கலைஞரை, தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு

1983க்கும் 1987க்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அப்போது வாய் நிறைய அவர் பேராசிரியர் என்று அழைக்கும் பெருமையும் பெற்றேன். தமிழகம் என்னும் ஏழு கோடி மக்களைக் கொண்ட மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவர் இலங்கையில் இருபத்தைந்து லட்சம் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கு முதலமைச்சரான என்னை சரியாசனம் தந்து கௌரவித்த வரலாற்றைப் பெற்றேன்.

நெருக்கடியான நிலைமை எமக்கு ஏற்பட்ட போது பேராசிரியரைக் கைவிட மாட்டேன் என்றவர் மாகாணசபையைக் கலைத்து விடு என்று தான் இட்ட கட்டளைக்கு அடிபணியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எம் அருமைத் தோழர்களை ஆபத்தில் கைவிட்டாரே என்ற வேதனை எனது நெஞ்சில் ஒரு மூலையில் உறைந்துபோய்க்கிடந்தாலும், அவரைத் தமிழ் உலகம் இழந்து விட்டதே என்பது எல்லாவற்றையும் மீறி நெஞ்சை அடைக்கிறது.

அவர் தமிழர்களின் மொழியை, கலைகளை இலக்கியத்தை ஊடகங்களை, அரசியலை, சமூகத்தை என தமிழுலகின் பல பாகங்களையும் ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆண்ட பேரரசன். அவரை தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு.

(அ. வரதராஜப்பெருமாள்)