சோற்றில் கைவைக்கும் நாம் சேற்றில் கால் வைப்போரை காப்போம்!

பட்டு வேட்டி கனவில் இருந்தவன் கட்டி இருந்ததும் களவாடப்பட்டதை போல, நல்லாட்சி அரசில் நாம் சோற்றில் கைவைக்க தாம் சேற்றில் அல்லலுறும் விவசாயிகள் உரமானிய குறைப்பு உட்பட தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பட்டவர்த்தனமாக காட்ட, சிறு துணி அணிந்து கொழும்பில் நடத்திய போராட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட நாட்டில் வேண்டப்படாத நிகழ்ச்சி.

கணனியில் எதையும் பதிவிறக்கம் செய்பவனால் தான் உண்ணும் அரிசியை டவுன்லோட் செய்ய முடியாது. களனிகளில் சேற்றில் கால் பதிப்பவன் சூரிய சூட்டை உடலில் தாங்கி வியர்வையில் குளித்து அறுவடை செய்த நெல்லை இடைத் தரகர்கள் ஏப்பம்விட, தான் விதைத்ததை கூட உண்ண முடியாமல் வங்கி கடன் முதல் வட்டிக்கு கடன் தந்தவன் வரை கொடுத்துவிட்டு தான் குடும்பத்துடன் மரவள்ளி கிழங்கை ஆகாரமாக கொள்பவன் கேட்பது பிச்சை அல்ல மானியம்.

தேர்தலின் போது வாக்கு பிச்சை கேட்டு, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வென்ற பின் பல லட்சம் பெறுமதியான பராடோ வாகனங்களில் பறக்கும் மக்கள் பிரதிநிதிகள் கொடுக்க மறுப்பது சில ஆயிரம் பெறுமதியான உரமானியம். நல்லாட்சியின் நாயகன் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். விசாய கல்லூரியில் படித்த அதே துறையில் உத்தியோகம் பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவரின் ஆட்சியில் தான் விவசாயிகளின் சிறு துணி அணிந்த போராட்டம்.

ஒரு துளி மழை நீரையும் வீணாக கடலில் கலக்க விடமாட்டேன் என கூறி குளங்களை வெட்டி, சமுத்திரம் போல் நீர் நிலைகளை உருவாக்கி, மாடு கட்டி போர் அடிக்க மாளாது என யானை கட்டி போர் அடித்த மன்னர்கள் ஆண்ட நாடு இது. வெள்ளையர் வருகையால் புது பணப் பயிராக கோப்பி தேயிலை வந்த போதும் நெல் உற்பத்தியை கைவிடாது ஊக்குவித்தவர் விவசாய மந்திரியாய் வந்த டி எஸ் சேனநாயக்கா என்பது சரித்திரம்.

இனவாத அரசியல் காரணமாக (சிங்கள குடியேற்ற திட்டம்) அவர் மீது விமர்சனம் உண்டு. ஆனால் விவசாய மந்திரியாய் அவர் செய்தவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. குளங்கள் திருத்தப்பட்டன. புதிய விளை நிலங்கள் உருவாகின. அரச விவசாய பண்ணைகள் (Govt Farms) உருவாகின. காடுகள் பல களனிகளாக மாறின. தீவகத்தை சேர்ந்த பலர் கனகராயன் குளம் வரை குடியேறினர். ஆனையிறவுக்கு அப்பால் போபவர்களை வன்னியர் என பேதம் பேசி புரளி கிளப்பி இருக்காவிட்டால் மதவாச்சிவரை நாம் சென்றிருப்போம்.

கோழி மேய்த்தாலும் அரச மாதாந்த சம்பளத்தில் மேய்க்க விரும்பிய எம்மவர் தன் தந்ததை செய்த விவசாயத்தை செய்ய விரும்பவில்லை. அதிகாலையில் துலாமிதித்து தோட்டத்துக்கு நீர் இறைத்தவர் எதிர்பார்ப்பு தம் மகன் டாக்கடர், எஞ்சினியர், வக்கீல் ஆகவேண்டும் என்பதாகவே இருந்த போதும், மத்தியதர திட்டம், படித்த வாலிபர் திட்டம் என கிளிநொச்சியில் வயல்களும் விஸ்வமடுவில் தருமபுரத்தில் தோட்டங்களும் ஒருகாலத்தில் எம்மவரால் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

