‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்

(Gopikrishna Kanagalingam)

இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம்.  இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது சிறுபான்மைகள் என நாம் கருதுகின்ற சில பிரிவுகளை ஒதுக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது என்பது, வருத்தத்துக்குரியதாகவே இருக்கிறது.

முன்னைய அனைத்துத் தேர்தல்களையும் விட, இத்தேர்தல் மிக வேறானது என்பது, திரும்பத் திரும்பக் கூறப்பட்டுவரும் விடயமாகும். அதற்கான முக்கியமான விடயமாக, கலப்புத் தேர்தல் முறை காணப்பட்டாலும், பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது, அதேயளவுக்கு முக்கியத்துவமான விடயமாகக் காணப்படுகிறது.

பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு என்பது, தமிழ், முஸ்லிம் சமூகப் பரப்பில், நம்பிக்கையீனத்துடன் எதிர்கொள்ளப்பட்ட மாற்றமாகவே அமைந்தது. இன்னும் கூட, “எமது பெண்கள் இதற்குத் தயாராக இல்லை” என, கற்றோர் என்று சொல்லப்படுபவர்கள் கூடக் கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தமிழ், முஸ்லிம் சமூகங்கள், இன்னமும் ஒப்பீட்டளவில் பழைமைவாதச் சமூகங்களாகவெ காணப்படும் நிலையில், பெண்களின் அரசியல் பங்களிப்புக் குறைவாகவே காணப்படுகிறது என்பது உண்மையானது. ஆகவே, பெண் தலைமைத்துவங்களுக்கு, தட்டுப்பாடு காணப்படுவது போன்ற நிலைமை காணப்படுவது உண்மையானது தான். ஆனால், இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வைத்துப் பார்க்கும் போது, தலைமைத்துவப் பண்பில்லாமல், எந்தவொரு பெண்ணாலுமே இந்நாடுகளில் பிழைத்துவிட முடியாது என்பது யதார்த்தமாகும். எனவே, தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் ஏற்படுப்படவில்லை அல்லது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

எனவே, “பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது, தகுதியற்ற பெண்களைக் கொண்டுவரும்” என்பது, சிறுபிள்ளைத்தனமான வாதமாகும். அரசியலுக்குத் தயாராக இல்லாத பெண்களைக் கொண்டுவரும் என்பது வேண்டுமானால், ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க விவாதமாக இருக்கலாம். ஆனால் அப்படிப் பார்த்தால், தேர்தலில் போட்டியிடும் ஆண்கள் மாத்திரம், எல்லாம் தயாரான நிலையில் தான் போட்டியிடுகிறார்களா என்ற கேள்வியையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

தான் குடியிருந்த சொகுசு வீட்டுக்கு, யார் வாடகை செலுத்தினார்கள் என்று தெரியாதவர்கள் எல்லாம், நாட்டின் நிதியமைச்சராக இருந்த இந்நாட்டில், பெண்களின் “அரசியலுக்கான தயார்நிலை” என்ற வாதம், பெண்களைப் பின்தள்ளுவதற்கான வாதமே தவிர, உண்மையான கரிசனை கிடையாது.

இத்தனைக்கும், இலங்கையின் சனத்தொகைப்படி, 51.58 சதவீதமானோர், பெண்களாவர். அவ்வாறு இருப்போரை, சிறுபான்மையினர் போன்று நடத்துவதாகத் தான், இலங்கையின் அரசியல் பரப்புக் காணப்படுகிறது.

இல்லாவிடின், 51.58 சதவீதம் கொண்ட பெண்களின் பிரதிநிதிகளாக, இலங்கை நாடாளுமன்றத்தின் வெறுமனே 5 சதவீதம் பேர் தான் இருக்கிறார்கள் என்பதை எவ்வாறு விளங்கவைப்பது?

ஆகவே, பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது, நியாயமானது என்பதையும் தாண்டி, அவசியமானது என்பது தான் உண்மையாக இருக்கிறது. எனவே, பெண்களுக்காக ஏதோ தியாகம் செய்கிறோம் என்ற பார்வையில் இல்லாமல், இதுவரை காலமும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, பெண்களின் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட சூழலில், பெண்களாக, தமது தெரிவுகளை மேற்கொள்வதற்கு முட்டுக்கட்டை போடாமல் இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்வது தான் சரியானது.

கிழக்கு ஆபிரிக்க பிரெஸ்பைடேரியன் தேவாலயத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர்களுள் ஒருவரான திமோதி என்ஜொயா, அண்மையில் பகிர்ந்த கருத்துத் தான் ஞாபகம் வருகிறது. “எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி, எனது திருமணத்தின் 50ஆவது ஆண்டுப் பூர்த்தியாகும். திருமணம் இடம்பெற்று சுமார் ஓராண்டின் பின்னர், ‘நான் சிறந்ததோர் ஆண். உங்களுக்கு, ஏராளமான சுதந்திரத்தை நான் வழங்கியுள்ளேன்’ என, என் மனைவியிடம் பெருமையாகக் கூறினேன். அவரது இலகுவான பதிலாக, ‘ஆண்கள், எங்கிருந்து சுதந்திரத்தை எடுத்துப் பெண்களுக்கு வழங்குகிறார்கள் என்று சொல்லுங்கள்.அப்போது தான், அங்கு சென்று, நானே சுதந்திரத்தை எனக்காக எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்” என்று குறிப்பிட்டார். இது தான் உண்மையாக இருக்கிறது.

