கலங்கிய குட்டை !.. வலையோடு கட்சிகள்!.. புலம் பெயர்ந்தோர் செயல்?..

எதிர்வரும் காலம் எம் மண்ணில் நடைபெறப் போகும் தேர்தல்களில் எம் செயல்ப்பாட்டின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அத்திவாரத்தை போடும் ஆடுகளமாக மாற்றும் பலம் எமக்கு உண்டு என்பதை விளக்குவதே எனது இந்த பதிவு. இங்கு நாம் என்ற வரையறைக்குள் அகிலம் எல்லாம் பரந்து வாழும் ஈழத் தமிழரை தான் அடக்குகிறேன்.

தாயகத்தை விட்டு வெகு தூரம் வந்து வாழ்ந்தாலும் எம் நினைவெல்லாம் எம் தாயகம் பற்றிய நினைவில் என்பதால் தான் அணிகள் பல இருந்தாலும் எமக்கு ஏற்புடைய அணியுடன் எம் தொடர்பை இன்றளவும் பேணி வருகிறோம். முக்கியமாக தேர்தல் காலங்களில் எம்மவர் வெற்றிக்காக நிதி மூலம் தேடி அவர்களுக்கு அனுப்புகிறோம்.

காரணம் எம் அணி வெல்வதன் மூலம் மட்டுமே எம் மக்களுக்கும் எமது மண்ணுக்கும் நன்மை கிடைக்கும் என்ற அவரவர் நம்பிக்கை. இங்கு தான் நான் எங்கள் செயலுக்கு மாற்றம் வேண்டுகிறேன். இதுவரை நாங்கள் அனுப்பிய நிதி மூலங்கள் மூலம் எம் மக்கள் அடைந்த பலன் என்ன என்று சிந்தியுங்கள் என்று உங்களிடம் கேட்கிறேன்.

இத்தனை காலத்தில் மக்கள் மட்டுமல்ல எம் மண் அடைந்த அபிவிருத்தி, அடைந்த பலன் என்ன என்ற கேள்வியையும் கூடவே எழுப்புகிறேன். விடுதலை புலிகளுக்கு  ஈழக் கனவில் கோடிக்கணக்கில் நீங்கள் அனுப்பிய பணம் பல வெற்றிகளை கண்டபோதும் பிரபாகரனின் தப்பான முடிவால் முல்ளிவாய்காலில் அது தோல்வியில் முடிந்தது.

அது கடந்து போன வரலாற்று தவறு. அதை மீண்டும் மீண்டும் கிளறாமல் நேரடியாக அதன் பின் நடந்தவைகளை ஆராய்வோம். பிரபாகரன் இருந்தவரை அவரை எதிர்த்தவர்கள் அரசின் அரவணைப்பிலும், அவரை ஆதரித்தவர்கள் பிரபாகரன் சொல்லுக்கு தலையாட்டும் நபர்களாகவும் மட்டுமே கூட்டமைப்பில் இருந்தனர்.

ஆனந்தசங்கரி மட்டும் ஏக பிரதிநிதி தத்துவம் ஏற்க முடியாது என்றார். அவரையும் சிங்களம் தான் பாது காத்தது. ஆனால் பிரபாகரன் ஆடுகளம் விட்டு நீங்கிய பின் தலையாட்டிகள் எல்லாம் தலைவர் ஆனார்கள். முடிவு பலரின் பிரிவு. கூட்டமைப்பா அல்லது கூத்தமைப்பா என்று அரச அரவணைப்பில் இருந்த தேவானந்தா

கெக்கட்டம் விட்டு சிரித்து கேலி செய்தார். அது உத்தம வில்லனான தேவானந்தாவின் வழமையான தன்னிலை மறந்த அவரின் நக்கல் நளின பேச்சு. அதை கணக்கில் எடுக்காது இவர்கள் செயல் என்ன விளைவை தந்தது என்பதே என் பதிவின் நோக்கம். பிரபாகரன் தலைமையில் கூடும் நிலைமை இவர்களுக்கு வந்தபோதே

இவர்களின் பலவீனம் பற்றி உலகம் அறிந்து கொண்டது. தேர்தல் வெற்றி மற்றும் தாம் இழந்த பதவியை மீளப்பெறல் என்பது மட்டுமே இவர்கள் நோக்கம். அதற்கு வடக்கு கிழக்கை அப்போது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரபாகரனை போற்றி அவர் கால் பணிய வேண்டிய நிலை வந்த  போது தம்மை மட்டும் அல்ல

தம்மை நம்பி பல தியாகம் செய்தவரையும் தமது பதவி சுயநலத்துக்கு பலியாக்கிவிட்டு பதவிக்கா பிரபாகரன் தாள் பணிந்தனர். இது ஒரு சுயநல கூட்டு என்பது தான் என் கணிப்பு. தம் போராட்ட அமைப்பு தலைவர்களான சிறி சபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா போன்றவரை கொன்றொளித்த பிரபாகரன் செயலை புறம் தள்ளி

செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் செய்த செயல் தமது பதவிக்கு அன்றி வேறு ஒன்றுக்கும் அல்ல என்பது என் வாதம். என் கருத்தை எதிர்ப்பவர் களம் காண வாருங்கள். மேலும் விளக்கமாக எழுதி கருத்து மோதலுக்கு நான் தயார். ஏனென்றால் அது மறுக்க முடியாத உண்மை.

