ஜல்லிக்கட்டு அனுமதி…

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்
50 கேள்விகள்…

முதலில் இத்தனை இலட்சம் பேர் ஒன்றாக கூடியதற்காக, இளைஞர்கள், இளைஞிகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அரசும் காவல்துறையும் அனுமதித்தது என்றாலும் மிக பொறுமையாக நிதானமாக நேர்மையாக கொட்டும்பனியிலும் தங்கள் கொள்கைக்காக காத்திருந்த நீங்கள் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஒளிமயமான எதிர்காலத்தின் ஒளியாக மாறி இருக்கிறீர்கள்… குழந்தைகளும் பெண்களும் குடும்பங்களும் என ஒட்டுமொத்த தமிழ்நாடே உங்களை ஆச்சர்யத்தோடு வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இந்த மாணவர்கள், இந்த மாணவிகள், இந்த இளைய சமுதாயம் நம் தமிழகத்தை வளமான திசைக்கு மாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள். நானும் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு தமிழன் தான்.

உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன்… இது ஒற்றுமைக்கு எதிராகவோ… உங்களை காயப்படுத்தவோ அல்ல… மாறாக இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதற்காக… உங்கள் புரிதலுக்காக…
உங்கள் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாக, உங்கள் எதிர்கால பயணத்திற்கான தேவையாக இந்த கேள்விகளை…. உங்கள் முன் வைக்கிறேன்.

1. உங்களுக்கு அரசும் காவல்துறையும் ஏன் அனுமதி அளித்தது, கண்டுகொள்ளாமல் விட்டது, ஆதரவாக இருந்தது என்று தெரியுமா?

2. அரசு ஆதரவும் காவல்துறை ஆதரவும் இல்லை என்பவர்களுக்கு தாமிரபரணி மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் சம்பவமும், பரமக்குடி துப்பாக்கி சூடும், ஈழத் தமிழர்களுக்கான போராட்டங்களைப்பற்றியும், தர்மபுரி, மற்றும் விழுப்புரம் தீவைப்பு சம்பவங்கள் பற்றியும் தெரியுமா? அப்போது அரசும், காவல்துறையும், ஊடகங்களும் என்ன செய்தன என்று தெரியுமா?

3. ஜல்லிக்கட்டு எத்தனை ஊர்களில் விளையாடப்படுகிறது, மொத்தம் எத்தனை மாடுகள் உள்ளது? ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்து விட்டால் எவ்வளவு நாட்டு மாடுகள் வருடந்தோறும் காப்பாற்றப்படும், ஜல்லிக்கட்டு மாடுகளை காப்பாற்றினால் எத்தனை ஏக்கரில் விவசாயம் நடக்கும்… என்ற விவரங்கள் தர முடியுமா?

4. ஜல்லிக்கட்டை வைத்துக்கொண்டு ஒரு அல்லது ஒரு சில சாதிகள் குலப்பெருமை பேசுகிற வரலாறும், ஜல்லிக்கட்டு எங்கள் சொத்து என்று அவர்கள் சாதித்தலைவர்கள் படம் போட்டு, மற்ற சாதியினருக்கு உணர்ச்சிகளை தூண்டி கடுப்பேத்துகிற வாசகங்களோடு பேனர்கள் கட்அவுட்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள்… என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5. தமிழன், தமிழ் என்கிற உங்களில் / நம்மில் எத்தனை பேர் தமிழ் மீடியம் வழி கல்வி கற்கிறோம் என்ற கணக்கு உங்களுக்குத் தெரியுமா?

6. ஜல்லிக்கட்டு அனுமதி கிடைத்துவிட்டால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பட்டியலிட முடியுமா? இது தொடக்கம் தான்… இனி… ஒவ்வொன்றாக போராடுவோம் என்றால் டாஸ் மாக்கிற்கு எதிரான போராட்டத்தை ஏன் அரசு ஆதரிக்கவில்லை என்று தெரியுமா?

