ஆசிரியர் அபாயா அணியலாம்

இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் ? தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா ? அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா ?

உடை, உணவு என்பன ஒருவரின் உரிமையே தவிர, ஒருபோதும் திணிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி/ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளது உடை தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் பலர் வீதிக்கு இறங்கிப் போராடியமையினைக் காணக் கூடியதாக இருந்தது. இதற்கான தலைமையினை அங்கிகரிக்கப்பட்ட இனவாதிகள் வழங்கியமை விசேட அம்சமாகும்.

இங்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. ஒன்று, குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் பாடசாலை சீருடை விதி முறைகளை மீறி ஆடை அணிந்து வந்தமையும்,இரண்டாவதாக, குறித்த ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை நிருவாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தமையுமாகும்.

நான் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான பாடசாலைகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகளைச் சந்தித்திருக்கின்றேன். சில பாடசாலைகள் சீருடைகளை ஆசிரியைகளுக்கு வழங்குகின்றது, பலவற்றிற்கு அவ்வாறன வசதி வாய்ப்புகள் இல்லை.

இதில் என்ன விசித்திரமான விடயமென்றால், கற்பிப்பதற்கும், ஆசிரியர்களின் சீருடைகளுக்கும் எவ்வித நேரடிச் சம்பந்தமும் இல்லை என்பதே. இந்தச் சீருடைச் சட்டங்கள் குறிப்பாக பெண்களை மாத்திரம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டமை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. என்னைப் பொறுத்த மட்டில், ஆசிரிய, ஆசிரியைகள் நேர்த்தியான, ஒழுக்கமான ஆடை அணிந்து வர வேண்டும், அவை மாணவர்களின் ஒழுக்கத்துடன் தொடர்புபட்டவை என்று இவ்வாறான பின்பற்றல்களை உருவாக்கியவர்கள் யோசித்திருக்கலாம்.

இதன் அடிப்படையில், அபாயா என்றழைக்கப்படும் குறித்த ஆடையானது ஒழுக்கமற்றது ? அத்துடன் இதனை ஒத்த ஆடை அணியும் வழமையானது வெறுமனே இஸ்லாமியர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அபாயா என்பதன் தமிழ்ப் பதம் போர்வை. இஸ்லாமியர்களுடன், யூதர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளட்ட பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஆடையினை அணியும் முறையினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேற்குலகினைப் பொறுத்த வரையில் இதற்கான தடைகள் கூட பல்வேறு வழக்குகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. சமுக விருத்தி என்பது ஒரு போதும் உரிமைகளைப் பறிப்பதல்ல. மாறாக உரிமைகளை வழங்குவதே.
இதுவே உலகில் நாம் நாளுக்கு நாள் கண்ணூடாகக் காணும் காட்சியாகும்.

நாம், தமிழர்களை எடுத்துக் கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பல இலட்சம் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்றனர். புலம்பெயர் நாடுகளில் எமது கலாச்சாரத்தினை வளர்க்கின்றீர்கள். இராஜ கோபுரம், பால் குட பவனி, இரதோற்சவம், பறவைக் காவடி என்பன இன்று சர்வ சாதாரணமாகி விட்டன. இதற்கு எதிராக அங்குள்ளவர்கள் பாரிய தடைகளை விதிப்பதில்லை. மாறாக, பல்வகைமையினை விரும்புகின்றனர். கனடாவிலோ, இங்கிலாந்திலோ, டுபாயிலோ அவ்வாறான விடயங்களுக்குத் தடை ஏற்பட்டிருப்பின் எவ்வாறு இருந்திருக்கும் ? நீங்கள் இன்று அபாயா அணிந்து வருவதை ஏற்க மறுக்கின்றீர்கள் என்றால், அங்குள்ள தமிழர்களினதும், இந்துக்களினதும் புதிதாக உருவாக்கப்பட்ட அடையாளங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்பதனையா மறைமுகமாகச் சொல்ல வருகின்றிர்கள் ?

ஏன் அவ்வளவு தூரம் செல்கின்றோம். சற்று வடக்குக் கிழக்கிற்கு வெளியே செல்வோம். அங்கு எத்தனையோ தமிழர் பெரும்பான்மையாக அல்லாத பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் கல்வி கற்பிக்கின்றனர் ? ஒரு வேளை சட்டங்களிலும், வழமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சிங்களப் பள்ளிக்கூடங்களில் சிங்கள முறையில் சேலை உடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டால், அங்குள்ள தமிழ் ஆசிரியைகளின் நிலை என்ன ? அல்லது நாளை முதல் அனைத்து இஸ்லாமியப் பாடசாலைகளிலும், இஸ்லாமியர் அல்லாத ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக அபாயா மாத்திரமே அணிய வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டால் இதற்கான பதில் என்ன ?

இங்கு வெறுமனே உங்களது கீழ்த்தரமான காழ்ப்புணர்வே வெளிக்காட்டப்பட்டது. வேறொன்றும் இல்லை. ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தில், ஒரு சமூகம் பேசும் மொழியினைக் கொச்சைப் படுத்துவதும், இனவாதத்தைத் தூண்டும் வாசகங்களைத் தாங்கியதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இலங்கையில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் கூடத் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பேச்சு வழக்கினைக் கொண்டமையும், நான் இன்றும் வியக்கும் சிறந்த அறிவிப்பாளரான பி.எச் அப்துல் ஹமிட் அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதையும் இங்கு வெளிப்படையாகக் கூறியே ஆக வேண்டும்.

