இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்

இலங்கை நாட்டை பொறுத்தவரை படுகொலைகள் புதிதான நிகழ்வாக இல்லாத போதும், பத்து வருடங்களாக வெடிகுண்டு சத்தமின்றி இருந்த காலத்தின் பின் நிகழ்ந்திருக்கும் நிகழ்வு என்னும் வகையிலும்; இந்த தாக்குதலின் உண்மையான நோக்கம்,இலக்கு, ஈடுபட்ட சக்திகள், தாக்குதலை நிகழ்த்திய கூட்டத்தின் நம்பிக்கை, அது சார்ந்த மக்கள் கூட்டத்தின் எதிர்காலம் என்னும் பல கேள்விகளுக்குள் இருக்கும் குழப்பமான சூழ்நிலை காரணமாக இச்சம்பவம் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கிடையிலான உறவின் எதிர்காலம் தொடர்பான ஒரு முக்கிய புள்ளியாக அமையப்போகிறது.

கிறிஸ்தவ தேவாலயங்கள், பெருமளவில் தமிழ் மக்கள், வெளிநாட்டவர் எனும் இந்த மூன்று பகுதிகள் நடந்து முடிந்த தாக்குதல்களின் இலக்குகளாக இருந்திருக்கின்றன. மேற்கு உலகத்தால் பிரகடனப் படுத்தப்படாது செய்யப்படும் யுத்தமாக இருக்கின்ற “இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான” போரில் இந்த இஸ்லாம் தீவிரவாதிகள் தமது பலத்தை நிரூபிக்கும் அதேவேளை, சிங்கள மக்கள் மீதான நேரடி தாக்குதல் என்பது இலங்கை முஸ்லிம்களின் பேரழிவில் முடியும் என்னும் அவதானத்துடனும் நடந்து கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டவர்களின் உயிரிழப்பு என்பது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்னும் வகையில் உயர்தர விடுதிகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இம்மூன்று தெரிவுகளின் முக்கியத்துவம் அமைந்திருக்கின்றது.

பிரதானமாக தெற்கில் இரண்டு தேவாலயங்கள், மூன்று உயர்தர விடுதிகள், கிழக்கில் ஒரு தேவாலயம் என்னும் தெரிவும்; தற்கொலை தாக்குதல் என்னும் தெரிவும், தாக்குதலுக்கான உரிமை கோரல் என்பன அனைத்தும் இந்த முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் போர் பிரகடனமாகவே அமைகிறது.

இந்த தாக்குதல்களை தெரிந்தும் தெரியாது இருந்த சர்வதேச அரசுகள், சக்திகள் எவை? இலங்கையில் இருக்கும் தலைவர்கள், கட்சிகள், புலனாய்வுதுறைகள் எவை? முஸ்லிம் அரசியல், மத தலைவர்கள் எவர்? அமெரிக்க இந்திய கூட்டும் சீன அரசின் போட்டியும் இதில் அடையும் இலாபம் என்ன?என்னும் வகையில் நிகழ்த்தப்படும் புலனாய்வு வேலைகள் ஒருபுறம் இருக்க, இதனால் இலங்கை வாழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகள் என்ன என்பது பற்றி பார்ப்பது அவசியமாக இருக்கிறது.

நாட்டை துண்டாடும் தமிழர்கள் என்னும் வகையில் சிங்கள மக்களுக்கு தமிழரை எதிரியாக காட்டி சிங்கள மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை மறைத்து அரசியல் நடத்தி வந்த பெளத்த சிங்கள அரசு என்பது, சமீப காலமாக மூஸ்லிம் மக்களை நோக்கி தனது விரலை காட்ட ஆரம்பிதிருப்பதை சமீபத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவங்கள் அடையாளம் காட்டி நிற்கின்றன. 21/4/19 ல் நடந்து முடிந்திருக்கும் பயங்கரவாத சம்பவத்தின் மூலம் முஸ்லிம் பகுதிகளை பொலிஸ் மற்றும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், முஸ்லிம்களின் சிறு எதிர்ப்புகளுக்கு எதிராக கூட கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்கான சாதகமான சூழலை இந்நிகழ்வு இலங்கை அரசிற்கு அளித்துள்ளது.

