என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 5

(மாதவன் சஞ்சயன்)

2007ன் பின் இப்போது தான் கதிர்காமம் வருகிறேன். மக்கள் மனங்கள் உட்பட எந்த ஒரு பெரிய மாற்றமும் இங்கு எனக்கு தெரியவில்லை. அன்று ராணுவத்துக்கு மகன்களை அனுப்பிய தந்தைகள் பற்றி முன்பு எழுதினேன். இன்று அவர்களின் மரண செய்தி வராதது மட்டுமே மாற்றம். மற்றப்படி அதே தங்கும் விடுதிகள், உணவகங்கள், பூஜா வட்டி விற்பனை நிலையங்கள் என ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். காப்பற் பாதைகள் உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அடிக்கடி பயணிக்கும் பேரூந்துகள் தெற்கின் எல்லையை கொழும்புடன் இணைத்தாலும் அதில் தினம் தினம் பயணிக்க ஆட்கள் இன்றி அவை குறுந்தூர ஆட்களை ஏற்றி இறக்கி, தம் டீசல் செலவை ஈடு செய்யும் நிலை தான் காணப்படுகிறது.


ஆசியாவின் அதிசயம் சாதாரண மக்களைச் சென்றடைய வில்லை. அது பணம் படைத்தவருக்கு மேலதிக சொகுசை காட்டியுள்ளது. ஏழைகளுக்கு அது எட்டாக்கனி. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு செல்லும் அதிவேகப் பாதை ஒரு வழி பயணக் கட்டணம் 900 ரூபா. 6 மணிநேரப் பயணம். வழமையான பாதையில் 400 ரூபா 9-10 மணிநேரப் பயணம். சில ஆயிரம் வசதி படைத்தவர் சொகுசுப் பயணம் செய்ய, ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்த லச்சக் கணக்கான மக்கள் தம் நாளந்த பயணத்தில் படும் அல்லல் கூட ஆசியாவின் அதிசயம் தான். கிராமத்து பாடசாலை பிள்ளைகளை சீருடையில் சப்பாத்து, கழுத்துப் பட்டியுடன் பார்ப்பது சந்தோசம். இன்றும் அவர்களின் காலை உணவு மரவள்ளி கிழங்கும் சோழனும் என்பது மனதுக்கு சங்கடம்.

இந்த நிலை வடக்கில் இல்லை. சங்கிலியன் வழிபட்ட நல்லூர் முருகன் முதல், சன்னியாச மடங்கள் கொண்ட செல்வச்சன்னதி, மாவிட்டபுரத்தான் வரை எமை கூப்பிட்டு அருள் பாலிக்கும் தெய்வங்களை பார்த்து பரவசமடைய, யுத்தம் நடைபெற்ற வேளையில் புலிகளிடம் பாஸ் வாங்கி கொழும்பு சென்று, தம் புலம் பெயர் உறவுகள் வாங்கிய தொடர் மாடி வீட்டில் வாழும் தாய்மார் தந்தைமார், திருமணம் கைகூடா அக்காமார், பேஸ் புக்கில் லைக்ஸ் போடும் தங்கை தம்பிகள், ஆயுதங்கள் மௌனித்த பின் படையெடுத்து வருவதால், ரூட் பெர்மிட் இல்லாத பேரூந்துகள் கூட தாரளமாக ஓடும் லாபம் நிறைந்த வழித்தடமாக வடக்கின் பாதை படு பிசி. புலம்பெயர் உறவுகள் கூட இப்போது பயமின்றி வந்து போவது மேலதிக வரவு.

நீண்ட யுத்தம் வடக்கை புரட்டிப் போட்டலும் புலம் பெயர் உறவுகள் எம்மை தாங்கி அரவணைக்கின்றனர். இடம் பெயர் முகாங்களில் இருந்து தம் மோட்டார் சயிக்கிளில் வேலைக்கு போகும் வசதி எம்மவருக்கு உண்டு. ஆனால் ஆசியாவின் அதிசயதில் இன்றும் கதிர்காமத்தவன் தன் கால்மிதி சயிக்கிளே கதி எனக் கிடக்கிறான். திரைகடல் ஓடிய எம் உறவுகள் எம்மவரை தூக்கி விட, மகிந்த அணி ஆசியாவின் அதிசயத்தை தம் வீடு வரை கொண்டு சென்று பலனடைந்த காட்சிக்கு கதிர்காமம் சாட்சி. அன்று கதிர்காமத்தை புனித நகராக்கி பலரை வாழ வைத்தவர் என்று இன்றும் பிரமதாசா நினைவு கூரப்படும் அதே வேளை யுத்தத்தை முடித்து வைத்தது எமக்கு நிம்மதியான வாழ்வு தந்தவர் என மகிந்தவையும் அவர்கள் மறக்கவில்லை.

இது போன்ற மன நிலை வடக்கிலும் உண்டு. அவர்கள் மகிந்தவை போற்றவில்லை ஆனால் நாம் தோற்றுப்போனோம் என்பதற்கு மேலால் கொடூர யுத்தம் முடிந்தது என்ற மன நிம்மதி ஏற்பட்டுள்ளது. அன்று எவன் சுடுவான், எப்போது குண்டு வீச்சு விமானங்கள் வரும், எந்தப் பாதையில் கண்ணி வெடி இல்லை, இரவு வீட்டில் படுப்பதா பங்கருக்குள் பதுங்குவதா, நாளை காலை இயக்கத்துக்கு ஆள் பிடிக்க வருபவரிடம் இருந்து எப்படி என் மகனை கணவனை காப்பது என்ற எண்ணற்ற கேள்விகள், இடப்பெயர்வுகள், வருமான இழப்புகள், பசி நோய் என அனாதைகளை போல வாழ்ந்த அகதி நிலை வாழ்க்கை மாறிய சந்தோசம் தாய்மாருக்கு உண்டு. பல பத்து ஆண்டுகளின் பின் பயமற்ற உறக்கம் கொள்ளும் திருப்தி அனைவருக்கும் உண்டு.

