சுமந்திரன் சாப்பிட்ட அப்பம்?

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்காலத்தடை தொடர்பில் சுமந்திரனை முன்னிறுத்தி பாடப்பட்டுவருகின்ற வழிபாடுகள் சமூக வலைத்தளமெங்கும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதேவேளை சிறிலங்காவின் நீதித்துறை குறித்து பிரதஷ்டை அடிக்கும் அடியார்கள் கூட்டமொன்றும் முகநூலில் அதிகரித்திருக்கிறது. இவை இரண்டுமே தமிழ் மக்களின் அரசியலுக்கும் இருப்புக்கும் ஆபத்தானது.

தென்னிலங்கை அரசியல் வெற்றிகள் எதுவுமே தமிழர்களின் வெற்றியாக இருக்கமுடியாது என்பதற்கு அப்பால் இங்கு புரிந்துகொள்ளப்படவேண்டிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன.

ஒன்று – சுமந்தரனின் வெற்றியென்று இங்கு விழிக்கப்படுவது மகிந்த – மைத்திரி தரப்புக்கு எதிரான ஒட்டுமொத்த எதிரணிகளில் பங்குபற்றிய தமிழர் தரப்பு சட்டத்தரணியின் வெற்றி. அது தமிழர்களின் வெற்றியல்ல. தமிழர்கள் விரும்பும் வெற்றியும் அல்ல. ஆனால், இந்த வெற்றி தற்போதையை நிலையில் பெறப்படவேண்டியது என்பது தமிழர்கள் சார்பில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கும் அவசியமானது. இந்த வெற்றியை தமிழர்களுக்கு ஏற்ற வடிவமாக மாற்றும்போதுதான் அது இனத்துக்குரிய உண்மையான வெற்றியாக அமையும். இதுவரையும் தனது நேர்மையான அரசியலை முன்னெடுத்துவரும் சுமந்திரன் அதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். அவருடன் இணைந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதனை செய்யவேண்டும்.

மற்றும்படி, சுமந்திரனை தூக்கி அவரால் கஜேந்திரகுமாரையும் விக்னேஸ்வரனையும் அடிப்பது என்பது வெறும் தும்புமுட்டாஸ் வேலை. இவ்வளவுகாலமும்கூட அது தேவையில்லாத விடயமாக இருந்தது. இனிமேல், அது அறவே தேவைப்படாத விடயம். அவ்வளவுதான்.

சுமந்திரன் உருவாக்கி வருகின்ற அரசியல் என்பது அவருடைய சுயமானது. சம்பந்தரின் நிழலில் எத்தனையோ பேர் வந்து உறங்கி சென்றிருக்கிறார்கள். அரசியல் செய்யப்போவதாக அன்று முதல் இன்றுவரை சொல்கிறார்கள். ஆனால், அவரையும் யாரும் பயன்படுத்தவில்லை. அரசியலையும் யாரும் பழகவில்லை. சுமந்திரன் அந்த விடயத்தில் நேர்த்தியாக செயற்படுகிறார். தொடர்ந்தும் வெற்றிகளைத்தான் அறுவடை செய்துகொண்டிருக்கிறார்.

சுமந்திரன் தனது அரசியல் சாம்ராஜ்யத்தில் சட்டத்துறை அறிவை அதிகம் முதலிடுகிறார். சாணக்கிய பாதைக்கு சம்பந்தரோடு கைகோர்த்திருக்கிறார். களத்தில் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு சரியான முடிவுகளை சரியான தருணங்களில் முன்வைக்கிறார். அதன்வழி பல பயன்களை அறுவடையும் செய்கிறார். விருப்பு – வெறுப்புகளுக்கு அப்பால் சுமந்திரனின் இந்த சாதுரியங்களை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

இன்று அவர் அரசமைப்பு விவகாரத்தில் தமிழர் தரப்பு சட்டத்தரணியாக கலந்துகொண்டு பெற்றுள்ள ஒட்டுமொத்த வெற்றியின் பங்காளியாகியிருப்பது. அவருடையை மதிப்பையும் தமிழ் தேசிக்கூட்டமைப்பின் பலத்தையும் இன்னமும் அதிகரித்திருக்கிறது. சிங்கள தேசத்துடனும் சர்வதேசத்துடனும் நீதிக்கட்டமைப்புக்களுடனும்கூட பேசவேண்டிய பலமான குரல் தமிழ் தேசியக்கூட்டமைப்பே என்ற உண்மையை சுமந்திரன் களத்தில் நின்று நிரூபித்திருக்கிறார்.

இப்படியான வியாபித்த ஆளுமையை கஜேந்திரகுமார் என்ற மக்களாதரவு அறவே இல்லாத ஒரு கட்சியின் தலைவரை அடிப்பதற்கு பயன்படுத்துவதும், அடுத்தவேளை அரசியல் தொடர்பாக என்ன சிந்திப்பது என்று தெரியாத விக்னேஸ்வரனை அடிப்பதற்கு தூக்குவதும் அபத்தத்தின் மேல் அபத்தம். யாழ். ஊடக வள மையத்துக்கு மாத்திரம்தான் இவர்கள் இப்போதைக்கு போய்வரக்கூடடிய தகுதியைப்பெற்றிருக்கிறார்களே தவிர, அதற்கு அப்பால் எங்கேயும் அல்ல.

இரண்டு – சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பெனப்படுவது தமிழர்களைப்பொறுத்தவரை ஒரு வெற்று மண்டபம். அங்கிருந்து நீதி என்ற பெயரில் ஒரு மண்ணும் தமிழருக்கு கிடைக்கவில்லை. மாறாக, அந்த நீதியின் பெயரால் இன்னமும் தமிழர்களின் வாழ்வு முடக்கப்பட்டிருப்பதுதான் யதார்த்தம். காணி, பூமி, அரசியல் கைதிகள், அது, இது என்று தமிழர்களின் தாயகம் இன்று இரண்டு துண்டுகளாக கிடப்பதற்கு காரணமே இந்த நீதிமன்றம்தான்.

ஆக, இந்த நீதிமன்றத்தையும் அதன்வழி கிடைத்துள்ள தீர்ப்பையும் வைத்து அது ஜனநாயகத்துக்காகன வெற்றி என்று வெடி கொழுத்துவதும் – நீதி மீண்டும் பிறந்திருக்கிறது என்று கூத்தடிப்பதும் அரியண்டங்களின் உச்சம்.

இதே நீதிக்கட்டமைப்பின் வழியாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்று மூலம் தள்ள தள்ளக்குழறிவிட்டு இப்போது இதே நீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பை பார்த்து பல்லிளிப்பது படுபாதகம்.

மொத்தத்தில் தற்போதைய வெற்றிகள் என்று பிரகடனப்படுத்தப்படும் அனைத்தும் தமிழர் தரப்புக்கான வெற்றியாக வடிவம் பெறும் வரைக்கும் எதுவுமே வெற்றிகள் அல்ல.

அரசியலில் வெற்றிகள் எனப்படுபவை மக்களின் வெற்றியே தவிர, அணிகளின் வெற்றி அல்ல. தனிமனிதர்களின் வெற்றியும் அல்ல.

தற்போது பெற்றுள்ள வெற்றி சுமந்திரன் தமிழர்களின் வீட்டில் அப்பம் சாப்பிட்ட கதையாக மாறிவிடக்கூடாது.

(ப. தெய்வீகன்)