எல்லோர்க்கும் எல்லோரையும் பிடிக்கும் நாள்!

ஆங்காங்கே நடந்த வாள்வெட்டு போன்ற ஒருசில அசம்பாவிதங்கள் தவிர, ஈழ விடுதலை போரில் தம்மை ஆகுருதியாக்கிய போராளிகளின் நினவு கார்த்திகை தீப ஒளி ஏற்றும் நிகழ்வு முடிந்துவிட்டது. இனி அடுத்த கார்த்திகை மாதம் மட்டும் மௌனிப்பதும், மீண்டும் நினைவு கூருவதும் தொடரும். ஒருவர் முகநூலில் இட்ட பதிவில், கடைசி தமிழன் இருக்கும் வரை கார்த்திகை மாத நினைவு கூரல் தொடரும் என்கிறார். சாசுவதமான உண்மை. உயிர் நீர்த்த தங்கள் உறவுகளை என்றும் எவரும் மறக்க மாட்டார். அவர்களின் விளையும் பயிரை முளையில் பறிகொடுத்த மனத்தாக்கம், அவர்கள் மடியும் வரை நீடிக்கும்.

இது எல்லா போராளிகளையும், அவர்தம் உறவுகளையும் இழந்து துயருற்ற, அனைவருக்கும் பொருந்தும். இருந்தும் கார்த்திகை மாதம் என்றால் அது விடுதலை புலிகள் இயக்க போராளிகளை நினைவுகூரும் மாதம் என கொள்ளப்படுவதால், அந்த அமைப்பு சார்ந்தவரின் போற்றுதலுக்கும், அந்த அமைப்பால் பலி எடுக்கப்பட்ட ஏனைய அமைப்புகளின் போராளிகள், மற்றும் அவர்களால் பாதிப்பு அடைந்தவர்கள் தூற்ருதலுக்குமான, பல பதிவுகள் அரங்கேறின. ஒருவரின் மரணத்தை விமர்சிக்கும் மனப்பாங்கு நன்றல்ல. இருந்தும் எம் இனவிடுதலை போராட்டத்தில் மரணங்கள் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் உட்படும் வேதனை மிகு வினோதம் தொடர்கிறது.

துரோகிக்கு மரணதண்டனை என்ற பெயர்பலகையை ஒருவர் கழுத்தில் தொங்கவிட்டு, முதலாவது மின்கம்ப கொலையை யார் செய்திருந்தாலும், அதை கேள்விக்கு உட்படுத்தாமல், ஏற்றுக்கொண்ட சமூகத்தில் வாழ்பவர் நாம். முகம் தெரிந்த அல்லது தெரியாத அந்த மனிதன் மரணத்தை, துரோகி ஒருவன் தொலைந்தான் என தம் நெஞ்சில் பதித்த காலத்தை ஏற்றுக்கொண்ட, இனவிடுதலை விரும்பிகள், போராளிகள் நிறைந்த எம் இனத்தில், துரையப்பா மட்டுமல்ல அவரை துரோகி என சுட்டு விரல் நீட்டியவர்களும் பின்நாளில் துரோகிகள் என்ற பட்டத்துடன் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் மட்டுமல்ல அப்பாவி தருமலிங்கம் ஐயாவும் அதே வரிசையில்.

கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் காலத்து நிகழ்வொன்றை நினைவூட்டுகிறேன். புகழ் பூத்த யாழ் பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா அவர்களின் படுகொலைக்கான காரணம் அவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இராணுவத்திடையே நல்லுறவு வேண்டி நடத்திய, மென்பந்து விளையாட்டு என வரிந்து கட்டி நியாயப்படுத்தியவர்கள், அதன்பின் அதே ராணுவத்தை யாழில் வழிநடத்திய அதிகாரி கொத்தலாவலை கரம்பற்றி, புலிகளை யாழில் வழிநடத்திய கிட்டு “ஹலோ” சொன்னபோது வாய் பொத்தி மௌனம் காத்தனர். துரோகத்துக்கான அளவுகோல் என்ன என்று தெரியாத, புரியாத மூடர் கூட்டமா எம் யாழ் சமூகம் என்ற என் கேள்வி தவறா?

