கருணாநிதியின் வசனங்கள்…….

“பாலைவன ரோஜாக்கள்” என்றொரு திரைப்படம் 1986 இல் வெளியாகியிருந்தது. மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் சாயலாக மணிவண்ணன் தமிழில் எடுத்த படம். அரசியல் எள்ளல் (political satire) நிறைந்த திரைப்படம். அரசியலில் உள்ள சகல கறுப்பு பக்கங்களையும் அம்பலப்படுத்துகின்ற துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளர் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். அதே காலப்பகுதியில் வெளியான ரஜினியின் “மாவீரன்” மற்றும் கமலின் “புன்னகை மன்னன்” படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பேராதரவை எல்லாம் எதிர்த்து நீச்சலடித்து “பாலைவன ரோஜாக்கள்” தனக்கென்று ஒரு முத்திரை பதித்தது மட்டுமல்லாமல் கதாநாயகன் சத்யராஜூக்கு அந்தப்படம் பெயர் சொல்லும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படத்தில் ஏற்பட்ட மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணிதான் பிற்காலத்தில் 94 இல் வெளியான – மிகப்பெரிய அரசியல் கலாட்டா திரைப்படமான – அமைதிப்படைக்கு பெரும் அடித்தளமாக அமைந்தது.

இந்த திரைத்துணுக்கை ஏன் இங்கு குறிப்பிடவேண்டியிருக்கிறது என்றால், பாலைவனரோஜாக்களின் இமாலய வெற்றிக்கு பெரும்பங்களிப்பாக அப்போது கொண்டாடப்பட்ட விடயம் கலைஞர் கருணாநிதி அந்தப்படத்துக்கு எழுதிய வசனமும் கதாபாத்திரங்களை தனது எழுத்துக்களின் வழியாக அவர் சிருஷ்டித்திருந்த விதமும் ஆகும். கருணாநிதியின் வசனங்கள் அந்த திரைப்படத்தில் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றிருந்தன.

இந்தப்பதிவுக்கு முத்தாய்ப்பாக இந்த திரைப்படத்தை இங்கு குறிப்பிடவேண்டியதன் முக்கிய காரணம், தான் உருவாக்கிய திரைக்கதையில் நாயகன் சத்தியராஜூக்கு கருணாநிதி கொடுத்திருந்த பெயர் “சபாரத்தினம்”

எண்பதுகளில் தமிழகத்தின் அரவணைப்பை நாடிய ஈழவிடுதலை இயக்கங்களை ஆளுக்காள் தத்தமது அரசியல் வாசனைகளுக்கு ஏற்ப வாஞ்சையுடன் கட்டித்தழுவிக்கொண்டபோது எம்.ஜி.ஆரை சீண்டுவதற்காகவே கருணாநிதி கைகொடுத்த இயக்கம் TELO என்பது எல்லோருமே அறிந்த வரலாறு. டெலோவைத்தத்தடுத்து அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தை செல்லப்பிள்ளையாக்கிய கருணாநிதி அதன் வழியாக ஈழவிடுதலை ஆதரவுத்தளம் ஒன்றை உருவாக்குவதற்கு தமிழகத்தில் நடத்திய மாபெரும் “டெஸோ” மாநாட்டில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கோரி தீர்மானம் நிறைவேற்றியது இன்னொரு வரலாறு.

அதற்குப்பிறகு இடம்பெற்ற சம்பவங்களையும் கருணாநிதி அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் வகித்த பங்களிப்பு குறித்தும் இன்று முகநூலில் ஏகப்பட்ட சண்டைகள், எண்ணிலடங்காத சச்சரவுகள் அவரது சாவைச்சுற்றி நடைபெறுகின்றன. கருணாநிதி மாத்திரம் நினைத்திருந்தால் ஈழத்தை எடுத்துக்கொடுத்திருக்கலாம் என்று ஈழத்தமிழர்களில் ஒரு தொகுதியினர் இந்த போராட்டத்துக்காக தம்மை ஈந்தளித்த மாவீரர்களையே கொச்சைப்படுத்துகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை –

முள்ளிவாய்க்கால் பேரழிவை கலைஞரை உரஞ்சிப்பார்ப்பதற்கான பாசித்தாள் போல பயன்படுத்திப்பார்ப்பது போல மிகப்பெரிய முட்டாள்தனம் வேறொன்றுமில்லை. வல்லரசுகள் முடிவு செய்து முடித்துவைத்த ஒரு போரில் கலைஞர் பதவி துறந்திருக்கவேண்டும் என்று இப்போதும்கூட கூறிக்கொண்டிருப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். அதுவும் ஈழத்தமிழர்கள் இன்னும் இன்னும் அதை வலியுறுத்துவது நாங்கள் இன்னமும் வரலாறை புரிந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாக அமையும். குடும்ப ஆட்சி, ஊழல் குற்றச்சாட்டு ஆகியவற்றை முன்வைத்து கலைஞர் பதவி விலகியிருக்கவேண்டும் என்று தமிழக மக்கள் கேட்பது வேறு, ஈழத்தமிழர்கள் கேட்பது வேறு.

இந்த இரண்டையும் போட்டு குழுப்பியடித்து கலைஞரை காலாதி காலமாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான விம்பமாக கட்டியமைத்தவர்கள் ஈழத்தமிழர்களை வைத்து தமிழகத்தில் பிழைப்புவாத அரசியல் நடத்துபவர்களே தவிர வேறுயாருமல்லர். அவர்கள் கொடுத்த கயிற்றை இன்றுவரை ஈழத்தமிழர்களின் ஒரு பகுதியினர் விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும் சோகம்.

இதற்கு சிறியதொரு உதாரணம் – பார்வதியம்மாள் விவகாரம். நோயுற்றிருந்த ஈழத்தவர்கள் எத்தனையோ பேரை காதோடு காது வைத்ததுபோல தமிழகத்துக்கு எடுத்து சிகிச்சையளிப்பதற்கு உதவிசெய்வதற்கு ஒத்துழைத்துக்கொண்டிருந்த கருணாநிதி அரசில், பார்வதி அம்மாள் போகின்றபோது வைகோ கும்பல் தகவலை எப்படியோ முன்கூட்டியே அறிந்துகொண்டு விமானநிலையத்தில் வந்து நின்று அடித்த குஸ்தியால்தான் சகலதும் சாம்பாரானது என்பதை எவராலும் மறுக்கமுடியுமா? சொல்லுங்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது பொதுமக்களையாவது காப்பாற்றுவதற்கு கருணாநிதி நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று கூறுகின்ற நாங்கள், மலேசியாவில் சென்று கே.பியுடன்பேசிய பின்னர் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு மேற்குலகம் பரிந்துரைந்த 108 பக்கங்கள் அடங்கிய திட்டத்தை ஒற்றை வரியில் “முழுதாக நிராகரிக்கிறோம்” – என்று பதிலளித்த விடுதலைப்புலிகளின் தலைமையை இதுபோல விரல் நீட்டுவதற்கு தயாராகியிருக்கிறோமா? சொல்லுங்கள்.

ஈழவிடுதலைப்போராட்டத்தை இன்று ஒரு புள்ளியிலிருந்து திரும்பி பார்க்கும்போது – அதில் உதவி செய்ய வந்தவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தவறிழைத்தார்கள் அல்லது தவறிழைத்தார்கள் என்கிறோம். அவ்வாறு தவறிழைத்த எங்களில் ஒருவராக கருணாநிதியும் வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவ்வளவுதான்.

சாவின் மூலம் வரலாறு எல்லோரையும் விடுதலை செய்யும் என்ற சாத்தியத்தை நம்புகின்றவர்கள் கருணாநிதியையும் வணங்கி விடைகொடுப்போம்.

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

(ப. தெய்வீகன்)