7. ஜல்லிக்கட்டு அல்லாத வேறொரு காரணத்திற்காக கூடி இருந்தால் அனுமதித்திருப்பார்களா? இனி கூடுவிர்களா? கூடினால் அனுமதிப்பார்களா? அனுமதிக்கா விட்டால் என்ன செய்வீர்கள் என்று தெரியுமா?

8. ஜல்லிக்கட்டில் சாதி பற்றி பேசக்கூடாது என்றால் 8 கோடிக்கு மேல் உள்ள தமிழ் இனத்தில் எவ்வளவு பேர், எந்தெந்த சாதிகளில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார்கள் என்ற விபரம் சொல்ல முடியுமா?

9. தமிழனாக ஒன்றிணைவோம் என்பவர்களுக்கு… திண்ணியம் என்ற ஊரில் தமிழன் ஒருவன் தான் இன்னொரு தமிழனை அடித்து உதைத்து வாயில் மலத்தை / பீயை திணித்தான் என்பது தெரியுமா?

10. தமிழர்களாக இணைவோம் என்பவர்கள்… ஊர் ஊராக சென்று சாதித்தலைவர்களை கூட்டி கூட்டம் போட்டாரே ஒரு கட்சித்தலைவர் அவரை எந்தத்தமிழன் என்பீர்கள்? இதற்கு முன் விட்டு விடுவோம்… இனிமேல் என்ன செய்வீர்கள்?

11. தமிழராக இணைவோம் என்பவர்களுக்கு கீழவெண்மணியில் தொடங்கி கொடியன்குளம், மேலவளவு, புளியங்குளம், தர்மபுரி, விழுப்புரம்… இன்னும் கணக்கிலடங்காத ஊர்களில் தலித்துளுக்கெதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருப்பது தெரியுமா? ஒருவேளை தலித்துகள் தமிழர்கள் இல்லையா?

12. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்துவிட்டால் உங்களில் எத்தனை பேர் விவசாயம் செய்யப்போவீர்கள், நாட்டு மாடு வளர்ப்பீர்கள், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பீர்கள்… என்று சொல்ல முடியுமா?

13. நாங்கள் ஏன் வளர்க்கவேண்டும்… எல்லோரும் வளர்க்கமுடியாது வளர்ப்பவர்கள் வளர்ப்பார்கள் என்று பதில் சொன்னால்… ஒரு சிலர் வளர்க்கிற ஜல்லிக்கட்டு மாடுகளுக்காக ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

14. ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு, ஏறு தழுவுதல் உண்மை தான் என்றால்… சில சாதிகள், அது எங்கள் பெருமை என்று வீராப்பு பேசுவதை, மார் தட்டுவதை உங்களால் தடுக்க முடியுமா?

15. ஜல்லிக்கட்டு தமிழர் அடையாளம்… அதில் இனிமேல் சாதிப்பெருமை பேசினால், சாதி அடையாளத்தை வைத்து நடத்தினால் அரசு அதை தடுக்குமா? உங்களால் அரசிடம் சொல்லி அதைத்தடுக்க முடியுமா?

16. நாட்டு மாட்டை கண்டிப்பாக காப்பாற்றுவோம்… அது மட்டும் தான் பிரச்சினையா?

17. காவிரியில் இன்ன பிற ஆறுகளில் மணல் கொள்ளை அடித்து ஆறுகளை சாகடிப்பவர்கள் யார்? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

18. தனியார் கல்வி என்பதை தொழிலாக மாற்றி கோடி, கோடியாக கொள்ளை அடிப்பவர்கள் யார்? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

19. தனியார் கல்வி நிலையங்கள் தமிழையும், தமிழ் உணர்வையும் தான் வளர்க்கிறதா?

20. தாமிரபரணியில் குளிர்பானக்கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க அனுமதி கொடுத்தவர்கள் யார்? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

21. முதலமைச்சர்களைக் கூட விட்டு விடுவோம்… இத்தனை காலமாக எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களும் எம்.பி.க்களாக இருந்தவர்களும் தமிழர்கள் இல்லையா?