நான் வளர்ந்த ஊரில் நடந்த சம்பவங்களை நினைவில் கொள்ளும் போது நெஞ்சு கனக்கிறது. பத்தர் என்று அவரை அழைப்பர். அவர் தொழில் பொன் ஆபரணங்கள் செய்தல். அவரிடம் இயக்க பொறுப்பாளர் இயக்கத்துக்கு நிதி பெறுவது வழமை. இடையில் பொறுப்பாளர் தன் உறவுக்கு நகை கேட்க, அவர் தன் இயலாமை கூறி மறுத்துவிட்டார். காதலிக்கு காது ஜிப்சி, கைக்கு வளையல், கல் மூக்குத்தி தராததால் காலனுக்கு பலிகொடுக்கப்பட்டார். மறுநாள் பத்தர் பற்றிய செய்தி, காரைநகர் நேவிக்கு மானிப்பாய் இயக்க முகாங்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவலை, வரைபடம் போட்டு கொடுத்ததால் துரோகிக்கு தண்டனை என, அவர் உடலத்தில் தொங்கியது பலகை.

இரப்பினும் சிறப்புடன் வாழ் என்பது முது மொழி. வறுமையிலும் மற்றவர் போற்றும்படி வாழ் என்பது அதன் அர்த்தம். அதன்படி வாழ்ந்த ஜீவன் தான் சக்குண். பள்ளிப்படிப்பு முடித்தும் குடும்ப சூழ்நிலையால், தான் கற்ற கல்லூரி தேனீர்சாலை நடத்தும் நிலை. நான் உட்பட கணக்கில் வையுங்கள் என கூறி கல்லூரி இடைவேளையில் தேநீர் முதல் பணிஸ் வரை உண்டவர் பலர். பின்நாளில் அறிமுகமானவர் கொடுத்த முதல்கொண்டு சாப்பாட்டு கடைவைத்து, காலை உணவு, மாலை வடை தேநீரை உண்டபின், கணக்கில் எழுதி எம்மை பசியாற வைத்தவரை, புலிகளுக்கு ஆதரவளித்தார் என கூறி சுட்டு கொன்றவன் கூட, கல்லூரியில் கணக்கு வைத்து தேநீரும் பணிசும் தின்று பின்நாளில் தன்னையும் போராளி என்றவனே. அவன் கற்ற கல்வி அவ்வளவே.

இப்படி நூற்றுக்கணக்கான துரோகிகளுக்கு தண்டனை என்ற பெயரில் பொதுமக்கள், வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், கல்விமான்கள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான விடுதலை அமைப்புகளின் போராளிகளும் அழிக்கப்பட்ட கொடிய வரலாற்று காலத்து வாழும் சாட்சிகள் நாம். இருந்தும் இன்றுவரை கடந்த கால தவறுகளுக்கு தனிப்பட்டரீதியில் ஒருசில அமைப்புகள் பகிரங்க மன்னிப்பு கேட்டபோதும், அது இதயசுத்தியுடன் தானா அல்லது அவர்தம் அரசியல் இருப்புக்கா என்ற கேள்வி, நடைமுறை நிகழ்வுகளால் எழுகின்றது. இன்றும் மாவீரர் தினம், தியாகிகள் தினம், வீரமக்கள் தினம் என தனித்தனியே நினைவு கூரல் நிகழ்வுகள் தொடர்கின்றன.

தமிழர் ஒற்றுமையின் அவசியம் பற்றி மட்டக்களப்பு பத்திரிகையாளர் எடுத்த முன்முயற்சியால் உருவானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. புலிகளின் கடும் பிடிக்குள் இருந்து கொண்டே அந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டது, இன்று பலருக்கு பாராளுமன்ற பிராப்தம் கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த கடின முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு?. பிள்ளையார் சுழிபோட்டவர்களான தராகி சிவராம் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். இரா.துரைரத்தினம், நிராஜ் டேவிட் போன்றவர்கள் புலம்பெயரும் சூழ்நிலை ஏற்பட்டது. அன்று துணிச்சலுடன் கரிகாலனை தேடிச்சென்று, காலத்தின் தேவையை உணர்த்தியவர்களில் ஒரு சிலரே இன்று காலனுக்கு தப்பி வாழ்கின்றனர்.

