சர்வதேச மகளிர் தினம்


நூற்றாண்டுகளைக் கடந்து சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.


மகளிர் தினம் ஒரு கொண்டாட்ட தினம் அல்ல மாறாக சமூகத்தின் ஒரு பாதியாக மனித குலத்தை தாங்கிக் கொள்ளும் பெண்ணாளவளுக்கான அங்கீகாரத்தை வலியுறுத்தி இதனை நிலை நாட்டப் போராடும் ஒரு தினமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை சமூக மட்டத்தில் ஏற்படுத்தி பல பாலரும் இதற்கான ஏற்புடமையை புரிந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அடையாள தினமாகவே சர்வ தேச மகளிர் தினத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


உரிமைகளை கோரும் தினங்கள் எல்லாம் புதிய முதலாளித்துவ சுரண்டல் அதிகார வர்க்கத்தினால் ‘கொண்டாட்டங்கள்” ஆக்கப்பட்டு மக்களைத் திசை திருப்பி நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய உலக ஒழுங்கிற்கு சமூக அமைப்புக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

பெண்களே தமக்கான உரிமைகளை பல வேளைகளில் உணராது ஒரு வகை சுய அடிமைத்தனத்திற்குள் தம்மை உள்ளாகியிருப்பதை தெளிவுபடுத்தி அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான அறிவூட்டல்களை செய்யும் தினமாக இதனை நாம் கைக் கொள்ள வேண்டும்.


பண்பாடு, கலாச்சாரம், கட்டுப்பாடாக இருக்க வேண்டும், அடக்கமாக இருக்க வேண்டும் என்ற இதற்குள் இருக்கும் ஆண் மேலாதிக்க விடயங்கள் தெளிவுபடுதப்பட வேண்டும். சாதனைகளில் சரி பாதியாக உலகில் முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்களுக்கான உரிமைகள் பற்றிய தெளிவுகளை நாம் ஏற்படுத்தியாக வேண்டும்.


மீள் பாவனை என்பதை விட புதிதாக ஒன்றை வாங்குதல் அல்லது மீள் சுழற்சி என்பதற்குள் ஒரு முற்போக்கு உள்ளது என்பதைக் காட்டி பண்டங்களை மீண்டும் மீண்டும் விற்பனை செய்து இலாபம் ஈட்டும் சிந்தனைகள் இது போன்ற தினங்களிலும் தமது வியாபாரங்களை, களியாட்டங்களை நோக்கி மக்களை நகர்த்த முற்படுகையில் மகளிர் தினம் என்றால் என்ன என்பதை நாம் தெளிவுபடுத்தியேயாக வேண்டும்.


உடல் உழைப்பிற்கான ஊதியத்தில், பிரநிதித்துவத்தில், தீர்மானங்களை எடுக்கும் விடயங்களில் சமத்துவம் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். இவை வெறும் சட்டங்களால் மட்டும் அல்லாமல் சம்பிரயாங்களுக்கு அப்பால் உணர்வு ரீதியாக உருவாக்கப்பட வேண்டும்.


இது அடுபபங்கரையிலும், அலுவலகத்திலும், அப்பம் சுட்டு விற்கும் இடத்திலும், நாட்டின் தலைமைத்து நிர்வாகத்திற்குள்ளும் செயற்படுத்தப்பட வேண்டும்.


பெண்ணானவள் குடும்பத்தில், சமூகத்தில், பொது வெளியில் ஒரு போகப் பொருளாக, இனவிருத்திற்கான இயந்திரமாக பார்க்கப்படும் ‘பண்டம்” என்ற பார்வைக்கு அப்பால் அவள் ஒரு உணர்வுள்ள உணர்ச்சியுள்ள ஆசாபாசம் உள்ள ஜீவன் என்ற ஏற்புடமை உருவாக வேண்டும். இவற்றை உருவாக்குவதற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் தினமாகவே நாம் மகளிர் தினத்தை கையாள வேண்டும்.


இது ஒரு உரிமை மீட்டெக்கும் தினமாகவே உணரப்பட வேண்டும் ஆண்டு ஒன்றில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொன்றிற்கு மேற்பட்ட விடயங்களுக்கான தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டாலும் மகளிர் தினம் ஒரு உரிமையை நிலை நாட்டுவதற்கான தினமாக இருப்பதினால் விசேட கவனம் பெறுகின்றது.


இங்கு ஆண் பெண் சமத்துவம் என்பது முக்கியம் பெறுவதினால் அது ஒரு கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரசு அமைப்பிலேயே முழுமையாக சாத்தியம் ஆக்க முடியும். அதனால்; இங்கு சமூகப் புரட்சி பேசப்பட வேண்டும்.


நான் மிகவும் முக்கியமாக கருத்தில் எடுப்பது இங்கு திருநங்கைகள். உணர்வால் அவர்கள் தாம் பெண்களாக உணரப்படுவதினால் அவர்களை இந்த சமூகத்தில் சக பிரஜைகளாக ஏற்று சமமாக பார்க்கும் விடயமும் இந்த மகளிர் தினத்தில் பேசப்பட வேண்டும்.


இன்றும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த திருநங்கைகள் வீதியில் செல்லும் போது கல்லால் எறிந்து அவமானப்படுத்தப்படுவதும்… அவர்கள் காம இச்சையினால் அலையும் ஜீவன்களாக சித்தரிக்கப்படுவதும், பார்க்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும்.


மேலும் சிறப்பாக பெண்களுக்கு மாதங்களில் ஏற்படும் விசேட தேவை தினங்களில் அவர்களுக்குத் தேவையான ஓய்வுகள் ஏற்படும் இடத்து ஊதியத்துடனான விடுமுறையை வீட்டிற்குள்ளும், வேலைத் தலங்களிலும் வழங்க வேண்டும்.


இது பிறப்பியல் இயற்கை சார்ந்த ஒரு செயற்பாடு. இதற்கான விசேட வசதிகள் பொது இடங்களில் தேவை இருப்பதினால் அதற்கான வசதிகள் ஓய்வெடுக்கும் அறைகளாக அமைக்கப்பட வேண்டும். சிறப்பாக பாடசாலைகள் வேலை இடங்களில் இதற்கான பிரதியேக அறைகள் அமைக்கப்பட வேண்டிய தேவைகள் இலங்கை போன்ற நாடுகளில் மேற்கத்திய நாடுகளைப் போல் உருவாக்கப்பட வேண்டும்.


இலங்கையைப் பொறுத்தவரையில் மலையகத்து தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களும், யுத்தத்தினால் தமது வாழ்க்கைத் துணையை இழந்த வடக்கு கிழக்கு பெண்களும், ஏன் சிங்களப் பகுதியில் இதே யுத்தத்தினால் பெண் தலமைத்துவத்தை உடைய பெண்களுக்குமான உரிமைகளே முதலில் என் கண் முன்னே வந்து நிற்கின்றது.


சரி இவ்வளவையும் சொல்லி விட்டு இந்த மகளிர் தினத்தின் சிறு வரலாற்றை குறிப்பிட்டாலே இந்த பதிவு முழுமை பெறும் என்ற அடிப்படையிலும் பலரும் அறிந்து கொள்வதற்காகவும் மகளிர் தினம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு……


வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.


1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.


1910 இல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்து கொண்டனர். பின்லாந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் 3 பெண்களும் இதில் அடக்கம். இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், திகதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.


1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1914-1916 ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று 1920 இல் பிரகடனம் செய்தார்.

இந்த வரலாற்றுப் போக்கில் 1975 இல் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டதாகக் கூறப்படும் மார்ச் 8- ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.