காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…

இயற்கை சார்ந்த இடத்திற்கு குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்வது செம்மை மரபுப் பள்ளியின் கல்வி முறையில் ஓர் அங்கம். அதன்படி, மரபுப் பள்ளி குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கடந்த 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து இரண்டு பேருந்துகளில் கிளம்பினர். இந்தச் சுற்றுலாவிற்கு மரபுப் பள்ளியின் தலைவர் திரு.ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். அதற்கு முதல் நாள் இரவு சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களில் பெய்த கனமழை, மனதையும், சூழலையும் சில்லிட வைத்திருந்தது. குழந்தைகள், பெற்றோர், மரபுப் பள்ளி ஆசிரியர்கள், செம்மை குடும்பத்தினர் என சுமார் நூறு பேர் கொண்ட குழுவினர், முதலில் இறங்கிய இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம்.

1941ஆம் ஆண்டு கட்டப்பட்ட, தீரர் சத்தியமூர்த்தி பெயரிலான பூண்டி நீர்த்தேக்கத்தில் நீரியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வு மையமும் செயல்பட்டு வருகிறது. அதுகுறித்தும், இங்கு நீர் தேக்கப்படும் முறை, நீர் திறக்கப்படும் முறை, பாசனப் பகுதிகள் என பல தகவல்களையும், மரபுப் பள்ளி குழந்தைகள் நீர்த்தேக்கத்தின் முதுகில் நின்றபடி, தங்களது பெற்றோரிடமும், மரபுப் பள்ளி ஆசிரியர்களிடமும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

பிறகு, பெற்றோருடன் சேர்ந்து குழந்தைகளும் நீர்த்தேக்கத்தில் நீராடி மகிழ்ந்தனர். குளியல் சோப்பு பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு என்பதை மரபுப் பள்ளியின் வாழ்வியல் கல்வியின் மூலம் ஏற்கனவே கற்றுக் கொண்டிருந்த குழந்தைகள், பூண்டி நீர்த்தேக்கத்தின் அடியாழத்தில் கிடந்த சேற்றைப் பூசிக் குளித்து மகிழ்ந்தனர்.

சுமார் மூன்று மணி நேர குளியலுக்குப் பிறகும், நீர்த்தேக்கத்தைப் பிரிய மனமில்லாமல் கரையேறிய குழந்தைகள், மதிய உணவிற்குப் பிறகு அருகில் இருந்த தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பூண்டிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள், அந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. கற்கால கல் ஆயுதங்கள், ஆமைகளின் ஓடுகள், ஈமப் பேழைகள் உள்ளிட்ட கற்கால மனிதர்களின் வாழ்க்கைச் சான்றுகளை குழந்தைகள் கண்களாலும், பெற்றோர்கள் கைபேசியிலும் படமெடுத்துக் கொண்டனர்.

அதன் பிறகு மரபுப் பள்ளி பேருந்துகள், பூண்டியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதர்காட்டில் நின்றன.

அடர்ந்த காட்டின் உள்ளே கொஞ்ச தூரம் நடந்து சென்று குழந்தைகளுக்கு ஒரு சாகசப் பயணத்தை அறிமுகம் செய்வதே திட்டம். அதற்காக திரு. செந்தமிழன் தேர்ந்தெடுத்த உத்தி, மழைக்காலத்தில் கூழாங்கற்கள் உருண்டோடிய நீர்ப்பாதைகள்!

நீர்ப்பாதைகள் நெடுக கூழாங்கற்கள் விரவிக் கிடந்ததால், அனைவரும் நடக்க எளிதாக இருந்தது; அத்துடன் காட்டின் உள்ளே பாதையைத் தொலைத்து விடாத பாதுகாப்பும் இருந்தது. நீர்ப்பாதைகள் முடியும் இடத்தில் பரந்து விரிந்து கிடந்த திடலில் அனைவரும் அமர்ந்தார்கள்.

அவர்களிடையே காடுகளின் இயல்புகள் குறித்து விரிவாகப் பேசினார் திரு. செந்தமிழன். உயரமான மரங்கள் அதிகம் இல்லாத புதர்க் காடுகளில் ஏன் முள் செடிகள் அதிகம் முளைக்கின்றன? புதர்க் காடுகளில் வெளியிலிருந்து மேய்ச்சலுக்குக் கொண்டு வரப்படும் கால்நடைகளை காடுகள் எவ்வாறு அரவணைக்கின்றன? ஏற்கனவே உள்ளுக்குள் இருக்கும் உயிரினங்களை காடுகள் எவ்வாறு பாதுகாக்கின்றன? என்பன போன்ற காடுகளின் பல இயல்புகளை திரு. செந்தமிழன் விவரித்தார்.

அதன் பிறகு குழந்தைகளில் ஒரு பிரிவினர் மரபு சார்ந்த ஒப்பனையில் ஈடுபட்டார்கள். மற்ற குழந்தைகள், தாங்கள் கொண்டு வந்திருந்த விதைகளை காட்டில் விதைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

வனப்பகுதிகளுக்கு பெருங்குழுவோடு சுற்றுலா செல்லும்போது, அந்தக் காட்டை மாசுபடுத்திவிட்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் இருந்த போதிலும், அப்படி எந்தவொரு மாசுபடுத்தலிலும் மரபுப் பள்ளி குழந்தைகள் ஈடுபடவில்லை. மாறாக, அந்தக் காட்டில் தங்கள் வருகையின் நினைவாக நூற்றுக்கும் மேற்பட்ட விதைகளை மரபுப் பள்ளி குழந்தைகள் விதைத்துவிட்டு வந்தார்கள். அந்த விதைகள் இன்னொரு மழை நாளில் வேர் விடும்போது, அதனை விதைத்த குழந்தைகளின் மனதில் பூ பூக்கும்.

இப்படியாக, திருமழிசை எல்லையில் ஒரு தேநீருடன் மரபுப் பள்ளியின் முதல் சுற்றுலாப் பயணம் இனிதே நிறைவடைந்தது.

(திரு.கலாநிதி எழுதியது)