எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 6)

இன்றைய நாளின் இறுதி பயணமாக மாதகல், கீரிமலை, காங்கேசன்துறை என்று கடந்த வருடம் முற்பகுதியில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசத்தை பார்வையிடுவது எனத் தீர்மானித்து பண்ணைப் பாலத்தினூடு யாழ் பெரு நிலப்பரபை அடைந்தேன். நேரப் பற்றாக்குறையை சரி செய்ய நாவாந்துறைஇ காக்கைதீவு சந்தியூடாக மானிப்பாயை அடைந்து சித்தங்கேணி பண்டத்தரிப்பு ஊடாக மாதகல் கடற்கரையை அடைவது திட்டம். எனக்கு மிகவும் அத்துப்படியான பிரதேசங்கள் இவை. எனது வழிகாட்டல்களும்? சந்திகளில் திருப்பல் என்ற குறுக்குப் பாதை அறிவுறுத்தல்களும் எனது வான சாரதிக்கு ஆச்சரியமாக இருந்தாலும் எனக்கு இது ஒன்றும் 30 வருடங்கள் கடந்தாலும் எனக்கு புதிதாக தோன்றவில்லை.

யாழ்ப்பாணத்தின் குப்பை மேடாக வறிய மக்கள் வாழும் நாவாந்துறை காக்கைதீவு பகுதி யாழ் மாநகரசபையின் குப்பை கழிவுகளை கொட்டும் பிரதேசமாக மாறி இருந்தது. பொம்மை வெளி மக்களுடனான நட்பு முரண்பாடுகளை தீர்த்துக் கொண்ட சகோதரத்துவத்தை பல ஆண்டுகளாக நிறுவிய சந்தி என்பது யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரிந்த ஏனையவர்களுக்கு தெரியபடுத்தப்படவேண்டி சகோதரத்து வரலாற்று உண்மைகள். இந்தப்பகுதி மக்களின் குரல்கள் எம் மவர்களால் நசுக்கப்படுவதும் வாழ்வின் சகல வளங்களையும் இழந்து நிற்கின்றோம் என்று பறை சாற்றி நின்றது….! இந்தப்பகுதியில் அமைந்திருந்து குடிசைகளும் வீதிகளும்.

ஆனாலும் பல்வேறு போராட்ட காலங்களிலும் வீரம் செறிந்த தமது பங்களிப்பை இந்த மக்கள் வழங்கி வந்ததை எனது 40 வருடத்திற்கு மேலான பொதுவாழ்கை அனுபவங்களாக இருந்தது. நாவாந்துறை மைக்கலைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். புதிய தலைமுறையினருக்கு இந்த போராளியின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கலாம் இது ஒரு பொதுப் போக்கின் அம்சமாக அமைந்திருப்பது எமது போராட்டவரலாற்றின் மறுப்பு செயற்பாடாகவே இருந்து வருகின்றது.

மாலை நேர ரியூசன் வகுப்பு சிறுவர்கள் சாரை சாரையாக வகுப்புக்கள் முடிந்து வெளியேறிக் கொண்டிருந்தனர் மானிப்பாய் பகுதியில். அம்மாகள் தமது ஸ்கூட்டியில் ஒன்றிற்கு மேற்பட்ட பிள்ளைகளை(தனக்கும் இறுதியாக அமர்ந்திருக்கும் பிள்ளைக்கும் மட்டும் தலைக் கவசம் அணித்தவண்ணம்) ஏற்றிக் கொண்டு லாவகமாக பயமின்றி வீதியெங்கும் பயணித்தனர் சம அளவில் சைகிள் புழக்கம் இருப்பது மாணவர்கள் பயன்படுத்துவதில் இருந்து அறிய முடிந்த ஆரோக்கியமான நிகழ்வு. உடல் ஆரோக்கியத்திற்கும் சுற்று சூழலுக்கும் இது உதவிகரமாக இருக்கும் என்பது பற்றிய அறிவூட்டல்கள் தேவையான ஒன்று.

புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்புப்பட்டணம் சங்கமித்தை வந்திறங்கிய துறை என்று பௌத்த அடையாளங்களை நிறுவ எமது பிரதேசத்து தென்னைத் தயாரிப்புக்கள் (கயிறு போன்றவற்றை மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ளது போல்) பாவித்து அழகாக உருவாக்கப்பட்ட இடத்தில் சிங்களப்பகுதி மாணவிகளை அழைத்து வந்த சிங்கள சகோதர ஆசிரியரின் விசிறி வைத்த சேலைக்கட்டு என் கண்ணில் படத் தவறவில்லை. புத்தனைப் சமப்படுத்த அருகில் அமைத்த சிபெருமானின் பெரிய உருவச்சிலை பெரிய கோட்டிற்கு பக்கத்தில் இருக்கும் சிறிய கோட்டை அழித்து பெரிய கோடாக்கிய பாலசந்தரின் சைளகார் ஜானகியின் இருகோட்டுத்துத் தத்துவத்தை எடுந்தியம்பி நின்றது.