22. சர்வாதிகாரி போல, ஒரு முதல்வர் செயல்பட்டால்… அதை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கண்டுகொள்ளாமல் விட்டால்… அது மீண்டும் நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள்?

23. நீங்கள் எவ்வளவு பேர் கூடினாலும்… அரசும் அரசியலும் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது தெரியுமா?

24. இது கூடத்தெரியாதா என்று கேட்டால்… அடுத்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஒரு புதுக்கட்சி ஜெயிக்கும் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

25. தி.மு.க., அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் உங்கள் சொந்தக்காரர்கள், சாதிக்காரர்கள் இல்லையா? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

26. இந்திய அரசியலைப்பு சட்டத்தின் கீழ் தான் நாம் இருக்கிறோம் என்பது தெரியுமா? அதன்படி இங்கே உள்ள அரசும் அரசியலும் என்பது தெரியுமா?

27. இது தெரியாதா என்பவர்கள், தனித்தமிழ் நாடு எப்படி சாத்தியம் என்று சொல்வீர்களா?

28. பண்பாடு, கலாச்சாரம் என்பது முக்கியம் தான்… ஆனால் கண்மூடித்தனமாக அதை ஏற்றுக்கொள்ளமுடியுமா?

29. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பவர்கள்… வாட்ஸ் அப், இன்டர்நெட் விட்டுவிட்டு கடிதங்களை பயன்படுத்துவீர்களா, ஜீன்ஸ் பேண்டை தூக்கி எறிந்துவிட்டு வேட்டியை மட்டும் பயன்படுத்துவீர்களா? ஏ.ஸி. வாஷிங் மெஷின் எல்லாம் தூக்கி எறிவீர்களா?

30. வீரம் எங்கள் பண்பாடு என குதிப்பவர்கள், காதலும் நமது பண்பாடு தான் என ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறார்கள் என்று தெரியுமா? ஏறு தழுவுதலை விட, கா

31. இந்துத்வா என்றால் என்ன என்று தெரியுமா?

32. மாட்டுக்கறி அரசியல் தெரியுமா?

33. சாதியக்கட்டமைப்பு பற்றி தெரியுமா?

34. சுவாதிகளின் பின்னே உள்ள அரசியலும், திவ்யாக்களின் பின்னே உள்ள அரசியலும், விஷ்ணுப்பிரியாக்கள் பின்னே உள்ள அரசியலும் தெரியுமா? இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு தெரியுமா?

35. உணர்வோடு நீங்கள் கூடி நிற்கின்ற, இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்து கொல்லப்பட்ட நந்தினி என்ற தமிழச்சி பற்றி உங்களுக்கு தெரியுமா?

36. தமிழ், தமிழர்கள் என்பவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள துப்புரவுத்தொழிலாளர்கள் பற்றி தெரியுமா?

37. தமிழன் என்ற ஒரே அடையாளத்திற்குள் வர ஆசைப்படுபவர்கள், இனிமேல் சாதியின் பேரால்… அக்கிரமங்கள், வன்கொடுமைகள் நடக்கவிட மாட்டோம்… எங்கள் சாதியினரோ… எங்கள் வீட்டினரோ அப்படி செய்தால் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்று உத்தரவாதம் தர முடியுமா?

38. தமிழர் என்ற அடையாளத்தில் வர விரும்புவர்கள் எத்தனை பேர், சாதிப்பெயரை வலுக்கட்டாயமாக எங்கள் பெயர்களிலும், எங்கள் வீட்டார் பெயரிலும் பயன்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் தருவீர்கள்?

39. 4 வருடங்களுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு நடந்துகொண்டு தான் இருந்தது என்பது தெரியுமா? விவசாயம் அழியத் தொடங்கி, நாட்டு மாடுகள் அழியத்தொடங்கி நான்கு ஆண்டுகள் தான் ஆகிறதா?

