ஈழத் தமிழர் பற்றி ஒரு அரசியல்வாதியின் மனிதாபிமானப் பார்வை

போருக்குப் பிறகு மக்களைப் பார்க்க தனிப்பட்ட முறையில் இலங்கைக்குச் சென்றிருந்தேன். இங்கே பரப்பப்படும் செய்திகளுக்கு மாறாக தமிழகத்தின் மீதும் கோபம் கொப்பளித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். மனது கணத்துப்போனது. (இலங்கை,இந்தியா,சர்வதேச அரசுகள்,புலிகள் என்று அனைவர்மீதும் அந்தக் கோபம் இருக்கிறது) எங்கள் பிணத்தின் மீது அரசியல் செய்தது தவிர தமிழக அரசியல் கட்சிகளும் ,மக்களும் எங்களுக்கு என்ன செய்தார்கள்? எவ்வளவு பேர் தமிழகத்தில் இருந்து போருக்குப் பிறகாவது எங்களை எட்டிப் பார்த்தார்கள்?

ஏன் குறைந்த பட்சம் அடிமைகளைப் போல தமிழ்நாட்டில் முகாம்களில் அடைத்துவைத்திருக்கிற எம் மக்களுக்கு தமிழகம் என்ன செய்தது? அவர்களும் எம் மக்கள் தானே? அவர்களுக்காக எத்தனை போராட்டங்களை நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள்?

எங்களைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதே எங்களுக்குச் செய்யக் கூடிய உதவி என்று இளைஞர்கள் கோபப்பட்டார்கள்.

நீங்களாவது இவ்வளவு தூரம் எங்கள பாக்கணும்னு வந்திருக்கீங்க உங்ககிட்ட இப்படிப் பேசப்படாதுதான். ஆனா அப்படியிருக்க முடியலை. நாங்களே செத்துக்கிடக்கோம். எங்க பிணத்துமேல எதுக்கு அரசியல்? என்று மீண்டும் கேட்டார்கள்.

அந்த பத்து நாட்களில் போகிற இடங்களில் எல்லாம் இந்தக் கோபத்தை நான் எதிர்கொண்டேன். அந்தத் துயரத்திலும் அவர்கள் அளவற்ற அன்பையும். சொல்வதற்கு என்னிடம் பதில்தான்

தேர்தல் வரும்போது மட்டும் தீவிரமாகப் பயன்படுத்தப் படும் போர்க்காலப் படங்கள் தமிழகத்தின் மீதான அவர்கள் கோபம் எவ்வளவு நியாயமானது என்று உணர்த்துகிறது.

இங்கிருக்கும் முகாம்களைக் கூட (போனாலும் தமிழக அரசு விடாது என்பது வேறு விசயம்) எட்டிப் பார்ப்பதை விடுங்கள், எண்ணிப்பாரத்திராதவர்களுக்கு அவர்கள் பிணங்கள் மட்டும் எதற்கு என்கிற கேள்வியில் உள்ள நியாயம் சுடத்தான் செய்யும்.

இதற்கும் நான் போன காலம் இங்கே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலம்.

இந்திய அரசின் உதவித்தொகையில் படிக்க தமிழகம் வர விருப்பமில்லாமல் ஹைதராபாத் போவதாக மாணவர்கள் சொன்னதைக் கேட்க அதிர்ச்சியாகவும்,துயரமாகவும் இருந்தது.

வாழ்வில் அதைவிட துயரமான ஒரு பயணத்தை நான் இனிமேல் மேற்கொள்ள வேண்டிவராது என்றே நினைக்கிறேன்.அவ்வளவு அழிவு. அந்த அழிவை தேர்தலின் போது மட்டும் அரசியல் ஆக்குபவர்கள் இனிமேலாவது யோசியுங்கள்.

எங்களை விட்டுவிடுங்கள் போதும் என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அதனால் தான் அந்தப் பயணம் பற்றி விரிவாக எதுவும் எழுதக்கூட இல்லை.

இந்த பதிவை நான் ஒரு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவோ,ஒரு அரசியல்வாதியாகவோ நான் எழுதவில்லை.

ஒரு தனி மனுஷியாக துயரத்தால் அலைக்கழிக்கப்பட்டே நான் நம் மக்களைக் காணச்சென்றேன். இப்போதும் ஒரு தனி மனுஷியாகவே இதை எழுதுகிறேன்.

இங்கே அந்தப் பிணங்களை வைத்து வாக்குக் கேட்பது அவர்களுக்கு ஏற்புடையதல்ல என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.அப்புறம் அவரவர் விருப்பம்

PS: இலங்கைக்கோ,ஈழத்திற்கோ போவது ஒன்றும் பெரிய விஷயமில்லை.சாதாரண சுற்றுலா விசாவே போதுமானது.அதிக செலவு பிடிக்கக் கூடிய பயணமும் அல்ல. விருப்பமுள்ளவர்கள் போய்த்தான் பாருங்களேன்.அங்குள்ள நம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அப்போதுதான் தெரியும்.

(Jothimani Sennimalai)