இங்கிருந்து கீரிமலைவரை கடற்கரை வீதி பல அழகியல் ரம்யங்களைத் தந்தாலும் வீதியின் இரு பக்கமும் குடியிருபின்றியும் பயன்படுத்தாமலும் இருந்த கடற்தொழில் வயல் தோட்டச் செய்கைக்குரிய நிலங்கள் எனக்கு வெறுமையை ஏற்படுத்தியது. பாகம் பிரித்து ஏற்படுத்திய சீமெந்து கால்களுடன் கூடிய முள்கம்பிகள் இதற்கிடையில் நாட்டப்படாத தென்னம் பிள்ளைகள் இந்த நிலப்பரபை தரிசு நிலமாக காட்சியளிக்க வைத்தது. யாராது ‘பிள்ளைகளை’ நடுங்கள் அது ஆளாகி பல வருடங்களின் பின்பு யாருக்காவது பயன்தரும் பொது எண்;ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. குடிசனப்பரம்பலை அதிகரித்தல் தரிசு நிலங்களை நீண்டகால குறுகியகால பயிர்கள் மூலம் வளமாக்கி பலமான சமூகம் ஒன்றை ஒருவாக்க வேண்டி தேவைகளை எனக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது. இதுதான் 13 இருக்க வேண்டிய பாராளுமன்றப் பிரிநிதித்துவத்தை 6 ஆகி இன்னும் குறையும் நிலையில் இருந்து காப்பாற்ற முடியும்.

கிரிகைகள் செய்ய பயன்படும் கீரிமலையும் எமது முதலாவது நீச்சல் தடாகமும் சிவராத்திரி இரவு விழா ரம்யங்களும் எமது தேசத்து தேவதைகளின் தரிசனங்களின் நினைவுகளும் என்னை 1980 களுக்கு இழுத்து சென்று இன்று எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்ற நினைவலைகளுடன் நகுலேஸ்வரத்தை தாண்டி மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் கோபுரத்தையும் தாண்டிய போது 1965 களில் நடந்த கோவில் பிரதேசப் போராட்டங்களை நினைவுபடுத்தி காங்கேசன்துறை விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றது.

முதல் புகையிரத நிலையம் காங்கேசன்துறை அருகில் இருக்கும் துறைமுகம் அடுத்தாற்போல் இருக்கும் சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய பலாலி விமான நிலையம் என்ற கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் ஒரு கரையில் மிகவும்… மீண்டும் மிகவும் அழகான கடற்கரை எனது அக்கரை உறவுகளை வெள்ளை மணல் நீலக்கடலையும் தாண்டி வேதாரணியம் வரை இழுத்துச் சென்றது.

புதிதாக இலங்கை அரசால் (கோதபாயாவின் என்று அறியப்பட்ட) முதல் தர ஹோட்டலுக்கு அப்பால் வடபகுதியில் பிரிதானியர் காலத்தில் அமைக்கப்பட்ட நாலுவளமும் விறாந்தை என்று நாலு புறமும் திறந்து இருக்க நடுவில் உணவு விடுதி அமைந்திருக்கும் இடத்தில் 1970 கடைசிப் பகுதிகளில் நண்பர்களை புகையிரநிலையத்தில் வழியனுப்ப வந்து வெளிக் கடைகளில் 10 சதத்திற்கு பால் தேனீர் அருந்தாமல் இந்த ரம்மிய அழகுச் சூழலுக்காக 5 சதம் கூடுதலாக கொடுத்து பருகிய தேனீர் நினைவுகள் கூவில் கள்ளையும் தாண்டி எனக்கு போதையூட்டியது.

இராணுவத்தின் சுய பொருளாதார திட்டத்திற்கு அமைய இந்த உணவு விடுதியில் சிறப்பான உபசரிப்புடனான உடன் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டியும் தேனீரும் பால்ய காலத்து நண்பர்களாக இருந்து தற்போது என்னுடன் நிரந்தரமாக இல்லாமல் போன மரணத்தின் சோகங்களை இழப்புக்களை சந்தித்த பலராலும் உணரப்படுவது போல் நானும் உணர்ந்தேன். இருட்டு எம்மை விரட்ட இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து பூங்காவில் இருந்து வெளியேறுவது போல் வெளியேறினோம் யுத்தத்தின் முடிவுகள் எமக்கு தந்த தற்காலிக ‘பூங்கா’ என்ற உணர்வுகள் மட்டும் எனக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருந்தது…..
(இன்னும் வரும்…)