சினிமா ஊடாக வீட்டுக்குள் வந்து சேருகின்ற பேராபத்து!

திரைப்படம் இனிமேல் சிறுவருக்கு உகந்ததல்ல

எனது வீட்டைப் பொறுத்தவரையில் அப்பாவோ கணவரோ சிகரட் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்கள். என்றபோதும் எனது நான்கரை வயதேயான குட்டி மகன் பல்குத்தும் குச்சியை அடிக்கடி எடுத்து விளையாடும் போது தனது வாயில் ஒரு பக்கத்தில் வைத்து கொள்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. அது ஆபத்தானது என்பதனால் அதனை கண்காணாத இடத்தில் ஒழித்து வைத்தேன். ஆனால் என் மகனோ அதைக் கேட்டு அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

“எதற்காக அதை தேடுறீங்க?” என்று நான் கேட்டதற்கு “அது தானம்மா என்னோட சிகரட். நானும் ‘மாரி’ படத்தில வார தனுஷ் அண்ணா மதிரி வாயில சிகரட் வைத்திட்டு தான் விளையாடுவேன்” என்றானே பார்க்கலாம். நான் ஒரு நிமிடம் கலங்கிப் போய்விட்டேன். நடிகர் தனுஷ் என்றால் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய பாடல், நடனம், நடிப்பு என்பவற்றில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு குட்டி ரசிகன் என்றுகூட கூறலாம். மீன் கறி ஊட்டும் போது கூட. “அம்மா இந்த மீனை மரியான் தனுஷ் எங்க வீட்டுக்கு கொண்டுவந்து தந்தாரா?” என்று ஆசை ஆசையாகக் கேட்பான். ‘ஆமாம்’ என்று சொன்னால் கூடவே சாப்பிடுவான்.

இப்படி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கக் கூடிய இளம் திறமைமிக்க நடிகரான தனுஷ், தனது ரசிகர்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு தவறான செய்தியை மனதில் விதைப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கசப்பான உண்மையாகியுள்ளது.

சிகரட் பிடித்தால் புற்றுநோய் ஏற்படுமென்று கூறி, பயங்கரமான படங்களை அவனுக்குக் கணியில் போட்டுக் காண்பித்தேன்

“தொட்டாலும் நோய் வருமா? அப்போ தனுஷக்கு நோய் வருமா” என்று பல கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தான். அவை வெறும் வெகுளித்தனமாக இருந்தாலும் நான் ஒரு தாயாக அவனை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டேன்.

சிறுவர்களை திரைப்படங்கள் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்பது என்னவோ உண்மையாக விருந்தாலும் பரபரப்பான வாழ்க்கை முறையில் மன அழுத்தத்தை தீர்க்கக் கூடிய நிவாரணியாக திரைப்படங்கள் அன்றாட வாழ்க்கையில் செலுத்தி வரும் செல்வாக்கினை தவிர்க்க முடியாதுள்ளது.

இந்த விவாதம் ஒரு புறமிருக்க, திரைப்படங்களில் தோன்றும் ஆதர்ஷபுருஷர்களால் வீட்டுக்கு வீடு இடம்பெறும் போராட்டங்களை தமது ஆய்வின் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளது ‘எடிக்’ என்றழைக்கப்படும் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம்.

உலக சினிமாவைப் போறுத்தவரையில் இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு முக்கிய இடமுண்டு. இலங்கையிலும் தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மொழி பேசுபவர்கள் கூட தமிழத் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதையும் பாடல்களை ரசிப்பதையும் எம்மால் காண முடிகிறது. திரைப்படம் சொல்லக்கூடிய கதை மற்றும் செய்தி பாஷைகளுக்கு அப்பாற்பட்டது என்பது யாரும் அறித்ததேயாகும்.

ஒரு பிள்ளை தனது ஆறு வயதுக்குட்பட்ட காலப் பகுதியில் எடுக்கக்கூடிய நிர்ணயமே தனது வாழ்நாளை தீர்மானிக்கும் என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும்.

