாரம் என்பது ஒரு போதை. எனவே, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ஜே. ஆர் இருந்தபோது, அவருக்கு அந்த அதிகாரங்கள் போதுமானதாக இருக்கவில்லை. எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்களை வலுப்படுத்துவதுடன் எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்துவதாகவே, அரசமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த அரசமைப்புக்கு 10 ஆண்டுகள் நிறைவுபெறும் முன்பே, நிறைவேற்றாத ஒரு திருத்தம் போக, அரசமைப்பில் 12 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதைப்பற்றி, ஓர் அரசியல் அவதானி, “நம் நாட்டில் இருப்பது அரசமைப்பா, அரசாங்கத்தின் வர்த்தமானியா” என ஏளனமாக வினவியிருந்தமை, இங்கு நினைவூட்டத்தக்கது.

இந்த அரசமைப்பின் கீழேயே, இரண்டு மோசமான விளைவுகளை, இலங்கை சந்தித்தது. முதலாவது, இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து, கடனாளியாகியது. குறிப்பாக, இக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கொள்கை மாற்றங்களின் விளைவால், இலங்கையின் தேசிய வருமானத்தில், உற்பத்தித் துறையின் பங்கு வெகுவாகக் குறைந்தது. இலங்கையின் உழைப்பாளிகளின் காற்பங்குக்கு மேலானோர், நாட்டுக்கு வெளியிலோ, நாட்டுக்குள்ளோ திறந்த பொருளாதார வலயங்களிலோ, தமது உழைப்பை, அயலாருக்கு விற்க ஆரம்பித்தனர். நாட்டுக்கு, ஒரு தேசிய பொருளாதாரமோ தேசிய பொருளாதாரத்துக்கான திட்டமோ இருக்கவில்லை.

இரண்டாவது, அதிமுக்கிய முரண்பாடாக, நாட்டின் வடிவெடுத்த தேசிய இன ஒடுக்கல். போர் முடிந்து, 10 ஆண்டுகளுக்குப் பின்பும், நாட்டின் பாதுகாப்புச் செலவு கூடியவாறே உள்ளது. பேரினவாதம் மதவெறியுடன் இணைந்து, ஒரு பாசிச மிரட்டலாகிறது. இவை, 1978ஆம் ஆண்டின் அரசமைப்பின் தோல்வியின் வெளிப்பாடுகள் ஆகும்.

சுதந்திர இலங்கையின் முதலாவது அரசமைப்பை வரைந்தவர், பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதியான சோல்பரி பிரபு. இதனால், 1947ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசமைப்பை, பொதுவில் ‘சோல்பரி’ அரசமைப்பு என்றே அழைப்பர். இந்த அரசமைப்பின் உருவாக்கத்தினதும் நடைமுறைப்படுத்தலினதும் வரலாறு, இலங்கையின் அரசமைப்புகளின் சோக வரலாறுகளின் தொடக்கப்புள்ளி எனலாம்.

இந்த அரசமைப்பை வரைவதற்காக, பிரித்தானியாவில் இருந்து வந்த சோல்பரி தலையிலான குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில், படித்த பிரபுத்துவ செல்வந்தர்களின் கருத்துகளே ஆதிக்கம் செலுத்தின. இதனடிப்படையில் வரையப்பட்ட அரசமைப்பானது, இலங்கையின் குடிகள் யார் என, உறுதியாக வரையறுக்காததால், சுதந்திரத்துக்கு முன்பு தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்ற மலையகத் தமிழரின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறிக்க முடிந்தது.

பின்னர், குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தம், இலங்கையில் மூன்று தலைமுறையாக வாழ்வோருக்குக் குடியுரிமையை வழங்க ஏற்றாலும், மலையகத்தில் பிறப்புப்பதிவில் இருந்த குறைபாடுகளும் தோட்டத் தொழிலாளரின் எழுத்தறிவு வீதம் குறைவாக இருந்ததாலும், குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களால் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சோல்பரி அரசமைப்பு நடைமுறைக்கு வந்து, அதில் தெரிவிக்கப்பட்ட நோக்கமான சிறுபான்மையினரின் உரிமைகளின் பாதுகாப்பை, ஒரு வருடத்துக்கு உள்ளேயே தோற்கடித்த பேரினவாதம், எட்டு ஆண்டுகளின் பின்பு, தமிழ் பேசும் தேசிய இனங்களின் மொழி உரிமையையும் மறுத்தது. அதற்கெதிராக, பிரித்தானிய அரசிடம் செய்த முறைப்பாடுகள் பயனளிக்கவில்லை.

இந்த அரசமைப்பின் கீழேயே, சிங்கள- பௌத்த பேரினவாத அரசியல், அரச நிறுவனங்களுள் ஊடுருவியது. ‘சிங்களம் மட்டுமே’ சட்டத்தின் பாதகமான விளைவுகளில் இருந்து, மீளும் நோக்கில் நிறைவேற்றிய மொழியுரிமைச் சட்டங்கள், நடைமுறையில் பேணப்படவில்லை. அரசாங்கமும் அரச இயந்திரமும், சிங்கள- பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலில் சிக்கிச் சீரழிந்தன. இந்தப் பிடியில் இருந்து, இன்றுவரை இலங்கையால் வெளிவர முடியவில்லை. அரசமைப்பின் மீதான, மோசமான திருத்தங்கள், எவ்வாறு நீண்டகாலத் தாக்கங்களை உருவாக்கும் என்பதற்கு, சோல்பரி அரசமைப்பு நல்லதொரு சான்று.

