சந்திரன் அருகே கிடைத்துவிட்டாள் ‘சந்திராயன் – 1’

(ம.சுசித்ரா)

இந்தியாவின் முதல் நிலவு செயற்கைக்கோளான ‘சந்திராயன்-1’ஐ கண்டறிந்துவிட்டதாக நாஸா கடந்த வாரம் அறிவித்தது. எப்படித் தொலைந்தது நமது சந்திராயன் -1?

எங்கே போனது?

22 அக்டோபர் 2008-ல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சந்திராயன் -1. நிலவின் தரைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக சுமார் ரூ. 525 கோடி செலவில் இது ஏவப்பட்டது. வெற்றிகரமாக நிலவையும் அடைந்து பல புதிய தகவல்களையும் கண்டறிந்து இஸ்ரோவுக்கு அனுப்பிவந்தது. 3,400-க்கும் அதிகமான முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவந்தது. இரண்டாடுகள்வரை இதன் இயங்குதிறன் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டுக்குள் 2009 ஆகஸ்ட் 29 அன்று சந்திராயனின் தொடர்பு அறுந்துபோனது.

ஒரு குட்டி காரின் அளவிலான இந்த சந்திராயன் – 1 செயற்கைக்கோளைத் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்றது. ஆனால், இஸ்ரோவால் மீண்டும் அதனுடனான தகவல் தொடர்பை மீட்க முடியவில்லை. இதனால் தொலைந்துவிட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இருப்பினும் நிலவின் மேற்பரப்புக்கு மேலே 200 கி.மீ. உயரத்தில் சந்திராயன் – 1 வட்டமடித்துக்கொண்டிருப்பதாக நாசாவின் ஜெட் பிரொபல்ஷன் ஆய்வகம் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தது. ஆனால் இஸ்ரோவால் அதை கண்டறிய முடியாததால் அது தொலைந்துபோனதாக அறிவிக்கப்பட்டது.

நிலவின் பிரகாசத்தில்…

இந்நிலையில் மிகச் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களைப் பின்தொடர்வதில் கலிபோர்னியாவின் பாசடீனா நகரில் உள்ள நாஸாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜெ.பி.எல்.) தீவிரமாக ஈடுபட்டுவந்தது. தற்போது, சந்திராயன் -1 அமைதியாக சந்திரனைச் சுற்றி வலம்வருதாக சமீபத்தில் இந்த ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் அறிவித்துள்ளது. ராடார் மூலமாக இதைக் கண்டறிந்ததாக நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

“நிலவின் பிரகாசமான ஒளியினால் அதன் அருகே உள்ள சிறிய பொருட்களை வழக்கமான தொலைநோக்கியால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால் நாஸாவின் ஜெ.பி.எல். விஞ்ஞானிகள் இணைந்து ‘கோள்களுக்கு இடைப்பட்ட பகுதிகளைத் துருவிப்பார்க்கும் ராடார்’ பொருத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன்முதலாக உருவாக்கியுள்ளோம். பூமியிலிருந்து இயங்கும் இந்த அதிநவீன ராடாரின் மூலமாகத்தான் தொலைந்துபோன இஸ்ரோவின் சந்திராயன் – 1-ஐயும், நாஸாவின் லூனார் ரிகனைஸன்ஸ் ஆர்பிட்டரையும் (Lunar Reconnaissance Orbiter) மீண்டும் கண்டுபிடித்திருக்கிறோம்” என்றார் ஜெ.பி.எல். ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளரும் ராடார் விஞ்ஞானியுமான மரினா புரோஜோவிக்.

நிலவுடன் மோதியிருக்குமோ?

அதிலும் நாஸாவின் லூனார் ரிகனைஸன்ஸ் ஆர்பிட்டரைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்ததாகவும், சந்திராயன் -1- ஐ கண்டுபிடிப்பதோ மிகவும் சவாலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் மரினா. காரணம், கனச்சதுர வடிவிலிருக்கும் சந்திராயன் – 1 எல்லா பக்கங்களிலும் வெறும் 5 அடி மட்டுமே உள்ளது. மேலும் 2009-லேயே அதனுடனான தொடர்பு அறுந்துபோனது. பொதுவாக, நிலவின் வட்டப் பாதையில் தொலைந்த பொருட்கள் அதன் ஈர்ப்புவிசையால் இழுக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கிப்போய்விடும். ஆகையால், சந்திராயன் – 1-னும் சிதைந்துபோயிருக்கக்கூடும் என்ற முடிவுக்கு அனைவரும்வந்திருந்தனர். ஆனால், சந்திராயன் -1-ன் சுழற்சியைக் கணக்கிட்டுப் பார்த்தபோது அது இன்னமும் வட்டப் பாதையில் இருப்பதற்கான சாத்தியங்கள் தெரிந்தது என்கிறது ஜெ.பி.எல்.

நிச்சயமாக எங்கோ சுற்றிவருகிறது சந்திராயன் – 1 என கணக்கிட்டதும் கலிபோர்னியாவில் உள்ள 70 மீட்டர் அலைவாங்கியையும், மேற்கு வர்ஜீனியாவில் உள்ள 100 மீட்டர் கிரீன் பாங்க் தொலைநோக்கியையும் நாஸா பயன்படுத்தியது. அதன் மூலமாக 2016-ல் ஜூலை 2 அன்று நிலவின் வட துருவத்தின் மேற்பரப்பிலிருந்து 160 கி.மீ. தொலைவில் சந்திராயன் – 1 உள்ளதாக தகவல் வந்தது. இறுதியாக, தற்போது சந்திராயன் -1-ன் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது . ஆனால், வருத்தம் என்னவென்றால் அதன் வாழ்நாள் முடிந்துவிட்ட நிலையில் சந்திராயன்-1 விண்வெளி குப்பைபோல சுற்றிக்கொண்டிருக்கிறது. 2018-ல் இஸ்ரோ சந்திராயன் -2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது. ஆகவே, சந்திராயன்-1-ன் பணியை அதன் இரண்டாம் பாகம் சிரமேற்கொள்ளும் என்பதால் சோர்ந்துபோகத் தேவை இல்லை.