இந்த சிறுவர்களை இலக்கு வைப்பதற்காக விளம்பர கம்பனிகள் திரை மறைவிலிருந்த படி திரைப் படங்களுக்கு அனுசரணை வழங்குவதனை  அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளது. தற்காலத் திரைப்படங்களின் போக்குகள் வெறும் வாய்வார்த்தைகளால் மாத்திரம் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் அதனை ஆக்கபூர்வமாக்கியமைக்காக  இன் செயற்பாடுகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு (திளியிவி) ஆனது கடந்த ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் இந்தியாவிலிருந்து வெளிவந்த 18 தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 17 திரைப்படங்களில் மொத்தமாக 144.24 நிமிடங்களுக்கு சிகரட் மற்றும் மதுசார வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சுமார் 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களைக் குறிக்கின்றது.

இதில் கூடுதலாக சிகரட் காட்சிகளை தனுஷ் நடித்து வெளிவந்த ‘மாரி’ என்னும் திரைப்படம் கொண்டுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை தூண்டக்கூடிய வகையில் வெளிப்படுத்தப்பட்ட 21.97 நிமிட காட்சிகளில் சிகரட் மாத்திரம் 18.22 நிமிடங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் திரைப்படத்தின் முன்னோடியாக வெளிவந்த 32 செக்கன் கொன்ட விளம்பர காணொளியில் (ட்ரெயிலர்) 23 செக்கன்கள் சிகரட் காண்பிக்கப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக கூடுதலாக மதுசாரத்தை விளம்பரப்படுத்திய திரைப்படமாக வாசுவும் சரவணனும் கணிக்கப்பட்டுள்ளனர். இதில் 24.57 நிமிடங்களுக்கு மதுசாரம் காட்சிப் படுத்தப்படுகின்து. நகைச்சுவை நடிகர் சந்தானம் மற்றும் பிரபல நடிகர் ஆர்யா ஆகிய இருவரும் தங்களின் உயர்ந்த கலைத் திறமையைப் பாவித்து மதுசாரத்தை விளம்பரப்படுத்தியுள்ளனர்.

படத்தின் இறுதிக் கட்டத்தில் தோன்றும் சிறப்பு சதாபாத்திரம் பியர் குடிக்கும் விதத்தை விளக்கியிருப்பதானது, திரைப்படத்தின் பிரதான அனுசரணையாளர்கள் மதுசார கம்பனிகள் தானா? என நம்மை கேட்க வைக்கின்றது.

இதில் சந்தானம் என்னும் நகைச்சுவை நடிகரே அதிகூடிய எண்ணிக்கையில் சிகரட் மற்றும் மதுசாரத்துடன் காட்சிபடுத்தப்படுத்தியுள்ளார். இதில் 57 சதவீதம் காட்சிகளாகவும் 14 சதவீதம் வார்த்தைகளாகவும் 12 சதவீதம் நசைச்சுவைகளாகவும் 10 சதவீதம் விசேட வார்த்தைகளாகவும் 7 சதவீதம் பாடல்களாகவும் சிகரட் மற்றும் மதுசார பாவனை தூண்டிவிடப்பட்டுள்ளன.

அத்துடன் 48 நிமிடங்களுக்கு சாராயமும் 46 நிமிடங்களுக்கு சிரட்டும் 46 நிமிடங்களுக்கு பியரும் 2.4 நிமிடங்களுக்கு ஏனைய போதைப் பொருட்களும் காண்பிக்கப்படுகின்றன.

