கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யாரோ?

(அதிரன்)

கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார், போட்டியிடும் கட்சிகள் யாரை முதலமைச்சராக நியமிக்கும் அல்லது அறிவிக்கும் என்ற கேள்விகளுக்குப் பதில் காண்பதற்குரிய காலமாக, இதனைக் கொள்ள வேண்டும்; அதற்குத் துணிந்துமாக வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜூலை 29அம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி, அதே ஆண்டின் நவம்பர் 14இல் இலங்கை நாடாளுமன்றம், அரசமைப்பில் 13ஆவது திருத்தம், மாகாண சபைச் சட்டம் ஆகியவற்றை அறிவித்திருந்தது. அதன்படி 1988ஆம் ஆண்டு பெப்ரவரியில், 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாகாண சபைகளில், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன.

இதன் இணைப்பு நிரந்தரமாவதற்கு, கிழக்கு மாகாணத்தில் அதேயாண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. செப்டெம்பர் 2இல், வடக்கு – கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டது. இந்த இணைந்த மாகாண சபைக்கான முதலாவது தேர்தல், நவம்பர் 19இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, இத்தேர்தலில் வெற்றிபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி, இத்தேர்தலில் பங்கேற்கவில்லை என்பதுடன், அ. வரதராஜப் பெருமாள், வடக்கு – கிழக்கு மாகாண சபையின், முதலாவது முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.

1990ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், மாகாண சபைக் கூட்டத்தில் அதைக் கலைத்து, தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸ, மாகாண சபையைக் கலைத்து, மத்திய அரசின் கீழ் கொண்டு வந்தார்.

வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு இடம்பெறாத நிலையில், தற்காலிக இணைப்பு, ஒவ்வோர் ஆண்டும் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது. இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், 2006ஆம் ஆண்டில், மக்கள் விடுதலை முன்னணி, கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாண சபையை நிறுவ வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதனையடுத்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையைப் பிரித்து, அந்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிழக்கு மாகாண சபை, கொழும்பின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2008ஆம் ஆண்டு மே 10ஆம் திகதி, முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது.

கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், 2005ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தபோது, அவருடன் வந்திருந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், அதன் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலமாக அது இருந்ததால், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியாவின் உந்துதலுடனும், முதலமைச்சராகச் சந்திரகாந்தன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவ்வேளையில், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என்றிருந்த வேளையில்தான், இந்த அறிவிப்பு வந்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

இச்சபையின் முதலாவது ஆட்சிக்காலம், 2008ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அமைத்த ஆட்சி தான் இது. இக்காலத்தில், இன ஐக்கியம், இனங்களுக்கான பகிர்வுகள் மிகவும் சிறந்தமுறையில் இருந்து வந்தன. இக்காலத்தில், முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவத்தை, சந்திரகாந்தன் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு, தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. இதற்குக் காரணம், யுத்தம் நடைபெற்று வந்த காலத்தில், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் ஆகும். இன்றும் அந்த உணர்வுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தலில், நஜீப் அப்துல் மஜித், முதலலைமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவரை, ஆட்சிக்குரிய முதலமைச்சராக வைத்துக் கொண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், கிழக்கு மாகாண சபையை நடத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான், 2015ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவால், முன்கூட்டியே ஒருவிதமான தப்பான நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல், நாட்டையே புரட்டிப்போட்டது.

இந்தத் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டார். இந்தத் தெரிவைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமனம் பெற்றதையடுத்து, அமைச்சரைவையும் மாற்றம் செய்யப்பட்டு, அதே ஆண்டில் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்து, தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொண்டன. இதே காலத்தில், கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து, தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதில், முஸ்லிம் காங்கிரஸின் ஹாபிஸ் நஸீர் அஹமட், மூன்றாவது முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்றவைகளை நாம் பட்டியலிட முயன்றால், அது நீண்ட கதையாகிப் போய்விடும்.

தற்போதைய ஆட்சிக் காலத்தில் தான், இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் காலம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், இவ்வாண்டு நடத்தப்பட்டது. இத்தேர்தலில், மஹிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி, அதிகப்படியான சபைகளைக் கைப்பற்றிக் கொண்டது.

இந்தக் கைப்பற்றல், நாட்டில் பெரும் சர்ச்சையான கேள்விகளைத் தோற்றுவித்தது. அதன் பலனால், கடந்த வார இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பையும் உருவாக்கியிருக்கிறது.

