சிந்திக்கணும் சீமான்

அதை மேலும் கீறிப்பார்த்துக் குதூகலிக்கும் மனநிலையில் வெளிப்பட்ட பேச்சு சீமானுடையது. தன் மகனின் விடுதலைக்காகக் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகக் கால் கடுக்க நடந்துகொண்டிருக்கும் அற்புதம்மாளின் ரணத்தை மேலும் புண்ணாக்கிய பேச்சு.

விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, “அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, என் இன மக்களைக் கொன்றுகுவித்தனர். என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியைத் தமிழர் தாய்நிலத்தில் கொன்றுபுதைத்தோம் என்று வரலாறு எழுதப்படும்” என சீமான் பேசியிருப்பது கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடியாதது.

தனது ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவதூறு பேசுவதும், அரசு உட்பட அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் எல்லோரையும் மலிவான சொற்களால் கேலிசெய்வதும், மட்டையடியாகத் திட்டுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. கேலிப் பேச்சாலும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வார்த்தைகளாலும் மக்களைக் கவர நினைப்பது சீமானின் வழக்கமான பாணிதான். எந்த வகையிலும் மக்களை அரசியல்மயப்படுத்த முயலாத அவரது அபத்தக் கூச்சல்களில் உச்சம் பெற்ற ஒன்றுதான் ராஜீவ் கொலை தொடர்பாகப் பேசியது.

தொடரும் அசட்டுத்தனமான பேச்சு

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கின்றன. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் நிலைப்பாடு மட்டுமே இதற்கு எதிரானது. இந்நிலையில், சீமானின் இந்தப் பேச்சு மேலும் பல மோசமான பின்விளைவுகளை நோக்கியே இட்டுச்செல்லும்.

இது ஒரு கண்டிக்கத்தக்க விஷயமாகப் பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட பிறகாவது, சீமான் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக, “ஏழு தமிழர்களின் விடுதலை நான் பேசிய கருத்தால் தள்ளிப்போகும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 28 ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தானே இருக்கிறார்கள். நான் இதற்கு முன்னர் இப்படிப் பேசியது கிடையாதுதானே. அப்போது ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை?” என்று மீண்டும் தனது வழக்கமான பாணியில் அசட்டுத்தனமாகவே பதில் சொல்லியிருக்கிறார்.

இன்னும் இது தொடர்பாக அடுத்தடுத்து சீமானிடம் பேச முயன்றால், மேலும் மோசமான இடத்துக்கு இந்தப் பிரச்சினையை அவர் எடுத்துச்செல்லக்கூடும். ‘வரலாறு தெரிந்திருக்க வேண்டும், படிக்க வேண்டும் மக்களே, சிந்திக்கணும் மக்களே’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை பேசும் சீமானுக்கு அதையே நாம் திருப்பிச்சொல்லித்தர வேண்டியிருக்கிறது.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து, மே 1991-ல் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டங்களின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, பிறகு அதில் திடீரென ‘தடா’ சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டது. ‘தடா’ எனும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று தீர்ப்பு வழங்க எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. மே 1999-ல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில்தான் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுவித்து 7 பேரைத் தண்டித்தனர்.

கால் நூற்றாண்டு விவாதம்

ராஜீவ் கொலை வழக்கில் பிரதானக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத சூழலில், பிடிபட்டவர்களைக் கடும் குற்றவாளிகளாக்கும் போக்கு தொடக்கத்திலிருந்தே வெளிப்பட்டது. முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் கொலை இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டாலும்கூட விடுதலைக்கான சாத்தியம் என்பது எழுவருக்கும் மறுக்கப்பட்டே வந்தது. இந்த வழக்கின் அடுத்தடுத்த நிலைக் குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்குள் விடுவிக்கப்பட்ட நிலையில், 28 ஆண்டுகள் கடந்தும் எழுவரும் சிறையிலேயே வாட நேரிட்டிருக்கிறது.