40. ஜல்லிக்கட்டு அனுமதி… நம் நீராதாரங்களை மீட்டுத்தருமா? ஆறுகளை, குளங்களை, ஏரிகளை, நீர் நிலைகளை தூர் வாருமா?

41. ஜல்லிக்கட்டு அனுமதி… அரசு கல்வியை அதிகப்படுத்துமா? உங்களில் எத்தனை பேர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்த உடன் உங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு மாற்றுவீர்கள்?

42. கிரிக்கெட் தான்… பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களுக்கான சந்தையை இந்தியாவில் ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கில் உருவாக்கி கொடுத்தது தெரியுமா? இனிமேல் தமிழர்கள் கிரிக்கெட் பார்க்க மாட்டோம் என்பீர்களா? தமிழகத்தில் கிரிக்கெட் ஒளிபரப்பு செய்ய தடை கோர முடியுமா? குறைந்த பட்சம் அதில் குளிர்பான விளம்பரங்கள் வரக்கூடாது என்று கேட்க முடியுமா?

43. இந்த முறை கூடிவிட்டீர்கள்… எப்படியோ விட்டு விட்டார்கள்… இனி நீங்கள் கூட என்ன செய்வீர்கள்? காவல்துறை இதே போல உங்களோடு எல்லா போராட்டங்களுக்கும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று இப்போதே சொல்லி வைப்பீர்களா?

44. உங்கள் ஊரில், உங்கள் சாதியில் தான்… நம்மை, நம் தமிழகத்தை வளப்படுத்த வேண்டிய கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அமைச்சர்கள் இருக்கிறார்கள்… பெரும்பாலும் தமிழர்களாகத்தான் இருக்கிறார்கள்… அந்த தமிழர்கள்… இனிமேல் தவறு செய்தால்… ஊழல் செய்தால்… என்ன செய்யலாம்?

45. அணு உலை, மீத்தேன், கெயில், நியூட்ரினோ, இதுபோல இன்னும் எத்தனை இதற்கு எல்லாம் அனுமதி கொடுத்தவர்கள் தமிழர்கள் இல்லையா?

46. ஜல்லிக்கட்டு அனுமதி கிடைத்தபின் அதில் தமிழர் அடையாளம் தாண்டிய சாதி அடையாளங்களை கண்டால் கிழித்தெறிவீர்களா? மாட்டு உரிமைக்காக போராடியவர்கள் மனித உரிமைகளுக்காக போராடுவீர்களா?

47. தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தில் இன்னும் என்னென்ன உண்டு, அவற்றை எப்படி பாதுகாக்கலாம் என யோசிப்பவர்களா? அதில் உங்களை ஒரு அங்கமாக இணைத்துக்கொள்வீர்களா?

48. உழவனுக்காக, விவசாயிகளுக்காக, விவசாயத்திற்காக குரல் கொடுத்தால் விவசாயம் செழித்து விடுமா? அல்லது நாட்டு மாடுகள் விவசாயம் செய்யுமா? விவசாயத்தின் ஒரு அங்கமாக நீங்கள் ஒவ்வொருவரும் இருக்க என்ன செய்யப்போகிறீர்கள்?

49. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இது ஒரு மிகப்பெரிய சக்தியாக தேர்தலில் செயலாற்ற என்ன செய்யப்போகீறீர்கள்?

50. எதிர்கால அரசியல் புரிதலை இளைய சமுதாயத்திற்கு தொடர்ந்து எப்படி ஏற்படுத்தப்போகிறீர்கள்?

மீண்டும் உங்கள் எழுச்சி வெற்றி பெற வாழ்த்துகள்… ஜல்லிக்கட்டை விட்டு அடுத்த கட்டத்திற்கு நகருங்கள். ஜல்லிக்கட்டு அனுமதி எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது என்பதை உணருங்கள்.

இப்படிக்கு,
ஒரு சராசரித் தமிழன்