இதைத் தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசமைப்புப் பற்றி, மக்களிடையே வலுவான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், சோல்பரி அரசமைப்பில் இருந்து அது, மிகவும் வேறுபட்டு அமையவில்லை. இலங்கையின் ஆங்கிலப் பெயரான ‘சிலோன்’ என்பதை, ‘ஸ்ரீ லங்கா’ என மாற்றி, இலங்கையைக் குடியரசாக அறிவித்ததற்கு மேலாக, மெச்சும்படி எதையும் அந்த அரசமைப்பு சாதிக்கவில்லை.

1972ஆம் ஆண்டின், அரசமைப்பின் பாரிய தவறு யாதெனின், சிங்களம் மட்டுமே சட்டத்தாலும் அரச நிறுவனங்களை ஊடுருவிய பேரினவாதத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனக் குறைகளைத் தீர்ப்பதற்கு மாறாக, சிங்களத்தையே அரச கரும மொழியாக ஏற்றதோடு, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கியமையும் ஆகும்.

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம், தன்னை ஒரு சோஷலிச அரசாங்கமென அறிவித்தாலும், 1972இன் அரசமைப்பு, சோஷலிச இலக்கை நோக்கிய எந்த நகர்வையும் குறிக்கவில்லை. இலங்கையின் ஏனைய அரசமைப்புகள் போல இதுவும், ஆட்சியாளர்களின் அரசியல் சுயலாபங்களுக்கு அப்பால், மக்கள் நலநோக்கிலானது அல்ல என்பதைத் தனது ஐந்தாண்டு ஆயுளில், அது நிரூபிக்கத் தவறவில்லை.

இலங்கையின் அரசமைப்பைத் திருத்துவது பற்றியும் புதிய அரசமைப்பைப் பற்றியும் பேசுவோர், மூன்று விடயங்களை முதன்மைப்படுத்துகிறார்கள். முதலாவது, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவது. இரண்டாவது, தேர்தல் முறையை மாற்றுவது. மூன்றாவது, சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது.

இங்கு கவனிக்க வேண்டியது, இம்மூன்றையும் செய்வதற்குப் புதிய அரசமைப்பு அவசியமில்லை. ஆனால், உறுதியானதும் உண்மையானதுமான ஜனநாயகத்துக்கும் மக்கள் நலனுக்கும் முற்றிலும் வேறுபட்ட அரசமைப்பு தேவை. ஆனால், நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் அக்கறைகள் வேறுபட்டவை.

நல்லாட்சி அரசாங்கத்தில், புதிய அரசமைப்பின் பெயரால், மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். அந்த நாடகத்தை, எல்லோரும் தெரிந்தே நடித்தார்கள். அரசாங்கம், தமிழ்க்கட்சிகள், சர்வதேச சமூகம் என்பன, சாத்தியமல்ல என்பதை நன்கறிந்தும் பொய்யுரைத்து முன்சென்றார்கள்.

இப்போது, வரைபாக இருக்கும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், இலங்கையின் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளையே எழுப்பியுள்ளது. இலங்கையர்களாகிய நாம், இந்த ஜனநாயக மறுப்பை, அரசமைப்பு ரீதியாக அங்கிகரிக்கின்ற நிலைக்கு, எவ்வாறு வந்து சேர்ந்தோம் என்பதை நோக்குவதும் அவசியமானது.

இலங்கையின் இரண்டு பெரும் கட்சிகளோ அதன் வழித்தோன்றல்களோ, ஜனநாயகத்தின் காவலர்கள் அல்ல; ஒன்றுக்கு மற்றொன்று மாற்று அல்ல. 2015இல் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை மாற்றிய மக்கள், ‘நல்லாட்சி’யிடம் நன்றாகவே ஏமாந்தார்கள். இது, இலங்கையின் அரசியல் பண்பாடு குறித்த முக்கிய பாடமாகும்.
இன்றைய தேவை, இலங்கையில் ஜனநாயகத்தைத் தக்கவைப்பதற்கு மக்கள் மயப்பட்ட பரந்துபட்ட போராட்டமாகும். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான எதிர்ப்பு, அதன் ஒருபகுதியாதல் வேண்டும். இதுமட்டுமே, ஒரு தனித்த போராட்டமாக அமைய முடியாது.

ஏனெனில், இலங்கை இன்று, பலமுனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. மக்களுக்கான கருத்துரிமையையும் சமூகவெளிகளையும் தக்கவைப்பதும் வளர்ப்பதும் சவாலாகியுள்ள நிலையில், இலங்கையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் தவிர்க்கவியலாதது.