எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 14

(அ. வரதராஜா பெருமாள்)

 இக்கட்டுரைத் தொடரின் முன்னைய பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் அடிப்படையாக உள்ள குறைபாடுகளை தொடர்ச்சியாக அவதானித்துள்ளோம். இந்த அடிப்படைக் குறைபாடுகளுக்கு காரணமாக பல்வேறு வகைப் பட்ட உற்பத்தித் துறைகளிலும் காணப்படுகின்ற குறைவிருத்தி நிலைமைகளை நாம் அடையாளம் கண்டு புரிந்து கொள்வதுவும் அவசியமாகும். இக்கட்டுரைத் தொடரின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே இலங்கையின் பல்வேறு உற்பத்தித் துறைகளிலும் உள்ள குறைவிருத்தி நிலைமைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் இப்பகுதியில் பிரதானமான பொருளாதாரத் துறைகளில் உள்ள விருத்தியற்ற நிலைமைகள் அல்லது சமகால நிலைமைகளுக்குப் பொருத்தமான அளவுக்கு வளர்ச்சியடையாது இருக்கும் நிலைமைகளை நாம் தொடரந்து அவதானிக்கலாம். அனைத்துத் துறைகளிலுமுள்ள அனைத்து உற்பத்திகள் தொடர்பாகவும் நிலவும் நிலைமைகளை இங்கு விரிவாக ஆராய்வது சாத்தியமற்றது. எனவே இங்கு சில பிரதானமான – அடிப்படையான பண்ட உற்பத்திகளின் நிலைமைகளை நோக்குவதன் மூலம் முழுமையையும் புரிந்து முற்படுவோம். அந்த வகையில் முதலாவதாக இங்கே இலங்கையின் தேயிலை உற்பத்தித் துறையை நோக்கலாம்.