எம்மை ஆதரித்த சென்னை மக்களுக்கு நாமும் உதவவேண்டும்

வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னையை புரட்டிப்போட்டு மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது.
மாநில அரசு,மத்திய அரசு,தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அந்த மக்களுக்கான உடனடித்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு அதனை செய்து கொண்டிருக்கின்றனர். இருந்தும் வெள்ளம் காரணமாக நிலைகுலைந்து இயல்பு வாழ்கையை தொலைத்த அந்த மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு எமக்கும் உள்ளது என்பது இலங்கைத் தமிழர்கள் எண்ணங்களில் இயல்பாக தோன்றியருக்கக் கூடியதுதான் அதை நடைமுறைப்படுத்த வசதிபடைத்தவர்கள்.தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்.

உலகெங்கும் பரவிவாழும் தமிழர்களில் பலர் நல்ல வசதிபடைத்தவர்காகவும் உதவும் குணம்கொண்டவர்காகவும் இருக்கிறார்கள். சிலர் சத்தம் இல்லாமல் பல உதவிகளை பலருக்கும் செய்தும் வருகிறார்கள்.தற்போது சென்னையில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதரண கூழ்நிலையில் மக்கள் படும் துன்பத்திலும் இலங்கைத் தமிழர்கள் தங்களால் ஆனா உதவிகளைச் செய்தால் அந்த மக்களுக்கு உதவியாக இருக்கும்.இதனை தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து செய்ய முனையவேண்டும்.
சென்னை பல இலங்கைத் தமிழர்களை வாழவைத்துள்ளது.பலர் சென்னையில் தங்கி பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். சென்னையில் அவர்களுக்குத் தெரியாத தெருக்களும் இல்லை ஊர்களும் இல்லை என்றே சொல்லமுடியும்.

சென்னையில் உள்ள மடிப்பாக்கம்,கே.கே.நகர்,அண்ணாநகர் போன்ற இடங்கள் 1983 களில் பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் வசித்த இடங்களாக இருந்து வந்தது. தற்போது அந்த ஊர்களுடன் வளசர்வாக்கம்,போரூர் ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் பலரும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கும் இருந்தும் அவர்களது பாதிப்புக்கள் விபரம் இதுவரை வெளியாகவில்லை. கீழ் தளத்தில் குடியிருந்த பலர் வெள்ளத்தின்பாதிப்பு காரணமாக மேல் தளங்களில் குடியிந்த நன்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளார்கள். வெள்ளம் வடிந்த பின்னர் தங்களது இருப்பிடத்துக்குச் சென்றுள்ளதாக தெரிகிறது.

1983 களில் இருந்து எனக்கு சென்னையும் தமிழகமும் நன்கு பரிச்சயம் ஆனால் நான் இப்படியொரு பாதிப்பை பார்த்ததும் இல்லை இடைப்பட்ட காலங்களில் கேள்விப்பட்டதும் இல்லை. இப்படித்தான் ஒரு மழைக்காலம் 1985 இல் நான் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு திருவள்ளுவர் பஸ்சில் பயனித்தேன். பஸ் மதுராந்தகத்திற்கு வந்து சேரும்போது மணி அதிகாலை நான்கு. மழை சோ என கொட்டிக்கொண்டிருந்தது.பஸ் நகரவே இல்லை தூக்கத்தில் இருந்த நான் கண்களை கசக்கியபடி பஸ் கண்ணாடியை திறந்து வெளியே எட்டிப்பார்த்தேன் வழிநெடுக வாகனங்களில் அணிவகுப்பு. அப்போது தேசிய நெடுஞ்சாலை இல்லை வழிநெடுக நீட்டுக்கும் புளியமரங்கள்.
மாற்றுப்பாதையால்தான் ‘பஸ்’ செல்லமுடியும் என்ற அறிவிப்பின் பின்னர் ‘பஸ்’ காஞ்சிபுரம்சுற்றி சென்னயையை நோக்கி நகரத்தொடங்கியது.அந்தக்காலகட்டத்தில் தெருக்கள் உயர்தப்படவில்லை. தேசிய நெடுங்சாலை இல்லை. ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் றோட்டை ஆக்கிரமித்தது.பஸ் காஞ்சிபுரம் சுற்றிச்செல்வது தொடர்பாக எந்தக் கவலையும் மனதில் எழவில்லை.

சென்னயில் இவ்வருடம் தீபாவளி தொடக்கம் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. சென்னை வானிலை அவதானிப்பு நிலையமும் மழை தொடர்பான அறிவிப்புகளை அறிவித்த வண்ணமே இருந்தது.சிலநேரங்களில் இந்த அறிவிப்புகள் பொய்த்துப்போவதால் மக்கள் வழக்கமான அறிவிப்பாகவே இதனைப் பார்த்துவிட்டார்கள்.
நானும் அப்படியே நினைத்து அவசர வேலை காரணமாக நவம்பர் 30ம் திகதி இரவு 11.00 மணிக்கு திருச்சி பஸ் நிலையத்தில் இருந்து தமிழக அரசு விரைவுப பேரூந்தில்( திருவள்ளுவர் பேருந்து தற்போது தமிழக அரச பேருந்தாக மாறிவிட்டது) சென்னைக்கு பயனித்தேன். மறுநாள் 1.12.15 அதிகாலை 5.00 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தை பஸ் அடைந்தபோது மழை சோ எனக்கொட்டியது.

