சொர்க்கத்தில் சாத்தான்கள்

படைப்பு என்பது அதனோடு செலவிடும் நேரத்தை குறைவாகவும் அது தொடர்பான சிந்தனையையும் வாசிப்பினையும் அதிகமாக செலவிடும் நேரமாக இருந்தால் அது ஒரு நல்ல படைப்பு. அந்தவகையில் கனடா ஸ்காபரோ சிவிக் சென்ரில் திரையிடப்பட்ட நண்பர், இயக்குனர் ஜுட் ரட்ணம் இயக்கிய சொர்க்கத்தில் சாத்தான்கள் திரைப்படம் தரமான நம்பிக்கை தரக்கூடிய ஒரு திரைப்படம்.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் மருதானையிலுள்ள எல்பின்சன் திரையரங்கில் பல சர்வதேச திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். ஈரானிய திரைப்படங்கள் அதுவும் பெண்கள் இயக்கிய திரைப்படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதிர்ந்திருக்கிறேன் அவ்வாறான ஒரு அதிர்வை சொர்கத்தில் சாத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்கள பேரினவாதத்தால் உருவான கொடூரத்திலிருந்து தப்பித்துப்போகும் கரு பின்னர் தமிழ் பேரினவாதத்திடம் ‘வேண்டிக்கட்டிக்’கொண்டு தப்பிப் பிழைப்பதுதான் கரு. இலங்கையில் நிலவிய, நிலவுகின்ற இரண்டு பேரினவாதங்களும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுவதைப் போல சிங்கள பேரினவாதம் தனது குற்றங்களை ஏற்றுக்கொள்ளாத மனோநிலையில் சொர்க்கத்தில் சாத்தான்கள் அல்ல தாங்கள் தேவதூதர்கள் என்று நிறுவ முனைகிறார்கள். அதேபோல தமிழ் பேரினவாதமும் தனது குற்றங்களை ஏற்றுக்கொள்ளாது மூடிமறைத்து தாங்கள் சொர்க்கத்தின் புனிதர்கள் என்று முழக்கமிடுகிறார்கள். அதற்காக அவர்கள் வன்முறையை மட்டும் கையிலெடுக்க துடியாய் துடிக்கிறார்கள். அதுவும் சட்டத்தை ஒழுங்கை முதன்மைப்படுத்துகின்ற ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு!

இந்த திரைப்படத்தில் ஜுட் ரட்ணம் பயணித்த விதம் மற்றும் பாதை மிக நன்றாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆரம்பிப்பதில் இருந்து ரயிலினூடே பயணிக்கும் காட்சி, தண்டவளத்தின் காட்சி விரிவடைந்து பல தண்டவாளத்தின் பின்னிப்பிணையும் காட்சியுடே விகாரமாதேவி பூங்காவிலுள்ள விளையாட்டு ரயிலில் மகன் விளையாடுகிற காட்சி அமைப்பு மற்றும் எடிட்டிங் அற்புதம். அதன் குறியீட்டுத் தன்மை மிக அற்பும். அந்த மிரட்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை.

ஏனெனில் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளோடு விளையாடுவது இயற்கை ஆனந்தம். நாட்டின் பல பகுதிகளையும் இணைக்கின்ற அந்த ரயிலோடு சிங்கள தமிழ் பேரினவாதம் மிக மோசமான முறையில் விளையாடியிருக்கிறது. விளையாடுகிறது.
சிங்கள தமிழ் பேரினவாதிகள் மனிதர்களோடும் மனிதத்தோடும் விளையாடுவது என்பது மிகப்பெரிய கொடூரம்.

ஒரு வகையில் சொர்க்கத்தில் சாத்தான், என்னையும் எனது போலிகளையும் தூக்கிப்போட்டு மிதித்ததில் மிக்க சந்தோசம்.
மேலும் இது குறையல்ல தவித்த வாய்க்கு தண்ணி கிடைத்தால் அதுபோல வடக்கை நோக்கிப் பயணித்த ஜூட் கிழக்கை நோக்கியும் பயணித்திருந்தால்! அதுவும் சிங்கள, தமிழ் எல்லைப்புற கிரமாங்களைத் தாண்டி காத்தான்குடி பள்ளிவாசலைத்தாண்டியும் பயணித்திருந்தால் அளவுக்கதிகமாக தேனையுண்ட வண்டாக மயங்கியிருப்பேனோ?

படைப்பு என்பது படைப்பு முன்வைக்காததையும் பேசுபொருளாக்கும் என்பதையும், சிந்தனை வரிகளிலும், எழவேண்டிய சிந்தனை அந்த வரிகளுக்கிடையிலும் அமைக்கிறவன் மிகச்சிறந்த சிந்தனையாளன் என்பதையும் அறிவோம்.

நண்பா முதற்படைப்பு எப்போதுமே மிக அற்புதமாக அமைந்துவிடுகிறது ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும். அந்த படைப்புக்களிலிருந்து உன்னதைத் தொட்ட படைப்புகள் மிகசிலவே. எனவே இந்த அற்புதமான படைப்பையிட்டு புகளாங்கிதம் கொண்டேயானால் இதுவே உனது இறுதியான சிறந்த படைப்பாக மாறிவிடும். எனவே சிந்தனையும் செயற்பாடும் அதற்கு மேலாக தேடலும் இருந்தால் வரலாற்றை மாற்றியமைத்திடவும் மானிடத்தை நிலை நிறுத்தவும் உன்னுடன் மாமா மட்டுமல்ல ஆயிரமாயிம் மனங்கள் ஒன்றிணையும். வாழ்த்துக்கள்.

பிற்குறிப்பு: இந் நிகழ்வுக்கு பலதரப்பினரையும் அழைத்திருந்தும் பலரும் சமூகமளிக்கவில்லை. வெள்ளிக் கிழமை மாலை என்பதாலோ என்னவோ? ஆனாலும் நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்த்த அளவிலானோர் சமூகமளித்திருந்தனர். விரும்பப்படாத விருந்தாளிகளாக சிலரும் வந்திருந்தனர் நிகழ்வினை குழப்புவதற்காக. ஆனாலும் அவர்களின் இடையூறுகளுக்கிடையிலும் படம் திரையிடப்பட்டதும், அதன்பிறகு சிறப்பாக கலந்துரையாடல் நடைபெற்றதும் வரவேற்கத்தக்கது. உள்ளேவந்த குழப்பவாதிகள் நினைத்ததுபோல நிகழ்வினை குழப்பியடிக்க முடியவில்லை. அதேபோல வெளியே இருக்கும் குழப்பவாதிகளால் இந்த திரைப்படம், பொதுமக்களை சென்றடையும் செயற்பாட்டினையும் எந்த வகையிலும் குழப்பியடிக்க முடியாது.
நன்றி.
ஜீவா.