உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018: தேவை ஒரு பூக்களம்

(முகம்மது தம்பி மரைக்கார்)

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் ஆதரித்தமைதான், தாக்கியவர்களின் கணக்கில் குற்றமாக இருந்தது.

அந்தச் சம்பவத்தையடுத்து, தன்னுடைய வியாபார நிலையத்தைத் தாக்கி, தீ வைத்தவர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றில், பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்தக் காலகட்டத்தில், குறித்த வழக்கு பிரபல்யமாகப் பேசப்பட்டது. காரணம், பிரதிவாதிகள் சார்பாக மு.காங்கிரஸின் தலைவர் எம்.எம்.எம். அஷ்ரப், அப்போது நீதிமன்றில் சட்டத்தரணியாக ஆஜரானார்.

அந்த வழக்கு, பாதிக்கப்பட்டவர் தரப்பில் தோற்றுப் போனது. சட்டத்திலுள்ள சந்து – பொந்துகளை வைத்தும், சட்டத்தரணியின் வாதத் திறமையாலும், அந்த வழக்கிலிருந்து எதிராளிகள் தப்பித்துக் கொண்டனர். பாதிக்கப்பட்டவருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை.

மேலே கூறிய சம்பவம் நடந்து 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதே அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில்தான், முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில், ஐ.தே.கவின் யானைச் சின்னத்துக்குப் புள்ளடியிடுமாறு, மு.காங்கிரஸின் தற்போதைய தலைவர் தொடக்கம், அந்தக் கட்சியின் அடி மட்டத் தொண்டன் வரை பிரசாரம் செய்கின்றனர்.

காலம் எவ்வளவு விசித்திரமானது. 28 ஆண்டுகளுக்கு முன்னர், யானைச் சின்னத்துக்குப் புள்ளடியிட்டதைப் பாவமாகப் பார்த்த முஸ்லிம் காங்கிரஸ், இன்று, அதே யானைச் சின்னத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, மிக மோசமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தன. கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில், மு.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஐ.எம். பிர்தௌஸ் என்பவரின் வீட்டின் மீது, கூட்டமாக வந்தவர்கள் கல்வீசித் தாக்கியதோடு, வளவுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியிருந்தனர். அதேவேளை, யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரஸின் மற்றொரு வேட்பாளரான ஏ.சி. எஹ்யாகான் என்பவரின் சாய்ந்தமருதிலுள்ள தேர்தல் காரியாலயமும் தாக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் நிலையத்தில் இந்தச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

சாய்ந்தமருதுப் பிரதேச மக்கள், தமக்கான உள்ளூராட்சி சபையொன்றை, மிக நீண்ட காலமாகக் கோரி வருகின்றமை தொடர்பில் அறிவோம். அது இன்னும் சாத்தியமாகவில்லை. அதனால், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைமையில், அந்தப் பிரதேசம் சார்பாக அண்மையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை கிடைக்கும் வரையில், எந்தவோர் அரசியல் கட்சிக்கும் அந்தப் பிரதேசத்தில் ஆதரவளிப்பதில்லை என்பது, மேற்படி தீர்மானங்களில் ஒன்றாகும்.

எனவே, கல்முனை மாநகரசபைக்கான எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது பள்ளிவாசல் சார்பாக, சுயேட்சைக் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கே ஆதரவு வழங்க வேண்டுமென்பது, பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் கோரிக்கையாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருதிலிருந்து வேட்பாளர்கள் எவரையும் களமிறக்க மாட்டோம் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், சாய்ந்தமருதைச் சேர்ந்தவருமான ஏ.எம். ஜெமீல், இந்தத் தீர்மானம் குறித்து, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

ஆனால், சாய்ந்தமருதில் மு.காங்கிரஸ், தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் மூவர், சாய்ந்தமருதில் உள்ளனர்.

அவர்களையும் சேர்த்து, நான்கு வேட்பாளர்களை யானைச் சின்னத்தில், சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் இறக்கி விட்டுள்ளது. இந்த வேட்பாளர்களுக்கு தேர்தல் களம், பெரும் சோதனையாகவே அமையும் என்பது எதிர்பாக்கப்பட்டதுதான். கிட்டத்தட்ட ஊரின் பெரும்பான்மையை எதிர்த்துக் கொண்டு, இவர்கள் போட்டியிட வேண்டியுள்ளது. ஆனாலும், அதில் தவறெதுவும் கிடையாது. தமக்கு விருப்பமான கட்சியொன்றில் அல்லது சுயேட்சைக் குழுவொன்றில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, அவரவரின் தெரிவாகும். அதனை யாரும் தடுக்க முடியாது.

