இவ்வாறான மே தினக் கூட்டங்கள் தேவை தானா?

இம்முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி, மஹிந்த என்ற இரு குழுக்களின் மே தினத்துக்கான ஆர்வத்தைப் பார்த்தால், அது முதலாவது சோசலிச நாடான சோவியத் ஒன்றியத்தின் முதலாவது ஜனாதிபதியும் சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வி.ஐ.லெனினுக்கு, மே தினத்தைப் பற்றி இருந்த ஆர்வத்தை விடவும் அதிகமோ என்று எண்ணத் தோன்றியது.

ஆனால், அவர்களது அந்த ஆர்வத்தின் நோக்கம், இலங்கையில் உழைக்கும் மக்களுக்காக உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும் என்பதோ அல்லது அவற்றைப் பெற்றுக்கொடுக்கப் போராட வேண்டும் என்பதோ அல்ல. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, நாட்டில் பலமுறை ஆட்சிபீடம் ஏறிய கட்சியாகும். அவ்வாறு அந்தக் கட்சி பதவியில் இருக்கும் காலங்களில், தொழிலாளர்களுக்காகப் பெரிதாக எதனையும் செய்ததாகக் கூறுவதற்கில்லை.

ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது ஆட்சியான 1956ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை நீடித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் தான் மே தினம், விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதேபோல், அக்காலத்திலேயே ஊழியர் சேமலாப நிதியும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அதன் பின்னர் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ அல்லது சுரண்டலை ஒழிக்கவோ, எதையும் அக்கட்சி செய்ததாக இல்லை.

ஒரு புறத்தில் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் ஊழியர் சேமலாப நிதியத்தை ஆரம்பித்த பண்டாரநாயக்க, அதே காலகட்டத்தில் திருத்தமொன்றின் மூலம் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தையும் பலப்படுத்தினார். அச்சட்டத்தின் கீழ் தான், அவசரகாலச் சட்டம் அடிக்கடி பிறப்பிக்கப்பட்டது. அவர் அச்சட்டத்துக்கு அறிமுகப்படுத்திய திருத்தத்தின் கீழ் தான், எந்தவொரு சேவையையும் அத்தியாவசிய சேவையாக அரசாங்கங்கள் பிரகடனப்படுத்தி, வேலைநிறுத்தங்களைச் சட்டவிரோதமாக்க முடிந்தது.

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் கீழ், சாதாரண சட்டமாக இருந்த அச்சட்டம், அரசியலமைப்பிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த சகல அரசாங்கங்களும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களை அடக்கியுள்ளன.

1990களில் சந்திரிகா குமாரதுங்க பதவியில் இருந்த காலத்தில், மின்சார சபையின் ஊழியர்கள் ஒருமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது எரிசக்தி, மின்சக்தி அமைச்சராகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தே, வேலைநிறுத்தம் செய்த ஊழியர்களின் வீடுகளுக்கு இராணுவத்தை அனுப்பி, அவர்களைப் பலாத்காரமாக வேலைக்கு அழைத்து வரச்செய்தார். இராணுவ ஆட்சியொன்றில் மட்டுமே நடைபெறக்கூடிய இந்தக் கைங்கரியத்தை, அவசரகாலச் சட்டத்தின் கீழும் அத்தியாவசிய சேவை சட்டப் பிரமானங்களின் கீழும் தான், சந்திரிகா அரசாங்கம் செய்தது.

அண்மைக்கால வரலாற்றை எடுத்துக் கொண்டால், உரிமைகளைக் கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் மட்டுமன்றி விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் ஆகிய சகல துறையினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடுமையாக அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டனர்.

ஊழியர் சேமலாப நிதியினை இல்லாதொழித்து, அதற்குப் பதிலாக தனியார்துறை ஊழியர்களுக்காக ஓய்வூதியம் ஒன்றை அறிமுகப்படுத்த, மஹிந்தவின் அரசாங்கம் முயன்றது. அப்போது, அதனால் தாம் பாதிக்கப்படப்போவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ரொஷேன் சானக்க என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.

அதேபோல், தமது படகுகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெயின் விலையைக் குறைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய வெலிவேரிய, ரத்துபஸ்வல மக்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்து மூன்று பேரை படுகொலை செய்த ஆட்சியல்லவா அது.

