சி.ஐ.ஏ: சித்திரவதையின் உலகமயமாக்கல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அனைத்தும் உலகமயமாகியுள்ள சூழலில், சித்திரவதை விலக்கல்ல. சித்திரவதை பல வகைகளில் நடக்கின்றன. ‘உண்மையை அறியும் வழி’ என்ற போர்வை, சித்திரவதைகளைக் கண்மூடித்தனமான அனுமதிக்கிறது. ‘பயங்கரவாதி’ என்ற சித்திரிப்பு மட்டுமே, ஒருவர் சித்திரவதைக்குள்ளாகப் போதிய காரணியாகிறது. பொதுப்புத்தி மனநிலை, அதை விமர்சனமின்றி ஏற்கிறது. தம்மை நாகரிக ஜனநாயக சமூகங்கள் என்போர், சித்திரவதையை அனுமதிக்கிறார்கள். சித்திரவதை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. நாம், மனிதரை மனிதராக மதிக்கும் ஒரு சமூகமா என்ற கேள்வியை, நாமெல்லோரும் கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும்.

சித்திரவதையையும் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏயையும் மையப்படுத்திய இரண்டு நிகழ்வுகள், இக் கட்டுரையை எழுதத் தூண்டின.

முதலாவது, மே 31ஆம் திகதி, ‘ரொமானியா, லித்துவேனியா ஆகிய ஐரோப்பிய நாடுகள், சி.ஐ.ஏயின் சித்திரவதைகளுக்கும் ஆட்கடத்தல்களுக்கும் உடன்பாடகச் செயற்பட்டதோடு, மனித உரிமை மீறல்களுக்கும் வழிசெய்துள்ளன என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையாகும்.

பலநாடுகளில், அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவுடன், சி.ஐ.ஏ சித்திரவதை முகாம்கள் இயங்கியதை இத்தீர்ப்பு மீள நிறுவியுள்ளது.

இரண்டாவது காரணம், சித்திரவதைகள் பலவற்றை முன்னின்று நடாத்தியவர் என்று அறியப்பட்ட ஜினா ஹஸ்பெல்லை, சி.ஐ.ஏயின் புதிய இயக்குநராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்தமையின் ஊடாக, ஹஸ்பெல்லின் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2002ஆம் ஆண்டு தாய்லாந்தில் சித்திரவதைக் கூடமொன்றை இவர் நடத்தியமை, அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பின்னணியில், இனி வரன்முறையின்றிய சித்திரவதைகளை நடாத்த, அமெரிக்க அரசாங்கம் தனது மௌன அங்கிகாரத்தைத் தயங்காது வழங்கும் என்று எதிர்வுகூறப்படுகிறது.

குவான்டனோமோவில் உள்ள கைதிகள் இருவர், தங்கள் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அபு சுபைதா என்பவர் பெப்ரவரி 2005 முதல் மார்ச் 2006 வரை லித்துவேனியாவில் சி.ஐ.ஏ நடத்தும் சித்திரவதை முகாமில் சித்திரவதைக்கு உட்பட்டதாக வழக்குத் தொடுத்தார்.

அப் அல் நஸ்ஹீரி என்பவர், ரொமானியாவில் சி.ஐ.ஏ நடத்தும் சித்திரவதை முகாமில் வைத்து, செப்டெம்பர் 2003 முதல் நவம்பர் 2005 வரை சித்திரவதைக்கு ஆளானார். அவரைச் சித்திரவதை செய்து பெற்ற, வாக்குமூலத்தை வைத்தே, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

வழக்குத் தொடர்ந்த இருவரும், கியூபாவில் உள்ளதான, அமெரிக்காவின் குவாண்டானாமோ சிறையில், பலத்த பாதுகாப்புடன் மறியலில் உள்ளனர்.

ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்துக்குச் சாட்சிகூற இருவரும் அனுமதிக்கப்படவில்லை. ஐரோப்பிய மனித உரிமைச் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் சித்திரவதையில் ஈடுபடலாகாது.

லித்துவேனியாவிலும் ரொமானியாவிலும் சி.ஐ.ஏயின் இரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்கிதையும் அதற்கு முழுமையான அரசாங்கத்தின் ஆதரவு இருந்ததையும் ஆதாரங்கள் கேள்விக்கிடமின்றி நிறுவுவதாக நீதிமன்றத் தீர்ப்புக் கூறியது.

