கிரான் பதற்றம் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றது

(சாகரன்)

கிழக்கில் வாழும் இரு சிறுபான்மை இன மக்களிடையே வளரக்;கப்படவேண்டிய சகோரத்துவ உறவு 1970 களின் பிற்பகுதிகளில் இருந்து குறைந்து வருவது கவலையை அளிக்கும் செயற்பாடாக இருக்கின்றது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்ணியுடன் ஐக்கியமாக இணைந்து செயற்பட்ட நிலமையை சரிசமமாக பாவிக்க தெரியாத சூழலில் முஸ்லீம் மக்கள் தனியான கட்சியமைத்து செயற்பட்டதும் இதனைத் தொடர்ந்து உருவான ஈழவிடுதலைப் போராட்டத்தில் முஸ்லீம் மக்களும் இணைந்து போராடியதும் புலிகள் ஏகபோகமாக உருவெடுத்து வடக்கில் இருந்து முழுமையாக முஸ்லீம்களை சுத்திகரித்ததும் கிழக்கில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற கொலைகளும் இதன் மறு வளங்களாக இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஊர்காவல் படைகளில் முஸ்லீம் இளைஞர்கள் இணைந்து தமிழ் மக்களின் கிராமங்களில் நடைபெற்ற கொலைகளும் பல கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும் இருதரப்பிலும் சமான்ய மக்கள் இவ் அநியாயங்களை எப்போதும் ஆதரித்து இருக்கவில்லை.மாறாக மாமா மச்சான் ராத்தா அக்கா காக்கா அண்ணா அம்மா உம்மா என்று பழகிய அந்த குழல் புட்டிற்குள் மாவும் தேங்காப் பூவுமாக இனித்த உறவுகளே இன்றுவரை அதிகம். இதனையே அதிக மக்கள் விரும்புகின்றனர் இருதரப்பிலும் மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க தம்மை அர்பணிக்க பலர் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந் நிலையில் கிரான் சந்தையில் ஏற்பட்ட பதற்ற நிலமை எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. என் சகோதரங்களே நாம் தொடர்ந்தும் இணைந்து சகோதரத்துவத்தை வளர்த்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நாம் பிரிந்து நிற்றல் என்பது எம்மை மேலும் பலவீனமாக்கும் என்பதை பட்டு அறுந்த பின்பு உணர முன்பு பட்டு அறாமால் உணர்ந்து கொள்ளுங்கள் என்று விநயமாக கேட்டுக் கொள்கின்றேன்