கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பாலைவனங்கள் போருக்குரியனவல்ல. போரும் பாலைவனத்துக்குரியதல்ல. ஆனால், பாலைவனத்துக்கும் போருக்குமுரியதாய் மத்திய கிழக்கு என உலக வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதி தொடர்ந்தும் திகழ்ந்து வருகிறது. இப்பாலைவனங்கள் தங்களுக்குள் உட்பொதிந்திந்து வைத்திருந்த இயற்கை வளங்கள், சோலைவனங்களாக மாற்றும் வல்லமையுடையவை. இன்று இவ்வளங்களே பாலைவனத்தை சோகவனமாகவும் இரத்தக் களரியாகவும் மாற்றியுள்ளன. உலகளாவிய ஆதிக்கத்துக்கான போட்டியின் மூலோபாய கேந்திரமாக இதன் அமைவிடம் போர் எனும் அவல நாடகத்தை முடிவற்ற தொடர்கதையாக்கியுள்ளது.

கடந்த வாரம், மத்திய கிழக்கில் உள்ள சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், எகிப்து, ஜெமன், லிபியா ஆகிய நாடுகள் கட்டார் நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டமையானது மத்திய கிழக்கில் நெருக்கடிக்கு வழிகோலியது.

கட்டார் ‘பயங்கரவாதிகளுக்கு உதவுகிறது’ என்று குற்றம்சாட்டி இந்நடவடிக்கையை சவூதி அரேபியா தலைமையிலான நாடுகள் எடுத்ததோடு, கட்டாருடன் எல்லைகளைக் கொண்ட நாடுகள் எல்லைகளை முழுமையாக மூடியதோடு, கட்டாரின் விமானங்கள் தங்களது வான்பரப்பைப் பயன்படுத்துவதையும் தடைசெய்தன. கட்டாரைத் தனிமைப்படுத்தும் நிகழ்வாக இது பார்க்கப்பட்டது. இன்று பத்து நாள்களாகிய பின்னரும் தீர்வேதும் எட்டப்படாத நிலையில் இந்நெருக்கடி தொடர்கிறது.

கட்டார் இளவரசர் இராணுவப் பட்டமளிப்பு விழாவில் சொன்ன கருத்தொன்றே இந்நெருக்கடிக்கான உடனடிக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அவர் ‘முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆகியவற்றுடன் உறவைப் பேண வேண்டும்’ என்று பேசியதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வழியில் கட்டார் ‘பயங்கரவாதத்துக்கு’ ஆதரவு தெரிவிப்பதாகவும் இதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக ஊடகங்கள் இதை நியாயப்படுத்துகின்றன. ஆனால், இதற்கான காரணங்கள் வேறானவை. அதை அறிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல.

தடை விதிக்கப்பட்ட சில நாட்களில் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமிடத்து கட்டாருடனான உறவைத் தொடர முடியும் என்று சொல்லப்பட்டது. அவ்வகையில் கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்த சவூதி அரேபியா, கட்டாரை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு 10 நிபந்தனைகளை விதித்தது. அவை இந்நெருக்கடியின் ஆழ அகலங்களை ஓரளவு விளக்கப் போதுமானவை:

1. ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
2. ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களை கட்டாரிலிருந்து வெளியேற்றவும்.
3. ஹமாஸின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மூடுவதோடு ஹமாஸ் உடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்.
4. முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் அனைவரையும் கட்டாரிலிருந்து வெளியேற்றவும்.
5. வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலுக்கு (GCC) எதிரானவர்களை வெளியேற்றுதல்.
6. பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை உடனே நிறுத்த வேண்டும்.
7. எகிப்திய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.
8. அல்-ஜசீரா தொலைக்காட்சியை முழுமையாக நிறுத்தல்.
9. அல்-ஜசீராவின் செயற்பாடுகள் தொடர்பில் வளைகுடா நாடுகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
10. வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படமாட்டேன் என உறுதிமொழி அளிக்க வேண்டும்.

கட்டாருடன் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு மோதல் நிகழ்வது இது முதன்முறையல்ல. 2014 ஆம் ஆண்டு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு கட்டார் ஆதரவு அளிப்பதாகக் குற்றம்சாட்டி, இந்நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தன. சிலகாலத்தின் பின்னர் உறவுகள் சுமூகமடைந்தன.