எனவே, தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்குத் தகுதியிருக்கிறதா, இல்லையா என்ற பொதுமைப்பாடான விமர்சனங்களைத் தவிர்த்து, தகுதியுள்ளவர்களுக்கு வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். “தகுதியுள்ளவர்கள்” என்பதற்கு, “வேலைகளைச் செய்து முடிக்கக்கூடிய திறமையுள்ளவர்கள்” என்று வரைவிலக்கணப்படுத்திக் கொண்டால், போதுமான எண்ணிக்கையான பெண்களைத் தெரிவுசெய்யக்கூடியதாக இருக்கும்.

உண்மையாகவே பெரும்பான்மையாக இருக்கின்ற பெண்களையே, சிறுபான்மைகள் போன்று நடத்தும் இந்த அரசியல் கலாசாரம், உண்மையிலேயே சிறுபான்மைப் பிரிவுகளை எப்படி நடத்துமென்பதில் கேள்விகளே தேவையில்லை.

காலாகாலமாகவே, சிறுபான்மைக் கருத்துகளைக் கொண்டிருப்பவர்களை, துரோகிகள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் நிராகரித்துவந்த சமூகங்கள், சிறுபான்மைப் பிரிவுகளை மாத்திரம் கண்ணியமாக நடத்தினவா? முஸ்லிம்களுக்குள் காணப்படும் பிரிவுகளில் காணப்படும் பாகுபாடுகளும், தமிழர்களுள் இந்துக்கள் அல்லாத பிரிவினரையும், மேற்படி இரு சமூகங்களும் எப்படி நடத்தின என்பது, வெளிப்படையான ஒன்று.

இந்நிலையில் தான், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இந்துக்களுக்கு வாக்களிக்குமாறு கோரி, சிவசேனை எனப்படும் இந்து அமைப்பால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வரை சென்றிருக்கின்றன. ஆணைக்குழுவின் ஆணையாளர்களுள் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தான், இது தொடர்பான முறைப்பாட்டைச் செய்திருக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தில், சிறுபான்மைப் பிரிவுகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதற்கு, பேராசிரியர் ஹூலின் கடந்தகால அனுபவங்கள் சாட்சி என்பது ஒருபக்கமாக இருக்க, புதிதாக எழுந்திருக்கின்ற இந்த வெறுப்பைக் கக்கும் குழு, தமிழ் அரசியல் சூழலை எவ்வாறு கொண்டு செல்லப் போகிறது என்பது தான் கேள்வியாக அமைந்திருக்கிறது.

இன்னமும் சிறிய மட்டத்திலேயே காணப்படும் அக்குழுவுக்கு, அது தொடர்பான செய்தி அறிக்கைகள் அதிகமாக வெளிப்படுதல், இலவச விளம்பரமாகப் போய்விடும் என்ற அச்சம் காணப்பட்டாலும் கூட, அக்குழுவின் பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மத்தியகுழு உறுப்பினர் ஒருவரும் காணப்படுகிறார்கள் என்ற விடயம், அக்குழுவையும் அதன் அரசியலையும் எதிர்க்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது.

யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளராக, தமிழ்ச் சமூகத்தில் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவரான இமானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்படலாம் என்ற செய்தி அறிக்கைகள் வெளிவந்த பின்னணியில் தான், இந்து மதத்தவருக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டமை, அதன் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

சிவசேனையின் செயற்பாடுகள், தேர்தல் சட்டங்களுக்குப் புறம்பானவை என்பது ஒருபக்கமாக இருக்க, அதன் செயற்பாடுகள், தமிழ் அரசியலில் வெறுப்பு அரசியலுக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுக்கும் என்பது தான், அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இன்று, இந்துக்களுக்கு வாக்களியுங்கள் என்று ஆரம்பிக்கின்ற இந்த அரசியல் போராட்டம், நாளைய தினம், “இந்து உயர்சாதிக்கு வாக்களியுங்கள்” என்று மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை. சாதியும் மதமும் தான் வாக்களிக்கவும் வாக்குக் கேட்பதற்குமான அடையாளங்கள் என்ற சூழலொன்று உருவாக்கப்படுமாயின், அதிலிருந்து மீண்டு வருவதற்கான காலம், அதிகமாகத் தேவைப்படும்.

மாற்றங்களை ஏற்படுத்துவது கடினமானது; ஆனால், சமூகமொன்றைப் பின்னோக்கிக் கொண்டு செல்வது இலகுவானது. அதைச் செய்வதற்குத் தான் இக்குழுக்கள் விரும்புகின்றனவோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.

எனவே தான், இலங்கையின் சிறுபான்மையின அரசியல் பரப்பு, சிறுபான்மை என்று கருதிக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மைப் பிரிவான பெண்களையும், உண்மையிலேயே சிறுபான்மைப் பிரிவுகளாக இருக்கின்ற மக்களையும், ஒதுக்கிவைத்துவிட்டு அரசியல் செய்கின்ற முயற்சியைக் கைவிட்டு, அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற அரசியலை முன்னெடுத்துச் செல்ல முயல வேண்டும்.

இலங்கையின் சிறுபான்மையினச் சமூகங்கள், பிளவுபட்டுத் தான் இருக்கப் போகிறோம் என முயற்சிகளை மேற்கொண்டால், சமூகங்களின் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை இல்லாது செய்யும் முயற்சிகளாகவே அவை கருதப்பட வேண்டுமென்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.