அத்துடன், இருவருக்கும் ஆளுக்கு ஓர் இலட்சம் யூரோ நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் கூறிய இத்தீர்ப்பு, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடமளிப்பதை வன்மையாகக் கண்டித்தது.

இத்தீர்ப்புகளுடன், இதுவரை ஐந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சி.ஐ.ஏயின் இரகசியச் சிறைக்கூடங்களை நடாத்தியமை, நீதிமன்றம் மூலம் வெளிப்பட்டுள்ளது. இதற்கு முன் மசிடோனியாவும் இத்தாலியும் போலந்தும் சி.ஐ.ஏயின் சித்திரவதை முகாம்களை நடாத்தியதை இந்நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிப்படுத்தின.
அரசாங்கங்கள் சி.ஐ.ஏயின் எடுபிடிகளாகச் செயற்படுவது இதுவே முதலுமன்று; நிச்சயமாகக் கடைசியுமன்று. அல்பிரட் மக்கோய் எழுதியுள்ள ‘சித்திரவதை என்ற வினா: கெடுபிடிப் போர் முதல் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் வரை சி.ஐ.ஏ விசாரணை’ (A Question of Torture: CIA Interrogation, From the Cold War to the War on Terror) என்ற புத்தகம், சி.ஐ.ஏ, 1950கள் முதல் எவ்வாறு சித்திரவதையை ஒரு கருவியாகப் பாவித்துள்ளது என்பதையும் அது எவ்வாறு புதிய புதிய சித்திரவதை முறைகளைக் கண்டறிந்தது என்பதையும் அதற்கு அறிவியல்த்துறை (குறிப்பாக பல்கலைக்கழக ஆய்வுகள், மருத்துவ ஆய்வுகள்) எவ்வாறு பங்களித்தது என்பதையும் விரிவாகப் பதிவு செய்கிறது.

சித்திரவதைகள் பயனுள்ள கருவி என்ற சிந்தனை ஆட்சியாளர்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது. பின்னர், ஆட்சியாளர்களும் அரசாங்கத்தின் நிர்வாகிகளும் சித்திரவதையை, அமைதியாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறது. அதன்பின்னர், சித்திரவதைக்குச் சட்ட அங்கிகாரத்தைப் பெற முயல்வதுடன் அனுமதியின்றியும் வரன்முறையின்றியும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. இதை சி.ஐ.ஏ எவ்வாறு கனகச்சிதமாக நிறைவேற்றுகின்றது என்பதை, மேற்கூறிய நூல் விவரிக்கிறது.

‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற பெயரில் சி.ஐ.ஏயால் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களையும் சி.ஐ.ஏயுடன் ஒத்துழைத்துத் தமது குடிமக்களை அமெரிக்காவிடம் கையளித்த நாடுகளின் பட்டியலையும் ‘ஓப்பன் சொசைட்டி ஜஸ்டிஸ் இனிஷ்யேட்டிவ்’ (Open Society Justice Initiative) என்ற அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் தனது அறிக்கையில் தொகுத்திருந்தது.

தமது சட்டங்களுக்கும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கும் முரணாக, அமெரிக்க உளவுத் துறையின் (சி.ஐ.ஏ) சிறைப்படுத்தல், சித்திரவதை நடவடிக்கைகளில் 54 நாடுகள் பங்கேற்றன என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 136 பேரின் விவரங்கள் அதில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘இந்த எண்ணிக்கை மேலும் பன்மடங்கு அதிகமாக இருக்கலாம்’ என்றும் ‘அமெரிக்க அரசாங்கமும் பங்கேற்ற மற்ற அரசாங்கங்களும் தகவல்களை வெளியிடும்வரை, பாதிக்கப்பட்ட பிறர் பற்றிய விவரங்கள் மர்மமாகவே தொடரும்’ என்றும் அறிக்கை கூறுகிறது. விவரித்துள்ள தகவல்கள் நெஞ்சை உறைய வைப்பன; அவற்றில் சிலதை மட்டும் இங்கு பார்ப்போம்.

2004ஆம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரியப் பெண்ணை, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடித்து, விமான நிலையத்திலேயே அமைந்த ஒரு சிறப்பு அறையில், அமெரிக்க உளவுத் துறையினர் பல நாட்கள் சித்திரவதை செய்தனர்.

நான்கரை மாதக் கர்ப்பிணியான பவுச்சரைச் சங்கிலியால் கட்டி, ஐந்து நாட்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர்.