கட்டார், மத்திய கிழக்கில் வகித்து வரும் பாத்திரம் இந்த நெருக்கடிக்கான பிரதான காரணமாயுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் மத்திய கிழக்கின் ‘மென்மையான அதிகாரத்தை’ பிரயோகிக்கக்கூடிய நாடாக கட்டார் வளர்ந்துள்ளது.

குறிப்பாக, 2001 இல் அமெரிக்கா தலைமையில் தொடங்கிய ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின்’ பகுதியாகப் பரப்பப்பட்ட ‘நாகரிகங்களுக்கிடையிலான மோதல்’ என்ற கோட்பாட்டுருவாக்கம் முஸ்லிம்களை பிரதான எதிரிகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் சித்திரித்தது.

இதில் மேற்குலக ஊடகங்களின் வகிபாகம் முக்கிய இடம் பிடித்தது. மக்களின் பொதுப்புத்தி மனோநிலையைக் கட்டமைப்பதில் இவை முக்கிய பங்காற்றின. இதனாலேயே இது CNN Effect என அறியப்பட்டது.

இந்நிலையில் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் இன்னொரு பக்கத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகமாக கட்டாரின் அரச ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட அல்-ஜசீரா திகழ்ந்தது. இது பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் கோர முகத்தை அம்பலப்படுத்தியதன் ஊடு பிரபல்யமடைந்தது.

அதேபோல, கட்டாரின் மேம்படுத்தப்பட்ட விமானச் சேவைகளும் விஸ்தரிக்கப்பட்ட கட்டாரின் ‘டமாம்’ விமானநிலையமும் கட்டாரின் தலைநகரான டோகாவை முக்கியமான மத்திய நிலையம் ஆக்கியது. இன்னொரு வகையில் சொல்வதானால் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முக்கிய நகராகிய டுபாய் வகித்த தன்னிகரில்லா நிலையை டோகா பெற்றது என்றால் மிகையாகாது.

அல்-ஜசீரா மூலம் அரசியல் ரீதியாக நம்பகத்தன்மையுடைய நாடாகக் கட்டார் மாறியது. சவூதி அரேபியாவின் கைப்பொம்மையாகவன்றி சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட நாடாக கட்டாரின் நிலைமாற்றம் மத்திய கிழக்கின் போராட்ட இயக்கங்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வாய்ப்பாகியது.

இதனால் பாலஸ்தீனத்தின் ஹமாஸ், எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போன்றன கட்டாருடன் நல்லுறவைப் பேணத் தொடங்கின. இது மத்திய கிழக்கு அலுவல்களில் மத்தியஸ்தம் வகிக்கும் வாய்ப்பை கட்டாருக்கு வழங்கியது.

இதனால் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வலுவான ஆதரவாளராகவும் நிதி வழங்குநராகவும் கட்டார் திகழ்கிறது. அரபு வசந்தத்தைத் தொடர்ந்து எகிப்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த முஹமட் முர்சி, கட்டாருடனான உறவுகளை அதிகமாக்கினார். சவூதி அரேபியாவை விட, கட்டாருடனான நெருக்கமும் கொள்கை ரீதியான உடன்பாடுகளும் சவூதிக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

இதனால் 2013 ஜூலையில் முர்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்த அல்-சிசியின் ஆட்சி, சவூதிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. இருந்தபோதும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கான ஆதரவைக் கட்டார் தொடர்கிறது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை வளைகுடாவில் உள்ள முடியாட்சிகள் வெறுக்கின்றன. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ‘அரசியல் இஸ்லாம்’ என்ற கொள்கையை முன்மொழிகின்றது.

அதனூடு மக்களின் அரசியல் பங்களிப்பைக் கோருகிறது. இவ்வாறான ஒரு கொள்கையானது பரம்பரை முடியாட்சிகளைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளுக்கு ஆபத்தானவை. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கொள்கைகள் இந்நாடுகளில் செல்வாக்குச் செலுத்தி, மக்களின் எழுச்சிக்கு வழிகோலுமாயின், அது முடியாட்சிகளின் முடிவுக்கான முதலாவது படியாகும்.

இதை வளைகுடா முடியாட்சிகள் விரும்பவில்லை. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வளர்ச்சி, தங்களைப் பாதிக்கும் என்பதால் அவ்வமைப்பை அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும் என அவை விரும்புகின்றன.

