காணவில்லை

04.11.86 அன்று இரவு விஜிதரன் என்னும் மாணவர் விடுதியில் தங்கியிருந்தார். ஆயுதம் தாங்கிய சிலர் வந்து அவரை அழைத்துச் சென்றனர்.

அழைத்துச் சென்றவர்கள் புலிகள், புலிகளது முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட விஜிதரனை வரவேற்றவர் கிட்டு.

வரவேற்பு என்றால் அப்படியொரு வரவேற்பு. விஜிதரன் புரட்டி எடுக்கப்பட்டார்.

மறுநாள் காலையில் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு. விஜிதரனை கடத்தியது யார்,

புலிகள் அமைப்பிடமும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் அமைப்புக்களிடமும் சென்று பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் விசாரித்தனர்.

புலிகள் அமைப்பினரும் தமக்குத் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.

புலிகள்தான் விஜிதரனைக் கடத்திச் சென்றார்கள் என்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெரிந்திருந்தது.

நேரடியாக புலிகளை குற்றம் சாட்டினால் விஜிதரனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் பொதுப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

விஜிதரனை விடுதலை செய். விஜிதரன் எங்கே? இயக்கங்களே பதில் சொல்லுங்கள்? என்று யாழ்ப்பாணமெங்கும் சுவரொட்டிகள் போடப்பட்டன.

மாணவர் போராட்டம்

தமது கோரிக்கைகள் பலனற்றுப் போனதால் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

யாழ் பல்கலைக் கழக மாணவராண விமலேஸ்வரன்தான் மாணவர் போராட்டத்தில் முன்னணியில் நின்றார்.

விமலேஸ்வரன் புளொட் இயக்கத்தில் இருந்தவர். பின்னர் அதிலிருந்து ஒதுங்கியிருந்தவர்.

விமலேஸ்வரன் புளொட் இயக்கத் தூண்டுதல் காரணமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். தமக்கெதிராக செயற்படுகிறார் என்று புலிகள் குற்றம் சாட்டினார்கள்.

உண்மையில் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புத்தான்.

உண்ணாவிரதப் போராட்டத்தோடு நிற்காமல், பாதயாத்திரையையும் மேற்கொண்டனர் பல்கலைக்கழக மாணவர்கள்.

பாதயாத்திரை வந்த மாணவர்கள்மீது பொதுமக்கள் ஆத்திரம் கொண்டு தாக்குவது போல ஒரு சம்பவத்தை உருவாக்கினார்கள் புலிகள்.

பொதுமக்கள் என்ற போர்வையில் பாதயாத்திரையை குழப்ப முற்பட்டவர்கள் புலிகள் அமைப்பினரே என்பதை இனம் காண்பது கஷ்டமாக இருக்கவில்லை.

விஜிதரனை புலிகள்தான் கடத்தினார்கள் என்பதும் பொதுமக்கள் மத்தியிலும் தெரிய வரத் தொடங்கியது.

விஜிதரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவரது தந்தையார் அருணகிரிநாதனும், தாயாரும் தமது மகனை கடத்திய செய்தியறிந்து யாழ்ப்பாணம் வந்தனர்.

அவர்களை புலிகள் இயக்க முகாமுக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள்.

தாம் விஜிதரனை கடத்தவில்லை. ஆனால், இப்படியெல்லாம் போராட்டம் நடத்தினால் விஜிதரனை கடத்தியவர்கள் விடுதலை செய்யமாட்டார்கள்.

அவரை விடுவித்தால் தமது இயக்கப் பெயர் கெட்டுவிடும் என்று யோசிப்பார்கள். போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரன் ஒரு வேளை விடுதலையாகக்கூடும் என்று தாம் நினைப்பதாக புலிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

‘போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரனை விடுதலை செய்வோம்’ என்பதை புலிகள் மறைமுகமாகத் தெரிவிப்பதாக மாணவர்களில் ஒரு பகுதியினர் நினைத்தனர்.

அச்சுறுத்தல்கள்

அதே சமயம் விஜிதரனை விடுதலை செய்யுமாறு நடைபெற்ற போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல்கள் விடப்பட்டன.

கவிஞர் சேரன், விமலேஸ்வரன் போன்ற பலர் பின்னர் கவனிக்கப்படுவார்கள் என்று அவர்கள் காதுகளுக்கு எட்டக்கூடிய வகையில் சிலரிடம் சொல்லியிருந்தனர். புலிகள்.

விஜிதரனின் பெற்றோருக்கும், வேறு சிலருக்கும் விஜிதரன் வேறொரு நாட்டில் வைத்து விடுதலை செய்யப்படுவார் என்று மறைமுகமாக உணர்த்தினார் கிட்டு.

இத்தனையும் நடந்து கொண்டிருந்போது விஜிதரன் என்ன செய்து கொண்டிருந்தார்.

கடத்திச் செல்லப்பட்ட அன்றே, அன்று இரவே விஜிதரன் கொல்லப்பட்டுவிட்டார்.

அதனை அறியாமல விஜிதரனின் பெற்றோர் ஊர் திரும்பினார்கள்.

(Sivasubramaniam Ranjan)