எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..(Part 3)

கறுப்பு நண்டு வாங்கிச் சமைக்கலாம் என்று தேடிய நாங்கள் ஞாயிறு அன்று தொழிலுக்கு செல்வதில்லை எனவே கிடைக்காது என்பதற்குள் கடற்தொழிலாளர்களின் இந்த ஓய்வு நாட்களுக்குள் ஒழித்திருக்கும் கட்டாய உழைப்புப் பறிப்பு மதங்களை முன்னிலைப்படுத்தி நடைபெறுவதினால் அன்றைய தினம் தொழிலுக்கு போவதை தவிர்த்து ஓய்வெடுக்கும் ஒரு நிலமையை கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் கடற்தொழிலாளர்களிடம் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது.

மடுமாதாவின் ‘செல்வாக்கு’ பேசாலை தலை மன்னார் வரைக்கும் எருகலம் பிட்டி ஈறாக பரவி இருப்பதை அந்த நீலவண்ணம் பல இடங்களில் பறைசாற்றி நின்றன. போட்டியாக அங்காங்கே கேதீஸ்வர சாயல்கள் தோன்றினாலும் காணிகளைப் பகிருவதில் சலுகை பெற்று சிலர் தம்மை முன்னிலைப்படுத்துகின்றனர் என்ற சில அடையாளங்களை வெட்டைக்காணிக்குள் வீடுகளை நிர்மாணித்துள்ளோம் என்ற காட்ட வெறும் நாலுதடியில் எந்நேரமும் விழும் நிலையில் உள்ள தகரக் கூரையிலான வீடுகளை ஆட்கள் வசிக்க முடியாத அளவிற்கு அமைத்திருப்பதை காண முடிகின்றது.
வெள்ளை நண்டு(செத்த நண்டு என்று மட்டக்களப்பு பகுதியில் இதனை சமையலுக்கு எடுப்பதில்லை) ; நீலககால் நண்டு என்று நாம் நாக்கைத் தொங்கப் போட்டாலும் கடுகளவிற்கும் கடல் உணவு கிடைக்காத ஞாயிற்றுக் கிழமை பயணம் மிகவும் அமைதியான சூழலில் தலை மன்னாரை அடைந்தது. எங்களுக்கு இணையாக எம்முடன் சமாந்தரமாக பயணித்த புகையிரத்திலிருந்து மிகச்சிலர் தமது பயணத்தின் இறுதியாக தலை மன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து வெளியேறினர்.
ஒரு காலத்தில் தலை மன்னார் ஊடாக இராமேஸ்வரம் சென்று இந்தியா செல்லும் இலகும் கப்பல் பயணத்தை மேற்கொண்ட காலங்களில் நிரம்பி வழித்த இந்தப் புகையிரத நிலையமும் கப்பல் ஏறுவதற்காக பலகை பாலத்தில் வெயிலில் நீண்ட வரிசையில் நீண்ட நெடு நேரம் காத்திருந்த தனது பயண அனுபவங்களை என் தகப்பனார் எனது இளமைப்பருவத்தில் சொன்னது ஞாபகத்திற்கு வந்து சென்றது.
கூடவே 2009 யுத்தம் முடிந்தவுடன் இந்தியாவிற்கான கப்பல் சேவை என்று ஆரம்பித்த அரசியல் கோஷம் எனக்கும் பழைய தலைமன்னார் இராமேஸ்வரத்தை கடல் பயண மகிழ்வுகளை ஞாபகம் ஊட்டி சில மாதங்கள் ஏமாற்றி பின்பு அது கொழும்பு தனுஷ்கோடி என்று மாற்றம் பெற்று சில மாத உயிர்வாழ்வின் பின்பு சாகடிக்கப்பட்ட இந்திய இலங்கை அரசியல் உறவில் எனது நாட்டு மக்களுக்கும் மிஞ்சியது சோகம்தான்.
பலகைப்பாலத்தின் இறுதிவரை சென்று பார்வையிடலாமா..? என்று எனக்கு ‘தெரியாத?’ சிங்களத்தில் முழுமையான கடற்படைப் கட்டுப்பாட்டில் இருந்த படைத்தளத்தின் சிப்பாய் யாரிடமும் கேட்டபோது ‘பழுதடைந்த நிலையில் இருப்பதினால் பாதுகாப்பு காரணங்களுக்கான அனுமதிக்க முடியாது..’ என்று நிலமையை வருத்தத்துடன் தெரிவித்த நட்பு பதிலை மட்டுமே நான் அவர்களிடம் விடையாக பெற்றுக் கொண்டேன். அறிவித்தல் பலகையில் இருந்த தவிருங்கள் புகைப்படம் வீடியோ எடுப்பதை என்பதை நாமும் பொருட்படுத்தவில்லை அவர்களும் எமது புகைபடத்திறமையை தடுக்கவும் இல்லை. அங்கிருந்து விடைபெறும் போது எனக்கு தெரிந்த? சிங்களத்தில் ‘கொத்தட்ட கொந்தாய்….’ என்று எனது சக உறவுகளின் சிரிப்பொலியின் மத்தியில் நட்பு பாராட்டலுக்கு பதிலாக சிப்பாயிடம் புன்னகையை மட்டுமே கண்டேன்.
ரஷ்யாவின் திட்டமாக உலக மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட நியூயோர்க்கையும் மொஸ்கோவையும் வெறும் 47 கிலோமீற்றர் பாலம் அமைப்பதன் மூலம் சாத்தியமாக்கலாம் என்பது நிறைவேற்றப்பட்டால் வெறும் 18 கடல் மைல் தூரத்திற்கு பாலத்தை அமைத்து தலைமன்னாரையும் தனுஸ்கோடியையும் இணைத்து இலங்கையும் இந்தியாவையும் தரையால் இணைப்பது என்ற திட்ட வரைபுகளும் வெறும் இரு தனிமனிதர்களின் பதிலால் நிறைவேறாமல் இருப்பது எனக்கு உடன்பாடாக தெரியவில்லை. இந்த தடைகள் நீங்கி தரைப்பாதை அமைகப்பட்டிருந்தால் சிலவேளைகளில் எனது தலை மன்னார் பயணம் தரை வழியாக மொஸ்கோ ஊடாக வடதுருவ பகுதியில் அமைந்த ரஷ்ய அமெரிக்க பாலத்தின் ஊடு நியூயோர்க் என்ன ரொறன்ரோ வரை விரிந்திருக்குமோ. அப்துல் கலாமின் ‘இளைஞர்களே கனவு காணுங்கள்” என்பது இவ்விடயத்தில் எனக்கு இனித்தே நம்பிக்கை கொடுக்கின்றது…
(இன்னும் வரும்….)