இந்த நிலையில் தான், மாகாண சபைகளுக்கான தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது. இதில் ஒன்றாக, கிழக்கு மாகாண சபை இருக்கிறது. இந்தச் சபைக்கு, தமிழர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்ற வாதத்துடன், ஒரு தரப்பு முயன்று கொண்டிருக்கிறது. தேசிய அளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனுடன் இணைந்து கூட்டுக்கட்சிகளும் இணைந்து கொள்ளுமா என்பது, இன்னமும் முடிவாகவில்லை.

எது எப்படியிருந்தாலும் பெரும்பான்மையின ஆளுநர், ஜனாதிபதி, பிரதமர் வரிசைதான், இலங்கையில் இருக்கப்போகிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டோமேயானால், இந்த அரசியலில் வீராப்பைப் பற்றி யோசிப்பதற்கே தேவையில்லை என்பதுதான் பதில். கொடிபிடித்துக் கொண்டு விளையாட்டுப் போட்டியில் ஓடுதல் என்பதுபோன்று தான், அந்த அரசியல் இருக்கப்போகிறது.

கிழக்கின் முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்த வேளை, ஒரு சில விடயங்களில், மத்திய அரசாங்கத்துடன் முறுகல்கள் காணப்பட்டன. மாகாண சபை என்பது, மக்களுக்கானது; அதனை மக்கள் ஆளவேண்டும் என்பதும் உண்மையாக இருந்தாலும், அதனை ஒரு சில தனிப்பட்ட அரசியல்வாதிகளும் அரசாங்கமும் ஆள முற்படுவதனாலேயே, பிரச்சினைகளும் பாரப்பட்சமும் ஏற்படுகிறது என்று கூற முயல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஏனென்றால் இப்போது, ஆளுநர், அதிகூடிய அதிகாரங்ளைத் தனிப்பட்ட மனிதராக வைத்துக்கொண்டு சிபாரிசு செய்தல், மதிப்புரை செய்தல், செயலாளர்களை நியமித்தல், செயலாளர்களை இடமாற்றம்செய்தல், மீள்நியமனம் செய்தல், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுக்குரிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்து நியமித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார். அதிகூடிய அதிகாரங்களைத் தனிப்பட்ட ஒருவருக்கு வழங்கியது என்பது, அதிகாரங்களை பகிரும்படி கேட்கும் சிறுபான்மையினருக்குச் சவாலான விடயமாகும்.

கிழக்கு மாகாண சபையானது, திடமான, வழங்கப்பட்ட சகல விதமான அதிகாரங்களையும் பயன்படுத்தும் ஒரு சபையாக இருந்து செயற்படுவதே, எதிர்கால அதிகாரப் பரவலாக்கலுக்கும் சிறப்பாக அமையும்.

கிழக்கைப் பொறுத்தவரையில் அரசியல் அனுபவம் உள்ளவர்களைத் தேடும் நிலையே காணப்படுகிறது. தனிமனிதக் கொள்கைகளை இதற்குள் திணித்துக் கொண்டு, அரசியலை மேற்கொள்ள முனைவது முட்டாள்தனமானதே. அர்ப்பணிப்புள்ள சிந்தனையுடன் கருத்துருவாக்கங்களை மேற்கொள்ளும் மக்களுக்குக் கடிவாளமிட்டு, அரசியல் செய்யும் நிலையின் உருவாக்கத்தின் மூலமே, இந்த நிலைமை சாத்தியப்படும்.

அந்த வகையில், கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதற்கான பதில், மக்களிடமிருந்தே உருவாக வேண்டும்.

பல்வேறு இனங்களைக் கொண்ட கிழக்கில், கட்சிகளின் அல்லது தரப்புகளின் அரசியல் நடவடிக்கைகளானது, ஒவ்வோர் இனக்குழுக்களினதும் இழப்புகளை நோக்கியதாகவே இருக்கின்ற நிலையில், தமிழ் மக்களின் இழப்புகளைக் குறைப்பதும், அதனை ஈடு செய்வதும் எதிர்காலத்தில் சாத்தியமானதா என்பது, அதற்கடுத்த கேள்வியாக இருக்கிறது. மக்களின் வாய்களை அடைக்கும் அரசியலை நடத்தி, கரட் கிழங்கை முன்னால் தட்டி, கழுதை மேய்க்கும் கதையையே, இந்நிலைமை ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறது.

(இக்கட்டுரையில் வரும் வரதராஜப்பெருமாள் தமிழ் ஈழத்தை பிரிகடனப்படுத்தினார் என்பது தவறான புரிதல் – ஆர் )