கட்டாருடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொண்ட வளைகுடா முடியாட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் உண்டு. பஹ்ரேனுக்கும் கட்டாருக்கும் இடையே 19 ஆம் நூற்றாண்டு தொட்டு, முடிவுக்கு வராத எல்லைத் தகராறு உண்டு.

கட்டாரின் மேற்குக் கரையோரத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹவார் தீவுப்பகுதிகளின் மீதான உரிமை கோரல் இன்றுவரை தொடர்கிறது. இதன் ஒருபகுதியாக 1986 இல் இத்தீவில் கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்த பஹ்ரேனியர்களை, இராணுவப் படைகளை அனுப்பி சிறைப்பிடித்தது கட்டார் அரசு.

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டாரைத் தனது நேரடிப் போட்டியாளராகக் கருதுகிறது. டுபாய்க்குப் போட்டியாகச் சர்வதேசத் தரமுடைய நகராக கட்டாரின் தலைநகர் டோகாவின் வருகையும் சர்வதேச நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை டுபாயிலிருந்து டோகாவை நோக்கி இடம் மாற்றியமை, 2022 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை கட்டார் நடாத்துகின்றமை என்பவை ஐக்கிய அரபு இராச்சியம் விரும்பாத விடயங்கள்.

சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கின் தனிக்காட்டு ராஜா; வகாபிஸத்தை உலகுக்கு எடுத்துச் செல்லும் தேவதூதன்; பெரியண்ணன் என எல்லாமாய் இருந்த நிலை, மெதுமெதுவாய் மாற்றமடைவதையும் அதன் பிரதான காரணியாகக் கட்டாரின் எழுச்சியையும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

இவையனைத்தும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சவூதி அரேபிய விஜயத்தைத் தொடர்ந்தே நடைபெறுகின்றன. வளைகுடா நாடுகளின் முடிவை அவர் வரவேற்றுள்ளார். ஆனால் கவனிக்க வேண்டியது யாதெனில், மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப்படைத் தளமான அல் யுடெய்ட், கட்டாரிலேயே அமைந்துள்ளது.

அதேபோல, அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) கட்டாரிலேயே அமைந்துள்ளது என்பதையும் நோக்க வேண்டும். இவை, பிரச்சினையின் ஒருபக்கக் கதைகள். இங்கு நினைவுறுத்த வேண்டியது யாதெனில், கட்டார் ஒன்றும் யோக்கியனல்ல.

இன்று சிரியாவில் நடைபெறும் யுத்தத்துக்குப் பிரதான நிதியாளர்களில் கட்டாரும் ஒன்று. ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இதை, ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சல்களை வெளியிட்டு விக்கிலீக்ஸ் நிரூபித்திருந்தது.

அமெரிக்கத் தேர்தல்களின் போது ஹிலாரியும் அவருடைய தேர்தல் பிரசாரக் குழு தலைவரான ஜான் பொடெஸ்டோவும் பரிமாறிக் கொண்ட மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அவ்வாறு வெளிடப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில், சவூதியும் கட்டாரும் ஐ.எஸ்-க்கு நிதி மற்றும் பொருள் உதவிகள் செய்ததை ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹிலாரி “நாம் நம்முடைய தலைமைத்துவத்தையும் பழைய பாரம்பரிய வகைப்பட்ட இராஜதந்திரங்களையும் பயன்படுத்தி, சவூதி மற்றும் கட்டார் நாடுகளுக்கு மேலதிக அழுத்தங்களைத் தரவேண்டும்.

ஏனென்றால் இவர்கள் ஐ.எஸ் மற்றும் சுன்னி இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஏராளமான பொருளுதவிகளையும் ஆயுத உதவிகளையும் இரகசியமாகச் செய்து கொண்டு வருகின்றனர்” என்று பொடெஸ்டோவிடம் குறிப்பிட்ட மின்னஞ்சல், ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு கட்டார் மற்றும் சவூதியின் நேரடித் தொடர்பை வெட்ட வெளிச்சமாக்கியது. இன்று, சிரியாவில் போர் புரியும் சிரிய அரசுக்கு எதிரான போராளிகளுக்கு முக்கிய நிதிமூலம் கட்டார்.

கட்டாரின் வளர்ச்சிக்கும் இன்றைய நெருக்கடிக்கும் இன்னொரு மூலகாரணம் ஒன்றுண்டு. அது அதிகம் பேசப்படாதது. உலகின் பிரதானமான இயற்கை எரிவாயு என அறியப்படும் இயற்கைத் திரவவாயு (LNG) ஏற்றுமதியாளர்களில் கட்டார் முதன்மையானது.

