என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 4

(மாதவன் சஞ்சயன் )

மச்சான் நரி எடா எண்டவனை பைத்தியக்காரனை பார்ப்பது போல பார்த்த நாம் எட விசரா கொழும்பில எங்கடா நரி, மாலைக் கண்ணன் இருட்டில் நாயை பாத்து நரி எண்டு ஓடிவாறான் என நக்கலடிக்க, கேட்டது ஒரு ஊளைச் சத்தம். மூவர் முகத்திலும் கலவரம் தோன்ற யன்னல் ஊடாக எட்டிப் பார்த்தவன் வந்து பாருங்கடா நாயா நரியா என கத்த, எட்டிப் பார்த்த நாம் அதிர்ச்சியில் உறைந்தோம். கீழ் மாடி குப்பைத் தொட்டியை புரட்டிய சந்தோசத்தில் ஒரு நரி ஊளையிட பற்றைக்குள் இருந்து அதன் உறவுகள் வரத்தொடங்கின. அதுவரை தெகிவளை மிருகக் காட்சி சாலையில் மட்டுமே நரியை கண்ட எம் கண் முன்னே அவை சுதந்திரமாக உலவுவதை கண்டதும், எம் வாய் தானாகவே காக்க காக்க கனக வேல் காக்க என கந்தசஸ்டி கவசம் சொல்லத் தொடங்கியது.


அதுவரை நரிகள் வாழ்ந்த மரங்கள் அடர்ந்த சிறு காட்டுப் பகுதியை அழித்து மனிதக்குடி இருப்பாக மாற்றினால், அவை தம் பூர்வீக வாழ்விடத்தை விசிற் பண்ணும் தானே. ஆனால் நாய்களுடன் வாழும் நாம் நரிகளுடன் எப்படி வாழ்வது. நாய் கடித்தால் ஊசி போட்டு சுகமடையலாம். ஆனால் நரிச் செயல் ஏரியாவையே நாறடிக்கும். வெளியே சென்று இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யும் தைரியம் எம்மில் எவருக்கும் இல்லாததால் மதியம் மிஞ்சிய பாணைக் கொண்டு அரை வயிற்றையும் மிகுதியை நீர் கொண்டும் நிரப்பினோம். நரியிடம் தப்பிய நண்பன் சொன்னான் சாரத்தை உயர்த்தி சண்டிக்கட்டு கட்டியபடி போன நான் நரியை கண்டதும் ஓடி வந்ததே என்னைக் காப்பாத்த தானடா என சிரித்தபடி கூறினான்.

மதியம் மாட்டு எலும்பை உறுஞ்சி உறுஞ்சி ருசித்த மற்றவன் இப்போ மாணிக்கவாசகர் புராணம் சொன்னான். பசுப் பால் காச்சி சிவன் படம் வைத்து பூசித்த வீட்டில் மாட்டு இறைச்சி சமைத்த எம்மை தண்டிக்க நரியை பரியாக்கிய சிவன் திருவிளையாடல் இது என்றான். கம்யுனிஸ சித்தாந்தத்தை பூரணமாக புரிந்தவன் போல மற்ற நண்பன் தன் பங்கிற்கு, கம்யூனிஸ்ட் தலைவர் வீட்டில் சிவன் படம் மாட்டியதால் வந்த வினை என்றான். காலை எழுந்ததும் எமக்கு மாதம்25 ரூபா மிஞ்சாவிட்டாலும் இங்கு இருந்தால் எமக்கு பாதகம் ஏற்படலாம் என்ற பயத்தில் முன்பு நால்வரும் அடைகாத்த அறைக்கே திரும்பினோம். இன்று அந்த பிரதேசம் பெரிய நகரமாகி புலம் பெயர்ந்தவர் புண்ணியத்தில் பல லட்சங்கள்/கோடிகள் விலை போகிறது.