இன்றும் அதே சுயநல சிந்தையில் தான் இவர்கள் தமக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை புது புது கூட்டணிகள் அமைப்பதன் மூலம் தீர்த்து விட முயல்கின்றனர். மக்களின் நலன், மண்ணின் அபிவிருத்தி பற்றிய சிந்தனை இருந்தால் பிரிவினை அதனை பாதிக்கும் என்ற எண்ணம் தான் முன்னிலைப்பட வேண்டும்.

மாறாகா சுயநல சிந்தனை பிரிவினைக்கு தான் வித்திடும். அந்த வித்துகள் தான் இன்று பிரிந்து செல்வதும் புதிய அணிகளை களத்தில் உருவாக்குவதும் பத்திரிகையாளர் மாநாடு நடத்தி புதுப் புது விளக்கங்கள் கொடுத்து மக்களை குழப்புவதுமாக செயல் படுகிறார்கள். இங்கு தான் புலம் பெயர் தமிழர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

புலம் பெயர் தேசத்து வரவுகள் ஒன்றும் மரத்தில் புடுங்கி எங்கள் மடியில் சேர்த்தது அல்ல. காலநிலை மாற்றங்களை கவனத்தில் கொள்ளாது பகல் இரவு பாராது ஒன்றுக்கு இரண்டு வேலைகள் செய்து தூக்கத்தை தொலைத்து தாய் மண்ணில் வாழ்ந்த வாழ்வை நினைத்து ஏக்கத்துடன் தான் தினம் தினம் விடிகிறது.

ஆனால் எங்கள் மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயன்ற பங்களிப்பை செய்யவேண்டும் என்ற நோக்கில் தேர்தல்கள் வரும் போதெல்லாம் வலிந்து நிதி சேகரித்து எம் விருப்பு அணிகளுக்கு நாம் அனுப்புகிறோம். அவர்களும் ஊர் மூலைகளில் எல்லாம் கூட்டம் போட்டு படத்தை முகநூலில் போடுவர்.

பார்த்து பரவசம் அடைந்த எமக்கு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அன்று தான் புரியும் இவர்களின் மக்கள் சேவை. தேர்தல் காலத்தில் மட்டும் கூலிக்கு என்று வேலை செய்யும் கூட்டம் ஒன்று இன்று மண்ணில் உருவாகி வருகிறது. தினப்படி உட்பட உணவு மற்றும் ஓடித்திரிய வாகனம் வழங்கப்படும். அது புலம் பெயர் தேசத்து நிதி.

கிடைத்த பெரு நிதியில் தமது சொந்த தேவைக்கு என எடுத்தது போக தெளித்தது தான் தேர்தல் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும். கால்கடுக்க நின்று வாக்களித்த மக்களுக்கு எதுவும் கிடைக்காது. ஐயா வென்றால் எங்கள் வீதியை, வாசிக சாலையை, நாளாந்த சந்தையை சீராக்கி தருவார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பர்.

அடுத்த தேர்தலும் வந்துவிடும் ஆனால் வீதி குன்றும் குழியுமாக தான் இருக்கும். வாசிக சாலையில் வௌவால் இரவு தொங்கும். சந்தை நாறும். மீண்டும் புதிய ஐயா செய்து தருவார் என இடுப்பை பிடித்தபடி வாக்குசாவடியை நோக்கி நடப்பர். பழைய அனுபவம் மீண்டும் நிதர்சனமாகும். வென்றவர்கள் பதவி சுகத்துடன் வசதியும் பெறுவர்.

இங்கு நடப்பது என்ன என்று நோக்கினால் பெரும்பாலான அமைப்புகளும் அதன்  வேட்பாளர்களும் தேர்தல் திருவிழாவில் மட்டும் கடை விரிப்பவர்கள். இவர்களின் நோக்கம் இலாபமீட்டல். வாக்குறுதிகளை அள்ளிவீசி வாக்குகளை பெறுவது மட்டுமே இவர்கள் செயல். அதற்கு கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இவர்களுக்கு தேவை.

அவர்களுக்கு கொடுக்க புலம்பெயர் தேசத்து நிதி தேவை. முன்பு நான் கூறியது போலவே பெருநிதியில் ஒரு பகுதி சுயதேவை நிதியாக மாற  மிகுதியாக தெளித்த நிதி தேர்தலில் வாக்காக மாறும். தோற்றாலும் இவர்களுக்கு கவலை இல்லை. காரணம் அவர்கள் தான் சுயலாபம் பெற்று விட்டனரே. வென்றால் பதவியுடன் இரட்டை லாபம்.

