எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (2)

(மாதவன் சஞ்சயன்)

ஒன்றுபட்ட நாட்டுக்குள் நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும் என சம்மந்தர் கூறினாலும், கொண்டைச் சேவல் போல் கொக்கரிக்கும் சிவாஜிலிங்கம் சிங்களத்துடன் சண்டித்தனம் பண்ணுவதே, கதிரமலை சிங்களவரின் மனதில் சந்தேகத்தை விதைத்துள்ளது. சம்மந்தரின் பொறுப்பான பேச்சை அவர் வரவேற்றாலும் மற்றவர்களின் பொங்கி எழச்செய்யும் பேச்சுக்கள் அவர்களை சந்தேகிக்க வைக்கிறது. பிரபாகரனும் சிவாஜிலிங்கமும் ஒரே ஊரவர் என்பதால் உறவினர் என நினைக்கும் அவர்கள், வாலை தலை என தப்பபிப்பிராயம் கொண்டுள்ளானர்.

சிவாஜி ஒரு ஈக்கில் வானம் என அவர்களுக்கு தெரியாது. பற்ற வைத்தால் புஸ்ஸ்ஸ் என மேலே போய் டப் என வெடித்து காற்றில் கலந்து ஈக்கில் மட்டும் கீழே வரும். அவர் ஒரு சோடா போத்தலில் அடைக்கப்பட்ட காஸ் போன்றவர். மூடியை திறந்ததும் சீறும் பின் அடங்கிவிடும் என்பதும் அவர்களுக்கு தெரியாது. சிவாஜி மட்டுமல்ல சுரேஸ், அனந்தி போன்றவரும் புலம்பெயர் தமிழர்களுக்காக அவர்களின் வரவுகளுக்காக தம் வசதிகளுக்காக அரசியல் செய்வதும் அவதானிக்க படவேண்டியது.

‘வீ வோன்ட் தமிழ் ஈழம்’ என ஜெனீவா வரை சென்று அந்த நாட்டு பொலிசாருடன் தள்ளு முள்ளு படுபவர்கள், ஆனையிறவை கைப்பற்றி சாவகச்சேரியை அண்மித்தபோது ஆயுதங்கள் தாராளமாக இருக்கிறது ஆளணி பற்றாக்குறை என சூசை அறிவித்த போது, ஏன் இங்கு வந்து அவருடன் இணைய வில்லை? தள்ளுமுள்ளை கட்டுப் படுத்திய தமிழ் ஈழ காவல் துறைக்கு ஜெனீவாவில் என்ன வேலை. நான் ஊரில் மாடு மேய்த்து விட்டு இங்குவரவில்லை என சுமந்திரனை சீண்டியவர் புலிகளுடன் சேர்ந்து மக்களை மாடுபோல் நடத்தியதால் தான் நாட்டை விட்டு ஓடி இருப்பார்.

பூனை தண்டவாளத்தில் விழுந்தால் பலமணி நேர போராட்டத்தில் அதனை உயிருடன் காக்கும் ஐரோப்பிய நாடுகளில் நீங்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு அடிக்கும் அராஜக கூத்து இங்குவாழும் எம்மை தான் காவுவாங்கும். முனி 1 படம், முனி 2 (காஞ்சனா) என வந்தது போல பிரபாகரன் முனி 1 முடிவடைந்தாலும் சிவாஜிலிங்கம் காஞ்சனாவாக, முனி 2 என புலம்பெயர் பினாமிகளுடன் போர்க்களம் புகுவார் என்ற செய்தியை தெற்கில் பரப்பி அதை வைத்து மகிந்தர் தன்னை மீள் கட்டமைக்க தான், இவர்களின் எந்த நடவடிக்கை உதவும். கதிரமலை ஏறிய சாதாரண சிங்கள மகன் சந்தேகம் கொள்ளும் அளவுக்கு, இந்த வாய்ப் பேச்சு வீரர்களின் செயல் இருக்கின்றது.

கடந்த தேர்தலில் குருணாகலையில் போட்டியிட்டு மகிந்தரின் வாக்குகளை கூட்டும் கைங்கரியத்தை சிவாஜி செய்தார். வல்வெட்டி என்றால் பிரபாகரன் என எண்ணும் சிங்களம் வந்திருப்பது பிரபாகரன் 2, என மகிந்தர் கூறியதை நம்பினர். நான் அரசமைக்கா விட்டால் அடுத்த தடவை ஹம்பாந்தோட்டைக்கும் பிரபாகரன் 2 வரும் என இனவாதம் பேசி 93 ஆசனங்களை வெல்ல மகிந்தவுக்கு உதவியது இந்த வீர சிவாஜிலிங்கம்தான்.

