ஒரு வாய் கஞ்சி !

35 வருடங்களின் முன் இலங்கையின் தலை நகர் கொழும்பில் என் உயிரை ஓலிம்பிக் பந்தமொன்றின் சுடரிணை கையில் எந்தி ஓடும் ஒரு ஓட்ட வீரனை போல கையில் ஏந்தி ஓடிக்கொண்டிருந்தேன். இதனை இன்று ஜூலை 25 2018 சரியாக 35 வருடங்களின் பின் மதியம் 1 மணியளவில் எழுத தொடங்குகிறேன்,

அன்று 25 யூலை 1983 காலை 7 மணி. நான்காம் குறுக்குத்தெருவில் உள்ள பெந்த்தோட்ட ஸ்டோரில் இருந்து நானும் அதே தெருவில் இருந்த தெமட்டகட ஸ்டோரில் இருந்து ஶ்ரீரஞ்சனும் நாம் பயந்தது போல எதுவும் நிகழவில்லை என்ற துணிவில் மொரட்டுவையில் உள்ள கட்டுபெத்த பல்கலைக்கழகத்துக்கு பஸ்சில் பயணமாணோம். பஸ் பம்பலபிட்டியை அணுகிக்கொண்டிருக்கும் போது மச்சான் கிறீன்லாண்ட்ல தோசை சாப்பிட்டு போவோம் என்ற என் வேண்டுகோளை ஶ்ரீ ஒத்துகொண்டான். கிறீன்லாண்ட்ல காலை சாப்பாட்டை முடித்துவிட்டு வெளியில் வந்தபோது பம்பலபிட்டி பிள்ளையார் கோவிலடியிலிருந்து கரும்புகை எழுந்துகொண்டிருந்தது. எங்கள் இருவரின் மனதிலும் திகிலுருவாக தொடங்கியது. காலி வீதியில் சிங்கள காடையர்கள் வயது வித்தியசமின்றி அங்கும் இங்குமென ஓடிக்கொண்டிருந்தனர். ஶ்ரீ சேட்டை அரைகுறையாக கழட்டடா அவங்களை போலவே நாங்களும் ஓடுவோம் என ஓட தொடங்கினோம். வழியில் கிடைத்த கல்லு என் கையில் இருந்தது. நாம் ஓடியும் நடந்தும் சிங்கள காடையர்கள் போலவே மதியம் ஒரு மணியளவில் 4 காம் குறுக்குத்தெருவில் உள்ள என் உறவினரின் அரசிக்கடையையும் ஸ்ரீரஞ்சன் அவன் உறவினரின் கடையையும் அடைந்தோம். முதல் நாள் 24 யூலை மதியம் கட்டுப்பெத்தை முற்று முழுதான சிங்கள இடம் ஏதும் கலவரம் வந்தாலும் என யாழ்ப்பாணத்தில் இருந்து 23ம் திகதி இரவு ட்ரெயினில் வந்த எனது அண்ணர் வந்து என்னை கொழும்பில் தங்களுடன் வந்து நிற்க சொல்லி அழைத்து வந்தார். நான் எனது உறவினரான ஜெயானந்தனுடன் பெந்தோட்ட ஸ்டோரில் தங்குவதாக கூறி அவரை அனுப்பியபின் அன்று இரவு எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்ற துணிவிலேயே நாம் அடுத்தநாள் பல்கலைக்கழத்துக்கு செல்ல முடிவெடுத்தது எவ்வளவு முட் டாள்தனம் என்பதை மூச்சிரைக்க முழிபிதுங்கி ஓடி வந்தபோது ஒற்றைக்கதவை திறந்துவைத்திருந்த ஜெயானந்தன் என்னை திட்டி உள்வாங்கி கொண்டான். கதவுகள் மூடப்பட்டு அரிசி மூடைகளை படிபோல அடுக்கி கூரையில் நான்கு ஓடுகளை கழட்டி வைத்துவிட்டு காதை முன்கதவில் தொங்கவிட்டு அமைதியாய் காத்திருந்தோம். கொழும்பு பெரு நகரம் அதன் வியாபார முக்கிய இடங்களையும் பெரும்பாலும் தமிழ் முஸ்லீம் வியாபாரிகளே தம்வசப்படுத்தி இருந்தனர் முதலாம் குறுக்கு தெரிவில் இருந்து முழு கடை வீதிகளும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான இடமாகவும் அதுவும் நாங்கள் தங்கியிருந்த கடைக்கு மிகவும் அருகில் ஜே ஆர் ஜெயவர்த்தனேக்கு சொந்தமான தொடர்கடைகளும் இருந்ததால் தீவைப்பு எதுவும் நிகழாது என்ற நம்பிக்கைககளை தகர்த்து வீதியில் பெரும் கூக்குரல்கள் அலை அலையாய் எழ தொடங்கியது. பயம் நெஞ்சில் அப்பத்தொடங்கியது. நான் தங்கியிருந்த கடைவாசலிலும் பெரும் சத்தத்துடன் பெட்ரோல் நிரப்பப்பட்டு கொழுத்தி ஏறியப்பட்ட போத்தல் ஓன்று வெடித்து சிதறியது . முன்கதவு எரியத்தொடங்கியது .