ஈரானில் பிடிபட்ட வேசம் அல்துல்ரஹ்மான் அகமது அல்-தீமா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத் துறையின் இருண்ட சிறையில், 77 நாட்கள் அடைக்கப்பட்டார். அதன் பிறகு, பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்திச் சென்று தூங்காமல் தடுப்பது, கூரையில் தொங்க விடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களைப் பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடும் வலியால் அலறும் சத்தத்தைக் கேட்க வைப்பது என்று நாற்பது நாட்களாகச் சித்திரவதைக்கு ஆளானார்.

அறிக்கையில் பட்டியலிடப்பட்ட 54 நாடுகளில், 27 ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்குகின்றன. அவற்றுள் ஜனநாயகத்தின் உறைவிடங்கள் எனப்படும் நோர்டிக் நாடுகளான ஸ்வீடனும் டென்மார்க்கும் பின்லாந்தும் கூடவே பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியனவும் குறிப்பிடத்தக்கன. அவுஸ்திரேலியாவும் கனடாவும் அப்பட்டியலில் உள்ளன.

தமது நாட்டில், சி.ஐ.ஏக்குச் சிறைகளை ஏற்படுத்தல்; சி.ஐ.ஏ, பிடிக்க விரும்புவோரைப் பிடிக்கவும் கடத்தவும் உதவுதல், இரகசிய விமானங்கள் நாட்டுக்குள் வந்து போக அனுமதித்தல் எனப் பலவாறு, இந்த நாடுகள், அமெரிக்க உளவுத் துறைக்குப் பணியாற்றியுள்ளன. அதற்குப் பிரதியுபகாரமாகப் புலனாய்வுத் தகவல்கள் வழங்குதல், பணம், பிற உதவிகள் என சி.ஐ.ஏ பலதையும் வழங்கியுள்ளது.

சித்திரவதை பற்றிய பொதுப்புத்தி மனநிலை, பொது நன்மைக்காக அது நடைபெறுவது போன்ற படிமத்தை ஏற்கிறது.

சி.ஐ.ஏ உதவியுடன் 2012ஆம் ஆண்டு வெளிவந்த Zero Dark Thirty என்ற திரைப்படம், வரலாற்றைத் திரித்ததோடு, கைதிகளைச் சித்திரவதை செய்வதே அவர்களிடமிருந்து தகவல்களைக் கறக்கும் வழி என்று மக்களை நம்ப வைத்தது.

இந்தப் படத்தின் மூல வடிவம், 2001 முதல் 2010 வரை ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடராகும். ‘24’ என்று பெயரிடப்பட்ட இந்தத் தொடருக்கு சி.ஐ.ஏ நிதி உதவியது.

‘எமி’ விருது பெற்ற ‘ Homeland ‘ நிகழ்ச்சியும் சி.ஐ.ஏ புகழ் பாடியதோடு, சித்திரவதைகளையும் ஆதரித்தது. இவ்வாறு சித்திரவதைக்கு ஆதரவு திரட்டப்படுகிறது.

இதன் சமூகப் பரிமாணமும் நோக்கற்குரியது. கொலைகள் கொடியவை; அவை ஏற்படுத்தும் வேதனை கொடியது. எனினும், சாவின் அவலத்தைப் பொழுதுபோக்காக்கும் ஓர் ஊடகக் கலாசாரம், நம்மிடையே இருப்பது எந்தக் கொலையிலும் கொடியது. சித்திரவதையை நியாயப்படுத்தி, ஊடகங்கள் கட்டமைத்துள்ள அறத்தையும் இவ்வாறே நோக்கலாம்.

திரைப்படங்களில் சித்திரவதைக் காட்சிகளையும் குரூரமான சண்டைக் காட்சிகளையும் அருவருப்பூட்டுமாறு வழங்கும் மனித அவலங்களையும் இப்போது முன்னிலும் அதிகம் காண்கிறோம்.

இவற்றில் ஒரு கணிசமான பகுதி, செய்மதி மூலம் பலரது வீடுகளுக்குள் நுழைகிறது. இவ்வாறான இரசனை, வேர்கொண்ட பிறகு, அதை வளர்த்தெடுக்கத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும் பங்களிக்கின்றன. சிலவகைக் காட்சிகள், மிக நீட்டப்படுவது, இவ்வாறான நோக்கிலேயே என்றே தோன்றுகிறது.