தீர்வு வேண்டும் என்ற ஒரே நோக்கில் முக்கியமான புலம்பெயர் அமைப்புகள் முனைப்புடன் செயல்ப்பட இந்த சில்லறை பினாமிகள் கொடி பிடித்து பறையடித்து வீரப்பிரதாபங்களை காட்ட முற்படுகின்றன. அவர்கள் பிடித்த கொடிகளில் புலி மட்டும் தான் இருக்கிறது. எல் ரி ரி ஈ என்ற எழுத்துகளை காணோம். விசாரித்ததில் அப்படி போட்ட கொடியை பிடிக்க தடையாம். அந்த தடைக்கே பயப்படும் காகித புலிகள் தான் கத்துகின்றன ‘வீ வோன்ட் தமிழ் ஈழம்’ என்று. தமிழ் ஈழம் என்னவோ ஜெனீவா கட்டிடத்துள் இருப்பது போலவும் தாம் கத்தினால் ஆணையாளர் அதை தூக்கி வந்து தருவார் எனவும் ஒரு மாயை இவர்கள் மனதில் இருக்கிறதா ? ஊரில் அவியாத பயறை ஜெனீவாவில் அவிக்க முயலும் அறியாமையா ? அல்லது அகதி அந்தஸ்த்து நிலைப்பதற்கு நடத்தும் நாடகமா ? எதுவானாலும் இங்கு வாழும் எங்களுக்கு ஒன்று தெரியும் இந்த நாட்டை பிரிக்க எந்த ஒரு நாடும் எமக்கு துணை வராது என்பது.

இந்திரா காந்தி முதல் நரேந்திர மோடி வரை வந்த பாரத பிரதமர்கள் அதைத் தான் தமக்கு சொன்னதாக சம்மந்தர் மிக தெளிவாக அண்மைய பேட்டியில் கூறினார். இந்திய அமைதிப்படை வந்ததும் மாகாண முறமைக்குள்ளான தீர்வின் அடிப்படையில் தான். அவர்கள் தமிழ் தேசிய ராணுவத்துக்கு பயிற்சி/ ஆயுதம் கொடுத்ததும் மாகாண அரசுக்கு புலிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கத்தான். நாட்டை பிரித்து தமிழ் ஈழம் அமைக்க அல்ல. ஆரம்பத்தில் பிரபாகரன் உட்பட அனைத்து இயக்க தலைவர்களும் தாம் வரித்து கொண்ட கொள்கையில் இருந்து விட்டு விலகாமல் செல்ல முற்பட்டனர். பிரபாகரனுக்கு இருந்த எல்லோரையும் சந்தேகிக்கும் பரனொயிட் வியாதி விபரீத முடிவுகளை எடுக்க செய்தது.

திம்புவில் தைரியமாக வெளியேறி வந்த ஈ அன் எல் எப் கூட்டு உடைந்தது பிரபாகரன் வியாதியின் விளைவால் தான். அந்த பலமான கூட்டு பிளவு பட்ட போதே ஈழம் என்ற எம் லட்சியம் கனவாக கலைந்து விட்டது. ஈழ மண்ணை கொலைக் களமாக்கிய பிரபாகரன் எதிரியிடம் ஆயுதம் வாங்கி எம்மவரை அழித்து புலம்பெயர் உறவுகள் பணத்தில் தமிழ் ஈழம் அமைப்பாதாக் கூறி வாங்கிய ஆயுதங்களால் மாவீரர் இல்லங்களை அமைத்து பின் முள்ளி வாய்க்காலில் லட்சக் கணக்கானவருக்கு முடிவுரை எழுதி தானும் நந்தி கடலில் மண்டை பிளந்து மரணித்தார். அவரால் முடியாததை அவரின் பினாமிகள் ‘வீ வோன்ட் தமிழ் ஈழம்’ என கத்தி, பறையடித்து, கொடிபிடித்து, தள்ளு முள்ளு பட்டு பெற்று விடுவார்களா ?.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இந்திய நிலைப்பாட்டை எமக்கு தெளிவு படுத்தியது. அதை ஏற்பதற்கு புலிகள் மட்டுமே மறுத்தனர். அதனால் அவர்களை எதிர்த்து இந்திய படைகள் மட்டுமல்ல ஏனைய இயக்கங்களும் செயல்பட்டன. ஈரோசின் ஒரு பகுதி மட்டும் மதில் மேல் பூனையாய் இருந்தது. எல்லா இயக்கங்களிலும் சில கறுப்பாடுகள் இருந்தன. அவை தலைமைக்கு தெரியாமல் பல தவறுகளை செய்ய அது மக்களை பாதிக்க காட்டில் இருந்த புலிகள் மீண்டும் நாட்டுக்குள் வரும் சூழ் நிலை ஏற்பட்டது.

