“கேரள டயறீஸ்“

யாழ்ப்பாணத்தில் வெளியிப்படவுள்ள “கேரள டயறீஸ்“ புத்தகத்தைப்பற்றித் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். ஏறக்குறைய இது ஒரு வதந்தியே. மெய்யான அழைப்பிதழை பிழையாக உருமாற்றம் செய்து, தவறான விதத்தில் குழப்பமான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதற்குப் பின்னால் ஒரு சிறிய குழு செயற்படுகிறது. அந்தக் குழுவின் அரசியல் உள் நோக்கம் மிகக் கீழ்த்தரமானது. வதந்தி எப்போதும் தீமைகளையே விளைவிப்பதுண்டு. அது ஒரு தொற்றுநோய் என்பது சமூக வரலாற்று அனுபவம்.

கேரள டயறீஸ் என்ற புத்தகத்தில் கேரளத்துக்குச் சுற்றுப் பயணம் செய்யும் ஈழத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பெறுகின்ற அனுபவங்களும் அவருடைய மனதில் எழுகின்ற கேள்விகளுமே எழுதப்பட்டுள்ளன. படு சுவாரசியமான விசயங்களும் நாங்கள் கவனிக்க வேண்டிய உண்மைகளும் புத்தகம் நிறைய உள்ளன. கேரளத்துக்கும் ஈழத்துக்குமிடையிலான இன்னும் சொல்லப்போனால், கேரளாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவும் ஒற்றுமையும் தொடர்ச்சியும் வேரும் இந்தப் புத்தகத்தில் பேசப்படுகின்றன. வரலாற்றையும் வேரையும் அறிவதற்கு இன்னொரு சிறப்பான புத்தகம் கேரள டயறீஸ். நம் காலத்தின் மிகச் சிறந்த பயண நூல்களில் ஒன்று என்று துணிந்து சொல்ல முடியும். இல்லையென்றால், இதை வாசிக்கும்போது நீங்களே அறிவீர்கள்.

இப்படியிருக்கும்போது இந்தப் புத்தகத்துக்கும் வேறு ஏதோ ஒரு விசயத்துக்குமிடையில் முடிச்சுப்போடும் விதமாகச் சிலர் எழுதுவது நமது அறிவுசார் நடத்தைகளைக் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஒரு இனமும் சரி, ஒரு சமூகமும் சரி, ஒரு பிரதேசமும் சரி தன்னைச் சிறப்பாக அடையாளம் காட்டுவது அதனுடைய நடத்தைகளின் மூலமாகவே. தற்போது யாழ்ப்பாணத்தில் கொலைகளும் கொள்ளைகளும் வாள் வெட்டும் பாலியல் வன்முறைகளும் போதைவஸ்துப் பாவனையும் அதிகரித்துள்ளது என்று சமூக நலன் விரும்பிகள் அனைவரும் கவலைப்படுகின்றனர். இது யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சிக்கான அறிகுறியா என்று கேட்போரும் உண்டு. தமிழினத்தின் வீழ்ச்சிக்கான அடையாளமாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியவர்களும் உள்ளனர். இந்த வகையிலேயே ஒரு புத்தக வெளியீட்டைப்பற்றித் தவறான முறையில் வதந்திகளைப் பரப்பி, அதைக் குழப்ப முற்படும் – தடை செய்ய முற்படும் செயற்பாட்டையும் நாம் நோக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் ஒரு சமூகத்தின் மேன்மைக்கு ஒரு போதுமே உதவாது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பல ஆளுமைகளை உருவாக்கியது. கார்த்திகேசன் மாஸ்டர். சிவராமலிங்கம் மாஸ்ரர் என்று பல வழிகாட்டிகள் இருந்து மகிமை சேர்த்த காலமும் இருந்தது. இந்துக் கல்லூரியிலிருந்து ஏராளமான போராளிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் உருவாகினர். அருளினியனும் அவர்களில் ஒருவர். இதேவேளை இந்துக் கல்லூரியின் பெயரைச் சொல்லிக் கொண்டு சமூகத்துக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகின்ற சிலரும் உள்ளனர். இதுதான் கவலைக்குரியது.

