ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் உள்ள‌ அதிச‌ய‌ப் ப‌ட‌த்த‌க்க‌ ஒற்றுமை ஒன்றுள்ள‌து. இர‌ண்டையும் உருவாக்கிய‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள். சிங்க‌ள‌த் தேசிய‌ பிதாம‌க‌ர்க‌ளான‌ அந‌காரிக‌ த‌ர்ம‌பாலா, டி.எஸ். சேன‌நாய‌க்க‌, ப‌ண்டார‌நாய‌க்க‌, ஜெய‌வ‌ர்த்த‌ன‌ எல்லோரும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள். அத்துட‌ன், சிங்க‌ள‌த்தை விட‌ ஆங்கில‌த்தில் ச‌ர‌ள‌மாக‌ பேச‌த் தெரிந்திருந்த‌ன‌ர்.

அதே மாதிரி, த‌மிழ்த் தேசிய‌த்தின் பிதாம‌க‌ர்க‌ளான‌ செல்வ‌நாய‌க‌ம், பொன்ன‌ம்ப‌ல‌ம் போன்றோரும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளும் த‌மிழை விட‌ ஆங்கில‌த்தில் ச‌ர‌ள‌மாக‌ பேசிய‌வ‌ர்க‌ள் தான்.

இன்றைக்கும் சிங்க‌ள‌வ‌ர் என்றால் பௌத்த‌ர்க‌ளையும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளையும் குறிக்கும். அதே மாதிரி த‌மிழ‌ர் என்றால் இந்துக்க‌ளும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளும். கிறிஸ்த‌வ‌ர்க‌ள், இந்துக்க‌ள் அல்ல‌து பௌத்த‌ர்க‌ளை திரும‌ண‌ம் செய்வ‌த‌ற்கு திருச்ச‌பை அனும‌திக்கிற‌து. ஆனால், மாற்று ம‌த‌த்த‌வ‌ர் கிறிஸ்த‌வ‌ராக‌ மாறி விட‌ வேண்டும்.

ஈழ‌ப்போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், க‌த்தோலிக்க‌ திருச்ச‌பை இர‌ண்டு ப‌க்க‌மும் ந‌ண்ப‌னாக‌ காட்டிக் கொண்ட‌து. த‌மிழ் க‌த்தோலிக்க‌ பாதிரிக‌ள் புலிக‌ளுட‌ன் நெருக்க‌மாக‌ இருந்த‌ன‌ர். க‌த்தோலிக்க‌ வெரித்தாஸ் வானொலி புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ செய்திக‌ளை தெரிவித்த‌து.

ம‌று ப‌க்க‌த்தில் சிங்க‌ள‌ க‌த்தோலிக்க‌ பாதிரிக‌ள் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ இருந்த‌ன‌ர். ப‌ங்குத் த‌ந்தைக‌ள் அர‌சின் க‌ருத்துக்க‌ளை எதிரொலித்த‌ன‌ர். தேவால‌ய‌ங்க‌ளில் இராணுவ‌த்திற்கு ஆத‌ர‌வான‌ விசேட‌ பிரார்த்த‌னைக‌ள் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌.

2009 ம் ஆண்டு போர் முடிந்த‌வுட‌ன், புலிக‌ளின் முடிவு ப‌ற்றி, கிறிஸ்த‌வ‌ர்க‌ள் சொல்லிக் கொண்ட‌து: “வாள் எடுத்த‌வ‌ன் வாளால் சாவான் என்று பைபிள் சொல்கிற‌து.”

இதிலே முக்கிய‌மாக‌ குறிப்பிட‌ப் ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ன‌வெனில், க‌த்தோலிக்க‌ ம‌த‌ம் ஒரு மைய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ க‌ட்ட‌மைப்பை கொண்ட‌ நிறுவன‌ம்.

கிராமிய‌ ம‌ட்ட‌த்தில் பிர‌ச‌ங்க‌ம் செய்யும் பாதிரிக‌ளும் வ‌த்திக்கானுக்கு ப‌தில் கூற‌ வேண்டும். உள்ளூர் தேவால‌ய‌ங்க‌ள் சேர்க்கும் ப‌ண‌ம் வ‌த்திக்கானுக்கு போக‌ வேண்டும். பின்ன‌ர் அங்கிருந்து நிதியைப் பெற‌ வேண்டும். சுருக்க‌மாக‌, வ‌த்திக்கான் ஒரு வ‌கை தேச‌ங்க‌ட‌ந்த‌ அர‌சு.

க‌த்தோலிக்க‌ர் யாரும், எந்த‌ அர‌சிய‌ல் க‌ருத்தாயினும், வ‌த்திக்கான் அங்கீகார‌ம் இன்றி பேச‌ முடியாது. வ‌த்திக்கான் நிலைப்பாட்டிற்கு மாறாக‌ ந‌ட‌ந்த‌ க‌த்தோலிக்க‌ பாதிரிக‌ள் ம‌த‌த்தில் இருந்து வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். (உதார‌ண‌த்திற்கு, ல‌த்தீன் அமெரிக்க‌ விடுத‌லை இறையிய‌ல் பாதிரிக‌ள்.)

த‌மிழ்த் தேசிய‌வாதிகள், த‌ம‌து அர‌சிய‌ல் நிலைப்பாடு நூற்றுக்குநூறு வீத‌ம் ச‌ரியென‌ ந‌ம்புகின்ற‌ன‌ர். நியாய‌ம் த‌ம‌து ப‌க்க‌ம் இருந்த‌ ப‌டியால் தான் க‌த்தோலிக்க‌ பாதிரிக‌ள் ஆத‌ர‌வ‌ளித்த‌தாக‌ நினைக்கிறார்க‌ள்.

ச‌ரி, அப்ப‌டியே வைத்துக் கொள்வோம். த‌மிழ‌ர்க‌ளுக்கு விரோத‌மாக‌ சிங்க‌ள‌ அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌, க‌த்தோலிக்க‌ பாதிரிக‌ள் எத்த‌னை பேர், வ‌த்திக்கானால் ம‌த‌த்தில் இருந்து வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர்? “0”! இன்றைக்கும் அவ‌ர்க‌ள் ரோமுக்கு விசுவாச‌மான‌ தேவ ஊழிய‌ர்க‌ள் தான்.

இல‌ங்கையைப் பொறுத்த‌வ‌ரையில், இன‌வாத‌மும், தேசிய‌வாத‌மும் ம‌க்க‌ளை பிரித்தாள்வ‌த‌ற்கு அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்தும் க‌ருவிக‌ள். இப்போதும் உங்க‌ளுக்கு இது புரிய‌வில்லை என்றால், த‌மிழ‌ர்க‌ளை க‌ர்த்த‌ராலும் காப்பாற்ற‌ முடியாது.

(Kalai Marx)