ஓயும் மோடி அலை; பாயும் ராகுல் அலை: 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் புள்ளிவிவரங்கள் தரும் செய்தி

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை மனிதநேய மக்கள் கட்சி வழிமொழிகிறது. மு.க. ஸ்டாலின் தெளிவான ஒரு பார்வையுடன் இந்த முன்மொழிவைச் செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வேகமாகப் பாயத் தொடங்கியுள்ளது என்பதையே காட்டுகின்றன.டிசம்பர் 24, 2018-ல் வெளியான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வருண் பி.கிருஷ்ணன் தொகுத்து வெளியாகியுள்ள புள்ளிவிவரம் மோடி அலை தணிந்து ராகுல் அலை வேகமாகியுள்ளதைத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது.

நடந்து முடிந்த இந்த நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கோண்டார்கள். இதில் நரேந்திர மோடியும், ஆதித்யநாத்தும் பரப்புரை மேற்கொண்ட தொகுதிகளில் பாஜகவின் வாக்கு விகிதம் குறைந்துள்ளதை இந்துவின் புள்ளிவிவரம் எடுத்துக் காட்டுகிறது.

ராகுல், மோடி மற்றும் ஆதித்யநாத் பரப்புரை செய்த மொத்த தொகுதிகள்

கீழே உள்ள அட்டவணை மாநிலங்கள் வாரியாக ராகுல், மோடி மற்றும் ஆதித்யநாத் பரப்புரை செய்த தொகுதிகளைக் காட்டுகிறது.
பரப்புரையாளர் சத்தீஸ்கர் மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் தெலங்கானா மொத்தம்
ஆதித்யநாத் 23 11 26 1 61
மோடி 8 18 26 3 55
ராகுல் காந்தி 19 20 28 8 75

மூவரும் பரப்புரை செய்த தொகுதிகளில் வாக்கு விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்

கீழே உள்ள அட்டவணை 2013/14 உடன் ஒப்பிடுகையில் வாக்கு விகித மாற்றத்தை காட்டுகிறது
பரப்புரையாளர் வாக்கு விகிதம் சரிந்த இடங்கள் வாக்கு விகிதம் அதிகரித்த இடங்கள் போட்டியிடாத இடங்கள்
ராகுல் காந்தி 12 58 5
மோடி 46 7 2
ஆதித்யநாத் 50 11 –

ஆதித்யநாத் பரப்புரை செய்த 61 தொகுதிகளில் 50 தொகுதிகளில் (அதாவது 82%) பாஜகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது.

நரேந்திர மோடி பரப்புரை செய்த 55 தொகுதிகளில் 46 தொகுதிகளில் பாஜகவின் வாக்கு விகிதம் சரிந்துள்ளது.

ராகுல் காந்தி பரப்புரை செய்த 75 தொகுதிகளில் 58 தொகுதிகளில் (அதாவது 77%). காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது.

மூவரும் பரப்புரை செய்த தொகுதிகளில் வாக்கு வங்கியில் ஏற்பட்ட மாற்றம்

கீழே உள்ள அட்டவணை 2013/14 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2018 தேர்தலில் சராசரி வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
பரப்புரையாளர் சத்தீஸ்கர் மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் தெலங்கானா
ராகுல் காந்தி 2.64 6.79 7.90 22.86
மோடி -7.20 -3.76 -9.69 -8.64
ஆதித்யநாத் -8.55 -5.79 -6.06 -16.19

மேற்கண்ட அட்டவணை சத்தீஸ்கரில் ராகுல் பரப்புரை செய்த தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு வங்கி 2.64% அதிகரித்துள்ளதையும், மோடி பரப்புரை செய்த தொகுதிகளில் 7.20% சரிந்துள்ளதையும், ஆதித்யநாத் பரப்புரை செய்த தொகுதிகளில் சரிவு 8.55% என்று இருப்பதையும் காட்டுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ராகுல் பரப்புரை செய்த தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு வங்கி 6.79% அதிகரித்துள்ளதையும், மோடி பரப்புரை செய்த தொகுதிகளில் 3.76% சரிந்துள்ளதையும், ஆதித்யநாத் பரப்புரை செய்த தொகுதிகளில் சரிவு 5.79% என்று இருப்பதையும் காட்டுகிறது.

ராஜஸ்தானில் ராகுல் பரப்புரை செய்த தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு வங்கி 7.90% அதிகரித்துள்ளதையும், மோடி பரப்புரை செய்த தொகுதிகளில் 9.69% சரிந்துள்ளதையும், ஆதித்யநாத் பரப்புரை செய்த தொகுதிகளில் சரிவு 6.06% என்று இருப்பதையும் காட்டுகிறது.

தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க இயலாவிட்டாலும் ராகுல் பரப்புரை செய்த தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு வங்கி 22.86% அதிகரித்துள்ளதையும், மோடி பரப்புரை செய்த தொகுதிகளில் 8.64% சரிந்துள்ளதையும், ஆதித்யநாத் பரப்புரை செய்த தொகுதிகளில் சரிவு 16.19% என்று இருப்பதையும் காட்டுகிறது.

ராகுல் பரப்புரையால் காங்கிரஸ் அதிகரித்துக்கொண்ட தொகுதிகள்

கீழே உள்ள அட்டவணை ராகுல் காந்தி பரப்புரை செய்த தொகுதிகளில் காங்கிரஸ் அதிகரித்துக் கொண்ட தொகுதிகள் அல்லது இழந்த தொகுதிகளின் விகிதத்தை எடுத்துக் காட்டுகிறது.

அதிகரிப்பு என்பது 2013/2014ல் தோல்வி அடைந்து 2018-ல் வெற்றி பெற்ற தொகுதிகள்

இழப்பு என்பது 2013/144-ல் வெற்றி பெற்று 2018-ல் தோல்வி அடைந்த தொகுதிகள்
மாநிலம் அதிகரிப்பு இழப்பு
சத்தீஸ்கர் 47.37% 15.79%
மத்தியப் பிரதேசம் 35.00% 0.00%
ராஜஸ்தான் 39.29% 0.00%
தெலங்கானா 33.33% 66.67%
மொத்தம் 40.00% 7.14%

மோடி பரப்புரையால் பாஜகவிற்கு அதிகரிப்பே இல்லை

கீழே உள்ள அட்டவணை மோடி பரப்புரை செய்த தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்த தொகுதிகளில் விகிதத்தை எடுத்துக் காட்டுகிறது. மோடி பரப்புரை செய்த தொகுதிகளில் ஒன்றை கூட பாஜகவினால் அதிகரிக்க முடியவில்லை.
மாநிலம் அதிகரிப்பு இழப்பு
சத்தீஸ்கர் 0.00% 37.50%
மத்தியப் பிரதேசம் 0.00% 38.89%
ராஜஸ்தான் 0.00% 61.54%
தெலங்கானா 0.00% 0.00%
மொத்தம் 0.00% 49.06%

ஆதித்யநாத் பரப்புரையால் பாஜகவிற்கு 49% இழப்பு

கீழே உள்ள அட்டவணை ஆதித்யநாத் பரப்புரை செய்த தொகுதிகளில் பாஜகவிற்கு ஏற்பட்ட அதிகரிப்பு அல்லது இழப்பு விகிதத்தை காட்டுகிறது.
மாநிலம் அதிகரிப்பு இழப்பு
சத்தீஸ்கர் 8.70% 65.22%
மத்தியப் பிரதேசம் 0.00% 27.27%
ராஜஸ்தான் 3.85% 46.15%
தெலங்கானா 0.00% 0.00%
மொத்தம் 4.92% 49.18%

‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தரும் இந்த புள்ளிவிவரங்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தது சரியான முடிவு என்பதை சந்தேகமற நிரூபிக்கின்றது. ராகுல் ஏறுமுகத்திலும் மோடி இறங்கு முகத்திலும் இருக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களின் இதயம் என்று வர்ணிக்கப்படும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இந்த நிலை என்றால் நாட்டின் பிற பகுதிகளில் மோடியின் பரப்புரை 2019 தேர்தலில் எடுபடாது என்பதற்கு இது ஒரு முன்னறிவிப்பாகும்.

அரசியல் களத்தில் மோடி ஒரு சிறந்த நடிகர் என்பதை பாஜக ஆதரவு மாநிலங்களில் வாக்காளர்களே தெளிவாக உணர்ந்துள்ளனர். நரேந்திர மோடியை வீழ்த்தும் வலுவான தலைவர் ராகுல் என்பதே எதார்த்தமான உண்மை என்றும் எனவே தான் அவரை முன்மொழிந்ததில் என்ன தவறு என்று மு.க. ஸ்டாலின் மீண்டும் எடுத்துரைத்துள்ளார். பாஜகவை வீழ்த்துவதற்கு திமுக தலைவர்மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த ராகுல் காந்தியே வலுவான தலைவர் என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் நாட்டு மக்களுக்கு உரக்க எடுத்துரைக்கின்றன. இனியாவது மு.க. ஸ்டாலினின் முன்மொழிவை விமர்சிப்போர் திருந்தட்டும்.

– பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,

தலைவர், மனிதநேய மக்கள் கட்சி.