இலங்கை மக்களிடையே வளர்ந்து உருப்பெற்றிருக்கும் இனம், மொழி, தேசியம் என்னும் அடிப்படை சமூக கூறுகள் என்பன தமக்கே உரித்தான உரிமை தளங்களில் உயர்கோரிக்கைகளுடன் போராடுவதால், இவற்றை வலுவிழக்க செய்யும் வகையில் மக்களை மதரீதியில் சமூகங்களாக்குவதும் சிந்திக்க வைப்பதும் என்னும் நிகழ்ச்சிநிரல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களாகிவிட்டது. இதன் முதல் பிரிவினை என்பது பெளத்தம் எதிர் மற்ற மதங்கள் என்பதாக ஆரம்பித்து பின்னர் இஸ்லாமியர் எதிர் தமிழர் என்னும் கருத்தமைவு வலிந்து திணிக்கப்பட்டது. தமிழர் என்பவர்கள் இனம், தேசம் என்னும் அடையாளங்களுக்குள் தம்மை நிறுத்தி போராடுவதால் அவர்களை இந்து, கிறிஸ்தவர் என்னும் வகையில் பிரித்து மதம் என்னும் அடையாளத்திற்குள் வீழ்த்தும் சதி சமீபகாலமாக நடந்து வருகிறது.

தமிழர்களுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்கள் இலங்கை அரசின் சலுகைபெற்ற பிரிவாகவும், தேவைப்படும் போது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசிற்கு பயன்படும் மக்கள் கூட்டமாகவும் இருந்து வருகிறனர். தமிழ் மக்கள் பேரழிவுகளை சந்தித்த காலங்களில் பல சமூக முன்னேற்றங்களை கண்டிருந்த முஸ்லிம் சமூகம் என்பது, இன்று பெளத்த சிங்கள அரசின் தாக்குதல் இலக்காகி இருப்பதைக் கணித்து வினையாற்ற மறுக்குமாக இருந்தால் அது அந்த சமூகத்தின் தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

தமிழ் மக்கள் மீதான பெரிய அழித்தொழிப்பு முடிவடைந்து 10 வருடங்கள் ஆனபோதும் அடக்குமுறைகள் வேறு வடிவங்களில் தொடர்ந்தவண்ணமே உள்ளன. தமிழ் மக்களின் போராட்டங்களும் வேறு வடிவங்களில் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான நீதி, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான ஒரு தீர்வு என்னும் விடயங்கள், நடந்து முடிந்திருக்கும் இந்த படுகொலை நிகழ்வுகளுக்குள் தந்திரமாக முடக்கி விடும் முயற்சிகளை இலங்கை அரசு இனி கடுமையாக மேற்கொள்ளும்.

இராணுவதின் இருப்பு என்பதும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் தேவை என்பதும் நேரடியாக இனி நியாயப்படுத்தப்படும். 6வது திருத்தச்சட்டம், பயங்கரவாத தடை சட்டம் போன்ற சட்டங்களின் இருப்பு நியாயபடுத்தப்படும்; சர்வதேச பயங்கரவாதம் நாட்டிற்குள் நுழைந்து விட்டது என்னும் வகையில் உலக நாடுகளின் பொருளாதார, இராணுவ உதவிகளும் இலங்கை அரசிற்கு கிடைப்பதுடன், இலங்கையின் இறையாண்மையும், நிலவும் குறைந்த பட்ச ஜனநாயக சூழலும் மறுபடியும் அருகிச் செல்லலாம்.

தமிழர்களாகிய நாம் எமது உரிமைகளுக்காக போராட புறப்பட்ட போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் எமது சமூகத்தின் ஒரு அங்கமாக பார்த்து அவர்களின் சரி தவறுகளை விமர்சித்ததுடன் எமது அகமுரண்பாடுகளுக்கான போராட்டத்தில் பாரிய உயிர் தியாகங்களையும் செய்திருக்கிறோம். சிங்கள, முஸ்லிம் மக்கள் மீது இழைக்கப்பட்ட தவறுகளுக்காக நாம் எமக்குள் போராடியது மட்டுமல்லாது, அந்த தவறுகளுக்காக அந்த மக்களிடம் எமது வருத்தங்களையும் மன்னிப்புகளையும் தெரிவித்திருக்கிறோம். தமிழ் மக்கள் மத்தியில் உருவாகும் மதவாத, இனவாத, சந்தர்ப்பவாத பிரிவுகளை நாம் எதிர்கொண்டு அவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவது என்பது எமது தொடர்ச்சியான சமூக இயக்கப் போக்காக உள்ளது.