ஆனாலும், பெருங்கூட்டத்தினர் திரண்டு வந்து, நேற்று முன்தினம் மு.கா வேட்பாளர்களின் வீட்டையும், காரியாலயத்தையும் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறையானது, நியாயப்படுத்த முடியாத குற்றமாகும்.

இன்னொருபுறம் 28 வருடங்களுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தார் என்பதற்காக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவரின் வியாபார நிலையத்தை மு.காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கி எரித்த சம்பவத்துக்கும், யானைச் சின்னத்தை ஆதரித்தார்கள் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடும் காரியாலயமும் சாய்ந்தமருதில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும், நமது மனம் முடிச்சுப் போட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பாக, சுயேட்சைக் குழுவொன்று களமிறக்கப்பட்டு விட்டது என்பதற்காக, சாய்ந்தமருதில் வேறு யாரும் மாற்று அரசியல் செய்யக் கூடாது என்று நினைப்பது, ஜனநாயக விரோதமாகும். மறுபுறம், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பாகக் களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சைக் குழுவுக்குத்தான் வாக்களிக்க வேண்டுமெனக் வலியுறுத்துவது, அடாவடித்தனமாகும்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மிகப் பாரியதொரு பொறுப்பைக் கையில் எடுத்துள்ளனர். பள்ளிவாசல்கள், அரசியல் விடயங்களில் தலையிடக் கூடாது என்கிற மடமைத்தனமான கருத்துகள் ஊன்றி விதைக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், துணிவுடன் களமிறங்கியிருக்கும் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். நபிகளாரின் காலத்தில், பள்ளிவாசல்களில் வைத்துத்தான் அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய வரலாற்றில், அரசியலுக்கும் பள்ளிவாசல்களுக்கும் இடையிலான பிணைப்பைப் பிரித்துப் பார்க்க முடியாது.

ஆயினும், மாமூல் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகளுக்கும், பள்ளிவாசல் தலைமையேற்று செய்கின்ற அரசியலுக்கும் இடையிலான பண்புகள், ஒன்றாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. பள்ளிவாசல் தலைமையேற்று நடத்துகின்ற அரசியல் செயற்பாடுகள், இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும். தமக்குப் பிடிக்காத அரசியல்வாதிகளின் உருவப் பொம்மைகளுக்குத் தீ மூட்டுவதும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் வீதியின் குறுக்காகப் படுப்பதும், பள்ளிவாசல் தலைமையேற்று நடத்தும் அரசியல் நடவடிக்கைகளாக இருக்கக் கூடாது.

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தைப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, அண்மையில் சில ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளும் மறியல் போராட்டங்களும் நடைபெற்றிருந்தன. சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம்தான், இவற்றுக்கும் தலைமை தாங்கியிருந்தது. அந்த ஆர்ப்பாட்டங்களின் போது நடைபெற்ற சில சம்பவங்கள், பொதுமக்களுக்கு பாரிய இடையூறுகளாக இருந்தன. அந்த ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புபட்ட முக்கிய நபரொருவரைத் தொடர்பு கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, ஓர் ஊடகவியலாளர் எனும் வகையில் கோரிக்கை விடுத்திருந்தோம்.

“போராட்டம் என்றால் அப்படித்தான் இருக்கும்” என்று, பொறுப்புணர்வே இன்றி, அந்த நபர் பதிலளித்தார். படித்து, பெரும் பதவியில் இருப்பவர்கள் கூட, அரசியல் என்று வரும் போது, இப்படி மாமூலாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதை நினைக்கையில், கவலையாகவும் இருந்தது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் மாற்று அரசியல் செய்ய விரும்பும் அனைவருக்கும் இடமளிக்கப்பட வேண்டும். சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், இதைப் பொறுப்புணர்வுடன் உறுதி செய்தல் அவசியமாகும். நல்லவை நடந்தால் பள்ளிவாசல் நிர்வாகம் அவற்றுக்குப் பொறுப்பேற்பதும், தவறுகள் நடக்கும் போது, “எமக்கும் அதற்கும் தொடர்பில்லை” என, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் விலகிக் கொள்வதும் நேர்மையாகாது.