சமீபத்தில்தான், எழுவர் விடுதலைக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், தண்டனைக் குறைப்பு குறித்து முடிவெடுப்பது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்தது. எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றே தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், அவர்களை விடுவிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே ஆளுநர் தனது அதிகாரங்களைச் செயல்படுத்துவதுதான் நடைமுறையாக இருக்கிறது எனும் நிலையில், அவர் எந்தப் பக்கம் நிற்பார் என்பது தொடர்ந்து விவாதமாகிக்கொண்டிருக்கும் விஷயம். தற்போதைய அதிமுக அரசும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துப் பல மாதங்களாகியும் அவர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவது தொடர்ந்துகொண்டிருந்தது. எழுவர் விடுதலை தொடர்பாக எவ்வித தீவிரமான முன்னெடுப்புகளிலும் அக்கறை காட்டாத பழனிசாமி அரசுக்கும் ஆளுநருக்கும் சீமானின் இந்தப் பேச்சு பொன்னான வாய்ப்பாக அமைந்துவிட்டது.

எழுவர் விடுதலைக்காகத் தமிழக மக்கள் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். பேரறிவாளன் என்கிற ஒரு மனிதருக்காக அவரது அம்மா அற்புதம்மாள் சிந்திய ரத்தம் ஏராளம். அதையெல்லாம் சீமான் தனது பொறுப்பின்மையால் தகர்த்தெறிந்துவிட்டார். கூடவே, விடுதலைப் புலிகளே ஏற்காத குற்றத்தை தமிழ்நாட்டு மக்கள் மீது ஏற்றப் பார்க்கிறார் அவர். வன்முறைக்கு எதிரான பாதையிலேயே பயணித்துவந்திருக்கும் தமிழக அரசியல் வரலாற்றில், துயரகரமான ஒரு கரும்புள்ளி என்பதாகவே ராஜீவ் காந்தியின் அரசியல் படுகொலை பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தைப் புத்திசாலித்தனமாக எதிர்கொண்ட ராஜீவ் காந்தி, இலங்கைப் பிரச்சினையை மிக மோசமாகக் கையாண்டார் என்று அவரை விமர்சிப்பதற்கு நிகராகவே அவரது படுகொலைக்குக் காரணமான தமிழ் நிலத்தையும் விமர்சித்துவந்திருக்கிறோம். அந்தத் தார்மீகத்தில் நின்றுகொண்டுதான் நாம் எழுவர் விடுதலை குறித்து கால் நூற்றாண்டுகளாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும், இந்த எழுவர் விடுதலை என்பது, அந்த எழுவரோடு முடிந்துவிடும் விஷயம் அல்ல. எழுவரும் விடுவிக்கப்படுவது தமிழகத்தைத் தாண்டியும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னெடுக்கும் மிக முக்கியமான செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது. சிறைகளில் உரிய விசாரணை இல்லாமலும் இந்த எழுவரைப் போல தொடர் மேல்முறையீடு, ஊடக கவனம், அரசியல் அழுத்தம் இல்லாமலும் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான கைதிகளின் எதிர்காலம் மீதான கரிசனம் அது.

பிரபாகரன் என்ன சொன்னார்?

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்டவரும், சீமானின் ஆதர்சமுமான பிரபாகரன் இந்தக் கொலையை எப்படிப் பார்த்தார் என்பதை சீமானுக்கு ஒருமுறை நினைவூட்டுவோம். அவர் இந்தக் கொலையை வீரதீரச் செயல் என்பதாகவோ, பெருமை பேசும் விஷயமாகவோ பார்க்கவில்லை.

‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்றுதான் அழைத்தார். அந்தத் துன்பியல் சம்பவத்தின் விளைவுகளால்தான் சர்வதேச அரசியல் அரங்கில் விடுதலைப் புலிகள் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. சர்வதேச அளவில் மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் பயிற்சிக் களங்களை அமைத்துக்கொடுத்த தமிழக அரசியல் தலைவர்களும்கூட அவர்களுடனான தொடர்புகளை அறுத்தெறிந்தனர்.

இதெல்லாம் சீமானுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், சுயநல அரசியல்தான் சீமானை முன்னகர்த்துகிறது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணைகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலத்திலும், சீமான் மேடைகளில் கொதித்துக்கொண்டுதான் இருந்தார். எதற்காகத் தெரியுமா? ‘குண்டுப் பொண்ணு மீனம்மா, குச்சி ஐஸ் வேணுமா’ என்று தனது படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளைத் தணிக்கைக் குழு நீக்கிவிட்டதை எதிர்த்து.

(The Hindu)