எப்போதாவது நடக்கும் கதைகள்: கதவருகே ஒரு கிளர்ச்சியாளர்

(கலாநிதி லக்சிறி பெர்ணாண்டோ)

எங்கள் முன் கதவை யாரோ மென்மையாகத் தட்டும் சத்தம் கேட்டு நான் திடீரென கண் விழித்தே. மற்ற நாட்களில் நாங்கள் அனைவரும் இந்த நேரத்துக்கு எழுந்து விடுவோம், ஆனால் இது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக விடுமுறை காலமாக இருந்தது. அதனால் நான், எனது மனைவி மற்றும் மகன் ஆகிய அனைவரும் ஒரு இலகுவான நேரத்தை அனுபவித்து வந்தோம். இவ்வளவு நேரத்துடன் எங்கள் வீட்டுக்கு யார் வந்திருக்கக் கூடும், என நான் ஆச்சரியப் பட்டேன் எங்கள் வீட்டு வேலைகளுக்கு உதவி செய்யும் பெண்ணான விமலா வெளிக் கதவை நோக்கி நடந்து சென்று அதைத் திறப்பதை நான் கேட்டேன், மற்றும் அவள் திரும்பவும் எங்கள் அறைக் கதவின் அருகே வந்து “ஐயா யாரோ உங்களைக் காண வந்திருக்கிறார்” என்று சொன்னாள்.


குறிப்பாக வருடத்தின் இந்த மாதிரி நாட்களில் மேல்சட்டை எதுவும் அணியாமல் படுத்துறங்குவதினால் நான் சோம்பலுடன் எழுந்து ஒரு மேல்சட்டையை அணிந்தபடி மெதுவாக முன் கதவை நோக்கி நகர்ந்தேன். அந்த கண்ணாடிக் கதவு இன்னமும் பாதி திறந்த நிலையிலேயே இருந்தது, அதை நான் திறந்தபோது, வித்தியாசமான தோற்றமுடைய இந்த இளைஞன் சவரம் செய்யப்படாத முகத்துடனும் மற்றும் நன்கு நைந்துபோன வெள்ளை நிற ரீ – சேட் மற்றும் கால்சட்டை என்பனவற்றை அணிந்தபடி நின்றிருந்தார். அவரது கண்கள் சோர்வாகவும் தூக்கக் கலக்கத்துடனும் காணப்பட்டன.
“டொக்டர்…. நான் உங்களைக் காண வந்திருக்கிறேன்.”
அந்த நேரத்தில் நான் எனது முனைவர் பட்டத்தை பெற்றிருக்காத போதிலும் மக்கள் வழக்கமாக என்னை டொக்டர் என்றே அழைத்தார்கள். சில வேளைகளில் அவர்களிடம் நான் “ஐயோ நான் ஒரு நோயாளி மட்டுமே” என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. நிச்சயமாக அவர் என்னிடம் ஏதோ முக்கியமான ஒன்றைச் சொல்வதற்காக என்னைக் காண வந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது, ஏனென்றால் அவரது கண்களில் ஒரு வித்தியாசமான பிரகாசம் தெரிந்தது. அவர் சாதாரண ஒரு நபராக இருக்க முடியாது. நான் அவரை உள்ளே வரும்படி அழைத்து அவர் அமருவதற்கு ஒரு இருக்கையைக் காட்டினேன். மேலும் அவரது தோற்றத்திலிருந்து அல்ல ஆனால் அவரது பேச்சிலிருந்து அவர் ஒரு தமிழர் என அறிந்து கொண்டேன்.
“டொக்டர் நான் பத்மநாபா. நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் நான் கலந்து கொண்டிருந்தேன்” என ஒரு மங்கலான புன்னகையுடன் அவர் சொன்னார்.
நிச்சயமாக அவரை அடையாளம் காண முடியாவிட்டாலும் தலையை ஆட்டினேன். ஆனால் என்னுள் அந்தக் கருத்தரங்கின் நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தேன். அவர் சுருக்கமாக விஷயத்துக்கு வந்தார். நான் அங்கிருந்து போனதின் பின்னர் காவல்துறையினர் அந்தப் பண்ணையை அன்று மாலை சோதனையிட்டு அங்கிருந்த அநேகரை கைது செய்தார்கள் என அவர் சொன்னார். நான் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்பு என்பதால் எனக்குச் சந்தேகமாக இருந்தது அதனால் நான் ஆச்சரியம் அடையவில்லை. இது எத்தனை மணிக்கு நடந்தது என்று நான் அவரிடம் கேட்டேன் அவர் அது கிட்டத்தட்ட மாலை 6.30 மணியளவில் என அவர் சொன்னார்.
என்னால் அதை நினைவுபடுத்த முடிந்தது, நான் அந்த இடத்தை விட்டு கிட்டத்தட்ட 4 மணி அளவில் வெளியேறினேன் ஏனென்றால் மாலை 7 மணியளவில் நான் ஒருவாறு அம்பாறைக்கு வந்து சேர்ந்துவிட்டேன். அந்த கருத்தரங்கு மட்டக்களப்பின் வடக்குப் பகுதியில் உள்ள கத்தோலிக்க அமைப்பொன்றுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றில் நடைபெற்றது.