உள்ளிருந்து வாளிகளில் தண்ணீரை நிரப்பி தீ பரவாது ஊற்ற தொடங்கினோம். மீண்டும் ஒரு போத்தல் சத்தத்துடன் வெடித்து சிதறியது. தண்ணீரை நாம் ஊற்றியது அவர்களை சினப்படுத்தியிருக்கவேண்டும் . எம் கடை முன்பு பேரிரைச்சல் என பலபேர் கூடியிருப்பது தெரிந்தது. மூன்றாவது பெட்ரோல் போத்தல் வெடித்து சிதற நாம் நம்பிக்கையிழந்து போனோம். கடையில் வேலை செய்த ஒரு சிலர் ஏற்கனவே பிரித்து வைத்திருந்த ஓடுகளை அகற்றி கூரையில் ஏறி இருந்தார்கள். கூரையை தொட தாயாராய் இருந்த மூன்றாவது அரிசி மூடையில் நான் இருந்தேன். ஜெயானந்தன் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தை என்ன செய்வது என்ற தவிப்பில் கீழே நின்றுகொண்டிருந்தான் அது அவனது அக்காவின் கணவரது கடை. அவனே கடைக்கு பொறுப்பாக இருந்தான். கதவு சுவாலை இட்டு எரியத்தொடங்கியது. நாம் கூரையால் ஏறி ஓடத் தொடங்கினோம் . அப்போ என்னிடம் ஒரு கேசியோ றிஸ்ட்வாட்ச் ஒன்று இருந்தது அது முதன் முதல் ரவி அண்ணண் கப்பலில் இருந்து திரும்பி வந்தபோது கொடுத்தது என ரூபன் அண்ணன் வெளி நாடு போவதற்கு என கொழும்பு வந்து சில வேளைகளில் எனது அறையில் நின்ற பொழுதொன்றில் கொடுத்தது தனது நேரத்தை காட்டியது. நேரம் பின்னேரம் 2:45 . நான் ஓட தொடங்கினேன். கூரையின் மேலாலும் வாள்களுடனும் கத்திகளுடனும் காடையர்கள் ஓட்டிவருவது தெரிந்தது . எமது கடைவீதியின் முடிவில் இருந்த ஒரு கம்பியில் மூவர் இறங்கிக்கொண்டிருந்தனர் மற்றவர்கள் கீழே இறங்குவதற்கு முந்தி அடித்துக்கொண்டிருந்தனர்.கம்பி சீமெந்து சுவரின் பிணைப்பை விடுத்தது சரிய தொடங்கியது. பிந்தும் ஒவொரு கணங்களும் ஆபத்தானது அவர்கள் வாள்களுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். நான் நாங்கள் இருந்த பக்கத்தில் இருந்து அடுத்த கட்டட தொகுதிக்கு ஓடி பாய்ந்தேன் அந்த கட்டட தொகுதி சிறிது தாழ்வானதாக இருந்ததால் அது எனக்கு இலகுவாக இருந்தது . நான் எங்களுடன் வந்த மற்றவர்கள் என ஒவொருவரும் தம் உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்தோம். அந்த கட்டட தொகுதியில் ஓடும் போது ஒரு நாற்சார வீட்டை ஒத்த ஒருவீட்டில் நிரம்ப தமிழர்கள் பதற்றத்துடன் இருப்பதை பார்த்தேன் ஒரு மலே முஸ்லீம் இன தோற்றத்தைக் கொண்ட வெள்ளை முழு நீள அங்கி அணிந்த ஒருவர் கிழே இறங்கி வருமாறு சைகை செய்தார்.அந்த மனிதர் ஜேசுநாதரின் தோற்றத்தை உடையவராய் இருந்தார். அவரின் வீட்டில் ஒரு கிடாரத்தில் அரிசி கொதித்துக்கொண்டிருந்தது நான் அந்த வீட்டில் அடைக்கலமானேன் . அன்று மாலை அந்த அன்பான முதியவரின் வீடு கிட்டத்தட்ட ஒரு முன்னூறு பேருக்காவது அடைக்கலம் கொடுத்திருக்கும். அன்று அந்த வீட்டில் குடித்த முதல் வாய் கஞ்சி என் உயிரை ஆசுவாசப்படுத்தியது.

(Nanda Kandasamy)

25 / July / 2018

தொடரும்…..