நீண்ட நெடிய போரால் அத்தனையும் பாழாகிபோனது மட்டுமல்ல அந்த நிலங்கள் ராணுவத்தின் பிடியில் அகப்பட்டு விடுதலைக்காய் ஏங்கிநிற்கும் நிலையில் தெற்கில் தொடங்கிய சிறு துணி அணிந்த போராட்டம் எமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது. வடக்கோ தெற்கோ விவசாயிக்கு மிஞ்சுவது வேதனை மட்டுமே. விதைப்பவனுக்கு அறுப்பதற்கு மட்டுமே முடியும் அனுபவிக்க பிராப்தம் இல்லை. ஏன் இந்த நிலை என்று ஆராய வேண்டிய அரசே மெத்தனமாய் இருந்தால் நாளை விவசாயிகள் அம்மணமாக போராடவேண்டி நிலை கூட வரலாம்.

இயற்கை உரம் என்று இரசாயன உரமாக மாறியதோ, அன்று பிடித்த சனி இன்றுவரை தலைவிரித்து ஆடுகிறது. அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்டதால் தான் இன்று கட்டிய வேட்டியை விட்டு சிறு துணி அணிந்து கொழும்பில் விவசாயிகள் ஊர்வலம். விதை நெல்லில் இருந்து, போடும் உரம் வரை பல்தேசிய நிறுவனங்கள் ஆளுமைக்குள் வந்ததால் பாரம்பரிய விவசாய முறைமை கைவிடப்பட்டு விற்பவன் கட்டளைக்கு விதைப்பவன் கட்டுப்படும் நிலை உருவாகி உள்ளது. என் வயலில் எந்த நெல் விளையும் என் தோட்டத்துக்கு எந்த காய்கறி உகந்தது என அன்று முடிவெடுத்த அத்தனை போரையும் இந்திய மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கிய அமெரிக்க பணம் கட்டுப்படுத்தும் நிலை.

வடக்கில் அன்று தோட்டங்களுக்கு வன்னியில் இருந்து லொறிகளில் கொண்டுவரப்படும் எருக்கள் போடுவது, பூவரசம் குழை வெட்டி தாள்ப்பது என நடந்தவை எதுவுமே இன்று வடக்கில் இல்லை. வன்னி மாடுகள் ராணுவ வசம். பூவவரசு வேலிகள் சீமெந்து மதில்கள் வசம் என மாறி விட்ட சூழ் நிலை. தெற்கில் விதை நெல் முதல் உரம் வரை அரச மானியத்தில் கிடைத்த ஊக்குவிப்பில் கூட இன்று கைவைக்கும் நிலை.

மேம்பாலங்களும் விமான நிலையங்களும் விளையாட்டு மைதானங்களும் ஸ்ரீலங்காவை ஆசியாவின் அதிசயமாக மாற்றலாம். ஆனால் அத்தனையையும் பார்த்து ரசிக்க பசியற்ற உடல் வேண்டும். புசிப்பதற்கு எதுவுமற்ற ஒருவனால் ரசிப்பதற்கு முடியாது. வளர்ச்சி அடைந்த நாடுகள் தமக்கு வேண்டியதை இறக்குமதி செய்து விடும். நாம் ஆசிய அபிவிருத்தி வங்கி முதல் சீனாவின் வங்கிகள் வரை கோடிகளை கடனாய் வாங்கி கொண்டாட்டங்கள் நடத்துகிறோம்.

நீர்வளமும் நில வளமும் கொண்ட நாட்டின் முதுகெலும்பு விவசாயி என்பதை எந்த அரசியல் வாதியும் எண்ணுவதில்லை. படைத்துறைக்கு ஒதுக்கும் பணத்தில் ஒரு பகுதி போதும் உரமானியத்தை சீர் செய்ய. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் சொகுசு வாகன மானியம் போதும் மண்ணில் நெல் மணிகளை விளைவிப்பவன் கண்ணில் நீர் வடியாது காக்க. பாராளுமன்ற அமர்வுகளின் போது உறுப்பினர் உண்ணும் உணவுக்கான மானியம் நீக்கப்பாட்டல் உரமானியத்தில் கைவைக்க தேவையும் இல்லை, அவர்கள் அம்மணத்தை மறைக்க சிறுதுணி அணிந்து தலைநகரில் தோளில் மண்வெட்டி சுமந்து போராடவும் தேவையில்லை.

-ராம்-