க.அன்பழகன்: ஒரு யுகத்தின் இறுதி அத்தியாயம்!

(செல்வ புவியரசன்)

அரசியலின் சில விழுமியங்களைக் கடைசிவரையிலும் கட்டிக்காத்துவந்த ஒரு பெரும் வரலாற்றுக்குச் சாட்சியமாக இருந்தவர் க.அன்பழகன். ஒரு கட்சியின் நெடுநாள் பொதுச்செயலாளர் என்பதைத் தாண்டி, மக்கள் நல அரசின் முக்கியப் பொறுப்புகளான மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்ட அனுபவங்களின் திரட்சியாக இருந்தவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் என்பதைத் தாண்டி, ஜனநாயக அரசியலில் அமைச்சரவையிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் அவர் ஆற்றியிருக்கும் பணிகளையும் சேர்த்து நினைவுகூர்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்க முடியும்.