கருத்துரிமை, கருத்துச் சுதந்திரத்தின்படி குறித்த புத்தகத்தைப்பற்றியும் அதை எழுதியவரைப்பற்றியும் விமர்சனங்களை யாரும் முன்வைக்கலாம். கேள்விகளை எழுப்பலாம். இப்பொழுதுள்ள ஊடக வசதியின்படி இணையத்தளங்களிலும் முகப்புத்தகத்திலும் பிற அச்சு ஊடகங்களிலும் தாராளமாக விமர்சித்து எழுதலாம். ஆனால், அந்த எழுத்தில் தர்க்கமும் கண்ணியமும் ஆழமும் இருப்பது அவசியம். அதுவே சமூக வளர்ச்சியின் அடையாளமாகும். தற்போது சிலருடைய முகப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும்போது நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்ற கேள்வியே எழுகிறது. மண்டையில் போட்டால்தான் சரி, கையைக் காலை அடிச்சு முறிக்க வேணும்” என்ற மாதிரிச் சிலர் எழுதி வைத்திருக்கிறார்கள். இது என்ன மாதிரியான மனப்பாங்கின் வெளிப்பாடு?

இப்படித்தான் 1970, 80 களில் டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்களின் கூட்டங்களைக் குழப்புவதற்காக கூழ் முட்டை அடித்தனர் சிலர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஒலிபெருக்கியின் வயர்களை அறுத்தனர். மின்சாரத்தைத் தடுத்தனர். இறுதியில் கண்டதென்ன?

மற்றவர்களை மறுத்தும் தடுத்தும் வந்தவர்கள் காலப்போக்கில் காணாமலே போனதே வரலாறு.

ஆகவே கருத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே அவசியமானது. உண்மையை எதிர்கொள்ள முடியாமலிருக்கிறது என்றால், நாம் பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்றே அர்த்தமாகும். அந்தப் பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால், நிச்சயமாக ஜனநாயத்தைப் பலப்படுத்த வேணும். ஜனநாயகத்தின் முதலாவது அடிப்படை விசயம் அனைவருக்குமான இடமும் மற்றவர்களை அங்கீகரித்தலுமாகும்.

அது ஒரு சமூகச் செயலும் பண்பாட்டு நடவடிக்கையும் அறிவியல் ஒழுக்கமுமாகும். அறிவார்ந்த சமூகங்கள் அதைத்தான் செய்வதுண்டு. அதுவே மேன்மையானது.

குறித்த புத்தகம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வெளியிப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே படித்த பழைய மாணவரான அருளினியன் என்ற பத்திரிகையாளரே புத்தகத்தை எழுதியிருக்கிறார். குறித்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வோரில் மூன்று நான்கு பேரைத் தவிர்ந்த ஏனையவர்கள் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்.

இப்படியிருக்கும்போது, பொய்களைச் சொல்லி சமூகத்தை ஏமாற்ற முயற்சிப்பது யாருக்குச் செய்யும் துரோகம்? இந்தமாதிரியானவர்கள் இந்தச் சமூகத்தை ஏமாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்தப் பொய்ப் பரப்புரையாளர்களுக்கு எதிராக நீதியாகச் செயற்படுவோர் தமது கண்டனங்களை முன்வைக்க வேண்டும். இது ஏதோ எங்களுக்கு அப்பாற்பட்ட பிரச்சினை, அல்லது யாரோ சம்மந்தப்பட்டது என்றால், நாளை உங்களுக்கான இடமும் இப்படித்தான் நெருக்கடிக்குள்ளாக்கப்படும்.

அதை நோக்கிய வளர்ச்சியே இது. இதை ஒரு முன்னெச்சரிக்கையாகவும் வழிகாட்டற் குறிப்பாகவும் இங்கே பதிவிடுகிறேன். இந்தபபோக்கின் கனபரிமாணத்தை எல்லோரும் விரைவில் உணரக்கூடியதாக இருக்கும்.

(Sivarasa Karunagaran)