கொழும்பில் நிற்பதால் எனது பாஸ்போட்டை புதுப்பிக்கும் நோக்கில் வழக்கமாக பிடிக்கும் ஆட்டோ ஓட்டுனரை அவரது செல்லிட பேசியில் அழைத்து புஞ்சி பொரளையில் இருக்கும் அலுவலகம் போகும் வழியில் பல கதை பேசும் போது, தான் குடும்பத்துடன் கதிர்காமம் போன விபரம் கூறிதை கேட்டு நானும் போக முடிவெடுத்தேன். பாஸ்போட் அலுவல் முடிந்து திரும்பிய உடன் என் தோள் பையை எடுத்துகொண்டு அவரது ஆட்டோவில் மகரகமை சென்று அதிவேக பாதையில் மாத்தறை வரை செல்லும் பஸ்சில் ஏறினேன். மீண்டும் குளிரூட்டிய பயணம். 100 மைல் வேகத்தில் அதிவேக பாதையில் பயணிக்கும் போது எதோ வெளிநாட்டில் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது. மகிந்தவின் ஆசியாவின் அதிசயத்தில் இதுவும் ஒன்று.

ஒரு தலைவனின் கனவு, ஆசை நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையையும் கொடுக்கலாம் தீமையாகவும் மாறலாம். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கனவு கண்டால் அது நன்மையிலும், தனக்கும் தன் குடும்பத்துக்கும் என ஆசைப்பட்டால் அது தீமையிலும் முடியும் என்பதற்கு மகிந்த கண்ட கனவும் கொண்ட ஆசையும் நல்ல உதாரணம். மகிந்த சிந்தனை இந்த நாட்டை ஆசியாவின் அதிசயமாக மாற்றும் என நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

1990ல் மீண்டும் கொழும்புக்கு வந்து சிங்கள நண்பரின் ஸ்தாபனத்தில் பணிபுரிந்த போது அவரைக் காண பல தடவைகள் வந்த மகிந்தவை, அவர் பேசிய பழகிய விதத்தை மீண்டும் நினைவு மீட்டி பார்க்கிறேன். அதிகார மமதை மனிதனை இப்படியும் மாறும் என்று என்னால் நம்பமுடியவில்லை. அன்று நான் சந்தித்த மகிந்த ஒரு இன வாதியாகவோ, சுயநல வாதியாகவோ எனக்கு தென்படவில்லை. காரணம் அவர் கூடவே வரும் காமினி, உவைஸ், மூர்த்தி என அவரின் பல்லின நண்பர் குழாம். தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற செருக்கு இன்றி காலிமுகத்திடல் நானா நடமாடும் உணவகத்தில் நண்பர்களுடன் உண்டு அந்த சூழலையே கல கலப்பாக வைக்கும் இவர், பின் நாளில் இப்படி மாறுவார் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

2009 யுத்தம் முடிந்ததும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் விமானத்தில் இருந்து இறங்கியதும் தாய் மண்ணை முத்தமிட்ட வேளை கூட நம்பினேன், எம் இனத்தின் துன்பம் இனி இவரால் தீரும் என்று. ஆனால் அவரே எமக்கு பெரும் துன்பமானார். மகிந்த சிந்தனையில் இருந்த என்னை மாத்தறை வரவேற்றது. 4 மணி நேர அதிவேக பாதைப் பயணம் முடிவுக்கு வந்தது. கதிர்காமம் வரையான அதிவேக பாதை பூரணம் அடையவில்லை என்பதால் பழைய கரையோர பாதைதான் பாவனையில்.

மதிய உணவு சீரக சம்பா சோறு 4 சுவையான மரக்கறி சூரை மீன் பொரியலுடன் 100 ரூபா. பேசாமல் மாத்தறையில் தங்கி உண்டுவாழ உள்ளம் துடித்தது. தர்மபத்தினியின் நினைவு வந்ததும் கதிர்காம பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டேன். காப்பற் வீதியில் கடுகதி பயணம். ஹம்பாந்தோட்டை வந்ததும் தனது மாவட்டத்தில் மகிந்த புகுந்து விளையாடி இருப்பது தெரிந்தது. துறைமுகம், விமான நிலையம் என அவர் செய்தவயால் அவர் அண்ணனும் மகனும் இன்று பாராளுமன்றத்தில்.

