கனடிய  அரசியல் கட்சிகளை  நாறடிக்கும் தமிழர்கள்

தமிழர்களில் சிலர் சென்ற இடங்களில் எல்லாம் தம் கைவரிசையை காட்ட தவறுவதில்லை. அவர்களை  சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துவிட்டு கறிவேப்பிலை போல் தூக்கி எறியவும் தயங்கிய தில்லை. குறிப்பாக கட்சி தலைமைத்துவ போட்டிகளின் போதும் கட்சி நியமன தேர்தல்களின் போதும் கட்டுக்கட்டாக உறுப்பினர்களை சேர்ப்பதில் தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது கனடிய மைய அரசியல் வாதிகளுக்கு  தெரிந்ததே.

சமீபத்தில் மார்க்கம் தொர்ன்கில் பகுதியில் நடந்த ஒரு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முணைந்த தாராளவாத கட்சியைச்  சேர்ந்த   ஒரு தமிழ் பெண்,  தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மளமள வென்று 2000 பேர்கள் வரை உறுப்பினராக சேர்த்துக் கொண்டிருக்கையில்,  கட்சி  புதிய அங்கத்தவர் சேரும் இறுதி திகதியாக முன்னைய திகதியொன்றை குறிப்பிட்டு அறிவித்துவிட்டது. அக்கட்சிக்கு தற்போது அங்கத்துவப்பனம் சுழியம்  என்பதால் கட்சி இணையத்தில் கண்டபடி  பெயர்களை பதிந்து அங்கத்தவர் எண்ணிக்கையை கூட்டமுடியும் என்பது முக்கிய விடயம். அவர் கட்சியின் அந்த முடிவை சாடி, கட்சி ஜனநாயக படுகொலை செய்து விட்டது என்றவாறு  யாரோ எழுதி கொடுத்தது போல் ஒரு அறிக்கையை விட  ஏனைய கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அவல் கிடைத்து,  கட்சித் தலைவரும் பிரதமருமான ஜஸ்ரின் டுரூடோ நேரில் வந்து இடைத் தேர்தல் பிரசாரத்தில்  பங்கு பற்ற வேண்டியதாயிற்று. அங்கு பழமைவாத கட்சியின் சார்பில் ஒரு தமிழர் உடனடியாக உறுப்பினர்களை  சேர்த்து நியமனத் தேர்தலில் வெற்றி  பெற்று, தமிழருக்கு இழைக்கப்பட்ட ‘அநீதியை; களையப்போவதாகவும்  தொகுதியில் வசிப்பவருக்கே தொகுதி ஏன்றும் பிரசாரம்  செய்து  தோற்றுப்போனார். அவரே முன்னர் வேறு ஒரு தொகுதியில் போட்டியிட்டவர்தான். அத்துடன் பழமைவாத  கட்சியும் சமீபத்தில் நடந்த பிறிதொரு இடைத் தேர்தலில் இரு தமிழர்களை புறந்தள்ளி ஒரு சீன இனத்தவருக்கு வேட்பு மனு கொடுத்து வெற்றிக்கனியை சுவைத்த கட்சிதான்.

அதேபோல்  இப்போது நடக்கும் மத்திய பழமைவாத கட்சியின் தலைமைத்துவ போட்டிக்கு போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாக இரண்டு கணணிகளிலிருந்து 1351 புது தமிழ் அங்கத்தவரை சேர்த்து அங்கத்துவ பணமாக $20,200 கொடுக்கப்பட்டது வெளிச்சமாகி  இன்று அவர்கள்  ‘சட்டத்துக்கு புறம்பான; அங்கத்தவர்கள்’ என்று பெயரிடப்பட்டு, விடயம் மத்திய தேர்தல் அலுவலரின் பார்வைக்கு சென்று இருக்கின்றது. பாவம் அந்த தமிழர்களுக்கே தமது பெயர்கள் இப்படி சேர்க்கப்பட்டிருப்பது தெரியுமா என்பது சந்தேகமே. தற்போது . தமிழர்கள் தேர்தல்களில் செய்யும் தில்லுமுல்லுகளை பற்றி ஏனைய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கிழித்தபடி உள்ளனர்.  இப்படியாக உறுப்பினர்களை சேர்த்த  ஒரு தமிழரை பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டிய அக்கட்சியின் நியாயமான  தமிழ் அரசியல்வாதி ஒருவர் அந்த நபர் சென்ற பொதுத் தேர்தலில் தனக்கு எதிராக தாராளவாத கட்சி  வேட்பாளரான முன்னாள் போலீஸ் அதிபருக்கு  ஆதரவளித்து வேலை செய்தவர் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒண்டாரியோ மாநில தேர்தலில் பல தமிழர்கள் ‘உடன் உறுப்பினர்களை’ சேர்த்து நியமனம் பெற்று நியமனத் தேர்தலில் வெற்றி பெற்றுக்  கொண்டிருக்கின்றார்கள். கட்சித் தலைவர் தலைமை பதவிக்கு வருவதற்கு இத்தகைய தம்ளர் வாக்குக்கள் பயன் பட்டதால் அவர் மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத பரிதாப நிலையில் உள்ளார்.

