ஒரு குடையின் கீழ் ஈழத்தமிழர்!? வடக்கு முதல்வர் முயற்சி !?

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம், தென் இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றி கண்டு கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் தான் புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்தில் வாழ்பவரிடமும் இது பற்றி பேசுவதாகவும் மிகவும் சாத்தியமான நிலைமை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது ‘’தற்பொழுது எங்களிடம் ஆயுத பலம் இல்லை. ஆகையால் தமிழ் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராது ஒருகுடையின்கீழ் அணிதிரண்டு எமது கோரிக்கைகளை முன்வைக்க முன்வரவேண்டும். அது மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைமைத்துவத்துடன், எமக்கு நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பேசி சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்குதல்கள் கொடுக்கவேண்டிய கடப்பாடும் எங்களுக்கு உண்டு’’ என்கிறார்.

வரும் ஆனால் வராது என்பது போலவே வடக்கு முதல்வரின் அறிவிப்பும் இருக்கிறது. பதவி அரசியல் ஒரு குடையின் கீழ் என்றுமே வராது. அவரவர் தம் குடையின் கீழ் நிற்பதே தமக்கு தனித்துவம் தரும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசியலை தொடர்வர். வேண்டுமானால் அடை மழை எனும் தேர்தல் வரும் போது வீட்டுக்குள் வந்து பின்பு தனித்தனி குடையின் கீழ் தம் வழி பயணிப்பர். இதுவே கடந்தகால நிகழ்கால ஏன் இனி வரும்கால நிகழ்வும் கூட.

நீண்ட காலமாக ஏட்டிக்கு போட்டியான தமது செயல்ப்பாட்டின் தொடர் இழப்புகளின் பின்னர் தான் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் அரசு கட்சி இணைய முனைந்தன. அந்த முயற்சியும் கூட அடுத்து வந்த தேர்தலில் நலிவுற்றது. தான் கேட்ட தொகுதி தனக்கு கிடைக்கவில்லை என்பதால் குமார் பொன்னம்பலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் யாழில் போட்டியிட இராஜதுரைக்கு எதிராக மட்டக்களப்பில் காசி ஆனந்தன் தமிழ் அரசு கட்சி சின்னத்தில் போட்டியிட்டார். கூட்டணி உருவான பின் நடந்தேறிய கூத்து இது. அதுவும் அந்த தேர்தல் தனி தமிழ் ஈழம் அமைக்க மக்களிடம் ஆணை கேட்டு நடந்த வேளையில் கூட, இவர்கள் ஒரு குடையின் கீழ் வரவில்லை. பொது சின்னம் தனி சின்னம் என இரண்டும் கெட்டான் நிலையில் தான் இவர்கள் அன்று இருந்தார்கள்

இன்றும் அதையே தொடர்கிறார்கள். இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல. விடுதலை வேண்டி ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கும் பொருந்தும். வரித்துக்கொண்ட இலட்சியம், கொண்ட கொள்கை வழிமுறை என மாறுபட்ட பாதைகள் அவர்களின் தெரிவாக இருந்தபோது அவர்களுள் சிறு சிறு மோதல்கள் மட்டுமே இடம் பெற்றன.

ஆனால் அவர்களில் நால்வர் ஒரே அணியாக செயல்ப்பட ஈழ தேசிய ஐக்கிய முன்னணி (ENLF) என இணைந்தும் அவர்களுள் தான் தான் பெரியவன் என்ற அகம்பாவம் முன்னிலைப்பட்டது. அதன் பரீட்ச்சாத்த களமாக முதல் சம்பவம் யாழில் அரங்கேறி டெலோ போராளிகள் தெருவில் எரிந்தனர். இது தொடர்கதையாக சகல இயக்கங்களும் புலிகளின் ஆளுமையால் ஆடுகளம் விட்டு நீக்கப்பட்டன.

முடிவில் மண்ணில் இருந்து வெளியேறிய போராளிகள் திசை மாறிய பறவைகள் போலாகினர். பலரும் பல நாடுகளில் தஞ்சம் பெற குறிப்பிட்ட அளவினர் இராணுவ காப்பரணை கடந்து சென்றனர். எதிரியை எதிர்கொள்ள கூட்டு அமைத்தவரே தம்முள் மோதியதால் அந்த எதிரியின் முகாமில் அடைக்கலம் புகுந்த சூழ்நிலை ஈழ போராட்ட வரலாற்றின் கறை படிந்த அத்தியாயங்கள் ஆகின.

ஒரு குடையின் கீழ் போனவரே தம் குடையுடன் தனித்து வெளியேறினர். இது ஈழத்தமிழர் அரசியல் மற்றும் போராட்ட வரலாற்றில் மறைக்க முடியாத நடந்தேறிய உண்மைகள். தேர்தல் வெற்றி, பதவி நோக்கில் அவர்கள் ஒரு குடையின் கீழ் திரள்வதும் பின்பு திசைக்கொருவராக பிரிவதும் நாம் பார்த்து புளித்துப்போன கூட்டுகளே.

தனக்கு பெருமை சேர்க்க மட்டுமே வடக்கு முதல்வரின் இந்த முயற்சி என்பதே என் கணிப்பு.

(ராம்)

எலி தான் போக வழியை கண்டு பிடிக்க முடியவில்லையாம் இதில் விளக்கு மாறு வேறு என்று அரசியல் அவதானிகள் முணு  முணுக்கின்றனர்