எனது வேலையை முடித்துவிட்டு அவசரமாக திரும்பவேண்டிய காரணத்தால் மழையையும் பார்க்காமல் மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பகல் 12 மணிக்கு திருச்சி பஸ்சில் ஏறினேன்.
மழை கொட்டோ கொட்டு என கொட்டிய வண்ணமே இருந்தது.நான் பயனித்த பஸ் கோயம்பேட்டில் இருந்து புதிதாக போடப்பட்டுள்ள ‘வைபாஸ்” சாலையில் தாம்பரம் செல்லாமல் வேகமாக பயணித்தது. திருச்சிக்கு இரவு 9 மணிக்கு சென்றுவிடலாம் என்று கணக்குப்போட்டுக் கொண்டிருந்த நான் பெருங்கத்தூhரில் பஸ் சென்று நின்றவுடன் சாலைகளைப்பார்த்தேன். பெருங்களத்தூர் தாம்பரம் சாலையில் எறும்புகள் அணிவகுத்து நிற்பதைப்போல் வாகனங்கள் நின்றிருந்தன. நான் பயனித்த சாலையை பார்த்தேன் அதே போல் அணிவகுப்பு அதன் பின்னர் எனது பஸ் நகர்வதும் நிற்பதுமாக இருந்தது.

சாலையெங்கும் ஒரே வெள்ளம் மழை ஓய்ந்தபாடில்லை பஸ்சுக்குள் பலரும் பலவிதமாக பேசத்தொடங்கினர்.மதுராந்தகம் ஏரி உடைந்து விட்டதாகவும் ஒருவர் கூறினார். மாற்றுப்பாதை வழியாக காஞ்சிபுரம் சென்று சென்றுவிடலாம் என்ற எண்ணம் என்மனதில் தைரியத்தைக் கொடுத்தது. தேசிய நெடுங்சாலை வழியாக திருச்சி சென்றுவிடலாம் என்ற எண்ணமும் மனதில் இருந்து அகலவில்லை. காரணம் என்ன நடந்திருக்கிறது என்ற சரியான தகவல் இல்லை. என்ன நடந்திருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. பஸ் நிற்பதும் நகர்வதுமாகச் சென்று கூடுவாஞ்சேரியை அடைந்தபோது மணி இரவு 8 இத்தனைக்கும் பெருங்கத்தூருக்கும் கூடுவாஞ்சேரிக்கும் உள்ள தூரம் வெறும் 10 கிலோ மீட்டர்தான்.

கூடுவாஞ்சேரியை அடைந்ததும் பஸ் நிறுத்தப்பப்பட்டு காஞ்சிபுரம் வழியாகச் செல்லலாம் என்ற அறிவிப்பு வந்தது.மீண்டும் நாங்கள் வந்த வழியாச் சென்று மதுராவயல்,பூந்தமல்லி,காஞ்சிபுரம் வழியாச் சென்று வந்தவாசி திண்டிவனம் தேசிய நெடுங்சாலையைத் தொட்டபின்னரே நிம்மதியடைந்தோம்.இடையே முடிச்சூர் வழியாச் சென்றால் காஞ்சிபுரம் பக்கம் என பஸ்சினுள் இருந்த ஒரு புண்ணியவானின் பேச்சைக்கேட்டு பஸ் டைவர் பஸ்சை அவர் சொன்ன வழியாகத் திருப்பினார் அந்த வழியாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நான் திருச்சிக்கு 2ம் திகதி காலை 9 மணிக்கு வந்தடைந்தேன். செய்தித்தாள் ஒன்றை வாங்கிப் புரட்டியபோது சென்னையின் அவலம் கண்டும் அந்த மக்கள் படும் இன்னல்கள் அறிந்தும் வேதனை அடைந்தேன்.

1985ம் ஆண்டு காலகட்டத்துக்கும் தற்போதுமான காலகட்டத்துமக்கும் இடையே அற்புதமான தொழில்வளர்;சியால் சென்னை அபார வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய நெடு;ஞ்சாலைகளால் வீதிகள் உயர்த்தப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள்,தொழில்நுட்ப பூங்காக்கள்,ஹைடெக் கட்டிடங்கள் என சென்னையை அழகுபடுத்தி இருந்தது.

சென்னை புறநகர் பகுதிகளில் வயல்வெளிகளும் ஏரிகளும் வீடுகாக மாறியதால்தான் இந்த அவலமா? சரியான வடிகால் அமைப்புகள் இல்லாதால்தான் இந்த அவலாமா? ஏரியை சரியாக தூர்வாராமல் போட்டாதால்தான் இந்த பேரவலமா? பஸ்சினுள் இருந்த எனக்கு மழையைப்பற்றியும் சென்னை நகரவாசிகள் பற்றியுமான எண்ண ஓட்டமாகவே இருந்தது. இருந்தும் இயற்கையின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள எதுவும் இங்கு இல்லையே என்ற கவலையும் உள்ளது.மழைவெள்ளத்தால் சிதைந்து கிடக்கும் சென்னை மக்களுக்கு நாமும் உதவ முன்வரவேண்டும்.
(அருள்-விஜயன்)