இவ் எரிவாயுவின் விலை எண்ணெய் விலைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே, எண்ணெய் விலையின் சரிவு இதைப் பாதிக்கவில்லை. எனவே, ஏனைய வளைகுடா முடியாட்சிகள் எண்ணெய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட போதும் கட்டார் பாதிக்கப்படவில்லை.

கட்டார் கொண்டுள்ள இயற்கை எரிவாயுவே கட்டார், ஈரான் உறவின் மையமாகும். இதனால் இன்று, மத்திய கிழக்கில் ஆழமடைந்துள்ள ஈரான்-சவூதி அரேபியா முறுகலின் இன்னொரு வடிவமாகவும் இதைக் கருத முடியும். ஈரானுடன் கட்டார் நல்ல உறவைக் கொண்டுள்ளது.

கட்டாரின் வடபகுதி இயற்கை எரிவாயு வயல்கள் ஈரானுடன் பங்குபோடப்படுகின்றன. எனவே, ஈரானுடன் நல்லுறவைப் பேணினால் மட்டுமே இங்கு அதை எடுப்பது சாத்தியமாகும். எனவே, கட்டார், சவூதி அரேபியாவின் பிரதான எதிரியான ஈரானுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. இதைச் சவூதியால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இதனாலேயே ஈரானுடனான உறவைத் துண்டித்தல் முதலாவது நிபந்தனையாகவுள்ளது.
இயற்கை எரிவாயு விநியோகத்துக்கான போட்டியின் ஒருபகுதியாகவே கட்டாரின், சிரியாவில் யுத்தத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நோக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு விநியோகஸ்தரான ரஷ்யாவின் ‘காஸ்பிரோம்’ (Gazprom) எண்ணெய்க் குழாய் பாதைக்கு சவால்விடும் நோக்கில் கட்டார், ஜோர்தான், சிரியா, துருக்கி ஊடாக ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் பாதையை உருவாக்க விரும்பியது.

சிரியாவில் உள்ள அல்-அசாத் அரசாங்கம் அதை அனுமதிக்காது. குறிப்பாக ரஷ்யாவுடனான சிரியாவின் நெருக்கம், அதை சாத்தியமாக்காது. எனவே, சிரியாவில் ஆட்சி மாற்றத்தைச் சாத்தியமாக்குவதன் மூலம், தனது தேவையை நிறைவேற்றும் பொருட்டு, சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு கட்டார் ஆதரவளித்தது.

இப்போது அவ்வாறான ஒருபாதையை, ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்குவது சாத்தியமில்லை என்பதை கட்டார் உணர்ந்துள்ளது. இதேவேளை, தனது எரிவாயுவை விநியோகிப்பதற்கும் வாங்குவதற்குமான புதிய பங்காளிகளைத் தேடுகிறது. அதன் அடிப்படையில், கட்டார் அண்மையில் மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் அமெரிக்க சார்பு வளைகுடா முடியாட்சிகளின் விருப்பங்களுக்கு மாறானவை.

ரஷ்யாவின் அரச எண்ணெய்க் கம்பெனியான லொஸ்நெவ்டில், கட்டாரின் இறையாண்மைச் செல்வ நிதியம் (Sovereign Wealth Fund) 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது. சீன நாணயமான யுவானில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் மத்திய கிழக்கின் முதலாவது நிலையத்தை கட்டார் திறந்துள்ளது. இது எண்ணெய் மைய அமெரிக்க டொலருக்கு (petrodollar) சவால் விடுக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு உதவும் பயங்கரவாதியே, பயங்கரவாதிகளுக்கு உதவாதே என இன்னொரு பயங்கரவாதிக்குச் சொல்வதானது திருடனே திருடாதே என இன்னொரு திருடனுக்கு அறிவுரை வழங்குவது போன்றது.

இந்நெருக்கடியில் தொடர்புடைய வளைகுடா முடியாட்சிகள், கட்டார் உட்பட யாருமே யோக்கியர்கள் அல்ல. அயோக்கியர்கள் தங்களுக்குள் அடிபடுகிறார்கள், யார் பெரிய அயோக்கியன் என்பதற்காக.

இதை விளங்குவது அனைத்திலிருந்தும் பிரதானமானது.