விரும்பத்தகாத செயல் புரிந்த சில இந்திய படையினர் மீதான வெறுப்பு, இயக்கங்களின் கறுப்பு ஆடுகள் செயல், புலிகளை மேய்ப்பர்களாக முள்ளி வாய்க்கால் வரை மக்களை நம்ப செய்தது. அதனால் அவர்களின் பயணம் புலியடி பின் தொடர்ந்தது. 1990 முதல் 2009 வரை புலிகள் வெல்லப்பட முடியாதவர் என்ற மாயை மக்கள் மனதில் இருந்தது. அதனால் இரட்டை கோபுர தாக்குதலின் பின் ஏற்பட்ட உலக ஒழுங்கு மாற்றத்தை உணராத புலம்பெயர் புலி ஆதரவாளரும் புலியடி பின் தொடர்ந்தனர்.

அமெரிக்கா ஆரம்பித்த பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அங்கு வாழ்ந்து திரும்பிய முன்னாள் ராணுவ அதிகாரி கோத்தபாயா வுக்கு பாதுகாப்பு செயலாளர் பதவி கிடைத்ததும் பயன்பட்டது. அன்டன் பாலசிங்கம் உட்பட கருணா நிலைமைகளை புரிந்து கொண்டாலும் அவர்களால் அதை பிரபாகரனுக்கு புரிய வைக்க முடியவில்லை. இன்று புலியடி பின் பற்றுவோரின் பிரதமர் உருத்திரகுமார், அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாத நிலையில் ஸ்கைப் மூலம் புலியடி வழி நடத்தி ‘வீ வோன்ட் தமிழ் ஈழம்’ என ஜெனீவாவில் கூவச் செய்கிறார்.

ஸ்ரீலங்காவை பாதுகாப்பதே அமெரிக்க இந்திய நிகழ்ச்சி நிரல் என்பது பரகசியம். அது நாடுகளுக்கிடையான கொடுக்கல் வாங்கல் அரசியல். அதற்குள் அகப்பட்ட நாம் நிலைமைக்கு ஏற்ப கிடைப்பதை பெறுவதா அல்லது இருப்பதையும் தொலைப்பதா என்பதே கேள்வி. நிதானமாக நாம் சித்திக்க வேண்டிய நிலைமையில் நாம் வீம்புக்கு நிற்பது மண்ணை மக்களை மீட்சிக்கு உட்படுத்துமா ? நாம் பிச்சை கேட்க வேண்டியதில்லை. ஆனால் எமக்கு என தரப்படுவதை தவிர்க்கவும் கூடாது.

பறிகொடுத்தவர்கள் நாங்கள். அவை முழுமையாக கிடைக்க வேண்டும் என கேட்பதில் தவறில்லை. ஆனால் அனைத்தும் ஒரே தடவையில் கிடைக்க வேண்டும் என எதிர் பார்ப்பதும் யதார்த்தம் இல்லை. தெற்கின் அரசியல் மாற்றம் இன்னமும் பூரணமாக வில்லை. எந்த நேரமும் புயல் சூறாவளி மட்டுமல்ல சுனாமி கூட வந்து அனைத்தையும் அள்ளிச் செல்லலாம். வடக்கு கிழக்கு மாகாண சபையின் சிங்கள அமைச்சராக நியமிக்கப்பட்டு, பிரேமதாசா ஜனாதிபதி ஆனதும் அவர் பின் சென்ற தயான் ஜயதிலகா வின் இனவாத எழுத்துக்கள் அதற்கு கட்டியம் கூறுகிறது. உள்ளே இருந்து கொல்லும் வியாதி போல் வடக்கின் முதல்வர் கூட எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார்.

– நீட்சி 3 ல் –