இதற்குள் எனது மனைவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீர் எடுத்துக்கொண்டு வந்தார். அவர் அதைப் பாராட்டும் விதமாக தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று அதைப் பெற்றுக் கொண்டார். அவரது நைந்துபோன ஆடைகளில் கூட அவர் கம்பீரமாகத் தெரிந்தார். அவர் ஏன் என்னைக் காண வந்துள்ளார் என நான் ஆச்சரியப்பட்டேன். எனது சிந்தனையில் என்ன ஓடுகிறது என்பதைப் புரிந்துகொண்ட அவர், கருத்தரங்கில் பங்குபற்றிய சிலர் விரிவுரைகளைப் பற்றி குறிப்புகள் எடுத்திருப்பதால், அதில் பேச்சாளராகக் கலந்து கொண்டவர்களில் எனது பெயரும் இடம் பெற்றிருப்பது சாத்தியமானது என அவர் விளக்கினார். குறைந்த பட்சம் காவல்துறையினர் என்னை விசாரிக்க வரக்கூடும் என அவர் சொன்னார். உண்மையில், சில நாட்களுக்குள் நான் பிரசித்தமான நான்காம் மாடிக்கு பிரசன்னமாக வேண்டியிருந்தது.
அவரது சமிக்ஞையை நான் பெரிதும் வரவேற்றேன். அந்த கருத்தரங்கில் ஒரு அதிதி விரிவுரையாளராகக் கலந்து கொண்டதுக்காக காவல்துறையினரால் எனக்கு தொந்தரவு ஏற்படலாம் என்பதைத் என்னிடம் சொல்வதற்காக அவர் மட்டக்களப்பிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். எப்படி உங்களால் காவல்துறையினரிடம் இருந்து பிடிபடாமல் தப்ப முடிந்தது என அவரிடம் நான் கேட்டதுக்கு அவரது சாதாரணமாகச் சொன்ன பதில்:
“எங்களில் சிலர் ஒருவாறு ஒடித் தப்பினோம் மற்றும் சிலர் பிடிபட்டு விட்டார்கள்”
இந்தச் சம்பாஷணையில் இருந்து தெளிவாகத் தெரிந்தது, அவர் இந்தச் செய்தியை என்னிடம் சொல்வதற்காக குறிப்பாகக் கண்டிக்கு வந்துள்ளார் ஏனென்றால் அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அதிதி விரிவுரையாளர் நான் மட்டும் ஆக இருக்கலாம். தெற்கில் இருந்து மற்றும் இரண்டு பேர் அதில் கலந்து கொள்வதாக இருந்தது ஆனால் அவர்கள் அங்கு வரவில்லை. என்னுடையது கடைசி நாள் இடம்பெற்றது. அவர்தான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) தலைவர் என்பதை அறிந்தபோது அவர்மீதான என்னுடைய பாராட்டுக்கள் இன்னும் அதிகமாயின. அவர் வேறு யாரையாவது அனுப்பியிருக்கலாம் ஆனால் தானே நேரில் வருவதை அவர் தெரிவு செய்திருக்கிறார். எங்கள் வாசலுக்கு வெளியில் வேறு யாரோ நிற்பதை நான் உணர்ந்தேன்.
அந்த முகாம் மற்றும் கருத்தரங்கு பற்றிய முழுக் காட்சிகளையும் நான் நினைவு படுத்தினேன். இளம் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் எனும் பெயர் கொண்ட ஒரு அமைப்பிடம் இருந்து கார்ல் மாக்ஸ் மற்றும் தொழிற்சங்கங்கள் எனும் விடயம் பற்றி மட்டக்களப்பில் விரிவுரையாற்றும்படியான ஒரு அழைப்பிதழை தபால் மூலம் முறைப்படி நான் பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் ஜூலை 1980 வேலை நிறுத்தம் மற்றும் தொழிற்சங்கங்கள் என்கிற விடயம் பற்றிய ஒரு ஆய்வை நான் நிறைவு செய்து கொண்டிருந்ததால், நாட்டின் தமிழ் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என நான் எண்ணினேன்.அந்த நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் அநேக கிளர்ச்சி இயக்கங்கள் இயங்கி வந்தது ஒன்றும் இரகசியமில்லை.
ஆனால் அந்தக் கருத்தரங்கு ஈபிஆர்எல்எப் இனால் ஒழுங்கு செய்யப்பட்டது என்பதை நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை அல்லது ஒருவேளை அந்த விபரங்களை அறிவதற்கு நான் விரும்பவில்லையோ என்னவோ. இது நடந்தது 1983ல் அது கார்ல் மார்க்ஸினது நூறாவது ஆண்டு நிறைவு வருடமும் கூட. அந்த நூற்றாண்டுக்காக இதே அல்லது இதே போன்ற தலைப்பில் நான் விரிவுரை நிகழ்த்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல.
