எம் சமுகக்கனவுகள் உங்கள் நினைவுகளுடன்.

தோழர ரெட்ணம் (யுவாம் சொய்சா) 1970களின் பிற்பகுதியில் தன்னை சமுக அரசியல் வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்டவர்.மன்னார் வங்காலையைப் பிப்பிடமாகக் கொண்டவர்.
கால்நடை மருத்துவ உஸ்தியோகத்தரான தோழர் யுவாம் சொய்சா 1980களின் முற்பகுதியிலிருந்து மிகக்குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தகுந்த ஒரு வெகுஜன அரசியல் தளத்தை மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவக் கிராமங்களிலும் விவசாயப் புறத்திலும் ஏற்படுத்துவதில் உன்னதமான பங்களிப்பை நல்கியிருந்தார். மன்னார் வங்காலையில் ஒரு கல்விப்பாரம்பரியம் உண்டு.பெருமளவு இளம் அரச ஊழியர்களும் மணவர்களும் தோழர் ரெட்ணம் அவர்களால் வசிகரிக்கப்பட்டிருந்தார்கள். மன்னார் அப்போது பதட்டம் நிறைந்த பகுதியாகவும் அரசியல் வேலைகள் செய்வதில் மிகுந்த ஆபத்துக்களை எதிர் நோக்கவேண்டியுமிருந்தது. வங்காலை வண பிதா பஸ்ரியன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
மிகுந்த அபாயகரமான சுழலில் வெகுஜனங்கள் மத்தியில் சமுக பொருளாதார விடுதலைபற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் தோழர் ரெட்ணம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதேவேளை அரசியல் இராணுவ பயிற்சிகளுக்கென தோழர்களை தயார் செய்து அனுப்புவதிலும் ஈடுபட்டிருந்தார். கால்நடை வைத்திய உத்தியோகஸ்தர் என்றபடியால் அவர் சகல இடங்களுக்கும் சென்று வரக்கூடிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தினார்.
1984ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரசிலும் பங்குபற்றியிருந்தார். 1980இற்கும் அவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 1985ஆம் ஆண்டுக்குமிடையே அவர் மன்னார் பிராந்தியத்தில் ஏற்படுத்திய தளம் பிரமாண்டமானது.அவர் தனது வேலைகளுக்கூடாக ஒரு தலைவராக உருவாகிக்கொண்டிருந்தார். தோழர்கள் தங்கிவேலைகள் செய்வதிற்கான தளம் சமுகத்தினுள்ளே உருவாக்கப்பட்டிருந்தது.1980களின் நடுப்பகுதியில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பஸ் ஒன்றின்மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவரது மைத்துணர் ஒருவர் கொல்லப்பட்டார்.
1985அல் கைதுசெய்யப்பட்ட தோழர் ரெட்ணம் கடுமையான சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது.
கென்பாம், டொலர் பாம் பகுதியில் வசித்த சிங்களவர்கள் மீது புலிகள் நடாத்திய தாக்குதலை அடுத்து வவுனியா யோசப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தோழர் ரெட்ணம் உட்பட பல அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.இன்றும் தோழர் ரட்ணம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் பலர் அவர் மேற்கொண்டிருந்த அரசியல் பணிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.தோழர் ரெட்ணம் (யுவாம் சொய்சா) அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.