என் பார்வையில்….. அறம்

(சாகரன்)

அறம் ராக்கெட் விடும் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த தேசம் ஒன்றில் ஆழ் குழிக்குள் வீழ்ந்த கிராமத்துக் குழந்தையை காப்பாற்ற ஒழுங்குகள் இல்லாத கையறு நிலையை எடுத்துக்காட்டும் ஒரு சினிமா. தொழில் நுட்ப வளர்ச்சி மக்களின் வாழ்வின் மேம்பாட்டிற்கு உதவாத வெறும் வியாபாரப் போக்கில் நீட்சியடைந்திருக்கும் செய்தியை அறைந்து கூறி இருக்கும் சினிமா.

இதற்குள் போத்தலில் அடைத்து விற்கப்படும் மனித வாழ்விற்கு மிக அடிப்படைத் தேவையாக இருக்கும் இயற்கை வளம் தண்ணீர் அரசியலையும் இதற்குள் ஒழிந்திருக்கும் காப்பரேட் நிறுவனங்களின் கள்ளத்தனங்களையும் அறம் சார்ந்து கிராமத்தில் வாழும் விளிம்பு நிலை மக்களின் அவலங்களை அவநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லும் சினிமா. போலியோ சொட்டு மருந்தினூடு சமூக சேவை என்பதற்குள் இருக்கும் விளம்பர தன்மையும் அம்பலப்படுத்தும் சினிமா.

குழந்தைகளிடம் காணப்படும் திறமையை அவர்களுக்கு தன்னம்பியை கொடுத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை குழிக்குள் வீழ்ந்த பிள்ளையை வேறு எந்த முயற்சியும் கை கூடாத நிலையில் சிறுவனைக் கொண்டு காப்பாற்ற வைத்து ராக்கெட் விஞ்ஞானியின் தரத்திற்கு இது எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்பதை எடுத்துரைக்கும் சினிமா.

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பதவிகளையும் தேர்தல் வெற்றிகளையும் பொதுமக்கள் நலத்திற்காக பயன்படுத்துவதில்லை, மக்களுக்காக வாழ்வதை விட தமக்காகவே என்பதை எடுத்துரைக்கும் சினிமா.

இவற்றின் மத்தியில் சில அதிகாரிகளும் ஊர் பெரிசுகளும் இளசுகளும் கிராமத்து மக்களும் சில சமூக அக்கறையுள்ள புத்தி ஜீவிகளும் அரசு அரசயந்திரம் போன்றவற்றின் தவறான பொறுபற்ற செயற்பாடுகளை தத்தமது வாய்புக்களை பயன்படுத்தி அம்பலப்படுத்தி போராடியும் வருகின்றனர் என்ற நம்பிக்கையையும் எடுத்துக் கூறி நிற்கும் சினிமா.

ஆனாலும் அரசியல் தலையீடுகளும் அதிகாரவர்கத்தின் தொடர்சியான செயற்பாடுகளையும் இதே மக்கள் தனித்தனியாக நின்று செயற்படுவதன் மூலம் மீண்டும் இதே மோசமான ஆட்சி அதிகாரத்தையும் அரச இயந்திரத்தையும் ஆட்சிப்பீடம் ஏற்றுகின்றனரே என்ற கேள்விக் குறியை எழுப்பி நிற்கும் திரைப்படம்.

இத் தரைப்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த நயன்தாராவை வெறும் நடிகை என்பதற்கு அப்பால் எம்முள் ஒருத்தி என்று சொல்ல வைத்திருக்கும் நடிப்பு… இந்த பாத்திரத்தை நடிக்க ஏற்ற அவரின் முடிவை வெறும் பணத்திற்கான ‘கூத்தாடி’ என்பதற்குள் என்னால் அடக்க முடியவில்லை. ‘மரிசல்’ திரைப்படத்தின் பின்பு விஜயை ஐ தோழர் என்ற அடைமொழிக்குள் அழைக்கலாம் என்பது சிறந்த நகைச்சுவை என்றால் அறம் திரைப்படத்தின் பின்பு மதிவதனி யை தோழர் என்று அழைப்பதை நகைச்சுவையாக பார்க்க முடியாது.

திரைப் படத்தை நெறியாள்கை செய்த நைனார் பாராட்டுக்குரியவர். என்ன வருங்காலத்தில் அட்டக்கத்தி ரஞ்ஜித் போல் ஒரு கபாலி திரைப்படம் எடுக்காமல் இருந்தால் இந்த ஒரு திரைப்படமே அவரின் மதிப்பை தொடர்ந்தும் தங்க வைத்திருக்கும். 25 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில்(பரதனின் மலூற்றி (Malootty)) வெளிவந்த ஒரு திரைப்படத்தின் பிரதான ஓட்டத்தை(குழாய் கிணறு குழிக்குள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றுதல்) இந்த திரைப்படத்திலும் கையாண்டு இருக்கின்றார்கள் என்ற நெருடல் எனக்குள் இல்லாமல் இல்லை.

அறம் சார்ந்த செயற்பாடுகளுக்கு அதிகாரவர்க்கத்தின் ஊழியராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இருந்தால் முடியாது என்று புறப்பட்ட மதிவதனி போல் புறப்பட்ட பலரை இந்த சமூகம் பிழைக்கத் தெரியாதவன்(ள்) இவனு(ளு)க்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை எல்லோரையும் போலவே ஒத்துப் போக வேண்டியதுதானே என்ற எள்ளி நகையாடல்களும் ஏச்சுக்களும் எனக்கும் புதியன அல்ல. ஆனாலும் நா(ன்)ம் அறம் சார்ந்த செயற்பாட்டிற்காக சமூகத்துடன் கலந்துதான் ஆகவேண்டும். அது விளிம்பு நிலை பக்தர்களின் தெய்வங்களாக இருப்பதற்காக அல்ல நாம் முதலில் மனிதராக இருப்பதற்காக.

(Jan 20, 2018)