ஆட்சியில் இருந்த மற்றக் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் நிலைமையும் அதற்கு மாறுபட்டது அல்ல. அக்கட்சிக்கும் கறைபடிந்த வரலாறொன்றே இருக்கிறது. 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதியை, தேசிய எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்திய பல தொழில்துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், நாளொன்றுக்கு 10 ரூபாய் சம்பள அதிகரிப்பையும், அதிகரிக்கும் ஒவ்வொரு வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்கும் 5 ரூபாய் சம்பளத்தில் சேர்க்க வேண்டும் எனவும் கோரி, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தன. அப்போது ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான அரசாங்கம், தொழிலாளர்களுக்கு எதிராகக் குண்டர்களை ஏவித் தாக்குதல்களை மேற்கொண்டது. கொழும்பில் இடம்பெற்ற அவ்வாறானதொரு சம்பவத்தின் போது, சோமபால என்ற தொழிலாளர் கொல்லப்பட்டார்.

அதற்கு அடுத்த மாதத்தில் தான், பிரசித்தி பெற்ற ஜூலை பொது வேலைநிறுத்தம் இடம்பெற்றது. அப்போது வேலைநிறுத்தக்காரர்களை மயானத்துக்கு அனுப்புவதாக, அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறினார். வேலைநிறுத்தம் செய்த சுமார் 40,000 தொழிலாளர்கள், சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு, அவர்களது வயது காரணமாக புதிதாகத் தொழில் பெற முடியாமல் போய்விட்டது. வேலைநிறுத்தம் காரணமாக அரச தொழிலுக்கு அவர்களில் பலர் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். எனவே, அவர்களில் சிலர், பிற்காலத்தில் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துகொண்டனர்.

அவர்களுக்கு நட்டஈட்டுடன் மீண்டும் தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்துப் பதவிக்கு வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அந்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. உண்மையைச் சொல்வதாயின், ஆட்சியில் இருந்த இரு பிரதான கட்சிகளும் தொழிலாளர்களுக்காக செய்த நன்மைகளை விட மேற்கொண்ட அடக்குமுறைகளே அதிகம். எனவே, அவ்விரு கட்சிகள் உட்பட அவ்விரு கட்சிகளோடு ஒட்டிக் கொண்டு ஆட்சியில் பங்கு கொண்ட இடதுசாரிக் கட்சிகள் உட்பட நாட்டில் பல கட்சிகளுக்கு, சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாட தார்மிக உரிமை இல்லை என்றே கூற வேண்டும். தார்மிக உரிமை இல்லாவிட்டாலும், அக்கட்சிகளின் மே தினக் கூட்டங்களைப் பற்றியே, நாட்டில் பிரதான ஊடகங்கள் எப்போதும் பெரிதாக செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றன. ஏனெனில், அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஊடகங்களும் சர்வதேச தொழிலாளர் தினத்தின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

பிரதான கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே, தொழிலாளர்களுக்கான சில கோரிக்கைகைளை முன்னிறுத்தி அவற்றை வலியுறுத்துவதற்காக தமது கட்சிப் பலத்தை பாவிக்கும் வகையில் மே தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. வேறு சில கட்சிகள், சம்பிரதாயத்துக்காக ஒவ்வொரு வருடமும் மே தினத்தன்று ஓர் ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்துகின்றன.

இரு பிரதான கட்சிகள், வெறுமனே தமது ஆட்பலத்தை, நாட்டுக்கும் போட்டிக் கட்சிகளுக்கும் காட்டுவதற்காக, மே தின ஊர்வலங்களையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்திருக்கின்றன. எனவே, அக்கட்சிகள், கோடிக்கணக்கில் செலவழித்து, சாராயத்தையும் சோற்றுப் பார்சல்களையும் கொடுத்து, தூரப் பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்களை பஸ்களில் கொழும்புக்கு அழைத்துவந்து, வருடா வருடம் மே தினக் கூட்டங்களை நடத்துகின்றன.

