உள்ளுராட்சி தேர்தல் முடிவு… ஒரு ஆய்வு

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் பெருமளவிற்கு வந்துவிட்டன…

தெற்கிலும் வட-கிழக்கிலும் தெளிவான மாற்றங்கள்.

மகிந்தவின் வெற்றி பெருவெற்றிதான்! ஸ்ரீ.சு. கட்சியின் ஆதரவு இன்றி, யு.என்.பி யையும் எதிர்த்துப் பெற்ற வெற்றி!! தனது முன்னாள் சகபாடிகள் – இன்னாள் எதிரிகளின் பிரதேசங்களிலும் செல்வாக்கு!!!

கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சி முதல்முறையாக சரிவைச் சந்தித்திருக்கிறது. த.அ.கட்சி 2009 இற்குப் பின்னர் முன்வைத்து வந்ததும் உடைக்கமுடியாது எனக்கருதியதும் பெரும் வெற்றி வாய்ப்புக்களை வழங்கியதுமான “ஏகபிரதிநிததித்துவம்” என்ற கோட்பாடு முதன்முறையாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது! அதுவும் அவர்களின் கடந்த கால ஆதரவாளர்களால்!!

கூட்டமைப்பின் வெற்றியில் பங்காளிக் கட்சிகளின் பங்கு என்ன என்றும் தெரியவில்லை.

இதனை விடப் பெரிய மாற்றத்தை கூட்டமைப்பின் விமர்சகர்கள் எதிர்பார்க்க முடியாது. அதற்கான தெளிவான சூழல் இருக்கவில்லை.

இந்த மக்கள் கருத்தை கவனத்தில் எடுத்து, த.அ.கட்சி தன்னை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமா? என்பது பற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் மக்கள் முடிவு சொல்லும் தெளிவான சேதி இதுதான்!!!

இத்தேர்தல் பிற தமிழ் கட்சிகளுக்கும் ஒரு படிப்பினைதான். அவர்கள் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வார்களா? என்பது பற்றியும் இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. தேர்தல் முடிவு ஒன்றின்பின் கற்றுக்கொள்ளக் கூடிய கடினமானதொரு அறிவல்ல. வெகுசன அரசியல் அறிவு. அடிப்படையான வெகுசன அரசியல் பற்றிய அறிவே, ஐக்கியம் –வெகுசன த் தன்மை – வெளிப்படைத்தன்மை – சுயவிமர்சனம் என்பன. அதுவும் இல்லாவிட்டால்…

வட-கிழக்கில், தேசியக் கட்சிகள் பெற்றுக்கொண்டிருக்கிற செல்வாக்கு முக்கியமானதொரு விடயமே. இது பெரும் மாற்றத்திற்கான அறிகுறியா? அல்லது வட-கிழக்கு தேசிய அரசியல் இணக்க அரசியலாகிவிட்டதன் – கடும் விமர்சனங்களிற்கு உட்பட்டதன் விளைவா எனத் தெரியவில்லை. இப்போக்கு வளர்மா? தமிழர்களின் நீண்டகால அரசியல் போக்கிலும் மாற்றம் வருமா? தெரியவில்லை.

மைத்திரி அணி பெற்றிருக்கிற தோல்வி இன்றைய அரசியல் சூழலை மாற்றியமைக்குமா? விரைவாக பழையதொரு நெருக்கடிச் சூழல் உருவாகுமா? என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. மைத்திரி ஆட்சியில் பல குறைபாடுகள் உண்டு. ஆனால் அந்தக் குறைபாடுகள் மக்களைப் படுமோசமாகப் பாதித்த ஒன்றல்ல! மாறாக தென்னிலங்கை பௌத்த – சிங்களவர்கள் பேரினவாத, கடும் போக்குத் தலைமை ஒன்றை விரும்பகிறார்களா? என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி நிலை முன்னேற்றமற்றது போலவே தெரிகிறது.

யு.என்.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளால் வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழலைக் கொண்டிருக்கிறது எனக்கருதப்பட்ட போதிலும் பெரு வெற்றியைப் பெறமுடியாது போய்விட்டது

மலையக முடிவுகள் பற்றி தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை.

முடிவுகள் மாற்றங்களை காட்டியிருக்கிறது. ஆனால் எந்த மாற்றங்களும் “இலங்கை மக்களுக்கு” விமோசனம் வழங்குவதாகத் தெரியவில்லையே…

-விஜய்