இவை வீரத்திற்காக உபயோகிக்கப்படுவதாக 26.5 சதவீதமும் மனநிம்மதிக்காக பயன்படுத்தப்படுவதாக 22 சதவீதமும் சந்தோசத்திற்காக 17 சதவீதமும் நவநாகரீகமாக 15 சதவீதமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திரைப்படங்களை தவிர தொலைக்காட்சிகளில் வெளியாகும் நகைச்சுவை நேரங்களில் கூட இதே காட்சிகள் தான் திரும்ப திரும்ப காண்பிக்கப்படுகின்றன. குறிப்பாக சிறார்கள் இவ்வாறான விடயங்களுக்கு விரைவாக ஈர்க்கப்படுகிறார்கள். எது வெறும் நடிப்பு மட்டும் தான் என்பதை பிரித்து உணரக்கூடிய பக்குவம் அவர்களுக்கில்லை.

ஒரு தரமாயினும் தனது நிஜ வாழ்க்கையிலும் அதை செயற்படுத்தி பார்க்க துடிக்கின்றார்கள். இறுதியில் அதற்கே அடிமையாகி விடுகிறார்கள்.

இதுபற்றி சிகரட், மதுசார கம்பனியாளர்களுக்கும் திரைப்பட இயக்குனர்களுக்கும் என்ன கவலை? பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயற்படும் இவர்கள் தமது வியாபார இலக்கை அடையும் நோக்கில் வேகமாக புறப்படுகிறார்களே தவிர இறந்து மடியும் இளம் சமுதாயத்தை திரும்பிப் பார்க்க அவர்களுக்கு நேரமில்லை. உதடு இருக்கும் அனைவரும் சிகரட் கம்பனியில் இயக்குநர்கள் என்றால் சந்தேகமில்லை.

வயது வந்த சிகரட் புகைபிடிப் பாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 19 வயதிற்குற்பட்ட காலத்திலேயே சிகரட் பிடிக்க ஆரம்பித்தவர்களெனவும் சிகரட் பிடிப்பவர்களில் 50 சதவீதமானவர்கள் இறப்பது நிச்சயமெனவும் ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

சிகரட் மற்றும் மதுசார கம்பனிகள் தமது பிள்ளைகளை ஏமாற்றுவதை தெரிந்திருந்தும் தொடர்ந்தும் நாம் ஏமாறப் போகிறோமா?

இவையனைத்துக்கும் பதில்கூற வேண்டிய முக்கிய பொறுப்பு தணிக்கை சபைக்கே உரியது. கடந்த நான்கு மாத காலத்தில் மாத்திரம் தணிக்கை சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் அலட்சியப் போக்கு எத்தனை சிறார்களின் வாழ்க்கையை தவறான பாதைக்கு இட்டுச் செல்ல வழிவகுத்துள்ளது.

திரைப்படங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பண பலம் படைத்த முகவர் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலா தணிக்கை சபை உள்ளது? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தணிக்கை சபையும் முகவர் நிலையங்களும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் சமுதாய விழிப்புணர்வு கொண்ட அமைப்புக்கள், தனி நபர்கள் குறிப்பாக பெற்றோர் தமது எதிர்ப்பினை facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களுக்கூடாக வெளிப்படுத்த முன்வரவேண்டும்.

மக்களின் சந்தோஷத்திற்காக தயாரிக்கப்படும் இந்த படங்கள் சமூக சீர்கேட்டிற்கு காரணமாக தாம் அனுமதிக்கக் கூடாது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களை தொடர்புகொள்வது ஒன்றும் அத்தனை சிரமமான காரியமல்ல. ‘மாரி’ படத்திற்கான எதிர்ப்பு தோன்றியதையடுத்து தான் நிஜ வாழ்க்கையில் சிகரட் பிடிப்பதில்லையென தனுஷ் கூறியிருந்தார்.

அதனை நாம் நம் பிள்ளைகளுக்கு புரிய வைப்பதில் பார்க்க எதிர்காலத்தில் அவர்கள் அவ்வாறான காட்சிகளை தவிர்ப்பது நல்லது.

அதேபோன்று சிகரட் மற்றும் மதுசார பாவனைக்கு கடும் எதிர்ப்பு நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முழுமையாக கடைபிடிக்கும் ஓர் அங்கமாக தணிக்கை சபை செயற்பட வேண்டியது அவசியமாகும்.

(Thinakaran)