என் நண்பனே மீண்டும் எழுந்து வருவாயோ…..?

தங்கம்(ன்) என் பால்ய நண்பன். இன்றுவரை தொடரும் நட்பு. மெலிதாக பேசும் சுபாவம். என் நட்புடன் கூடவே எனது சமூக விடுதலைக் போராட்டத்திலும் என்னோடு பயணித்தவன். நான் புலம் பெயர்ந்து வேறு தேசங்களில் வாழ்ந்த போதும் தொடர்ந்து தேடித் தேடி நட்பை, தோழமையைப் பாராட்டியவன். புலம் பெயர் தேசத்தில் பண்டிகைகளை நான் மறந்திருந்போதும் வாழ்த்துக்கள் கூற என்னை தொடர்ந்து அழைத்த வண்ணம் இருந்தவன். கடைசியாக ஊருக்கு போன போதும் என் கரம் பற்றி ‘…எனக்குத் தெரியும் நீ சாமி கும்பிடுவது இல்லை….’ என்று கூறியபடி…. எனக்காக தன்னுடன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிறிய கோவிலுக்கு அழைத்துச் சென்றவன். பிரசாதத்தை தந்து இதனை ஏற்பாயா என்று அன்புடன் என்னை ஏற்க வைத்தவன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட போது உதவி கேட்டு பதிலுக்கு காணியை தருகின்றேன் என்று கூறியபோது என்னிடம் ஏச்சு வாங்கியவன். பின்பு என்னுடன் இணைந்த அவரின் நண்பர்களும், ஊரவர்களும் இணைந்து உதவியதில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆரோக்கியம் பெற்றவன். ஒவ்வொரு வருடமும் தனக்கு மீள்வாழ்வு தந்தவர்களை (பண உதவி செய்தவர்களை) நன்றியுடன் தவறாது கடித மூலமும், தொலைபேசி மூலமும் அழைத்து அளவளாவி நன்றி பகிர்ந்து மகிழ்ந்தவன். உதவி வேணுமா?… என்றால் தயங்கி ‘வேண்டாம்’ என்பதே இவன் பதில் இதனை மீறி உதவிகள் செய்த போதெல்லாம் மறு தினமே தொலைபேசியில் அழைத்து என்னை அன்புடன் நலன் விசாரித்து அன்பு பாராட்டியவன். பால்ய நட்புக் காலத்தில் தனது வீட்டிற்கு அழைத்து தேனீர், சாப்பாடு படைத்த அந்த நாட்களும், தனது வீட்டு முற்றத்தில் இருந்த திராட்சைப் பழங்களை ஆய்ந்து எங்களுடன் உண்டு மகிழ்ந்தவன். வேட்டி, சாரம் என்பதை மட்டும் அணியும் பழக்கம் இருந்தாலும் எனது பல்கலைக்கழக அறையிற்கு ‘விசிட்’ அடித்து அளவளாவிச் சென்றவன். கூடவே கிராமத்து இனிய உணவுகளை உடன் எடுத்து வந்து எனக்கு பரிமாறி மகிழ்நதவன். இந்த இழப்பு என்னை சற்றே நிலை குலையத்தான் செய்து விட்டது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உன்னைத் தேடி என் கால்கள் நிச்சயம் உன் வீடு வரும்… ஆனால் நீ அங்கில்லை என்பதால் என் கணகளில் நீர்த் துளிகளை நான் காணிக்கையாக உனக்கு தருவதை என்னால் தவிர்க்க முடியாது அல்லவா என் நண்பனே. உன் நினைவுகள் என்றும் என்னுடன் பயணித்துக்கொண்டே இருக்கும்.(சிவா ஈஸ்வரமூர்த்தி)