சரி புதிய ஜனநாயக கட்சியின் நிலை  மட்டும் நன்றாக இருக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. . அதிலிருந்து பல தமிழர்கள் தாராளவாத கட்சிக்கும் பழமைவாத கட்சிக்கும் தாவிக் கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி மாறி போட்டியிட்டு மண் கவ்வியுள்ளார். அங்கத்தவரை சேர்த்து கட்சித் தலைமைக்கே சவால் விட்டவர்கள் எல்லாம், கட்சியின்  கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சங்கங்களின் ஆள் பலம் பண பலம் பெற்று வென்றவர்களெல்லாம் இன்று பதவிக்காக, அடுத்த தேர்தலை குறிவைத்து  கன்சர்வடிவ்  மேயருக்கு பின்னால் போய்க்கொண்டு இருக்கின்றனர். டக் போர்ட் போட்டியிடப் போவதில்லை என்று அறிவிக்கும் வரை நியமனபாத்திரம் தாக்கல் செய்யாதவர் இப்போது டக்குடன் போட்டியிட்ட டோரியுடன் மக்கள் வரிப்பணத்தில் யாழ்ப்பாணத்துக்கு போய்  இரட்டைநகர்  ஒப்பந்தமும் இல்லாது சகோதர ஒப்பந்தமும் இல்லாது எதோ ஒரு ஒப்பந்தம் என்று  ஒன்றைக்  கொண்டுவந்துள்ளனர். அதன் பயனாக என்ன கிடைத்தது என்று கேட்டால் டொரோண்டோ பல்கலைக்கழகம்  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கிலிருந்து 50 மாணவர்களை எடுக்குமாம். அதற்கு பல்கலைக்கழகங்கள் இடையிலான உடன்பாடு போதுமானதுதானே.  பலவருடங்களாக வாட்டர்லூ, மக்கில், டல்ஹவுசி போன்ற பல்கலைக்கழகங்கள் இதை செய்து கொண்டு தானே இருக்கின்றன.
புதுமைக்கு வண்ணம் கரைகட்டி வெளுப்பான்  எண்றமாதிரி,  புதிய கவுன்சிலர்கள் வீட்டு விலை அதிகரிப்பு, வீட்டுவரி அதிகரிப்பு, பெட்ரோல்  வரி, வீதியில் உள்ள கிடங்குகள் குப்பை கூளங்கள் என்ற  லோக்கல் விடயங்களை  விட்டுவிட்டு முள்ளிவாய்க்காலில் பந்தம் காட்டினால்  சகல பாவங்களும் தொலைந்துவிடும் சென்று நினைப்பதும் அதற்கு லைக்  போட்டு  கைதட்டும் சில அப்பாவிக்கள் இருப்பதும் எமது சாபக்கேடு தான். சரி கல்விச்சபையிலிருந்து கொண்டே அந்த தொழிலை சிரத்தையுடன் பார்த்து மாணாக்கருக்கு கல்வித் தரத்தை உயர்த்தும்  முயற்சியில் ஈடுபடாது, மாநில தேர்தல்,  கவுன்சிலர் தேர்தல் என்று 13 மாதத்தில் இரு தேர்தல்களை சந்திக்கும் ஒரு தமிழரை பார்த்து பிற இனத்தவர் என்ன நினைப்பார்கள் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா. அவரின் பெயரை கூகிளில் ஆங்கிலத்தில்  போட்டு தேடி பாருங்கள் தெரியும்.   இப்போது அந்த கல்விச்சபை வெற்றிடத்துக்கு தயவு செய்து ஒரு தமிழரை மட்டும் நியமிக்கவேண்டாம் என்று வேற்றினத்தவர் கூறும் நிலை வந்து ஒரு சீன இனத்தவர் அல்லது கறுப்பினத்தவர் தெரிவாகும் நிலை வந்துள்ளதற்கு யார் காரணம். கேட்டால் எல்லாம் ஒரு இராஜதந்திர நகர்வு,   தமிழருக்கான தொலை நோக்கு பார்வை என்று கூறுவார்கள்  கேட்டுக்கொண்டே போக வேண்டியது தான். உங்கள் வாக்குகளில் அரசியல் தரகர்கள்  உழைத்துக் கொண்டே போவார்கள்.

(இபா)