குறித்த ஆசிரியைகளின் சீருடை விவகாரம் தொடர்பாக எழுத்துமூலமாக அதிபரால் வழங்கப்பட்ட கடிதங்கள் ஏதும் உள்ளனவா ? அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதிபரால் கல்வித் திணைக்களத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் உள்ளனவா ? இவற்றினை நிச்சயம் பரிசிலிக்க வேண்டும்.

இரண்டாவது விடயமான, கணவர்களின் எச்சரிக்கை விடயமானது நிச்சயம் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியவை. நிச்சயமாக யாராலும் அவ்வாறான எச்சரிக்கைகளை விடுக்க முடியாது. இது தொடர்பாக அதிபரோ, அல்லது நிருவாகத்தில் பங்கெடுக்கும் யார் சரி முறைப்பாடுகளை மேற்கொண்டனரா ? அவ்வாறு இல்லாவிடில் ஏன் மேற்கொள்ளவில்லை ?

ஒன்றைப் புரிந்து கொள்வோம். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரே மொழியினைப் பேசும் இரு இனங்கள். நாம் மொழி ரீதியாக விரும்பியோ, விரும்பாமலோ, ஒன்று பட்டிருக்கின்றோம். இலங்கை பூராகவும் ஒரே பாடத்திட்டத்தினைப் பின்பற்றுகின்றோம். இன்று தமிழன் என்று வீதிக்கிறங்கி இனவாதத்தினை விதைப்பவர்கள் சிலரின் காலடி கூடப் பட்டிருக்காத தென்னிலங்கையில் முஸ்லிம் சமூகம் அதி யுத்த காலத்திலும் கூட தமிழை வாழ வைத்தனர், வைத்துக்கொண்டு இருக்கின்றனர். எந்தவொரு தமிழனும் வாழாத எத்தனையோ கிராமசேவகர் பிரிவுகளில் நூறு வீதமான தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்குகின்றன. முஸ்லிம்கள் அதனை விட்டுக்கொடுக்கத் தயாருமில்லை.

இங்குள்ள முக்கிய விடயம், தமிழ் உணர்வோ அல்லது, இனப்பற்றோ அல்ல. மாறாகத் தேவையற்ற இந்துத்துவம் ஊடறுக்கின்றது. தாயக மண்ணில் இந்திய ராணுவம் செய்த அட்டூளியங்களை நாம் ஒரு போதும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இன்று அவர்களது தேவை ஒரு தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள முஸ்லிம் கலவரம். இது பல்வேறு வழிகளில் மக்களைச் சென்றடைகின்றது. ஆகவே நாம் இவ்விடயம் தொடர்பாகத் தெளிவடைய வேண்டும். இன்று இஸ்லாம் விரோதப் போக்கினைக் கொண்ட இந்துக்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களது சகோதர, சகோதரிகளை வேலைக்கு அடிமைகளாக அனுப்புவதற்கு எதிராக என்ன வேலைத்திட்டங்கள் உள்ளன ? அது போன்று தமிழருக்கு எதிரானப் போக்கினைக் கொண்ட முஸ்லிம்களும், தமிழ் மொழியினைக் கை விடத் தயாரில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆகவே இது ஒரு தற்காலிக நிலைமை. இதனை முற்போக்குச் சக்திகளால் மாத்திரமே மாற்ற முடியும். இவ்வாறு அன்றாடம் தொழில் செய்து, தமது சொந்த உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதும் ஆட்சியாளனுக்குக் கிடைத்த பெரும் வெற்றியே. நீங்கள் இன்று இதற்காகப் பிளவுபட்டதனால், நாளை ஓரு போதும் உங்களது தொழில் ரீதியான உரிமைகளுக்காக ஒன்றுபடக் கூடாது என்பது அவர்களின் அவா. ஆகவே இங்கு தோல்வி அடைவது சாதாரண மக்களே.

சற்று சிந்திப்போம். இலங்கையில் தமிழ் முஸ்லிம் விரிசலை இஸ்ரேலின் மொசாட் முன்னின்று அரங்கேற்றியது. தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் பெயர்களிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் பெயரிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும் அனுப்பப் பட்டனர். இதனால் இடம்பெற்ற தாக்கம் கொஞ்சமல்ல. இன்று புலனாய்வுக்குப் பதிலாக FAKE ACCOUNT கள் அதே வடிவில் உலா வருகின்றன. மீண்டும் விரிசல்களை உருவாக்குகின்றன.

கயவர்களின் கோஷங்களை விட, நல்லவர்களின் அமைதி பாதகமானது. இனியும் நல்லவர்கள் அமைதி காக்க வேண்டாம். முன்வாருங்கள். எங்கும், யாரும், எந்நேரமும் சென்று தலை நிமிர்ந்து வாழக்கூடியதோர் உலகினை உருவாக்குவோம்…

(Arun Hemachandra)