முறம் கொண்டு புலி விரட்டினாள், போரில் மார்பில் வேலேந்தி மாண்டான் கணவன் என அறிந்ததும், தன் பாலகனை கூட போர்க்களம் அனுப்பினாள் வீர மறவ தமிழ் தாய் என சினிமாவுக்கு வசனம் எழுதிய கருணாநிதி மட்டும் முள்ளிவாய்க்காலில் எம் தாய் மாரிடம் மாட்டி இருக்க வேண்டும் அவரை தொடர் உண்ணாவிரதம் இருக்க வைத்திருப்பர் தாய் மார். யுத்த பூமியில் இருந்து உயிர் தப்பிப்போக முயன்ற மக்களை வாள் கொண்டு, வெட்டித் திரிந்து பின் தான் மட்டும் தன் குடும்பத்துடன் தப்பி தன் உயிர் காக்க எதிரியிடம் சரணடைந்த எழிலனை, ஐநா வில் தேடும் அனந்தியை மாகாண சபை தேர்தலில் புலி ஆதரவு வாக்குகள் பெற கூட்டி வந்து படும் பாட்டால், இப்போது தன் தலயில் தானே மண் போட்டதாக மாவையார் கூறித்திரிகிறார்.

வைரவர் பூசை ஆரம்ப மணி கேட்டதும் மீண்டும் நினைவுகள் 1995 க்கு திரும்பியது. பூசாரி கேட்ட வைரவர்திரை வரைபவரை பொன்னம்பலவாணேசர் கோவில் குஞ்சிதபாத குருக்கள் ஒழுங்கு செய்தார். ஒரு கிழமையில் தயாரான திரையுடன் நண்பரின் வாகனத்தை இரவல் வாங்கி நால்வர் அணியாக கதிர்காமம் பயணித்தோம். ஹுங்கம என்ற இடத்தில் பாதை சீராக்கல் பாதியில் நின்றிருந்தது. முன்னால் சென்ற பேரூந்தை வேகமாக முந்த முற்பட கிறவல் சகதியில் டயர் சறுக்கி கார் அங்கும் இங்கும் இழுபட்டு கரையில் நின்ற வேப்ப மரத்தை முத்தமிட்டு 2 சில்லில் ஒரு பக்கம் சரிந்து ஓடி தன் நிலைக்கு திரும்பியது. யாருக்கும் எந்த சேதமும் இல்லை. காரின் பின் கண்ணாடி உட்பட முன் பக்க மூஞ்சிக்கு மட்டுமே சேதம் ஏற்ப்பட்டது.

சாகசம் பார்த்து ஓடி வந்த மக்கள் மாத்தையா நைற் றைடர் போல கார் ஓட்டுகிறார் என பகிடிவிட்டனர். அந்த நாளில் ரிவி யில் நைற் றைடர் என்ற சாகச கார் பற்றிய தொடர் ஒளிபரப்பாகும். தொடர்ந்து பயணிக்கும் நிலையில் வாகனம் இருந்ததால் அதுவரை குளிரிரூட்டி வசதியுடன் பயணித்த நாம் இப்போது பின் பக்க வழியாக வந்த காற்றில் பிடரி சிலிர்க்க பயணித்து இன்று மகிந்தவால் துறைமுகமாக மாறிய இடத்தில் இருந்த வாகன திருத்த நிலையத்தில், காரின் பின் பகுதியை தடித்த பொலித்தீனால் தற்காலிகமாக மறைத்து பயணத்தை தொடர, நண்பன் சொன்னான் வைரவர் காப்பாத்திப் போட்டாரடா எண்டு. அப்ப ஏன் ஊரில இருந்த அத்தனை வைரவரும் எங்கட சனத்தை கைவிட்டவை எனும் கேள்வி இப்போ என் மனதில் எழுகிறது.

வைரவர் பூசையுடன் சாமி தரிசனம் முடிய உணவு நேரம் நெருங்குவதாக வயிறு உணர்த்தியது. தெருவோர அப்பக் கடைகளில் உடனுக்கு உடன் சுடச் சுட வார்த்து தரும் அப்பத்துக்கு தரும் சம்பல் உச்சியில் சூடேற்றும். தின்னத் தின்ன திகட்டாத இன்பம். கூடவே இஞ்சி போட்ட பிளேன் ரீ குடித்ததும் அடையலாம் பேரின்பம். இரவு உணவு 50 ரூபாவுடன் முடித்து, காலைக்கடனை இலகுவாக்கும், வாழைப்பழம் வாங்க பூஜா வட்டி விற்கும் கடையில் ஒரு சீப்பு நன்கு கனிந்த கதலிப் பழம் எடுத்து விலை கேட்டேன். கடைக்காரர் பணம் வேண்டாம் என்றார். நான் காவி வேட்டி கட்டி இருந்ததால் என்னை சாமியார் என எண்ணிவிட்டார் என நினைத்து நான் பணத்தை நீட்ட, பணத்தை வாங்காமல் நாளை எறியும் பழம்தானே கொண்டு போங்கள் என்றார்.
-நீட்சி 6ல்-