பிரமாண்டமான பாதைகள் அமைத்து அந்த மாவட்டத்தை புதுப் பொலிவுற செய்து காடாய், வனாந்திரமாய் இருந்த பல பகுதிகள் இப்போது கட்டிடங்களாய் மாறி நாட்டின் தலை நகராக அதனை மாற்றும் எண்ணம் அவருக்கு இருந்ததோ, என எண்ணத் தூண்டும் அளவுக்கு வேலைகள் நடந்துள்ளான. விதி வலிது என்பது போல அங்கு வாழும் மயில்களால் வந்தது சோதனை மகிந்த கட்டிய மத்தள விமான நிலத்துக்கு. கீழே கிடக்கும் மிகப்பெரிய பாறையால் பலன் குன்றிப்போனது அவரது ஹம்பாந்த்தோட்ட துறைமுகம். கோடிகளை கொட்டி சீனாவை குளிரவைத்து, இந்தியாவை சீண்ட மகிந்த வகுத்த திடங்கள் இவை. நாட்டுக்கு நஷ்டம் என்றாலும் மகிந்த குடும்பத்துக்கும் அவரது கூட்டு களவாணிகளுக்கும் பல கோடிகள் கிடைத்தது.

3மணி நேர பயண முடிவில் முருகன் இருப்பிடம் அடைந்தேன். முதல் வணக்கம் அண்ணனுக்கு என்பதால் செல்லக் கதிர்காமம் சென்று மாணிக்க கங்கையில் ஆனந்தக் குளியல். மீன்களுக்கு பொரி போட்டு குதூகலிக்கும் சிறுவர்கள் விளையாட்டை ரசித்தபடி பாறை மீது சிறிது நேரம் உலகை மறந்து இருந்த போது ஆரம்ப பூசை மணி அடித்தது. பிளையாருக்கு சிதறு தேங்காய் அடிக்கவென தேங்காய் வாங்கி மஞ்சள் நீரில் கழுவி அதன மேல் கற்பூரம் வைத்து கோவிலை அடையவும் ஐயர் பூசை தொடங்கவும் சரியாக இருந்தது. பஞ்சாலாத்தி காட்டும் போது கேட்ட அரோகரா சத்தத்துடன் சிதறு தேங்காய் உடைத்த திருப்தியுடன் கற்பூரம் கொழுத்தி திருநீறு சந்தனம் தீர்த்தம் வாங்கியபின் காணிக்கை செலுத்தி முருகனை தரிசிக்கப் கதிர்காமம் புறப்பட்டேன்.

அன்று செவ்வாய் கிழமை என்பதால் கணிசமான கூட்டமே இருந்தது. பிள்ளையார் பூசையை ஐயர் முடித்ததும் முருகன் பூசையை வாய் கட்டிய கப்புறாளை மார் ஆரம்பித்து நீண்ட நேர வழிபாடு முடிய சூடான சக்கரை சாதம் கிடைத்தது. ஆற்றில் குளித்ததால் ஏற்பட்ட பசிக்கு கிடைத்த சுவையான அமுது. தொடர்ந்து பழனியாண்டவர் தெய்வானை பூசைகள் முடிவிலும் அவித்த பயறு பிரசாதம் கிடைத்தது. சிறிது நேரத்தின் பின் ஆரம்பமாகும் வைரவர் பூசைக்கு காத்திருந்த வேளை 10 வருடங்களுக்கு முன் 1995ல் வந்திருந்த போது அன்றிருந்த பூசாரி என்னிடம் முன்பிருந்த பெரிய வைரவர் திரை எரிந்து விட்டதாகவும் என்னை ஒரு வைரவர் திரையை வரைவித்து தரும்படி கேட்டதும், 4×6 அளவு வைரவர் திரையுடன் காரில் வந்த நான் சந்தித்த விபத்தும் நினைவில் வந்தது.
-நீட்சி 5ல்-