மிருகத்தனமாக, மனிதரை அடித்துத் துன்புறுத்துவதையும் கதறக் கதற வெட்டிக் கொல்வதையும் நீண்டநேரமாகக் காட்டுவது, தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் வழமையாகி விட்டன. மரண வீட்டுக் காட்சிகளும் நீண்ட நேரம் காட்டப்படுகின்றன.

இவற்றையெல்லாம் பார்த்து, இரசிக்கப் பழகியவர்களுக்கு, அவை உண்மையாக நிகழும் போது, அவற்றையும் பார்த்து அனுபவிக்கக் கூடியனவாகின்றன. அவற்றை ஏற்கத் தயக்கங்கள் இரா.
மற்றவர்கள் கதறி அழுவதைத் தொடர்ந்து பல நிமிடங்கள் காட்டும் தொலைக்காட்சி நிறுவனங்களும் பல கோணங்களில் புகைப்படங்களாக வெளியிடும் ஊடகங்களும் அப் பதிவுகளைப் பார்ப்போர் பற்றிய எத்தகைய மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றன?

இன்னொரு வகையில் சொன்னால், மக்கள் அவற்றை விமர்சனங்களின்றி ஏற்பார்கள் என ஊடகங்கள் நம்புகின்றன என்றும் கொள்ளவியலும்.

இது தனியே ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் குற்றமல்ல. ஒரு சமூகமாக நாம் எல்லாருமே இவ்வாறான குற்றங்களுக்குப் பொறுப்பாவோம்.

முன்பு கூறியவாறான காட்சிகள், நம்மில் எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்துகின்றன? முதற்தடவையில் ஒரு வேளை அதிர்ச்சி, கோபம், அருவருப்பு, வெறுப்பு இப்படியான பாதிப்பு இருக்கலாம். ஆனால் நாம், நுணுக்கமாகக் காணும் மனித அவல விவரணம் ஒவ்வொன்றும், அடுத்து வருவதைக் காண நம்மை ஆயத்தமாக்குகின்றன. சிலரிடம் அடுத்ததை எதிர்பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டாலும் வியப்பதற்கில்லை.

சித்திரவதைகள் நிறைந்த கோரக் காட்சிகளை அலுக்காமல் திரும்பத் திரும்பப் பார்க்கும் அளவுக்கு, நெஞ்சங்கள் பக்குவப்பட்டிருக்கின்றன என்றால், நாம் எத்தகைய பண்பாட்டுச் சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறோம் எனக் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

நிறைவாக ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 54 நாடுகள் பட்டியலிடப்பட்ட அறிக்கையில் உள்ள இன்னொரு நாடு இலங்கை.

சி.ஐ.ஏ ஆட்கடத்தலுக்கு இலங்கை அரசாங்கமும் உதவியுள்ளது. 2003இல் சி.ஐ.ஏயின் ஆட்கடத்தலுக்கு உபயோகிக்கும் ‘ரிச்மோர் ஏவியேஷன்’ நிறுவனத்தின் விமானம், ரித்வான் இசாமுதீனை பாங்கொக்கிலிருந்து கடத்துவதற்கு முன்னர், இலங்கையில் தரையிறங்கியுள்ளது.

பின்னர் அவர், மூன்றாண்டுகள் சி.ஐ.ஏயின் பல்வேறு இரகசிய முகாம்களில் சித்திரவதைக்குட்பட்டு, 2006இல் குவாண்டனோமோ சிறைக்கு மாற்றப்பட்டார். இது குறித்த மேலும் குறிப்புகளும் இவ்வறிக்கையில் உள்ளன.

இன்று தமிழர்களாக, ஒரு சித்திரவதையாளனுக்கு எதிரான நியாயத்தை இன்னொரு சித்திரவதையாளனிடம் எதிர்பார்க்கிறோம். இது எமது முரண்நகை.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராகவும் நாம், எந்தெந்த நாடுகளின் தலைநகரங்களில் காத்துக் கிடக்கிறோமோ, அந்நாடுகள் யாவும் அந்த அறிக்கையில் பட்டியலில் உள்ள நாடுகளேயாகும். இவ்வாறான அவலத்துக்குத் தமிழ் மக்களின் எதிர்காலம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் தீர்வை உலகின் மிகப் பெரிய அடக்குமுறையாளனாக, மனித உரிமை மீறல்களில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவிடம் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதன் அபத்தத்தை என்னவென்பது?