ஆக இங்கு மொத்தமாக தோற்றுப்போவது மக்கள் மட்டுமே. மீண்டும் மீண்டும் புதிய மொந்தைகள் களத்துக்கு வர ஏமாந்து போவது மக்களே. அந்த புதிய மொந்தைகள் களம் காண வரும் தைரியத்தை கொடுப்பது புலம் பெயர் தேசத்து நிதி மூலங்களே. வென்றாலும் தோற்றாலும் சேதாரம் இல்லை என்ற உத்தரவாதம் தருவதும் அதுவே.

எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரி போகிறார் என்பது போலவே எல்லோரும் இன்று தேர்தல் களத்தில். கடன் அட்டையிலும், மட்டையிலும் பணம் எடுத்து அனுப்பியபின் இந்த முறை தோற்றாலும் அடுத்த முறை என் சார்பு அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் மீண்டும் மீண்டும் அட்டையிலும் மட்டையிலும் பணம் எடுத்து அனுப்புபவர் பலர் உண்டு..

விக்கிரமாதித்தனின் வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரமேறும். வாக்களித்த மக்களும் நிதியளித்த புலம் பெயர் உறவுகளும் வெறுவாயை மேல்லுவர். அதனால் தான் இந்த நிலை தொடராதிருக்க, புதிய சமூக மாற்றம் ஏற்பட புலம் பெயர் தேசத்து உறவுகள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது என்கிறேன்.

உண்மையில் மக்களுக்கு சேவை செய்பவர்களை கட்சி, சின்னத்துக்கு அப்பால் வெல்லவைத்த வரலாறு எமக்கு தெரியும். சுயேட்சையாக கேட்டு மக்களின் பேராதரவுடன் வென்று வந்த காலம் ஒன்று முன்பு இருந்தது. காரணம் அவர்களின் சேவை. ஆனால் இன்று அவ்வாறு செய்பவர்களை காண்பது அரிதாகி வருகிறது.

காரணம் தமிழ் நாட்டு பாணி அரசியல் கலாச்சாரமான மதுவும் பணமும் முக்கியமானவர்களுக்கான கவனிப்புமாக மாறியதே. அதற்கு பயன்படும் பெரு நிதியான புலம் பெயர் தேசத்து நிதி நிறுத்தப்பட்டால் உண்மையான மக்கள் சேவகன் மட்டும் மக்கள் முன் துணிந்து செல்வான். மக்களும் எந்த மயக்கமும் இன்றி அவரை தெரிவு செய்வார்.

அதற்கான பரீட்சை களமாக நாம் எதிர்வரும் காலத்தில் தேர்தல் நிதி சேகரித்து அனுப்புவதை நிறுத்தி களத்தில் மோதும் அணிகள் தமது பலத்தை தங்கள் மக்கள் சேவை மூலம் நிரூபிக்கும் சந்தர்பத்தை வழங்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மக்களும் பயன் அடைவர் எம் மண்ணும் அபிவிருத்தி அடையும். தனிநபர்களின் சுத்து மாத்து அம்பலமாகும்.

மாறாக நிதி மூலங்கள் கிடைத்தால் உள்ளூர் ஆட்சி தேர்தலில் நாம் வென்றால் சமஸ்டி பெற்று தருவேன் என்று ஒருவரும், ஒரு நாடு இரு தேசம் என்பதே எம் முடிவு என்று ஒருவரும், இந்தியன் மொடல் தான் ஏற்றது என்று ஒருவரும் பேசி ஏதோ உள்ளூர் ஆட்சி தேர்தலில் வென்றவர்கள் ஐ நா வரை போகலாம் தீர்வை பெற்றுவிடலாம் என்பது போல் பிதற்றுவர்.

மாறாக நிதி இல்லை என்றால் ஒன்றில் தேர்தலில் களம் இறங்க மாட்டார் அல்லது கால் நடையாக சென்றாவது மக்கள் குறைகேட்டு ஏற்ற தீர்வை பெற்றுத்தர இயன்றதை செய்ய முன்வருவர். அதனால் மக்களும் பயன் அடைவர். அதற்கு பிரதி உபகாரமாக கட்சி சின்னத்துக்கு அப்பாலும் அவருக்கு வாக்களித்து மக்கள் அவரை தேர்ந்தெடுப்பர்.

அதனால் தான் வேண்டிக் கேட்கிறேன் இதுவரை நீங்கள் செய்ததை தொடராது அடுத்து வரும் தேர்தல்களில் “அவரவர் சொந்த நிதியில் மக்கள் பணியாற்ற வாருங்கள்” என்ற செய்தியை நீங்கள் சேகரித்து அனுப்பும் நிதியை முழுமையாக நிறுத்துவதன் மூலம் தெரியப்படுத்துங்கள். அப்போது பாருங்கள் குளத்தை நோக்கி எத்தனை பேர் வலையோடு வருகிறார்கள் என்று.

(ராம்)