எதிர்த்து நிற்பது எளிதல்ல

(Vijay Baskaran)
போதநாயகி என்னும் படித்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.அதற்கான பலவேறு காரணங்கள் கதைகளாக வருகின்றன.எவ்வளவுதான் படித்த மனிதர்கள் நிறைந்திருந்தாலும்,கல்வியறிவை சமூகம் பெற்றிருந்தாலும் நம்முடைய வரட்டுத்தனங்களில் இருந்து எம்மால் விடுபட முடியவில்லை.நமது சமூகத்தின் பண்பாடு,ஒழுக்கம் என்பது பெண் என்பவள் ஒரு ஆணுக்குரிய சொத்தாக தக்க வைப்பதற்கே பாவிக்கப்படுகிறது.ஒழுக்கம் என்பது பெண்களுக்கான விதியாக சமூகம் கருதுகிறது.இந்த ஒழுக்கம் பல்வேறு கோணங்களில் சமூகம் பார்க்கிறது

1:-கற்பு
2:-அமைதி,அடக்கம்,உடை
3:-அடங்கி வாழ்தல்
4:- கணவனோடு வாழ்தல்
இப்படி பலவிதமான கோணங்களில் பெண் அளவிடப்படுகிறாள்.ஒரு பெண் இளம் வயதில் யாரையாவது விரும்பியிருந்தால் கூட அவளின் கற்பில் சந்தேகம் வருகிறது.அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆண் துணை தேட முடியாது.ஒருபெண் காதலனால் ஏமாற்றப்பட்டால் அவளுக்கும் இன்னோர் ஆண் தேடமுடியாது.ஒரு பெண் காதலித்து அவன் தவறானவன் என உணர்ந்து விலிகினால் ஆண் துணை தேட முடியாது.சமூகத்தின் தவறுகளுக்கு,சமூகத்தில் உள்ளவர்களின் தவறுகளுக்கு பெண் தண்டனை அனுபவுக்கிறாள்.என்ன கொடுமை?

ஒரு பெண்ணின் கற்பை எந்த வரையறையில் ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆணான என்னால் சொல்லமுடியவில்லை.எதைக் கற்பு என எதிர்பார்க்கிறார்கள்?உடலையா அல்லது உள்ளத்தையா? இரண்டிலும் தூய்மையை எதிர்பார்க்கும் ஆண்களுக்கு எப்படி தங்கள் பெண்கள் கற்பை நிரூபிப்பார்கள்?

இத்தனை பெண்களும் வாழ்க்கையில் எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் அல்லது வேதனைப்படுத்தப் படுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.இவர்கள் திருமணமாகி குடும்ப வாழ்வில் இணைந்தாலும் அவர்களுக்குள்ளே இருக்கும் அச்ச உணர்வுகள் கொஞ்சமல்ல.

ஒழிக்கமாக பெண்கள் என கருதப்பட்டவர் கூட கணவனின் கொடுமைகளை தாங்கியே வாழ இந்தசமூகம் நிர்பந்திக்கிறது.அவளைப் பெற்றவர்களும் ஒத்துழைப்பது இல்லை.ஒரு பெண் தனியாக வாழவும் இந்தசமூகம் அனுமதிப்பதில்லை.இதுதான் நமது சமூகம்.இங்கே பெண்கள் போராட முடியாது.பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.இதுதான் நமது பண்பாடு.

இங்கேதான் போதநாயகியும் வாழ்ந்தார்.வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.அவர் இறந்தபின் நீதி நியாயம் பேசும் இந்த சமூகம் அவர் வாழ்ந்து ஆதரவு கேட்டிருந்தால் கை கொடுத்திருக்குமா?வாழத்தான் விட்டிருக்குமா?

விதவையான அக்கா அல்லது வாழாவெட்டியான அக்கா தன் கணவரோடு பேசினால் எரிந்து விழும் தங்கைகள் வாழும் சமூகம்.கணவன் துணையில்லாத பெண்களை பெண்களே சந்தேகப் பார்வையோடு பார்க்கிற சமூகத்தில் எப்படி ஒரு பெண் எதிர்த்து வாழ முடியும்? போராட முடியும்?

ஒரு பெண்ணைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை கணவன் உருவாக்குகிறான்.உறவுகள் உருவாக்குகின்றன.சமூகமும் உருவாக்குகிறது.அதில் இருந்து மீள அந்தப் பெண் மட்டுமே போராடுகிறாள்.ஆனால் தோல்வியே மிஞ்சும்போது அவளுக்கு தற்கொலையே தெரிவாகிறது.இப்படிப் பட்ட பெண்களுக்கு எப்படி நம்பிக்கை கொடுப்பது? யார் கொடுப்பது?

இன்றைய கல்யாண சந்தையில் ஆண்கள் விற்பனைப் பொருட்கள்.தாய் தகப்பன் ஏலம் கூறுவோர்.பெண்ணைப் பெற்றவர்கள் ஏலம் பேசி ஆண்களை வாங்குகிறார்கள்.ஆணை ஏலத்துக்கு விற்றாலும் அவன் விற்றவர்களுக்கு உரிய பொருளாக இருக்கிறான்.வாங்கினவனுக்கு பொருள் சொந்தம் இல்லை.இதுதான் திருமண வியாபாரம்.இங்கே பெண்களுக்கு என்ன நீதி? பெண்ணைப் பெற்றவர்களுக்கு என்ன நீதி?கண்ணீர் மட்டுமே காணிக்கை.

பல நூறு போதநாயகிகள் கதைகள் உண்டு.அதைக்கூட இந்த சமூகம் வெளியே கொண்டுவர தயாரில்லை.வரட்டுத்தனங்களை கொண்டாடும் இந்த சமூகத்தில் போதநாயகிகள் தற்கொலை செய்வதை தவிர் வேறு வழியில்லை.பெண்களும் துணைக்கு போக மாட்டார்கள்.ஆண்களையும் போகவிடமாட்டார்கள்.

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு வாழ்நாள் தண்டனை கொடுக்கிறது இந்த சமூகம்.ஆணைப் பெற்ற அம்மாவும் இங்கே கொடியவள்.பெண்ணாகப் பிறந்து ஆணைப் பெற்ற அம்மாவாக மாறும்போது அவள் கொடியவளாகிறாள்.அது மிகப் பெரிய கொடுமை.( எல்லோரும் அல்ல)

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்கள் திருமணம் முடித்தாலும் நிம்மதியாக உறங்க முடிவதில்லை.பெண் காதலித்து திருமணம் செய்தாலும் கற்பை,ஒழுக்கத்தை நிரூபிக்க தினமும் போராடவேண்டி உள்ளது.உணர்வுகளை உணர்ச்சிகளை அடக்கி வாழ வேண்டியுள்ளது.இங்கே பெண்களுக்கு சுதந்திரம் எங்கே?

பெண்களின் வாழ்க்கை ,சுதந்திரம் அவ்வளவு சுலபம் அல்ல.தற்கொலை செய்வதால் எந்த பழியையும் கடந்துவிட முடியாது.பெண்கள் போராட துணியவேண்டும்.இந்த உலகில் பெண்களே அடக்குமுறைக்குள் சிக்கி துன்பப்படுகிறர்கள்.இதுவே போதநாயகி போன்றவர்களின் நிலை.

எதிர்த்து வாழ்வது சுலபம் அல்ல.ஆனாலும் போராடுங்கள்.பெண்களே உங்களால் முடியும்