சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 1

சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பாளர் மனுதாக்கல் நிறைவேறி, சகல கட்சிகளும் தத்தம் தேர்தல் விஞ்ஞாபனம் சகிதம், தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தமிழ் பெண்ணாக, எனது நோக்கமும் அதுபற்றிய ஆய்வும் விமர்சனமும் தமிழ் பெண்கள் சார்ந்ததாகவே அதிகமாக இருக்கும் என்பதால், தலைப்பை அதற்கேற்ப மட்டுப்படுத்திக் கொண்டேன்.

இந்தத் தேர்தல் எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என எனக்குள் அபிப்பிராயம் இருந்த போதும், முகநூல் பகிர்வுகளின் மூலம் பல விபரங்கள் பரிமாற்றம் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆரம்ப காலத்தில் மத்திய அரசு சார்ந்த விடயங்கள், வழமைபோல தமிழ் அரசியலான தேசியம், வட-கிழக்கு மாகாண இணைப்பு, பிரிவு என்றெல்லாம் முகநூலில் பேசப்பட்டது, ஆராயப்பட்டது, விவாதிக்கப்பட்டது. இடையிடையே போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் குடும்பத்தினரின் படங்களுடன், அவர்கள் வாழ்விடங்களையும் காண்பித்துப் பகிரப்பட்டன.

கடந்த டிசம்பர் 23ம் திகதி கற்பகச்சோலை நன்மை விருத்திச் சங்கம் மூலமாகவும் வேறு நண்பர்களுடன் இணைந்தும் கீழே தரப்பட்ட பகிர்வு, அதனுடன் இணைந்த தாய்-மகள் படத்துடன் எனது முகநூலை வந்தடைந்தது.

“Share நண்பர்களே 4 பேர் பகிர்ந்தால் 40 பேர் உதவி கிடைக்கும். போராட்டம் நமக்கு விட்டுச் சென்றது வறுமையை மட்டும்தான். கிளிநொச்சியை சேர்ந்த இக்குடும்பத்தினர்க்கு அயலூர் அண்ணன் Vaddu Sivan அவர்களின் நிதி உதவியில் கற்றல் உபகரணங்கள் மற்றும் எதிர்கால நலனிற்குமாக கோழி வளர்ப்பு போன்றவற்காக 35000 ரூபா வளங்க உள்ளோம் யாராவது இவர்களிற்கு உதவி செய்யவிரும்பின் தொடர்பு கொள்ளவும் நன்றி….”

“போராட்டம் நமக்கு விட்டுச் சென்றது வறுமையை மட்டும்தான்” என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய கூற்றானாலும், இந்த வறுமையை எதிர்கொண்டு மீண்டும் போராட வேண்டியவர்கள் அதிகம் பெண்களாகவே இருப்பது கருத்தில் கொள்ள வேண்டியதாகும். இணைத்திருக்கும் தாய்-மகள் படம் நிலையைத் தெட்டத் தெளிவாக விளக்குவதுடன், வழங்கப்படும் 35000 ரூபா, அவர்களை எதுவரை கொண்டு செல்லும் என்றும் சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறது.

ஆகவேதான், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெண்கள் விடயத்தில் என்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது, இனியும் ஏற்படுத்தும் என பகுதிகளாக எழுதலாம் என முன்வந்தேன்.

பகுதி 2 – பெண் வேட்பாளர் இட ஒதுக்கீடு பற்றியது

ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் – யாழ்ப்பாணத்தில் பிறந்து, கல்வி கற்று, 1981 வரை சிறீ லங்கா நீர்வழங்கல் வடிகால் சபையில் சேவையாற்றியவர். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வாழ்ந்து மின்பொறியியலாளராகப் பல வருடங்களாக பணியாற்றி வருபவர். இவர் கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் சிறீ லங்காவிலிருந்து குடிபெயர்ந்த முதற் தமிழ் பெண்மணியாக டொன்மில்ஸ் பகுதியில் ஒன்ராறியோ மாநில சட்டசபைக்கான தேர்தலிலும், கட்சி சார்பற்று மாநகரசபைத் தேர்தலிலும் 1990 நடுப்பகுதியிலிருந்து 2000 தொடக்கம் வரை போட்டியிட்டவர். ஜானகி அமரர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் எனும் முந்நாள் அர்ப்பணிப்பான இடதுசாரி அரசியல்வாதியின் புதல்விகளில் ஒருவருமாவார்.

(Janaki Karthigesan Balakrishnan)