அவர்களால் கைகூடக்கூடிய விடயம் என்பதால், இந்த கோரிக்கையை அவர்களுக்கு வைக்கிறேன். அன்று வடக்கு கிழக்கு தமிழர் பிரதிநிதித்துவம் சவாலுக்கு உட்பட்டவேளை, துணிச்சலுடன் உங்கள் எழுத்துப்பணியுடன் அமைப்புகளின் இணைப்பு பணியையும் முன்னெடுத்தது போல, இன்றும் இத்தனை பேரழிவுகளுக்கும் பின்பும், பலவாக பிளபுபட்டு நடத்தப்படும் நிகழ்வுகளை ஒருமுகப்படுத்தும் செயலை செய்ய முற்படுங்கள். உங்களிடம் இணையங்கள் பத்திரிகைகள், உலகம் எங்கும் ஒலிக்கும் 24 மணிநேர வானொலிகளும், நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சிகளும் இருக்கின்றன. இவை கொண்டு அனைத்து நிகழ்வுகளையும் ஒருமுகப்படுத்த முயல்வீர்களா?

கடந்தகால கசப்பான அனுபவங்கள் பலர் மனதில் இன்றும் புதைந்து கிடக்கிறது. அதில் இருந்து வெளிப்படும் புகைச்சல் பல கசப்பான சம்பவங்கள் தொடர்வதற்கு காரணமாகின்றன. அதே வேளை நடந்தது முடிந்த அத்தனை நிகழ்வுகளும், உரிமைபோராட்டம் என்ற போர்வைக்குள் நடந்தவை. போர்வையை விலத்தி பார்த்தால் மட்டுமே எத்தனை தவறுகள், தலைமைகளுக்கு தெரியாமல் தனிநபர் தவறுகளாக நடந்தேறியது என்பது தெரியவரும். இருந்தும் அவ்வாறான தவறுகளை தண்டிக்காத, தலைமைகள் மீதும் விமர்சனம் உண்டு. கையில் இருந்த ஆயுதங்கள் மட்டுமே முடிவெடுக்கும் நிலையில் மூளைக்கு வேலையில்லாத போராட்ட சூழ்நிலை அது.

ஆனால் இன்று நிலை அவ்வாறில்லை. ஆயுதங்கள் மௌனித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வாள்களுடன் வாலாட்டும் நபர்கள் ஒரு பொருட்டே அல்ல. அது விடுதலை வேட்கையல்ல. அவை சமூக விரோத செயல்கள். சட்டம் அவர்களை கட்டம் கட்டும். பெருநிதிகளை தம்வசம் பதுக்கியவர் பற்றிய பயம் கூட சவாலுக்கு உட்பட்டதே. அவர்கள் எறியும் எலும்புகளை பொறுக்குபவர்கள் ஆட்டம் சிறு சலசலப்பை மட்டுமே ஏற்ப்படுத்தும். ஆனால் பெரும்பான்மை ஒன்றுபட்டு தமது மௌனத்தை கலைக்கும் காலத்தில், இந்த சிலுசிலுப்பைகள் கருகிப்போகும். அதற்காக உங்கள் எழுத்து ஆயுதத்தை, இணையத்தை, வானொலியை, தொலைக்காட்சியை பயன்படுத்துங்கள்.

தொடரும் பிரிவினை நிகழ்வுகள் நீண்டு கொண்டே செல்வது, எம் எதிர்கால சந்ததியை நாமே அவர்களின் அழிவு பாதைக்கு இட்டுச்செல்லும் செயலாகும். எம் காலத்து துரோகிகள் என்ற நாமகரணம் சூட்டும் செயல், எதிர்கால சந்ததிக்கும் தொடரவேண்டாம். வினையை விதைத்ததால் தான், முள்ளிவாய்க்கால் பேரவலம் எம் கண்முன்னே அரங்கேறியது. அதனை படிப்பினையாக கொண்டு, அடுத்த தலைமுறை மனங்களில் தினையை விதைப்போம். படைப்பு பிரம்மாக்களே! பத்திரிகை ஜாம்பவான்களே! எம்மவர் எதிர்காலம் உங்கள் கரங்களில். உங்கள் வரலாற்று கடமையை நீங்கள் செய்யவேண்டிய காலம் இது. கார்த்திகை மாதம் மரங்கள் துளிர்விடும் மாதம். இனி புதிய மனங்கள் துளிர்விடும் மாதமாகவும் அதை மாற்றுங்கள். அன்று எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் நாள் பிறக்கும்.

(ராம்)