அந்த நேரத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞ}னத்தில் நான் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்தேன் அத்துடன் தும்பர வளாகத்தில் அரசியல் விஞ்ஞ}னப் பகுதிக்கு பொறுப்பு விரிவுரையாளராகவும் வேலை செய்து வந்தேன். அதனால்தான் நான் வசிக்கும் அந்த இடத்துக்கு அந்த செய்தியை சொல்வதற்காகப் பத்மநாபா வந்தார். எனக்கு எச்சரிக்கை வழங்கிய உடனேயே அவர் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். அவரை வழியனுப்புவதற்காக அவருடன் நான் வெளியில் வந்தேன்.
எங்கள் வீடு வளாக முன்வாயிலுக்கு எதிராக பிரதான வீதியில் இருந்த உயரமான ஒரு தளத்தில் அமைந்திருந்தது. அவர் மற்றொரு மனிதருடன் பிரதான வீதியை நோக்கி இறங்கிச் செல்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அவரது உருவம் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருந்தது. ஏதோ சில காரணங்களுக்காக எனக்குள் ஒரு சோகம் அரும்புவதை நான் உணர்ந்தேன்.
1990 ஜூனில் சென்னையில் நடந்த ஈபிஆர்எல்எப் கூட்டத்தினை எல்.ரீ.ரீ.ஈ தாக்கியபோது பதினேழு பேருடன் சேர்ந்து பத்மநாபாவும் கொல்லப்பட்டார் என்கிற செய்தியை நான் கேள்விப்பட்ட போது அதே சோகம்தான் மீண்டும் என்னைத் தாக்கியது. அந்த நேரம் நான் ஜெனிவாவில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
அவர்களது கருத்தரங்கில் நான் ஆற்றிய உரை, உழைக்கும் மக்கள் சமூக நீதியை தேட விரும்பினால் அவர்கள் இன வேறுபாடுகளை; மாற்றியமைக்க வேண்டும் (கைவிட அல்ல) என்பதைச் சொல்வதாக இருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு 1883ல் மார்க்ஸ் இறப்பதற்கு முன்பு அவர் சொல்லிய செய்தியின் சாராம்சம் இதுதான் என நான் சொன்னேன். நான் என்னை பாதி சிங்களவன் என அறிமுகப் படுத்தியதுடன் இன அடையாளங்கள் வெறுமனே கற்பனையானவை என்று சொன்னேன். எனது உரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. அது கண்டியில் இருந்து வந்த எனக்குத் தெரிந்த முத்து என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது. அவர்கள் எனக்கு உடன்பட்டார்களோ அல்லது இல்லையோ தெரியாது எனது விரிவுரையின் பின் அவர்கள் எப்படி விருப்பத்துடன் என்னை உபசரித்தார்கள் என்பது எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது. மதிய உணவிற்காக சோறும் காட்டுப் பன்றிக் கறியும் பரிமாறப்பட்டது. தேனீர் பரிமாறப்பட்டபோது நான் தேனீர் அருந்துவதில்லை என்று சொன்னபோது, யாரோ ஒருவர் பத்மநாபா அல்ல அன்புடன் ஒரு குவளை எலுமிச்சை ரசம் தயாரித்து தந்தார். அந்த முகத்தையும் உருவத்தையும் நினைவு படுத்தியபோதும் அந்த நபரை அதன்பின் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெலிந்து குள்ளமாகத் தோன்றிய அவர் ஒரு படித்த மனிதருக்கான தெளிவான அடையாளத்தைக் கொண்டிருந்தார்.
ஸ்ரீலங்காவின் (இடது) அரசியலில் பத்மநாபா போன்ற ஒருவரை இழந்தது ஆழமான வருத்தத்தை அளிக்கிறது. ஒரு கிளர்ச்சியாளர் என்பதற்கு அப்பால் அவர் மிகவும் உணர்திறனும் மற்றும் விவேகமும் உள்ளவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்த நிகழ்வுக்கு முன்பு அவரை நான் எனது நெருங்கிய நண்பரான நியுட்டன் குணசிங்க ஆய்வுகள் மற்றும் பிரசுரங்கள் நடத்துவதற்காக கண்டியில் அமைத்த தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நிறுவனத்தில் (டபிள்யு.பி.ஐ) கண்டுள்ளேன்.
சில நேரங்களில் பேராதனை வளாகத்தைச் சுற்றி பத்மநாபா இருந்துள்ளார், அது ஒருவேளை சிங்கள மாணவர்கள் மற்றும் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதற்காக இருக்கலாம். யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரியான அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பை மேற்கொள்வதற்கான அரை மனதில் இருந்தார் என நான் நம்புகிறேன். ஒருமுறை அவர் ஒரு சர்ச்சைக்குள்ளும் அடியெடுத்து வைத்தார், எனது பெயரையும் அதில் தொடர்பு படுத்தியும் இருந்தார், அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பும் கோரினார். அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை அவர் என்னிடம் விளக்கினார். அந்த அனுபவத்தில் இருந்து கூட அவரை ஒரு வெளிப்படையான நேர்மையான மனிதராக நான் கருதுகிறேன்.
தேனீ மொழிபெயர்ப்பு;: எஸ்.குமார்