இதுபோன்ற ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் தொழிலாளர்களின் மனதிலாவது, தமது வர்க்கத்தைப் பற்றிய உணர்வு ஏற்படுவதில்லை. நாட்டில் பெரும் செல்வந்தர்கள் தலைமை தாங்கும் தமது அரசியல் கட்சி, அடுத்துவரும் நாடாளுமன்ற, மாகாண சபை அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, தமது பலத்தைக் கூடியவரை வெளிக்காட்ட வேண்டும் என்பதோ அல்லது ஊர்வலத்திலும் கூட்டத்திலும் கலந்து கொள்வோருக்கு அவர்களது கட்சி வழங்கும் பணத்தையும் சோற்றுப் பார்சலையும் சாராயத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதோ தான் இவற்றில் கலந்துகொள்ளும் பெரும்பாலானவர்களின் நோக்கமாக இருக்கிறது. அல்லது தமது பிள்ளைகளுக்கு தொழில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தமது கட்சியின் பிரதேச தலைவர்களைத் திருப்திப்படுத்துவதும் அவர்களது நோக்கமாக இருக்கலாம்.

எனவே, பெரும்பாலான கட்சிகளின் மே தின ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும், எவ்வித அர்த்தமும் இல்லை. குடித்துக் கும்மாளமிட்டுவிட்டு வீடு திரும்புவது தான் பலர் கண்ட பலனாக இருக்கிறது.

இம்முறை உண்மையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அணி கொழும்பு, கிருலப்பனையில் நடத்திய கூட்டத்துக்கு அதிகம் மக்கள் வருகிறார்களா அல்லது மைத்திரி அணியினர் காலியில் நடத்திய கூட்டத்துக்கு அதிகம் மக்கள் வருகிறார்களா என்ற வேடிக்கையை பார்ப்பதே பொதுமக்களினதும் ஊடகங்களினதும் நோக்கமாக இருந்தது. இப்போது மே தினக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அவற்றில் என்ன பேசப்பட்டது என தொலைக்காட்சியில் அக்கூட்டங்களைப் பார்த்த மக்களிடம் கேட்டால் பலருக்கு எதுவும் ஞாபகம் இருக்காது. அவ்வாறு முக்கியமாக எதுவும் அவற்றில் பேசப்படவும் இல்லை தான். பேசப்பட்டாலும், எந்தக் கூட்டத்தில் அதிகமாக மக்கள் இருந்தார்கள் என்பதில் மக்கள் தமது கவனத்தை செலுத்தி இருந்ததால் அவர்களுக்கு பேசப்பட்டவை எதுவும் கேட்டும் இருக்காது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்த மே தினம் மற்றொரு வகையில் முக்கியமானதாக தெரிந்திருக்கலாம். இது கட்சியின் மஹிந்த – மைத்திரி என்ற இரு பிரிவுகளினதும் பிளவை மேலும் உறுதிப்படுத்தும் நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது. ஏனெனில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சவால்விடும் வகையிலேயே மஹிந்த அணி கிருலப்பனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு எதிராக ஜனாதிபதி என்ன செய்யப் போகிறார் என்பதே இப்போது பலர் எழுப்பும் கேள்வியகும். தனியாக மே தினக் கூட்டங்களை நடத்தும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கட்சித் தலைவர்கள் பலர் ஏற்கெனவே கூறியிருக்கிறார்கள். ஆனால், கிருலப்பனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இப்போது அவ்வாறு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேபோன்று, மார்ச் மாதம் 17ஆம் திகதி, மஹிந்த அணியினர் கொழும்பு ஹைட்பார்க் திடலில் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். அதற்கு முன்னரும் அதில் கலந்து கொள்வோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க கூறியிருந்தார். ஆனால், கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, மீசையில் மண் படவில்லை என்பதைப்போல் ‘அக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் அரசாங்கத்தைத் தான் விமர்சித்தார்களேயல்லாமல், கட்சித் தலைமையை விமர்சிக்கவில்லை’ என்று கூறி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள், நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

ஆயினும், கட்சியில் உள்ள இரு பிரிவுகளுக்கும் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட முடியாது. மே தின நிகழ்வுகளும் அதனைத் தான் எடுத்துக் கூறுகின்றன. அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர், கட்சி படிப்படியாக பிரிந்து விடும் சாத்தியக்கூறுகளே அதிகமாக இருக்கின்றன. இதனால் ஐக்கிய தேசிய கட்சியே பயன்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. மே தினம், அந்த நிலைமையை துரிதப்படுத்திவிட்டது என்றே கூற வேண்டும். சர்வதேச தொழிலாளர் தினத்தினால் தொழிலாளர்கள் பயன்பெறாவிட்டாலும் ஐ.தே.கவுக்கு அந்தப் பயனாவது இருக்கிறது.
(எம்.எஸ்.எம். ஐயூப்)