தமிழ்மக்கள் மீதும் அவர்களது கிராமங்கள் மீதும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கூட்டு கொலைவெறியாட்டம் ஆடிய முஸ்லிம் பிரிவுகள் தொடர்பாகவும்; தமிழரின் நிலங்களை சதித்தனமாக ஆக்கிரமிக்கும் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள், தொழில் அபகரிப்பாளர்கள் தொடர்பாகவும் அவர்கள் தரப்பில் இருந்து வரவேண்டிய கண்டன குரலிற்குப் பதிலாக சமூக சந்தர்ப்பவாத நியாயப் படுத்தல்களே இதுவரை முஸ்லிம் மக்கள் தரப்பில் இருந்து வைக்கப்படுகின்றன.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் அம்பலப்பட்டு நிற்கும் போது அவர்களை உண்மையான முஸ்லிம்கள் அல்ல எனும் முஸ்லிம் சமூகத்தின் தப்பித்தல் வகைப்பட்ட பொதுபுத்தி அணுகுமுறை என்பது இன்று காலாவதியாகி விட்டது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் . முஸ்லிம்களின் சமூக சந்தர்ப்பவாதம் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும். மற்றைய சமூகங்களில் இருந்து திட்டமிட்டு அன்னியப்பட்டு வாழும் வாழ்முறை என்பது இன்று சக சமூகங்களை அழிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில் இதை இனியும் அனுமதிக்க முடியாது. இஸ்லாமிய மதவாத சிந்தனைகள் மற்றைய மக்களை பாதிக்கும் வகையில் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களை படுகொலை செய்யுமளவிற்கு சென்றிருக்கும் நிலையில் இஸ்லாத்தின் கோட்பாடுகள் விமர்சிக்கப்பட்டு அம்பலப் படுத்தப்படவேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. தொடர்ச்சியான திட்டமிட்ட வகையிலான இஸ்லாமிய மதமாற்றங்கள் மற்றும் மதப் பிரச்சாரங்கள் சமூகத்தை நச்சு சூழலுக்குள் இழுத்துச் செல்கிறது.

முஸ்லிம் சமூகம் சார்ந்த ஒரு தீவிர பிரிவானது பொது மக்களை படுபயங்கரமாக படுகொலை செய்துள்ள நிலையில், சமூகத்திற்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இஸ்லாமிய மத போதகர்களும், சமூக தலைவர்களும் இன்னும் பிரச்சனைக்கு வெளியே காரணங்களை தேடுவதும், மற்றவர்களை குறை கூறுவதும் என்பது சுய அழிவின் ஆரம்பம் என்றுதான் கணிக்க முடியும். பயங்கரவாதத்திற்கு மதமில்லை எனும் “முற்போக்கு முஸ்லிம்கள்” களின் போதனைகள் பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னால் உள்ள அரசியல் சமூக கோட்பாட்டு காரணிகளை மறுத்து “சாத்தான்” மேல் பழி போடும் மதவாதிகளின் நழுவல் சிந்தனை முறைக்குட்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் உள்ளே அக கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுவதுடன் இதையொட்டிய மாற்றங்கள் உருவாக வேண்டும். சக சமூகங்களுடன் குழுவகை மனப்பாங்கற்ற நேர்மையான உறவு படிப்படியாக உருவாக்கப்பட வேண்டும்.

பெளத்த சிங்கள ஆதிக்க கோட்பாடு தனது விரிவாக்கத்தை நிறுத்தப்போவதில்லை. காலத்திற்கு ஏற்ப அது புது கூட்டணிகளையும் வடிவங்களையும் எடுத்துக்கொள்கிறது.

60 ஆண்டுகால தமிழ் மக்களின் உரிமை போராட்டம் தணிந்து விடப்போவதில்லை. வடிவங்கள் மாறிய நிலையில் அது தனது போராட்டத்தை தொடர்ந்தவண்ணம் உள்ளது.

ஜனநாயகப் படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் தனது அரசியல், சமூக கோரிக்கைகளை முறையாக வெளிப்படையாக முன்வைத்து மற்றைய சமூகங்களுடன் உடன்பாடு கண்டு நகர்ந்து செல்லவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

புதிய திசைகள்
27/04/2019