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படும் அரசியல், மற்றைய பிரதேசத்தவர்களுக்கு முன்னுதாரணமாக அமைதல் வேண்டும். அதற்குரிய திட்டங்களையும் வியூகங்களையும் உரியவர்கள் வகுத்து, நடைமுறைப்படுத்துதல் வேண்டும். முடியாது விட்டால், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து சாய்ந்தமருது பள்ளிவாசல் விலகிக் கொள்ள வேண்டும் என்பதுதான், சமூக அக்கறையுடையோரின் கோரிக்கையாக உள்ளது.

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் களமிறக்கியுள்ள சுயேட்சைக் குழுவுக்கு, அந்த ஊர் மக்கள் ஆதரவாக இருப்பார்களாயின், அங்குள்ள மாற்று அரசியலைக் கண்டு, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பயப்படத் தேவையில்லை. அரசியல் ரீதியாக சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படுகின்றவர்களை, அங்குள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், தமது விருப்பமின்மையை ஜனநாயக வழியில் மக்கள் வெளிக்காட்டலாம். அதை விடுத்து, மாற்றுக் கட்சிக்காரர்களின் வீட்டை உடைப்பதும் அலுவலகங்களைத் தாக்குவதும் ஏற்புடையதாகாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில், அம்பாறை மாவட்ட அரசியல் களம், மிகவும் சூடுபிடிக்கும். அதிலும் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகமான அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றமையினால், களத்தில் அதிகமான முரண்பாடுகள் தோன்றும் சாத்தியங்கள் உள்ளன. அந்தவேளைகளில், வன்முறைகளுக்கு இடம்கொடுக்காதவாறு தமது அரசியலைச் செய்வதற்கு, ஒவ்வொரு வேட்பாளரும் உறுதி கொள்ள வேண்டும்.

வட்டாரத் தேர்தல் முறைமையானது, குறுகிய பகுதிக்குள் நடக்கும் அரசியல் போட்டியாகும். ஒரு வட்டாரத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவரும், மற்றவருக்கு உறவினராகவும் நண்பராகவும் தெரிந்தவராகவுமே இருப்பர். எனவே, வட்டாரத் தேர்தல் முறையில் வன்முறைகள் குறைவாகவே இருக்கும் என்கிற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறையவே உள்ளன. அது வீண் போகக் கூடாது என்பதுதான், நமது பிரார்த்தனையாகும்.

ஓவியம் போன்று, இசை போன்று, நடனம் போன்று, அரசியலையும் ஒரு கலையாகப் பார்ப்பதற்கும் பயில்வதற்கும், இளைய தலைமுறையினர் தயாராக வேண்டும். அரசியல் களத்தில், நமக்கு மறுபுறத்தில் உள்ளவர்களை எதிர்த்தரப்பாக அன்றி, மாற்றுத் தரப்பினராகப் பார்ப்பதற்குப் பழகிக் கொள்தல் வேண்டும்.

அரசியல் களத்தில் வன்முறையைக் கையில் எடுத்ததால், தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் இழந்த ஏராளமானோர் பற்றி, நாம் ஒவ்வொருவரும் அறிவோம். ஆனாலும், நம்மில் யாரோ ஒருவர் அரசியலின் நிமித்தம், வன்முறையாளராக மாறிக்கொண்டிருப்பதுதான் மடமையின் உச்சமாகும்.

வன்முறை என்பதை எதிராளியைத் தாக்குதல், சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், உயிர் கொல்தல் போன்றவற்றோடு மட்டும், அர்த்தப்படுத்திப் பார்த்து விடக் கூடாது.

ஒருவர் தன்னுடைய அரசியல் உரிமையைப் பிரயோகிப்பதற்கும் அனுபவிப்பதற்கும், மற்றவர் ஏற்படுத்தும் அனைத்து விதமான இடையூறுகளும், வன்முறைகளாகவே கருதப்படும். நமக்கு விருப்பமான கட்சியைத்தான் மற்றவர்களும் ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பது, ஒரு வகையான உளவியல் பிரச்சினையாகும். அது, பாசிசச் சிந்தனைக்கான பாதையாகவும் அமைந்து விடுகின்றது.

ஜனநாயகத்தின் உச்சமென்று, வாக்குரிமையைச் சொல்வார்கள். அந்த வாக்குரிமையைப் பிரயோகிப்பதற்கான தேர்தல் களத்தில்தான், அத்தனை ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன என்பது, மிகப்பெரும் முரண்நகையாகும். நமது தேர்தல் களமெங்கும் பூக்கள் பூக்கப் பிரார்த்திப்போம்.